இணுங்கு (Inungu) - நூல் அறிமுகம் - போஸ் பாண்டியன் - P.s.Bosepandian ' S Inungu Book Review - Published by SIBA - https://bookday.in/

இணுங்கு (Inungu) – நூல் அறிமுகம்

இணுங்கு (Inungu) – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

நூல் : இணுங்கு

பக்கங்கள் : 144

விலை : ரூ.200/-

வெளியீடு :  SIBA
8,எட்டாவது தெரு
அஜீஸ் நகர்
அருப்புக் கோட்டை – 626101

 

பாக்கியலட்சுமியும், அவரது அம்மாவும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுமாக மூன்று பெண்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கணவன் அவர்களுடன் இல்லை.

போட்டோ ஸ்டூடியோவில் வேலை பார்த்த பாக்கிய லட்சுமி, பாண்டியன் கிராம வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவர்.

ஒருமுறை வங்கிக்கு வந்தபோது, தனது மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். கேள்விப்பட்ட வங்கி மேலாளர் பொறுக்க முடியாமல் “அந்த குழந்தைக்கா திருமணம். அறிவு இருக்கா உனக்கு. அவளைப் படிக்க வை. கல்யாணம் செய்வதென்றால் நீ செய்து கொள்ள வேண்டியதுதானே” எனக் கொஞ்சம் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

பிறகு பாக்கியலட்சுமி வங்கிக்கு வரவில்லை. அந்த மேலாளரும் பணி மாற்றம் ஆகி விட்டார்.

ஒரு வருடம் கழித்து அந்த மேலாளர் பாக்கியலட்சுமியை எதேச்சையாகச் சந்திக்கிறார். வக்கீல் ஒருவரை பாக்கியலட்சுமி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், மகளும் சம்மதித்து விட்டதாகவும் சொல்லிவிட்டு, உங்கள் வார்த்தைதான் என்னை யோசிக்க வைத்தது. நம்பிக்கையையும், தைரியத்தையும் தந்தது என்று சொல்கிறார்.

மேலும் சில வருடங்கள் கழித்து பாக்கியலட்சுமி அந்த மேலாளரின் வீட்டிற்கு வந்து மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுத்து வரவேண்டும் என்று அழைக்கிறார். மேலாளர் அழைப்பிதழைப் பூரிப்புடன் வாங்கிப் பார்க்கிறார். அதில் பாக்கியலட்சுமியின் மகள் ஒரு வங்கியின் மேலாளராக குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.

இதைப் படிக்கும்போதே நெகிழ்ச்சியாகி கண்கள் பனித்தன. அந்த மேலாளர் என் அருமைத் தோழர் போஸ் பாண்டியன் P.s. Bosepandian என அறியும்போது பெருமிதமாய் இருக்கிறது.

’ஒரு போராட்டக்காரனின் நினைவுக் குறிப்புகள்’ எனும் அறிமுகத்துடன் ‘இணுங்கு’ என்னும் தலைப்பில் தோழர் போஸ் பாண்டியன் எழுதியிருக்கும் புத்தகம் இப்படி பல்வேறு மன உணர்வுகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறது.

மூணாறு பிரதேசத்தில் மலைகள் சூழ வளர்ந்த பிள்ளைப் பருவத்திலிருந்து, இன்று பணி ஓய்வு பெற்ற பிறகு வரையிலான வாழ்க்கைப் பயணத்தின் சில துளிகளை அனுபவங்களாக்கித் தந்திருக்கிறார். கல்விக்கான கடும் முயற்சிகள், கிராம வங்கி தொழிற்சங்கத்தின் முன்னணித் தலைவராக இருந்து ஆற்றிய பணிகள், அறிவொளி இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பெற முடிந்த மக்களைப் பற்றிய புரிதல், வங்கியின் மேலாளராக இருந்து மனிதர்களோடு நடத்திய உரையாடல்கள் என அவரது வாழ்க்கை அர்த்தம் செறிந்து விரிந்திருக்கிறது.

குறிப்பாக மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாதைகள், பயணங்கள் மீது போஸ்பாண்டியன் என்னும் போராட்டக்காரனுக்கு இருக்கும் காதலும், ஈர்ப்பும் மிக அழகாக அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கின்றன. அதுகுறித்த விவரணைகள் மிக இயல்பாய் ஒட்டிக் கொள்கின்றன. இந்த புத்தகத்தில் என்னை வசீகரித்த பகுதிகள் அவை.

தோழர் போஸ்பாண்டியன் 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணி ஓய்வு பெற்றபோது, அவருக்கு ஒரு எளிய விழா எடுக்க வேண்டும் என்று சங்கத்திலிருந்து முடிவெடுத்தோம். போஸ்பாண்டியன் அதற்கு சம்மதிக்கவில்லை. வங்கியில் பணிபுரியும் இன்றைய தலைமுறை தங்களை அறிந்து கொள்வது முக்கியமானது என்று நான் போஸ் பாண்டியனிடம் சொன்னேன். ஆனாலும் மறுத்து விட்டார். (அப்போது அவரைப் பற்றி இங்கு பதிவிட்டு இருந்தேன். அதையே புத்தகத்துக்கு முன்னுரையாக்கி இருக்கிறார். இணைப்பு முதல் கமெண்ட்டில்..)

இன்று அவரே ‘இணுங்கு’ என்னும் புத்தகத்தை எழுதி அவரை அறியத் தந்திருக்கிறார் நல்லது.

இணுங்கு என்றால் என்னவென்று கேட்டேன். மலைப்பகுதிகளில் தேயிலைகளைப் பறிப்பதை ‘இணுங்கு’ என்றுசொல்வார்களாம். சரிதான். தம் வாழ்வின் சில இலைகளை தோழர் போஸ்பாண்டியன் நமக்காக இணுங்கி இருக்கிறார்.

 

நூல் அறிமுகம் எழுதியவர்:

மாதவராஜ்

 

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *