தொடர் 1: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆந்தைகள் (Owls) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 1: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆந்தைகள் (Owls) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

பேரைக்கேட்டாலே ஒரு பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். மிரட்டும் அந்த கண்கள்தான் நம் பயத்திற்குக் காரணம்.ஆரம்ப காலத்திலேயே ஆந்தை என்றால் ‘அபசகுனமான ஒரு பறவை’ என்ற கருத்தை நம்மீது திணித்து விட்டார்கள் என்றே கூறலாம்.உண்மையில் அது மண்புழு போல இன்னொரு ‘விவசாயிகளின் நண்பன்’ என்பது பலரும் அறியாதது.!

ஆமாங்க.! இன்று நாம் பார்க்கவிருக்கும் பறவைகள் ஆந்தைகள்!. ஆந்தைகளை ‘இரவாடிப் பறவைகள்’ என்று சொல்வாங்க. பகல் நேரத்தை ஓய்வாக கழித்துவிட்டு, இரவில் இரைதேடி உண்ணும் உயிரினங்களை ‘Nocturnal’ அதாவது ‘இரவாடிகள்’ என்போம். பகலைவிட இரவில் அதன் பார்வைத்திறன் மிக அதிகம் என்பதே அவ்வாறு இரவுநேரத்தில் இரைதேடக் காரணம்.மற்றபடிக்கு ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்பதெல்லாம் கதை.

மனிதர்களைப்போல முன்புறம் இரண்டு கண்களையும் கொண்ட ஒரே பறவை.. ஆந்தைதான்.. இதுமட்டுமின்றி பறக்கும் போது மற்ற பறவைகள் மாதிரி “படபட”ன்னு இறக்கைகள அடிச்சுகிட்டு ஒலி எழுப்புகிற பழக்கமெல்லாம் இல்லை..துளியும் சத்தமிருக்காது. அப்புறம் இன்னொரு முக்கிய அம்சம் உடலைத் திருப்பாமலேயே கிட்டத்தட்ட எல்லா பக்கங்களிலும் தலையைத் திருப்பிப் பார்ப்பது..

தமிழ்நாட்டில் நாம் என்னென்ன ஆந்தைகளைப் பார்க்க முடியும்? பார்க்கும் வாய்ப்பினைப் பொறுத்து வரிசைப்படுத்தியுள்ளேன்.

1.புள்ளி ஆந்தை (Spotted owlet -விலங்கியல் பெயர் – Athene brama)

2.சிறிய காட்டு ஆந்தை (Jungle owlet – விலங்கியல் பெயர் – Glaucidium radiatum)

3.பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை (Indian scops owl – விலங்கியல் பெயர் – Otus bakkamoena)

4.கூகை (அ) வெண்ணாந்தை (Barn owl – விலங்கியல் பெயர் – Tyto alba)

5.பொரிப்புள்ளி ஆந்தை (Mottled wood owl – விலங்கியல் பெயர் – Strix ocellata)

6.கொம்பன் ஆந்தை (Indian Eagle owl /Great Horned owl – விலங்கியல் பெயர் – Bubo (bubo) bengalensis)

7.பூமன் ஆந்தை (Brown fish owl – விலங்கியல் பெயர் – Ketupa zeylonensis)

8.பெரிய காட்டு ஆந்தை (Spot -bellied Eagle owl/ Forest eagle owl – விலங்கியல் பெயர் – Bubo nipalensis)

9.குட்டைக்காது (அ) சிறுகாதன் ஆந்தை (Short-eared owl – விலங்கியல் பெயர் – Asio flammeus)

10.வேட்டைக்கார ஆந்தை ( Brown hawk owl – விலங்கியல் பெயர் – Ninox scutulata)

“ஆத்தாடி …இத்தனை வகையா?” என்று அதிர்ச்சியாக வேண்டாம்..நிறைய ஆந்தைகளின் பரவல் இந்தியா முழுவதும் இருந்தாலும் பல ஆந்தைகள் நம் கண்ணில் படும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.அதாவது பார்ப்பதற்கு அரியதாய் உள்ளது.

