பார்பர் நாமா: ஒரு சவரக்காரனின் அரசியல் கவிதைகள்
கடந்த காலத்தில் உயர்வான பொருளைக் குறித்த ஒரு சொல், நிகழ்காலத்தில் இழிவான பொருளைக் குறிப்பதை ‘இழிபொருட்பேறு’ என்று மொழிநூல்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, ‘நாற்றம்’ என்ற சொல் மரபிலக்கியங்களில் நறுமணம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. ஆனால் அச்சொல் இன்று ‘துர்நாற்றம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, ‘அமர்க்களம்’ என்ற சொல் போர் நடைபெறும் வன்மையான இடத்தைக் குறித்தது. இன்று பொருட்களைக் கலைத்துப்போட்டு குழந்தைகள் விளையாடுவதை ‘அமர்க்களம்’ என்கின்றனர். ‘அமர்க்களம்’ வன்மையிலிருந்து மென்மைக்கு மாறியிருக்கிறது. இதனை ‘மென்பொருட்பேறு’ என்கின்றனர். எனவே, காலந்தோறும் ஒரு சொல் ஒரே பொருளைத் தருவதில்லை. இப்படித்தான் ‘மயிர்’ என்கிற சொல்லும் இன்று திரிபடைந்திருக்கிறது.
மரபிலக்கியங்களில் சினைப்பெயராக ‘மயிர்’ என்ற சொல் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் மட்டும் அறுபத்தேழு இடங்களில் ‘உரோமம்’ என்ற பொருளிலேயே இச்சொல் வந்திருக்கிறது. மயிர் என்பது முடி, அவ்வளவுதான். ஆனால் நிகண்டு நூல்கள் மயிரைக் குறிக்கக்கூடிய வெவ்வேறு சொற்களைத் தொகுத்துக் கூறியுள்ளன. முதல் நிகண்டு நூலான திவாகர நிகண்டு பின்னகம், பந்தம், முடி, முச்சி, கொண்டை, சிகழிகை, குழல், சுடிகை, மவுலி ஆகிய ஒன்பது வேறுபெயர்களைக் கூறுகிறது. தவிர ஆண்மயிர், பெண்மயிர் என்ற வேறுபாடுகளையும் நிகண்டு நூல்கள் கூறுகின்றன. குஞ்சி, நவிர், உளை, குடுமி, தொங்கல், பங்கி, பித்தை, ஓரி, சிகை ஆகிய ஒன்பது பெயர்களும் ஆண் மயிரைக் குறிப்பிடுவன. கோதை, நெடுமை, கூந்தல், ஐம்பால், ஓதி, கூழை, பரிசாரம், கதுப்பு, கேசம், அளகம், குழல், குரல், சுரியல், மராட்டம் ஆகிய பதினான்கு பெயர்களும் பெண் மயிரைச் சுட்டுவன. செய்யுட்களில் இருந்து இத்தகைய தரவுகளை நிகண்டு நூலாசிரியர்கள் சேகரித்து வகை பிரித்துக் கொடுத்துள்ளனர்.
