சிறுகதை: மகிழ்ச்சியாய் பிறப்பாய் மகளே!  – ப. சிவகாமி           பரபரப்பான காலைப்பொழுது. காபி, சிற்றுண்டி, சமையல்  செய்துமுடித்து குழந்தை புனிதாவை எழுப்பி பல்தேய்த்து குளிக்கவைத்து, இரண்டு இட்லியை ஊட்டி, சீருடைமாட்டி மதிய உணவு டப்பாவை எடுத்துவைத்து அவளைப்பள்ளிக்குப் புறப்பட தயார் செய்தவாறே, மறுபுறம் கணவன் அலுவலகம் புறப்பட வேண்டிய உதவிகளைச்செய்து அவனை வழியனுப்பிவிட்டு, குழந்தையை அழைத்துச்சென்று தெருமுனையில் பள்ளி வாகனம் வரும் வரைக் காத்திருந்து, அவளை ஏற்றிவிட்டு வீடு திரும்பியவளுக்கு ஒரே அயர்ச்சியாய் இருந்தது. தினசரி பம்பரமாய் இயங்கி பழகிப்போன வேலைகள் தான் என்றாலும் பரமுவுக்குச் சில நாட்களாக ஏனோ தலை கிறுகிறுப்பாய் உணர்ந்தாள்.

                                    இருக்கையில் அமர்ந்துச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “நம் உடம்புக்கு என்னவோ?” என்று யோசித்தாள். பொட்டிலறைந்தாற்போல் ஒரு விஷயம் அவள் நினைவுக்கு வந்தது. “ஆமாம்! போனமாதம் நான்காம் தேதியே குளித்தோமே! இன்னைக்குத் தேதி  இருபது. பத்து பதினைந்து நாட்கள் தள்ளிப்போயிருக்கே…..! எப்படி மறந்தேன் இந்த விஷயத்தை? நாத்தி மகளோட சடங்கு, மாமியோட சிறுநீரகக்கல் நீக்கம் என்று இந்த மாசம் படுபிஸியாக என்னை வேலை வாங்கியதில் இதைப் பற்றி மறந்தே போனேன் போலிருக்கு” என்று யோசித்தவாறே கடிகாரத்தைப் பார்த்தாள்!. எட்டரை ஆகியிருந்தது. மாமிக்கு டிபனும் மருந்தும் கொடுத்த பின்பு அடுக்களைத் துடைத்து, பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, அழுக்குத்துணி வெளுத்து என்று தினசரி வேலைகளில் மூழ்கிப்போனாள்.

                                     அன்று மாலை வேலைகளெல்லாம் முடிந்த பின்பு இரவு தூங்கப் போகையில் தான் கணவனின் காதுகளில் கிசுகிசுத்தாள் பரமு.  செய்தி கேட்டவுடன் எழிலனுக்குள் உற்சாக வெள்ளம் கரை புரள மகிழ்ச்சியுடன் மனைவியைத் தூக்கிவைத்துக் கொண்டாடினான்.

                                   “புனிதா பிறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. அவளும் பள்ளிக்குச் செல்கிறாள். அடுத்து ஒரு ஆண் வாரிசு உருவாகனுமே, காலம் கடந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டேன். நீ அந்த வருத்தத்தை இன்று போக்கிவிட்டாய். உனக்குத்தான் தெரியுமே! எங்கள் பரம்பரைக்கே இரண்டு வாரிசுதான். அதிலும் இரண்டாவதுதான் ஆண்வாரிசு என்பது! எங்கப்பாவுக்கு என் அக்காவுக்கு அடுத்துத்தான் நான் பிறந்தேன். எங்க தாத்தாவுக்கு எங்க அலமு அத்தைக்குப்  பிறகுதான் எங்கப்பா பிறந்தாராம். எங்க தாத்தாவும் அவங்க அப்பாவிற்கு மூத்த பெண்ணிற்குபிறகு இரண்டாவதாக பிறந்தவராம். அதனால இது நமக்குஆண் குழந்தைதான். நமக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு பேர்கூட முன்பே யோசித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? எங்க அப்பா பேரு சந்திரபாலன். எங்க அம்மா பேரு வசந்தா. இந்த ரெண்டு பேரையும் சேர்த்தா நமக்குப் பிறக்கப் போகும் பிள்ளையோட பேரு! வசந்தபாலன்! பெயர் எப்படி? நல்லாருக்கா?” என்ற எழிலனின் உற்சாகம் பரமேசுவரியையும் ஒட்டிக்கொள்ள அவர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைச் சொல்லவா வேண்டும்?.

