‘ஹைக்கூ’ எனும் மூவரி கவிதை வடிவம் சமீப காலமாகத் தமிழில் மிக பரவலாக வளர்ந்து வருகிறது.
எதையும் நுட்பமாகச் சொல்வது கவிதை வடிவம் எனில், அதிலும் மிக நுட்பமாகச் சொல்வது
ஹைக்கூ. மூன்று வரிகளில் சுருக்கமாக இருக்கும் ஹைக்கூ, வாசிப்பவரின் மனதை விரித்து விடுகிறது. காணும் காட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனையை வேறுபடுத்தும். காட்சிகள் கவிஞரின்
கண்ணில் படும்போது அது கவிதையாக உருமாறிவிடும். சாதாரணமாக ஒருவர் கடந்து செல்லும் காட்சிகள் கூட கவிஞரின் கற்பனையில் கவிதையாய் முகிழ்த்துவிடும்.
இலக்கிய உலகில் வீச்சாய் வலம்வரும் ஹைக்கூவானது ‘ஓவியம் வரையும் தூரத்து நிலா’வாக
நம் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. நூல் முழுக்க முவ்விதழ் கொண்ட ஹைக்கூ மலர்கள் பூத்துக்
குலுங்கின்றன.
‘ஓவியம் வரையும் தூரத்து நிலா’ நிறைய அழகிய ஹைக்கூ கவிதைகளை உள்ளடக்கி இருக்கிறது.
வாசிக்கும் ஒவ்வொரு ஹைக்கூவும் வாசகனிடத்தில் ஆழமாய் பேசுகிறது. ஹைக்கூ கவிதைகளில்
அந்தக் கவிஞர் மட்டும் தனித்து பயணிக்காமல் வாசகனையும் தன்னோடு இணைத்துக் கொள்ளும் அழகிய செயலைக் கவிஞர் கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் வாசகனின் கரம்
பற்றியே பயணிக்கின்றன.
சிறியவைகளுக்கு அத்தனை வலிமை இருக்கத்தான் செய்கிறது. மனதிற்கு பிடித்தவரின் உதட்டோர
சிறு புன்னகையோ, குழந்தையினுடைய சிறுகையின் ஸ்பரிசமோ, அப்பாவின் கண்டிப்பான சிறுமுறைப்போ,
காதலன் தரும் சிறு பூவோ, தோழி கடித்துத் தரும் சிறுமிட்டாயோ, பாட்டி கொடுக்கும் காசின் சிறுசேமிப்போ அத்தனை பொக்கிஷமானது. அதைப்போல ஹைக்கூ கவிதைகள் சிறிதாகினும் வாசிப்பவர்
மனதில் பெரிய
தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது. ஹைக்கூ கவிதைகளைப் படிப்பது ஒரு சுகமாயின், அதைப் படைப்பது
அதைவிட சுகம். அப்படியான சுகானுபவத்தைப் பெற ஒன்றாய் எழுத ஆரம்பித்தோம். அத்தகைய பயணத்தில் இன்று எங்கள் சக தோழி ஒரு கவிஞராய் ஒரு ஹைக்கூ தொகுப்பை வெளியிட்டு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
எழுத ஆரம்பித்ததில் இருந்தே இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் ஹைக்கூ ஏற்றி வித்தியாசமான
பார்வையோடு எழுதி வருபவர் கவிஞர் கவிதா பிருத்வி. வெறும் அழகியலோடு நின்றுவிடாமல் சமூகத்தின்பால் அக்கறை கொண்ட பல கவிதைகள் புத்தகத்தில் அரங்கேறி இருக்கின்றன. கவிதையானது வாசிப்பவர் மனதில்
மென் அதிர்வையோ அதன் வழியே ஆழமான அழுத்தத்தையோ உண்டு பண்ண வேண்டும். அப்படியான
மாற்றங்களைத் தொகுப்பின் பல கவிதைகள் செய்கின்றன.
புத்தகத்தை வாசித்து முடித்து மூடிய பின் என் மனப்பக்கங்களில் வந்தமர்ந்து என்னை மீண்டும் மீண்டும் அசைபோட வைத்த கவிதைகளையும், அதனால் எழுந்த புரிதல்களையும் இங்கு பகிர்கிறேன்.
*துறவி மீது
பூ விழுந்தது
போதி மரத்தடியில்.