மயிர்களுக்கு இடையிலான மிக நுட்பமான வேறுபாடுகளுடன் அதன் வகைகள் அமைந்துள்ளன. நிகண்டு நூல்களுக்குள் பாடபேதங்கள் இருக்கின்றன. ஆனால் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. மயிரைக் குறிக்கும் அனைத்துச் சொற்களுக்கும் இலக்கியங்களில் உதாரணங்கள் இருக்கின்றன. ‘மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை’ என்ற குறுந்தொகைப் பாடலில் (147) இடம்பெற்றுள்ள ‘மயிர்’ என்ற சொல் தலைவியின் உடலழகு வருணனைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்’ (புறம்.257) என்ற பாடலில் ‘மயிர்’ என்ற சொல் ஓர் ஆணின் முகத்தில் வளர்ந்துள்ள தருப்பைப் புல்போன்ற தாடியைக் குறிக்கிறது. பெரும்பாலும் தலைவியின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தவே ‘மயிர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் ‘மயிர்’ என்ற சொல்லுக்குப் பதிலியாகத் தற்போது வழக்கத்திலிருக்கும் ‘முடி’ என்ற சொல்லும் முப்பது இடங்களில் வந்திருக்கிறது. ‘மயிர்’ என்பதற்கு ‘முடி’ என்பதுதான் பொருள்; ஆனால், ‘முடி’ என்ற சொல் மயிரை மட்டுமே குறிக்காது. ‘முடி’ என்பதற்குச் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் கொண்டை, தலைமயிர், மகுடம், நாற்றுமுடி, முடிச்சு, தலை ஆகிய பொருட்களைத் தந்திருக்கிறது. இடத்தைப் பொறுத்து ‘முடி’யின் பொருள் மாறும். மயிருக்கு அந்தப் பிரச்சினையில்லை. உடலின் சினையான ‘மயிர்’ என்ற சொல் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் உரோமங்களையும் சுட்டக்கூடிய பொதுவான ஒரு சொல்லாகும். இன்று, ‘மயிர்’ என்ற சொல், பொதுவெளியில் இயல்பாகப் பயன்படுத்த முடியாத கெட்டவார்த்தையாகவும் இடக்கரடக்கல் சொல்லாகவும் மாற்றம் அடைந்திருக்கிறது.
சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து நீதி இலக்கியத்திலும் இச்சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ‘மானம்’ என்ற அதிகாரத்தில் இரு இடங்களில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகும்போதெல்லாம் திருவள்ளுவரைத் துணைக்கு அழைத்துக் கொள்வர். ‘தலையின் இழிந்த மயிரனையர்’ என்றும் ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்றும் இரு இடங்களிலும் இச்சொல் உவமையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘மயிரனையர்’, ‘மயிர்நீப்பின்’ என்ற இரு சொற்சேர்க்கைகளும் இழிவுப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவே அறிகிறேன். ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்ற இடத்திலும் திருவள்ளுவர் மயிரையே மறைமுகமாகச் சுட்டுகிறார். இந்த இடத்தில் ‘மயிர்’ என்பது மதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. குறிப்பாக, ‘மயிர்’ என்ற சொல் சமண பௌத்த சமயங்களுடன் தொடர்புடையது. பிற்காலத்தில் இந்துமதமும் இதனைப் பின்தொடர்ந்தது. நாலாயிர திவ்ய பிரபந்தம், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களிலும் இச்சொல் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வெளுத்த தோர்மயிர்’ என்கிறார் கம்பர். இராமன், சீதையின் தோற்றத்தை அனுமனுக்குக் கூறும்பொழுது, ‘மயிர் ஒழுக்கு எனஒன்று உண்டால் / வல்லிசேர் வயிற்றில்’ (4487) என்று சீதையின் வயிற்று மயிரின் ஒழுங்கைக் கூறித் திகைக்க வைத்திருக்கிறார் கம்பர்.