                                 அம்மாவின் வயிற்றிலிருக்கும் தம்பிப்பாப்பாவை கொஞ்சிக்கொண்டு மேடுதட்டும் அவள்வயிற்றை அடிக்கடித் தடவிப்பார்த்து நினைத்தபோதெல்லாம் முத்தமிட்டு  மகிழ்ந்தாள் புனிதா. வசந்தாவும் பிறக்கப்போகும் பேரனைக்காண ஆவலாக இருந்தாள். கருவிலிருக்கும்  வசந்தபாலனின் மனமும் உடலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் உருப்பெறவேண்டிய சவுகரியங்களை எல்லாம் செய்தான் எழிலன். நேரம் கிடைத்தபோதெல்லாம் இயற்கை எழில்மேவும் சுற்றுலாத்தலங்களுக்கும் அமைதி தரும் ஆன்மீகத்தலங்களுக்கும் அறிவைப் பெருக்கும் கண்காட்சிகளுக்கும் என அவ்வப்போது பரமுவை அழைத்துச்சென்றான்.                                       ‘………ம்ம்மா!……ம்ம்மா!….ம்ம்மா! எனக்காகவாக் காத்திருக்கீங்க? அன்பு அம்மா அப்பா அக்கா பாட்டீ….! நானும் உங்களை விரைவில் காணவே விழைகின்றேன்….ம்ம்மா! பிரபஞ்சத்தின் அழகையெல்லாம் பூக்களாய்…… புனிதமாய்…… இயற்கையாய்……. இன்பங்களாய்…. பாசத்தோடு பார்த்து நீ பரவசப்படுவதை ஒரு வித சிலிர்ப்போடு நான் உணர்கிறேன் அம்மா! பஞ்சு விரல்களால் நான் இருக்கும் வயிற்றை அவ்வப்போது வாஞ்சையோடு தடவி அன்பாய் முத்தங்கள் ஆயிரம்தந்து என்னோடு கொஞ்சி விளையாடத் துடிக்கிறாளே என் அக்கா…….

                                    குளிர்த் தென்றலும், குற்றால அருவியும், சித்திர சபையும், சபேசன் தலமும், நீல மலையும், நெஞ்சையள்ளும் மாலைப்பொழுதும், வான அரங்கில் நாட்டியமாடும் எழில் மேகமும், தாளமிடும் சாரல் மழையும் என வாழ்க்கையின் வசந்தக் குவியலை எல்லாம் அப்பா உனக்குக் காட்டி மகிழ நானும் தானே இங்கே மகிழ்ச்சியடைகின்றேன்! வருகிறேன் அம்மா! விரைவில் உங்கள் கைகளில் தவழ்கிறேன் அம்மா!’

                                  குழந்தையின் அசைவும் மழலை மொழியும் கேட்பது போல் உணர்ந்த பரமு திடுக்கிட்டு எழுந்தாள். பிரமை பிடித்தவள் போல் விழித்தாள். குழந்தை புனிதாவும் கணவன் எழிலனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். தான் உணர்ந்தது கனவா? நனவா? என்று புரியாமல் குழம்பினாள். என்ன விசித்திரமான உணர்வு இது? என்னோடு உரையாடியது கருவிலிருக்கும் என் குழந்தையா? சேச்சே! நான் ஏதோ கற்பனையில் உறங்கிவிட்டேன் போல! என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள். தன் வயிற்றை வருடிக்கொண்டே தனக்குள் சொல்லிக்கொண்டாள். ‘என் கண்மணி நீ எந்த குறையுமின்றி ஆரோக்கியமாக வளர்ந்து என் கைகளில் தவழ வேண்டும் கண்ணே….’                                   நாட்கள் உருண்டோடின. மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டாள். தன் மகன் வசந்தபாலனை சுமந்திருக்கும் பரமுவை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே எழிலனும் விரும்பினான். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி சொந்த பந்தங்களும் அவ்வப்போது வந்து பார்த்ததில் பரமுவுக்குள்  உற்சாகப்பரவசம். இதோ துளசி அக்காவும் வரப்போகிறாள். தங்களோடு பத்து நாட்கள் தங்கப்போகிறாள்.

                                 பரமுவின் அக்கா துளசி லண்டனில் வசிக்கிறாள். அங்கு பிரபல மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிசெய்கிறாள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தியா வருவாள். இப்போது அவள் வருவதில் பரமுவுக்கோ இரட்டை மகிழ்ச்சி!

