“தயாராகணும் எப்பொழுதும்” – நூல் அறிமுகம்
பெண்களை மையப் படுத்தி வரும் கதைகளே மிகவும் அரிது. அப்படி வந்தாலும் பெண்ணை சுய சிந்தனை உள்ளவராகக் கூட காட்டமாட்டார்கள். ஆனால் அருமைத் தோழர் பி.எஸ். போஸ் பாண்டியன் எழுதிய “தயாராகணும் எப்பொழுதும்” என்ற முதல் புதினத்தின் நாயகி தமீமா சுய சிந்தனை படைத்தவள் மட்டுமல்ல, உண்மையிலேயே புரட்சிகரமான பெண். இந்திய மாணவர் சங்கத்தின் தலைவி.
பெண்ணை சுயமாக, தைரியமாக வளர்க்கும் பெற்றோர்களுக்கு கொச்சியில் பிறந்து, இடதுசாரி அரசியலை சுவாசித்து, மங்களூரில் ஹிஜாப் அணியாததால் மத ரீதியான ஒதுக்குதலுக்கு ஆளாகி, தூத்துக்குடியில் மாணவ போராளியாக பரிமளிக்கும் தமீமாவின் கதை இயல்பாக சொல்லப்பட்டுள்ளது. 191 பக்கம் கொண்ட நாவலை மூன்று மணி நேரத்தில் படித்து முடிக்கும் அளவு சுவாரஸ்யமான, விறுவிறுப்பான எளிய நடை.
தமீமா கல்லூரி படிப்பிலும் சிறந்த மாணவி. அதே சமயம் அநீதியை எதிர்த்து போராடுவதிலும் முன்னணியில் நிற்பவள். சக மாணவிக்கு நேர்ந்த அவமரியாதையை தட்டி கேட்பதாகட்டும், கல்வியை வணிகமயமாக்கும் அரசின் கொள்கையை எதிர்ப்பதாகட்டும் முதலில் நிற்பது தமீமாதான். இந்திய மாணவர் சங்கத்தின் முழக்கமான “படி, போராடு” என்பதன்படியே வாழ்ந்து காட்டுகிறாள் நாயகி.
ஆர்எஸ்எஸ் பிராசரகரின் விஷமப் பேச்சை எதிர்கொள்வதில் அவளின் அரசியல் தெளிவு வெளிப்படும். வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதில் அவளின் பொது அறிவு வெளிப்படும். சினிமா கொட்டகை தீயில் சிக்கியவர்களுக்கு உதவுவதில் அவளின் மனித நேயம் வெளிப்படும். “வேலை கொடு” மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் அவளின் தலமைப் பண்பு வெளிப்படும். கூட பயணித்த வெளி நாட்டு பெண்ணின் கைப்பை மாறிய போது அதை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைப்பதில் அவளின் நேர்மை வெளிப்படும். போராடும் சக ஆசிரியர்களுக்கு அரணாக துணை நிற்பதில் அவளின் ஆதரவு குணம் வெளிப்படும். துப்பாக்கி ஏந்திய காவலர்களை நேருக்கு நேராக எதிர்கொள்வதில் அரசு இயந்திரத்திற்கே சவால் விடும் அவளின் போர்க்குணம் வெளிப்படும்.
இவற்றின் ஊடாகவே பாடகனாக, வேலை தேடுபவனாக, அனைத்து இயக்கங்களிலும் முன்னணியில் செயல்படும் பார்த்தசாரதியுடனான தமீமாவின் காதல் மெல்ல வருடும் மாலைத் தென்றல் போல் வெளிப்படும்.
இந்த நாவலில் கதாநாயகி தமீமா, நாயகன் பார்த்தசாரதி சில சமயம் கதை சொல்லிகளாக தன்மையிலும், சில சமயம் கதை மாந்தர்களாக படர்க்கையிலும் கதை சொல்லப்பட்டுள்ளது சற்று வித்தியாசமானது. தோழர்கள் மைதிலி சிவராமன், கே கே ஜெயச்சந்திரன், எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், பொன்னீலன் உள்ளிட்ட சில கதை மாந்தர்கள் நிஜ வாழ்க்கையில் வருபவர்கள். சினிமா கொட்டகை தீ விபத்து, வேலை கொடு மாநாடு, ஆசிரியர் போராட்டங்கள் போன்றவை நிஜ நிகழ்வுகள். நிஜமும், புனைவும் கண்டுணர முடியாதபடி கதையை பின்னி இழைத்து சென்றுள்ளார் கதாசிரியர் போஸ் பாண்டியன்.
கதையின் நிகழ்வுகளில் வரும் உரையாடல்கள், கதைக்குள் வரும் கதைகள் எழுத்தாளரின் பரந்த வாசிப்பை வெளிப்படுத்துகிறது. போராளியைப் பற்றிய கதை என்றாலே சோகமாக முடிய வேண்டும் என்ற விதிமுறையையும் இந்த நாவல் முறியடித்துள்ளது. கதைக்களத்தையும், சூழலையும், இடத்தையும், கதை மாந்தர்களையும் கதாசிரியர் விவரித்துள்ள விதம் படித்து முடிக்கும் போது மூன்று மணி நேரம் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
“Eternal vigilance is the price for liberty” என்றோர் ஆங்கில சொல்லாடல் உண்டு. “எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சுதந்திரத்தின் விலை” அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த புதினத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் சிறப்பான முன்னுரை அவரின் பரந்த வரலாற்று வாசிப்பை வெளிப்படுத்துகிறது. அவரின் முன்னுரையில் “அதிகாரத்தை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் பல தமீமாக்களை இன்றும் நாம் காண முடியும். அவர்களுக்கு ஆய்ஷி கோஷ், மிருதுளா……எனப் பலப்பல பெயர்கள்…” என்று குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் புதினத்தை தோழர் பாரதி கிருஷ்ணகுமார் வெளியிட நிஜப் போராளி தோழர் மிருதுளாவே பெற்றுக் கொண்டது சாலப் பொருத்தமானது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தயாராகணும் எப்பொழுதும் |
| ஆசிரியர்: | P.S. போஸ்பாண்டியன் |
| வெளியீடு: | SIBA Publication |
| விலை: | ₹.250 (5% Discount Price ₹.237) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சி பி கிருஷ்ணன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