‘மயிர்’ இன்று ஓர் அரசியல் சொல். தன் எதிர்ப்பைக் காட்டவும் தன் எதிரியைச் சீண்டவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘முடி’ என்ற சொல் மென்மையான பொருளைத் தருவதாகவும் ‘மயிர்’ என்ற சொல் கடுமையான பொருளைத் தருவதாகவும் யதார்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. அதாவது, ‘மயிர்’ என்ற சொல் அந்தரங்க உறுப்புகளோடு தொடர்புபடுத்திப் பொருள்கொள்ளப்படுகிறது. இலங்கைத் தமிழில் ‘மயிர்’, ‘முடி’ ஆகிய இரு சொற்களுக்குமே வேறுபாடு இல்லை. இந்தச் சொற்பொருள் மாற்றம் எப்போது நிகழ்ந்ததெனத் துல்லியமாகக் கணிப்பது கடினமான செயலாகவே இருக்கும். தன் வன்மத்தைத் தணித்துக் கொள்வதற்கும் பிறர்மீது வன்மத்தை உமிழ்வதற்கும் நவீன இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள், இச்சொல்லை மிகக்கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ‘சோளம் என்கிற பேத்தி’ நாவலில், நாகம்மாள் என்ற பெண் தன் கணவன் மீதான ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ள தன் அடிவயிற்றிலிருந்து மயிரைப் பிடுங்கி அவன்மீது எறிகிறாள். ‘தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா / சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே’ என்று ஆதவன் தீட்சண்யா கவிதை எழுதியிருக்கிறார். எனவே, இன்று ‘மயிர்’ என்பது எதிர்ப்பின் குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லின் பொருள் மாற்றமே இதற்குக் காரணம். காலம்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான அரசியல் சொல்லாக மயிரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கிய வடிவமான தலித் இலக்கியம் இதற்கான வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சமூகத்தில் இழிதொழிலாக மதிப்பிறக்கம் செய்யப்பட்ட பறையடித்தல், தூய்மைப்பணி செய்தல், செருப்புத் தைத்தல், முடிவெட்டுதல், துணி வெளுத்தல், பன்றி மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களைச் செய்பவர்கள் இன்று படைப்பாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த தலித் இலக்கியத்தின் எழுச்சியையே இதற்குக் காரணமாகக் கருதலாம். இத்தொழிலைச் செய்பவர்களிடமிருந்து காத்திரமான ஆக்கங்கள் இன்று உருவாகின்றன. இதனை அவர்களால்தான் எழுத முடியும் என்ற தகுதியை அப்படைப்புகள் பெற்றிருக்கின்றன. அவ்வகையில் நாவிதர் சமூகத்தைச் சார்ந்த ப.நடராஜன் பாரதிதாஸ் எழுதியுள்ள ‘பார்பர் நாமா’ என்ற கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே, ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்…’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். சமூக ஒடுக்குதல்களுக்கு எதிரான அரசியல் கவிதைகளை இவர் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மயிர்’தான் இவர் கவிதைகளின் முதன்மைப் பொருள். இந்தச் சொல்லை இவர் தனக்கான அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறார்.
ஆதிதிராவிடர், பள்ளர், அருந்ததியர் ஆகிய சாதிகளைச் சார்ந்தவர்களைப் பட்டியலினத்தவர் என்று அழைக்கின்றனர். வண்ணாரும் நாவிதரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இனத்தில் வருகின்றனர். ஆனாலும் சாதி சார்ந்த ஒடுக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். நாவிதர் சமூகத்தின் ஒடுக்குதல்களை வெளிப்படையாகப் பேசும் இவரது கவிதைத் தொகுப்புகள் நவீன இலக்கியத்திற்கு முக்கிய வரவாகும். இக்கவிதைகள் தங்கள் தொழில் சார்ந்த ஆதிக்கச் சமூகத்தின் ஒடுக்குதலை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கின்றன. அப்பாவை முன்னிறுத்தியே இவர் கவிதைகளை எழுதியிருக்கிறார். இவருடைய தந்தையின் மூலமாகத்தான் சாதிய ஒடுக்குதலையும் அவமானங்களையும் நேரடியாகக் கண்டிருக்கிறார். இவருடைய அப்பா இவருக்குச் சொல்லிய முந்தைய தலைமுறையின் தீண்டாமைக் கொடுமைகள் வெறும் பழங்கதைகள்; அவ்வளவுதான். எனவே, அப்பாவைச் சாட்சியாக உள்ளடக்கியே இவர் தன் கவிதைகளுக்கான கருப்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் கவிதைகளில் வெளிப்படும் உண்மைகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். பலரும் அந்த ஒடுக்குதல்களில் பங்கேற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே வாசிப்பவருக்கு இக்கவிதைகள் அதிக நெருக்கத்தைத் தருகின்றன.
புத்தன் ஏசு காந்தியை விட
எங்கப்பன் ஒரு படி மேலதான்
நேத்து ஒரு கன்னத்துல அடிச்சி
உன்னால என்ன ஒரு மயிரும் புடுங்க
முடியாதுடான்னு
அசிங்கப்படுத்திய நாட்டாமைக்கு
இன்னைக்கு
ஒவ்வொரு மயிராய் புடுங்கி
ரெண்டு கன்னத்தையும் தொட்டு தொட்டு
அழகுபடுத்திக் கொண்டிருந்தார்.