                                துளசியும் தன் பங்கிற்குத் தங்கையைத் தாங்குத்தாங்கென்று தாங்கினாள். அவள் விரும்பியதை எல்லாம் செய்து கொடுத்தாள். மாதம் ஏழு ஆகிவிட்டதால் உயர் ரக வாகனத்தில் அலுங்காமல் குலுங்காமல் தங்கையை அவள் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றாள். சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை செய்யுமாறும் சத்தான உணவுகளை உண்ணுமாறும் அறிவுறுத்தினாள். அவளது மருத்துவ பரிசோதனை முடிவுகளை எல்லாம் புரட்டிப்பார்த்து திருப்தி அடைந்தாள். என்றாலும் ஏதோ ஒன்று அவளுக்குள் சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

                                   ஊருக்குப்புறப்படும் முன் தங்கைக்கும் அவள் கணவன் மற்றும் மாமிக்கும் கூட  அறிவுரைகள் போல் சில அறிவுறுத்தல்களைச் சொல்லிச் சென்றாள். தங்கையை மட்டும் தனியாக அழைத்து, “பிறக்கப்போவது ஆணாக இருந்தாலும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! நீயும் உன் குடும்பத்தாரும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே அக்குழந்தையை வரவேற்க தயாராகுங்கள். பிறக்கப்போவது வசந்தபாலனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வசந்தமாலாவாகக்கூட இருக்கலாம். உன் வீட்டுக்காரரோட மூத்தப்பரம்பரைக்கெல்லாம் முதல் குழந்தை பெண் இரண்டாவது ஆண் என்று பிறந்திருக்கலாம். அதற்காக இவருக்கும்  அப்படித்தான் வாரிசு இருக்கவேண்டும் என்பதில்லை. திடமாக ஆரோக்கியமாக மனதை வைத்துக்கொள்.” என்று கூறியிருந்தாள்.

                               துளசி சொல்லியதற்கெல்லாம் காரணமிருந்தது. தங்கையும் தங்கையின் குடும்பமும் அவர்களது ஏனையச் சொந்தங்களும் பரமுவுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருந்தனர். அது பெண்ணாகவும் இருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளத் தேவையான மனத்தயாரிப்புக்குத்தான் அவள் அந்த அறிவுறுத்தல்களை சொல்லிச்சென்றாள்.

                                 ஆனால் துளசியின் வார்த்தைகள் அக்குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி அப்புகை தீயாக மாறி கொழுந்துவிட்டு எரிந்து ஓரிரு நாட்களிலேயே நிலைமை தலைகீழானது. எழிலன் தனக்கு இரண்டாவதும் பெண் குழந்தைதான் பிறக்கும் என்பதை துளியும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மாமி வசந்தாவும் தன் உடல்நிலையையும் மறந்து ஆறு  தலைமுறையாய்  மூத்தது பொண்ணு இளையது ஆண் என்று பிறந்த  பரம்பரை இது. ஏழாவது தலைமுறை மட்டும் எப்படி மாறும்? அப்படி மாறுச்சுன்னா என்னவோ எங்கோகுறை  என்றுதானே அர்த்தம். ரெண்டும் பொம்பளைப்புள்ளையே வாரிசுன்னா   நம்பகுடும்பத்துக்குச் சரிப்படாது.” என்றெல்லாம் ஏதேதோ முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டாள். குடும்பச்சூழல் குழந்தை புனிதாவையும் வாடவைத்திருந்தாலும், அவள் மட்டும் தன் பட்டுக்கை களால் அவ்வப்போது  தாயின் வயிற்றை  பாசத்தோடு தொட்டுப் பார்த்துக் கொள்வாள்.

                                     பரமுவோ  எழிலனின் பாராமுகத்தாலும் மாமியின் முனுமுனுப்பாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். அந்த நிலையிலும் தனி ஒருத்தியாய் வீட்டுவேலைகளை ஒப்பேற்றினாலும் நிம்மதியின்றி தவித்தாள். ‘அவர்களுக்குச் சாதகம் என்றால் தாங்கு தாங்கென்று தாங்குவதும் பாதகம் என்றால் தூக்கி எறிவதும் என்ன நியாயம்?.’

                                     அன்று வெள்ளிக்கிழமையாதலால் மனச்சுமையோடு பணிச்சுமையும் அதிகமானதால் பிற்பகல் வேளையில் மனமும் உடலும் சோர்ந்து அமர்ந்த நிலையிலேயே கண் அயர்ந்துவிட்டிருந்தாள்.                                     ‘……..ம்ம்மா! ….ம்ம்மா! நீ ஏம்மா சோகமாகவே இருக்க? உன் துயரம் என்னை ரொம்ப வதைக்குதம்மா! …..ம்ம்மா! ஆண் பிள்ளையின்னா  என்ன? பெண் பிள்ளைன்னா என்னம்மா? நான் பெண்ணாக இருந்தால் அப்பா அத்தை பாட்டிக்கெல்லாம் பிடிக்காதாம்மா? உன் சுவாசம் மெலிவதால் நானும் சுவாசிக்கச்  சிரமப்படுகிறேனம்மா! நீ உட்கொள்ளும் உணவு குறைபாட்டினால் என் வளர்ச்சியும் குறையுதம்மா! என்னால தானே உனக்கு இந்தச் சிரமமெல்லாம்? கருவறைக்கதவு திறக்கு முன்பே இத்தனை இன்னல்கள் சூழ்ந்திருக்கும் என்னை உனக்குப் பிடிக்குமாம்மா? பிறக்கும் முன்பே எனக்கு இறப்பு நேர்ந்தால் எல்லோருக்கும்  நல்லது தானே…. ‘