அழகிய வெளிப்பாடு… மரத்திற்கோ, பூவிற்கோ அவர் துறவி என்பதோ தவத்தில் இருக்கிறார் என்றோ
தெரிய வாய்ப்பில்லை. யார் அதன் கீழ் அமர்ந்தாலும், பூவோ, இலையோ விழுவது நிச்சயம். பூ விழுந்து தவம் களைந்துவிடும் அளவிற்கு துறவியின் தவம் இருக்காது, மரத்தின் கீழ் அமர்ந்தால் இவை விழும் என
தெரிந்து தான் தவத்தையே தொடங்கியிருப்பார் துறவி என்ற புரிதலும் வருகிறது.
*சக்கரமில்லா நடைவண்டி
பரணில் கிடக்கிறது
பிறந்த வீட்டில்.
இக்கவிதையானது மனதின் பாரத்தைக் கூட்டுகிறது. எத்தனையோ பேர் நடைபழகிய நடைவண்டி இன்று பழுதடைந்து நினைவுகளை மட்டும் சுமந்தபடி பரணில் கிடக்கிறது. இப்படி அந்தப் பரணில் நம் நினைவுகளை மீட்டெடுக்கும் எத்தனை பொருட்கள் இருக்கின்றனவோ? பிறந்த வீடு என்றாலே அழகிய நினைவுகளின் கூடாரம் தானே பெண்களுக்கு… ஏன் சில ஆண்களுக்கும்.
*சாதிய வெறியைக்
கதைத்துக் கொண்டன
தண்டவாள பிணங்கள்.
கதைப்பது தெரிந்தால் பிணங்களையும் கூட விட்டு வைக்க மாட்டார்கள் இந்த சாதி வெறியர்கள்.
வளைந்து நெளிந்து வரும் பல ரயில்களும் இன்று குற்றவுணர்வால் நிரம்பியே பயணிக்கின்றன…
தண்டவாளங்களும் குற்றவுணர்வால் துவண்டு கிடக்கின்றன.
*நீயும் நானும்
நனைந்தே போனோம்
குடைக்குள் மழை.
இவர்களை நனைக்க மலைக்குத் தான் எத்தனை பிரியம்… குடையையும் தாண்டி…
குடை ஓட்டையாக இருக்கலாம், காற்றில் திரும்பி இருக்கலாம், மழையின் வீச்சைத் தாங்க முடியாமல் இருந்திருக்கலாம் இப்படி பற்பல சிந்தனைகளை எழுப்புகிறது கவிதை…
*பாய்ந்தோடும் மழைநீரில்
ஆசை மூழ்கிவிடுமோ
காகிதக் கப்பல்.
மூழ்கி விடும் என தெரிந்தே தான் விடுகிறோம் காகித கப்பலை. ஆசை யாரைத் தான் விட்டது?
*அவசர அழைப்பு
வேலைகளுக்கு நடுவில்
புத்தக ஓர மடிப்பு.
பல நேரங்களில் இவை நிகழ்கின்றன. பேசிக்கொண்டிருக்கும் போது பாதியில் விட்டு வந்தவர் நம்மை எதிர்பார்த்து காத்திருப்பதாய் எண்ணம் தோன்றியபடி இருக்கும். மறுபடியும் புத்தகத்தைக் கையில் எடுக்கும் வரை புத்தகத்தின் நினைவுகளுடன்…
*எங்கே தொலைத்தோம்
அறியாமல் தேடுகிறோம்
சட்டைப் பையில் சாவி.
எல்லாவற்றையும் வெளியிலேயே தேடுகிறோம். எல்லாவற்றிற்குமான தீர்வு நமக்குள் தான் இருக்கிறது என்பதை
மறந்து… கையில் வைத்துக்கொண்டே தொலைத்துவிட்டதாக பிதற்றுகிறோம். நறுக்கென உரைக்கிறது கவிதை.
*இலை நுனியிலும்
வானம் அமர்ந்தது
பனித்துளியாக.
எவ்வளவு அழகான காட்சியை நமது கண்கள் தரிசிக்க வழி அமைத்திருக்கிறார் கவிஞர்.
*வளைந்து கொடுத்தது
செம்பருத்திப்பூ
தேன்சிட்டு இதழுக்காக.
‘வளைந்து கொடுத்தல்’ இந்த வார்த்தைகளின் பதம் எத்தனை எத்தனைப் புரிதலை ஏற்படுத்துகிறது.
வளைதல், ஒடிதல் இரண்டிற்குமான வித்தியாசத்தை உணர வேண்டும். ஒன்று நேரே நிற்கிறோம்
இல்லையேல் ஒடிந்து விடுகிறோம், வளைந்து கொடுத்தலின் வலிமை மறந்து…
*பறவைகளின்
பசி தீர்க்கிறது
களத்துமேடு.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்பதற்கு இணங்க பேசும் அழகிய கவிதை இது. களத்துமேடு
எத்தனை பேர் பசியைப் போக்குகிறது… பறவைகளையும் சேர்த்து.
