யூதாஸ்கள்
இன்னும் சாகவில்லை….
===============
தேவாலய
மன்னிப்புக் கூண்டு போல
மாறி விட்டது
நீதிமன்றக் கூண்டு.
நீதிமன்றத்தை
மயிரென்றவர்
“மன்னிச்சு”சொன்னால்
பாவமன்னிப்பு கிடைக்கிறது.
தேசியக் கொடியை
கர்ச்சீப்பாய் பயன்படுத்தலாம்.
அதில் கையெழுத்திட்டு
வல்லாதிக்க டிரம்பிடம்
வழங்கலாம்.
அரண்மனை கோழி முட்டை
அம்மியையும் உடைக்கலாம்.
பாவம்
நீதிமன்ற சுத்தியல்
என்ன செய்யும்?
கட்சிக் கொடி மரத்தில்
தேசியக்கொடி பறக்கலாம்.
முருகனுக்கான சுதந்திரம்
மயில் போல
இறக்கை விரிக்கிறது.
பாவம்
இபிகோ என்ன செய்யும்?
ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை அவதூறு செய்யலாம்.
அறியாமல் பார்வர்டு செய்ததாக
பல்டி அடிக்கலாம்.
பால் பாக்கெட்டைப் போல
பாவம்
ஜாமீனைத் தவிர
வேறு என்ன தர முடியும்?
தேசியக்கொடியை அவமதித்தால்
அதிகாரிக்குத் தண்டனை.
முன்னாள் நடிகனுக்கு
மன்னிப்பு.
பிரிட்டிஸ் பூட்ஸ்களை நக்கி மன்னிப்பு கேட்டவர்களுக்கு
மன்னிப்பு கேட்பது ஒன்றும்
வெட்கக்கேடான செயல் அல்ல.
ஒற்றுமை பேசும்
மூவர்ணக்கொடியை விட
ஹிட்லரின் பாசிசக் கொடி மீது தான் அவர்களுக்குப் பாசம்.
அதனால் தான் தேசியக்கொடியை
தெரிந்தே அவமதிக்கிறார்கள்.
ஆனால்
பேனா முனை முறித்து
தீர்ப்பெழுதும் நீதிமன்றம்
திடீரென
ஜீவகாருண்ய சங்கம் போல
அவர்களிடம்
மன்னிப்பு கேட்கச் சொல்கிறது.
வாய்மையே வெல்லுமென்ற
காந்தியைச் சுட்டு
படமாக்கி
நீதிமன்றத்தில் மாட்டி விட்டார்கள்.
இனி அவர் அருகினில்
இயேசு நாதர் படத்தையும் மாட்டலாம்.
ஏனெனில்
அவரை முத்தம் கொடுத்து
காட்டிக் கொடுத்த
யூதாஸ்கள்
இன்னும் சாகவில்லை.
– ப.கவிதா குமார்