                                 பரமு அலறித் துடித்துக் கொண்டு விழித்தாள். மீண்டும் அதே குரல்! ஓரிரு மாதங்களுக்கு முன்பு கேட்ட அதே குரல்! சந்தேகமே இல்லாமல் என் குழந்தைதான் என்னோடு பேசுகிறாள். இறைவா என்ன காரியம் செய்துவிட்டேன்! குப்பை என துன்பங்களைச் சுமந்துகொண்டு….! என் குழந்தை எனக்கு மட்டும் தொடுத்த வினாவா அது? அகிலத்தில் மானிட வர்க்கத்தின் உற்பத்தியையே அழிக்கும் உபாயம் அல்லவா அது?

                                 விரைவில் தெளிந்தாள். எழுந்தாள். முகம் கழுவிப் பொட்டிட்டுக்கொண்டாள். விளக்கேற்றி வழிபட்டாள். புனிதாவையும் அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள். உபதேசித்தாள், தன் கண்ணின் மணிகளுக்கு!

                                “பெண்  ஓய்வின்றி உழைத்தாலும் அங்கீகாரமற்றே உழைப்பவள். திறமைகளை வெளிக்கொண்டு வர முயன்றால் ஒடுக்கப்படுவாள். குடும்பம் என்ற விருட்சத்தின் ஆணிவேர் இவள் தான் என்பதால் புதைந்தே கிடப்பவள். இன்று நேற்றல்ல! யுகம் யுகமாக அடிமைப்பட்டே கிடப்பவள். இராமனைப் பிரிந்திருந்தாளாம்! அதனால் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னார்கள். இவளுக்கு மட்டும் இரட்டை தண்டனை கொடுத்துவிட்டு இதே குற்றத்துக்கு ஆளான இராமனை அரசனாக்கி அழகுபார்த்தச் சமுதாயமல்லவா இது?

                                பெண்ணே! என் கண்ணே! அன்று தொட்டு இன்று வரை பெண்கள் வாழ்வில் பெரிய மாற்றமோ முன்னேற்றமோ இல்லையம்மா! ஆனால் ஒன்று கண்ணம்மா! பெண்கள் பொறுமை காப்பதால்தான் இச்சமுதாயம் உருப்படுகிறது. பெருமை பெறுகிறது. அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் பெண் பொங்கி எழ ஆரம்பித்தால் முன்பொருமுறை மதுரைக்கு ஏற்பட்ட கதிதான் ஒவ்வொரு நாட்டிற்கும்….!

                                கண்ணே என் கண்மணியே! பெண்ணின் பெருந்தக்க யாவுள? ஆற்றல்கள் அவளிடம் குவிந்திருந்தாலும் ஏதுமறியா முட்டாளாகவே இருப்பாள். பெண்ணின் திறமைகளைப் போற்றி வளர்க்கின்ற பெருமை எந்த தேசத்தார்க்கும் இன்றுவரை சொந்தமில்லை. பெண்ணொருத்தி முட்டிமோதி முயன்று முன்னேறி சுயமுகவரியைச் செதுக்கினால்கூட பொறாமையால்ப் பொங்கி அவள் மீது பழிபேசவும் தயங்காதச் சமூகம் இது.

                                படைப்பவள்! நல்லனவற்றை ஆக்குபவள்! காப்பவள்! அருள்பவள்! தீயனவற்றை அழிப்பவளும் அவளே! தனக்கு நேரிடும் எண்ணற்ற துன்பங்களையும் தடைகளையும் தாண்டித்தான் அவள் ஐந்தொழிலும் புரிகின்றாள்.

                                ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று பெண்ணின்  பெருமையறிந்தே புலவன் ஒருவன் பாடியிருக்கின்றான். ஆகையால் மகிழ்ச்சி கரைபுரள பிறப்பெடு நீ! இந்தப் பூமியைச்சுழற்றி இயக்குபவளே நீயாகத்தான் இருப்பாய்.”

                                 பிரகலாதனுக்கு  நாரதன் சொன்ன மந்திரமாய் பரமு  உபதேசிக்க தன் புரிதலை சின்னச்சின்ன அசைவுகளாக்கித்  தன்அன்னைக்கு உற்சாகமாக உணர்த்தினாள் கருவில் வளர்ந்திருந்த இளையமகள்.

ப. சிவகாமி,

புதுச்சேரி