*எங்கோ தொலைத்த
ஒற்றைச் செருப்பு
நுரைக்கும் அலையில்.
இந்த ஒரு கவிதை என்னுள் முதலில் மூன்று எண்ணங்களைத் தோற்றுவித்தது. ஒன்று செருப்பைத்
தொலைத்தவர் மனம் பட்டிருக்கும் பாடு, இரண்டு இங்கு அலை தள்ளிய ஒற்றைச் செருப்பும்
எங்கோ கரை ஒதுங்கும் ஒற்றைச் செருப்பும் என்றுமே யாருக்கும் பயன்படாமல் போவது,
மூன்று இங்கு ஒற்றைச் செருப்பை காணும் வேறொருவர் அதன் ஜோடிக்காக கடலை நோக்கி காத்திருத்தல்.
*எதிர் வீட்டுச் சன்னலில்
சிட்டுக்குருவிக் கூடு
மரமிருக்கிறது தோட்டத்தில்.
பிடித்ததை செய்வதில் எத்தனை சுகம் இருக்கிறது… மாற்றி யோசித்தலின் மகத்துவம் அறிந்த சிட்டுக்குருவி.
*தேன் குடிக்கும்
பட்டாம்பூச்சி அசையவில்லை
அசைகிறது செடி.
தன்னம்பிக்கை ஊட்டும் அழகிய கவிதையாய் தோன்றுகிறது. செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்கக்
கற்றுக் கொடுக்கிறது பட்டாம்பூச்சி,
சுற்றிலும் அத்தனை இருக்கும் கவனத்தைச் சிதறடிக்க என்பதையும் சேர்த்தே தான்…
*கடற்கரை மணலில்
திரும்பி விழுந்த ஆமை
கடல் சேர்க்கிறான் சிறுவன்.
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சமூக கடமையை உணர்த்தும் அழகிய கவிதை.
நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என நம் கண்முன்னே நடக்கும் எத்தனையோ விடயங்களைக்
கண்டும் காணாமல் போகிறோம். இந்த உலகமே மனிதர்களுக்கானது என்ற எண்ணத்தை ஓரமாய்
வைத்துவிட்டு வெளியே பார்க்க வேண்டும். நம்மைத் தாண்டி எத்தனை இருக்கிறது உலகில் கவனிக்க…
மனம் கவர்ந்த கவிதைகள் இன்னும் அநேகம் இருக்கின்றன. கவிதைகளைத் தேடி அலைய
தேவையில்லை, நம்மைச் சுற்றிப் பறந்து விரிந்து கிடக்கிறது. அன்றாடங்களில் எத்தனை கவிதைகள்
நிறைந்து கிடக்கின்றன என்று நமது அன்றாடங்களைக் கவனிக்கத் தூண்டி இருக்கிறார் கவிஞர்.
அவரது கடந்த பால்யமும், ரசித்த காட்சிகளும், தொலைத்த நட்பும், குதூகலிக்கும் பேரப்பிள்ளைகளும்,
தாய்ப் பாசமும், சமூக அக்கறையும், பல்லுயிர்களின் உலகமும் என பல்வேறு விடயங்களைக் கவிதைகள்
பேசி நகர்கின்றன நம் மனதை மட்டும் அங்கேயே இருத்திவிட்டு.
சில கவிதைகள் ஒரே பொருள்படப் பேசுகின்றன, சில இடங்களில் வார்த்தைப் பிரயோகமும் ஒன்றாய் இருக்கிறது,
நிலா பற்றியே நிறைய பேசுகின்றன கவிதைகள். இவற்றை கவனத்தில் கொண்டு இன்னும் வெவ்வேறு கோணங்களைக் கையாண்டு பேசாதவைகளையும் பேசினால் இன்னும் சிறப்பாய் இருக்கும். ஹைக்கூ உலகில் இன்னும் பல தேர்ந்த கவிதைகளைப் படைத்திட எனது சக தோழரும், கவியை பெயரிலே கொண்ட அன்பு கவிஞருமான கவிதா பிருத்வி அவர்களுக்கு எனது பேரன்பின் வாழ்த்துகள்.
‘ஓவியம் வரையும் தூரத்து நிலா’ என் மனதிலும் தீட்டிச் சென்றிருக்கிறது அழகிய ஓவியம் ஒன்றை…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.