ப.நடராஜன் பாரதிதாஸ் கவிதைகளில் வெளிப்படும் அங்கதத் தொனியும் கோபமும் மிகவும் வெளிப்படையானவை. தன் கவிதையை தன் இன ஒடுக்குதலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். விளிம்பு நிலையிலுள்ள சேவைத் தொழில் செய்பவர்களின் படைப்புகள் தற்போது தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. பேசாப்பொருளையும் பேசத் துணியும் காலம் இது. ப.நடராஜன் பாரதிதாஸ் தன் முதல் கவிதைத் தொகுப்பிலேயே கவிதை மரபில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியவர். அந்தத் தீவிரம் கொஞ்சமும் குறையாமல் இரண்டாவது தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பெரிய அளவில் இவர் கவனப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவருக்குப் பின்னணியாகக் கவிதை மட்டுமே இருக்கிறது. சாதியப் புறக்கணிப்பு போன்று இவரது கவிதைகளையும் தமிழ்ச்சமூகம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. ஒவ்வொரு கவிதையுமே தனக்குள் அரசியலைக் கொண்டிருக்கிறது. இவர் தம் கோபத்தைக் கவிதைக்குள் குறியீடுகளாக்கி மறைத்து வைக்கவில்லை; படிமங்களுக்குள் ஒளித்து வைக்கவில்லை. இக்கவிதைகள் வாசிப்பவர்களை நோக்கி நேரடியாகப் பேசுகின்றன. வாசிப்பவர்களின் மனதை அசைக்கின்றன.
ஊருக்கு ஒரு குடியாக இருக்கும் நாவிதர் சமூகத்தின்மீது, பிறர் கொண்டுள்ள சாதிய வன்மம்தான் இவர் கவிதைகளின் கச்சாப் பொருள். அதில் இவர் தெளிவாக இருக்கிறார். தமிழக அரசியலில் இச்சமூகத்தினரின் அரசியல் பங்களிப்புகள் குறித்துப் பல கவிதைகள் பேசுகின்றன. பட்டியல் இனத்தினருக்காவது அரசியலில் ஒதுக்கீடுகள் இருக்கின்றன. ஆனால் ஊருக்கு ஒரு குடும்பமாகப் பிரிந்துகிடக்கும் நாவிதர் சமூகத்தினருக்கு அதுவும் கிடையாது என்ற ஆதங்கம் பல கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால், ப.நடராஜன் இந்த ஆதங்கம் ஒவ்வொன்றையும் பகடியாக மாற்றிக்கொள்கிறார். வெறும் கழிவிரக்கங்களாக இவரது கவிதைகள் இல்லை. இழிவுகளைப் பெருமிதங்களாக மாற்றும் மொழிவன்மை இவரிடம் இருக்கிறது.
நாம் ஏன்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு குடியாயிருக்கோம்
அதுவா…
ஒரு ஊருக்கு
ஒரு ராஜாதானே இருக்க முடியும்
மகனே.