மேற்கண்ட 10 ஆந்தைகளில் 6 வகையினை நேரில் கண்டு படமெடுத்து உள்ளேன்..இத்தனை ஆண்டுகளில் மிகப்பரவலாய் இருக்கும் கூகை ( Barn owl )கூட எனக்குக் கிடைக்காதது பெரும் வருத்தமே!.

நீங்கள் காண வாய்ப்பு இருக்கும் முதல் 6 ஆந்தைகளைப் பற்றி விளக்கமாய்ச் சொல்லிவிட்டு, மற்றவற்றை சுருக்கமாய் முடித்துக் கொள்கிறேன்.

உருவில் சிறியவை:

இதில் மூன்று ஆந்தைகள் உருவில் சிறியவை அவை, புள்ளி ஆந்தை,சிறிய காட்டு ஆந்தை, பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை..

நடுத்தர உருவம்:

கூகை அல்லது வெண்ணாந்தையும், வேட்டைக்கார ஆந்தையும் நடுத்தர உருவம்..தனக்கே உரிய Heart shape வெண்மை நிற முகத்த வைத்து சுலபமா கண்டுபிடிக்கலாம்..வேட்டைக்கார ஆந்தைக்கு (சிறிய)முகம் முழுவதும் ஆக்கிரமித்தபடி இருக்கும் (பெரிய) கண்களும்,மார்பு, வயிற்றில் பெரிய பழுப்பு நிற புள்ளிகளும் நல்ல அடையாளம்..

பெரிய ஆந்தைகள்:

மீதியுள்ள ஐந்தும் பெரிய ஆந்தைகள்..அப்படியே படிப்படியா உருவம் பெரிதாகிக் கொண்டே போகும .இன்னொரு முக்கிய விஷயம் கவனிங்க…இந்த மீதியுள்ள ஐந்து ஆந்தைகளில் பொரிப்புள்ளி ஆந்தை தவிர அனைத்திற்கும் கொம்பு போன்ற காதுத்தூவிகள் அமைந்திருக்கும்..பார்ப்பதற்கு இது கொம்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்ளோதான்.. இதை வைத்துதான் நாம் அடையாளம் காணப்போகிறோம்…

புள்ளி ஆந்தை, நம் வீட்டருகே இரவு நேரத்தில் சாதாரணமாய் அலறக்கூடியது. சாம்பல் நிற உடல் முழுவதும் கருப்பு, வெள்ளை புள்ளிகள்,திட்டுகள் ஆங்காங்கே இருக்கும்.வெள்ளைப் புருவங்கள்,மஞ்சள் நிறக் கண்ணில் கருப்பு நிற கருவிழி இவையெல்லாம் அடையாளங்கள்.

Image

புள்ளி ஆந்தை- படம்- கலைச்செல்வன்

கிராமத்து வீடுகளில் பெரியவர்கள் நள்ளிரவில் இவை அலறினால் கூட அந்நேரத்தில் மெனக்கெட்டு எழுந்து வந்து “சூ…சூ…அங்க ஆர்ரிவ? போமாட்ட?” என விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன்…

இவ்வாறு அலறினால் அப்பகுதியில் ஒரு ‘சாவு விழும்’ என்பது அவர்கள் (மூட) நம்பிக்கை! அதற்காகவே அப்படி விரட்டுகிறார்களாம்..

(ஆந்தை பேசும் அழகிய மொழியே அலறல் என்பது புரிதல் உள்ளவர்க்கே விளங்கும்)

எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நான் படித்த தொடக்கப் பள்ளி அட்டைக் (ஆஸ்பெஸ்டாஸ்) கட்டிடம் ஒன்றின் கோம்பை சுவர் உச்சியிலுள்ள இடுக்கில் ஒரு சோடி புள்ளி ஆந்தை வசித்தது.தூங்கியே பொழுதைக் கழிக்கும்.(அதைவிட நாங்க சிறப்பா தூங்குவோமாக்கும்! 🙂 )
மாணவர்கள் ‘குய்யோ முய்யோ’ எனக்கூச்சலிடும் அந்த கலவர சூழலில் எப்படி அது இருந்தது என என்னால் கற்பனை செய்ய முடியவில்லை..

