கிர்கீசியாவில் உள்ள செகர் என்னும் கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை நெருங்கி அறிந்து பெற்ற திறனே அவரை ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஒருவராக ஆக்கியது.
ஜமீலா, முதல் ஆசிரியன், லாரி டிரைவரின் கதை, அன்னை வயல் குல்சாரி போன்ற நாவல்களின் மூலம் வெகு பிரபலமான ஐத்மாத்தவ்வின் இன்னொரு படைப்பே இந்த ஒட்டகக்கண்.இது ஒரு குறுநாவல்.
பள்ளி முடித்து வயல் வேலைக்கு செல்லும் ஒருவனுடைய வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை பேசுகிறது இந்தக் கதை. கெமல் என்பது அவன் பெயர். அவனை ‘படிப்பாளி’ என்று பட்டப்பெயரிட்டு அழைப்பது ஏன் என்பதனை நேர்த்தியாக இதில் அவர் பதிவு செய்திருப்பார். அவரது அவனது அப்பா யுத்தத்தில் கொல்லப்பட்டிருப்பார் அவனது அம்மா சர்க்கரை ஆலையில் வேலை செய்பவர்.
தானே உழைத்து முன் வர வேண்டும் என்று நம்பிக்கையில் அங்கிருந்து அவன் இங்கே வந்து வேலை செய்வான். அவனுடைய எண்ணம் வேறு. ஆனால் கிடைத்த வேலை வேறு. இருப்பினும் கிடைத்த வேலையை பல சிரமங்களுக்கிடையே அவன் மேற்கொண்டு செய்து வருவான். அவனைத் தொந்தரவு செய்பவன். டிராக்டர் ஓட்டுநர் அபக்கீர். அவன் தம் தம்பியுடன் போடும் சண்டை, அதைத் தடுக்கும் வீட்டில் உள்ள பெண் கலிபா. அவனுக்கும் அவளுக்கும் உள்ள பந்தம். அபக்கீர் எடுக்கும் முடிவு என்று கதை போகும்.
இடையில் ஆடு மேய்க்கும் ஒரு அழகான பெண் வந்து செல்வாள். அவள் மீது கெமலுக்கு ஆர்வம் இருக்கும். அந்தப் பெண்ணின் பெயர் கூட இந்தக் கதையில் வரவில்லை. அந்தப் பெண்ணை சில காலம் கழித்து சந்திக்கும் போது ஏற்படுகின்ற ஒருவித வாஞ்சை அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணை நோக்கி அபக்கீர் செல்வது இவனுக்கு பதைபதைப்பைத் தரும். அவளை பார்க்கப்போவதற்காகவே இவனுக்கு டிராக்டர் ஓட்ட கற்றுக் கொடுத்து அதனை ஓட்டும்படி செய்வான். டிராக்டர் ஓட்டும் போது இவன் அடைகின்ற அந்த ஆனந்தத்தை அழகாக அவர் பதிவு செய்திருப்பார். அந்த ஆனந்தத்தினூடே அவளுக்கு அபக்கீரால் எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பையும் காட்சிமைப்படுத்திருக்கும் விதம் வெகு நேர்த்தி.
.நிறைவு ஒரு சுயநலத்தினுடைய பிம்பம் எவ்வாறு எதையும் பொருட்படுத்தாத போவான் என்பதாக முடிந்திருக்கும்.
ஆங்காங்கே அவர் வைத்திருக்கின்ற தத்துவங்கள், அதை அழகாக மொழி பெயர்த்துத் தந்திருக்கும் யூமா வாசுகி இருவருமே அந்த நாவலின் மூலம் நம்மை வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.
‘மனிதர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்று நினைத்தேன்’. ‘ஒரு மனிதன் எங்கே நின்றாலும் உறுதியாக காலூன்றி நிற்க வேண்டும் வீழ்வது வரை’. ‘ஒரு மனிதனின் ஆன்மா தான் முக்கியம் அதுதான் மனிதனை மனிதன் ஆகிறது’. இதுபோன்ற சொற்றொடர்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.
‘காஞ்சிரைச் செடி’ எட்டி மரம் போன்ற ஒரு தாவரம் இடை இடையே வந்து அந்த நிலத்தினுடைய தொன்மத்தை நமக்கு வெளிப்படுத்தும்.
பொதுவுடமைச் சிந்தனையோடு எழுதப்பட்ட வாசகம் இந்த நூலின் மேல் நாம் அதிகமாக ஒன்றச் செய்யும். ‘வேலை செய்கிறீர்கள். நீங்கள் ஒரு தொழிலாளியாகலாம். உங்களுடைய இதயம் ஒரு தொழிலாளி உடையதல்ல. நீங்கள் ஓர் ஒன்றாம் தர அராஜகவாதியாக இருப்பீர்கள்’ என்று அபக்கீரை அவன் பேசும் அந்தச் சொற்றொடர் வீரியமிக்கது. கெமல் கீழே விழும்போது, ‘நான் நிலத்தில் விழுந்து கிடக்கிறேன் ஆனால் தோல்வி அடையவில்லை’ என்றொரு வாசகம் சொல்வான். இது பல இடங்களில் தொழிலாளிகளுக்கு பொருந்திப் போவதாக அமையும்.
ஆடு மேய்க்கும் பெண்ணிடம் அவன் கொண்டிருந்த அந்தக் காதலை இன்னும் மெருகேற்றி இன்னொரு நாவல் ஐத்மாத்தவ் படைத்திருக்க வேண்டும். தேடி வாசிக்க வேண்டும் அல்லது அந்த இடத்தினை உள்ளார்ந்து வாசித்தவர்கள் அதனை எழுத முனைய வேண்டும்.
சோவியத் கிராமத்தின் செயலாளராக இருந்தவர் ஐத்மாத்தவ். அறுவடையின் போது டிராக்டர் குழுவில் குமாஸ்தாவாக பணியாற்றி இருக்கிறார். போருக்குப் பிறகு விவசாய கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார். ஆகவே, இவரது கதைகளில் டிராக்டர் தொன்மமாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பிரயாணிக்கும்.
64 பக்கங்களில் ஒரு மணி நேர வாசித்தலில் நம்மைக் கட்டி போடுவதில் ஐத்மாத்தவிற்கு நிகர் ஐத்மாத்தவே.
நூலின் தகவல்
நூல் : “ஒட்டகக்கண்”
ஆசிரியர் : சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் : யூமாவாசுகி
வெளியீடு : நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் வெளியீடு
விலை : ரூ 30
முதற்பதிப்பு : ஏப்ரல் 2007
பக்கங்கள் : 64
எழுதியவர்
தானப்பன் கதிர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.