தொண்ணூறுகளுக்குப் பிறகு வேகமெடுத்த தலித் இலக்கியம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தது. வண்ணார், நாவிதர் உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஊருக்குள் வசித்தாலும் ஒடுக்கப்பட்டவர்களே என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்களது சாதிய ஒடுக்குதல்கள் இலக்கியங்களில் பெரிதாகப் பதிவாகவில்லை. ‘கோவேறு கழுதைகள்’ நாவலினூடாகப் புதிரை வண்ணாரின் பிரச்சினைகளை இமையம் எழுதினார். அதன் பிறகு ஒடுக்குதலின் அரசியல்முகம் வேறொன்றாக மாறியது. தற்போது நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்களே படைப்பாளிகளாக உயர்ந்திருக்கின்றனர். அதனால்தான் அவர்களது பிரச்சினைகளை இத்தனை தீவிரத்துடன் பேச முடிகிறது. கவிதை, சிறுகதை, நாவல் என படைப்பின் அனைத்து வடிவங்களிலும் நாவிதர் சமூகத்தின் இருப்பு குறித்த உடையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர். அதில் ப.நடராஜன் பாரதாஸ் எழுத்துக்கு முக்கிய இடமிருக்கிறது. இவரிடம் தன் சமூகம் சார்ந்துப் பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதுவரை சொன்னதிலிருந்து இவர் சொல்வது வேறுபட்டது. ஒரு காலத்தில் இவர்கள் மருத்துவர்களாக இருந்தார்கள். ஊருக்கே வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் அதனையொரு தொழிலாக இவர்கள் பார்க்கவில்லை; சேவையாகச் செய்தார்கள். இன்று மருத்துவம் ஒரு தொழில். நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த தொழில். இவர்கள் பார்த்த பிரசவத்தின் வழியாகப் பிறந்தவர்களே இவர்களுக்கு எதிராக நின்ற கதையை ப.நடராஜன் சொல்ல கேட்க வேண்டும்.
என்னுடைய விண்ணப்ப படிவத்தில்
சாதி என்ற இடத்தில்
மருத்துவர் என்று எழுதினேன்
உங்க அப்பன் என்ன
ஊசி போடுகிறாரா
உங்கள் அம்மா என்ன
மருந்து கொடுக்கிறாங்களா என்றான்
உன்னைய
பிரசவம் பார்த்த கையோட
எங்க அம்மா
கண்ணுல கள்ளிப்பால்
உடாம
தொண்டையில
கழுதைப் பால் உட்டு வளர்த்தாங்க இல்ல
இன்னமும் கேட்ப
இதுக்கு மேலயும் கேட்ப
நண்பா.
ப.நடராஜன் இந்தத் தொகுப்பில் ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்று இரண்டு கவிதைகள் எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கவிதைகள். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக வளர்ந்துகொண்டே வந்தாலும் சாதி சார்ந்த இழிவுகள் மட்டும் இன்னும் மறையவே இல்லை. ஒரு காலத்தில் தொழிலே சாதிய உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது. நூற்றாண்டுகள் கடந்த பிறகும் அந்நிலை தொடர்வதுதான் வேதனை. தொழில் சார்ந்து, தெரு சார்ந்து, ஊர் சார்ந்து சாதியைக் கண்டுபிடித்துப் புளகாங்கிதம் அடையும் மனநிலை இன்னும் மாறவே இல்லை. இதையெல்லாம்தான் ‘பார்பர் நாமா’ கவிதைத் தொகுப்பினூடாக ப.நடராஜன் பகிர்ந்து கொள்கிறார். இந்தத் தொகுப்பு சாதி சார்ந்த எண்ணத்தின்மீது பெரும் விரிசலை உடனடியாக ஏற்படுத்திவிடும் என்று உறுதியாகக் கூறமுடியாது; ஆனால் என்னுடைய பிரச்சினை இதுதான் என்று சொல்வதற்கான ஒரு வெளி இங்கே அனைவருக்கும் உருவாகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியொரு வெளியில் நின்று தன் சமூகத்தின் பிரச்சினைகளை அனைவரிடமும் அரசியல் படுத்தியிருக்கிறார் ப.நடராஜன். இந்தக் காலத்திலும் சாதி தீவிரமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. சமூக நீதியால் அதனைக் கடந்துவிட்டோம் என்பதெல்லாம் ஒரு பாசாங்கு. இந்தப் பாசாங்குக்காரர்களைத்தான் கவிதையால் கட்டிவைத்து அடித்திருக்கிறார் ப.நடராஜன் பாரதிதாஸ்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பார்பர் நாமா (Barbar Naamaa – 2025) கவிதை நூல் |
| ஆசிரியர்: | ப. நடராஜன் பாரதிதாஸ் |
| வெளியீடு: |
யாவரும் பதிப்பகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻சுப்பிரமணி இரமேஷ் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