இதே அளவில் சாம்பல்,வெள்ளை நிறம உடலில் அடர் பழுப்பு நிற,நெருக்கமான கிடைமட்டக் கோடுகளைக் கொண்டது சிறிய காட்டு ஆந்தை..மலைப்பகுதிக்கு மேலுள்ள காடுகள் மலையடிவார கிராமங்களில் சமவெளிப்பகுதிகளிலும் இவற்றை பார்த்திருக்கிறேன்..

Image

Image

சிறிய காட்டு ஆந்தை படம்- கலைச்செல்வன்

பட்டைக்கழுத்து சிறிய ஆந்தைக்கு கருப்பு நிறத்தில் கொம்பு போன்ற சிறிய அமைப்பு உண்டு.. பின்கழுத்திலுள்ள வெளிர் பட்டை இப்பெயரை அதற்கு பெற்றுத்தந்திருக்கிறது.

நண்பர் ஒருவர் பணியாற்றும் பள்ளியில் (நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளி) வேப்பமரத்தில் மிக அசால்ட்டாய் யாருக்கும் அசராது தூங்கிக் கொண்டிருந்த சோடி ஆந்தையினை கண்டு அன்றுதான் அது பட்டைக்கழுத்து சிறிய ஆந்தையென தெளிவுற்றேன்.. மாணவச்செல்வங்களால் தீங்கேதும் நேராது பார்த்துக் கொள்ளுங்களென வேண்டுகோள் விடுத்துவிட்டு வந்தேன்…

Image

பட்டைக்கழுத்து சிறிய ஆந்தை படம்- கலைச்செல்வன்

நான்காவதாயுள்ளது வெண் ஆந்தை அல்லது கூகை.. இதய வடிவ வெண்மை முகம் தனித்த அடையாளம். இந்த இதய வடிவம் சிறு தூவிகளால் உற்றுப்பார்த்தால் தனியே திட்டுபோல தெரிகிறது.. பழுப்பு, சாம்பல் கலந்த இறக்கைகள், வெண்மை நிற மார்பு, வயிறு..

Image

வெண் ஆந்தை படம்- திருமலை வெங்கட்ராமன்

எங்காவது மீட்கப்பட்டால் ” அரிய வகை ஆஸ்திரேலியப் பறவை” என்னும் அடைமொழியிட்டு செய்திவரும்..உண்மை அதுவல்ல…பக்காவான உள்ளூர் பறவையே இது..

கொஞ்சம் வெள்ளையாய் டிப்டாப்பாய் வரும் ஆசாமியைப் பார்த்து நாம் “வெள்ளைகாரன் மாதிரி இருக்காண்டா!” என்பது சொல்வதுதான் இந்த ஆந்தை விஷயத்திலும் நடந்திருக்கிறது.. 🙂

“பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது”. (குறள் 481)
இதில் கூகையென வள்ளுவர் சுட்டுவது வெண் ஆந்தையே ஆகும்.

பொரிப்புள்ளி ஆந்தையைச் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாகக் கண்டுவருகிறேன்.. அருகிலுள்ள ஒரு சூழலில்..

Image

பொரிப்புள்ளி ஆந்தை படம்- கலைச்செல்வன்

பறவை ஆர்வமெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாகத்தான்..அப்போதெல்லாம் இதன் பெயர் தெரியாது.தொடக்கப்பள்ளி பயிலும் காலங்களில் அருகிலுள்ள மரவள்ளிக் கிழங்கு ஆலையொன்றில் ஆந்தையொன்று வசித்தது. இரவு நேரங்களில் கரிய பெரிய உருவமாய் பறந்து சென்று பயமுறுத்தும்.அப்பகுதியினர் இதனை ‘கோட்டான்’ என்றழைத்தனர்..என்றாவது தெளிவாக முகம் தெரிந்திருந்தால் அது என்ன ஆந்தையென தற்போது நினைவுபடுத்தியிருப்பேன்..ஆனால் என் துரதிஷ்டம்..அவை இப்போது இல்லை..

கொம்பன் ஆந்தையை முதன் முதலில் மேட்டூர் பகுதியில் கண்டேன்..பாறைப்பாங்கான உயரம் குறைந்த சிறுகரடுகளை இவை வசிக்கத் தேர்ந்தெடுக்கின்றன.சாதாரணமாகவே ஆந்தையென்றால் அதிக பயம்..மிரட்டும் செந்நிறக் கண்களோடு கொம்பும் இருந்தால் பீதியாகாதா?

Image

கொம்பன் ஆந்தை படம்- கலைச்செல்வன்

கொம்பன் ஆந்தைகள் உருவில் பெரியவை. பழுப்புநிற உடலில் மேலிருந்து கீழாக வரும் கருப்புத்திட்டுகளை உடையது. சங்க நூல்கள் “குடிஞை” என்று இவ்வாந்தையைக் குறிப்பிடுகின்றன என்பார் திரு.சண்முகானந்தம்  அவர்கள்..

இவர் எழுதிய ‘தமிழகத்தின் இரவாடிகள்’ என்னும் நூல் ஆந்தைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இரவாடி விலங்குகள் பற்றியும் தெளிவான புரிதலை உண்டாக்கும் நூலென்பதில் ஐயமில்லை..வாசிக்க வேண்டிய நூல். 🙂

பூப்ப்…பூப்ப்ப் என கொம்பன் எழுப்பும் பேரொலியை மாலை சுமார் 5.30 மணிக்குமேல் 6.30 மணிவரை பல இடங்களில் கேட்டிருக்கிறேன்..

பெரிய காட்டு ஆந்தை வெண்மை நிற பெரிய அலகையும், சற்றே கிடைமட்டமாகவும், சில சமயம் மாட்டிற்கு இருப்பது போல வளைந்து செல்லும் கொம்புகளையுடையன. கொம்புகள் மிகத்தெளிவாய் கற்றையாய் தூக்கியபடி இருக்கும். அழுக்கான வெள்ளை நிற உடலில் அடர் பழுப்பு நிறத்தில் செதில்கள் போன்ற வடிவமைப்பு இதற்கு உள்ளது..

Image

பெரிய காட்டு ஆந்தை படம்- திருமலை வெங்கட்ராமன்

வேட்டைக்கார ஆந்தைக்கு (சிறிய)முகம் முழுவதும் ஆக்கிரமித்தபடி இருக்கும் (பெரிய) கண்களும்,மார்பு, வயிற்றில் பெரிய பழுப்பு நிற புள்ளிகளும் நல்ல அடையாளம்.

Image

வேட்டைக்கார ஆந்தை படம்- திருமலை வெங்கட்ராமன்

பூமன் ஆந்தை (Brown fish owl) அதன் பழுப்பு நிறத்தாலும், மீனை விரும்பி உண்ணும் குணத்தாலும் அந்தப் பெயர் பெறுகிறது.நீர்நிலையாகிய குளம், மலை ஓடைகள், ஆற்றோரமாய் வசிக்கிறது.பழுப்பு நிற மார்பு, வயிற்றுப் பகுதியில் மெல்லிய அடர் பழுப்பு நிறக் கோடுகள் மேலிருந்து கீழாய்.குளித்துவிட்டு தலையைத் துவட்டாமல் விட்டால் இப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கும் இதன் கொம்புகள்..முடியைக் கலைத்து விட்டமாதிரி ஒரு ஒழுங்கில்லாமல் இருக்கும் அதன் தலையைக் காணும் போதெல்லாம் நான் சிரித்து விடுவதுண்டு.

Image

பூமன் ஆந்தை படம்- கலைச்செல்வன்

ஆந்தையின் அலறல் அபசகுனம் என்றாலும் விதிவிலக்காய் இந்த பூமன் ஆந்தை எழுப்பும் ஒலியினை கிராம மக்கள் நல்ல சகுனமாய் நினைப்பதை “தமிழகத்தின் இரவாடிகள்” நூலால் அறிய முடிகிறது.

பெலாப்பாடி அருகே மேற்கொண்ட பாலூட்டிகள் கணக்கெடுப்பில் நான் ஓரிணை பூமன் ஆந்தைகளைக் கண்டேன்.அது அமர்ந்திருந்த பெரிய மரக்கிளையின் கீழே அப்போதுதான் புதியதாய் (fresh) உண்டுவிட்டுப் போட்டிருந்த நண்டின் சிதைந்த ஓட்டுக் கழிவுகளைக் கண்டேன்..மீண்டும் அங்கு வந்து அமரும் என நினைத்த எங்களுக்கு அது ஏமாற்றத்தையே பரிசாய்த் தந்தது..

குட்டைக்காது ஆந்தை வெண் ஆந்தை போல செதுக்கி வைத்தது போன்ற முகம் கொண்டது.. குட்டையான சிறிய காது அதற்கு இப்பெயர் வரக் காரணமாயிருக்கிறது..

Image

குட்டைக்காது ஆந்தை படம்- திருமலை வெங்கட்ராமன்

அனைத்து ஆந்தைகளுக்குமே பிரதான உணவாய் எலி இருக்கிறது.இன்றைக்கு விவசாயிக்கு முக்கியத்தொந்தரவாய் இருப்பவை, எலி, பெருச்சாளிகளே! அவற்றை உணவாக்கிக்கொண்டு விவசாயிக்கு நண்பனாய் விளங்குகின்றன ஆந்தைகள்..அதுவும் இனப்பெருக்கக் காலத்திலும், குஞ்சு பொரித்துள்ள போதிலும் இவை எலி மட்டுமின்றி, தவளை,பாம்பு, ஓணான், வெட்டுக்கிளி , வண்டுகள் என பலவற்றை வேட்டையாடும்.வெண் ஆந்தையெல்லாம் சாதாரணமாக ஒரே இரவில் ஐந்திற்கும் மேற்பட்ட எலிகளை வேட்டையாடுமாம்.

இப்படியாக இயற்கைச் சமநிலையைப் பேணிக் காக்கின்றன ஆந்தைகள்..இவ்வாறு நமக்கு நண்பனாய் இருக்கிற ஆந்தைகளை மந்திரம், மாந்திரீக செயல்பாடுகளுக்கு வேட்டையாடி பலிகொடுப்பது மக்களின் அறியாமையையே காட்டுகிறது..வடமாநிலங்களில் இந்தக் கொடூர வழக்கம் அதிகம்..

ஆந்தைகளை அபசகுனமான பறவையாய்ப் பாராமல் இனி நண்பனாய், அழகனாய்ப் பார்த்தீர்கள் என்றால் அதுவே இக்கட்டுரையின் வெற்றி!

நன்றி!

அன்புடன்:

வை.கலைச்செல்வன்,

தலைமை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

ஜம்பூத்துமலை, வாழப்பாடி ஒன்றியம்,

சேலம் மாவட்டம்.

தொலைபேசி: 96553 00204

மின்னஞ்சல்: [email protected]

Show 5 Comments

5 Comments

 1. S.v.lacshana swathy

  ஆந்தைகளின் வகைகள் பற்றியும் அதனை பற்றிய அரிய கருத்துக்களும்அருமை ஐயா.. இந்த கட்டூரையில் உள்ள படங்களைப் பார்க்கும்பொழுது ஆந்தைள் அழகானவையாகவே தெரிகின்றன…இனி நானும் என் வகுப்பறையில் மாணவர்களுடன் பறவைகள் பற்றி கலந்துறையாடுவேன் என்பதில் ஐயமில்லை..சிறகுகளோடு சில நிமிடங்கள்…அருமையான படைப்பு ,பதிப்பு….

  • Muniasamy teacher

   அருமையான கட்டுரை

 2. வினோத்குமார்

  வாழ்த்துக்கள் தோழரே💐💐💐
  ஆந்தையின் ‘அபசகுனத்தை’ உடைத்து அதன் ‘அழகியலை’ மேலும் பெற We Are Waiting… 👏👌🍁🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *