சிறுகதை: நிலை மாறுமோ? – ப.சிவகாமிஇப்படி ஒருவாய்ப்புக்காக யாழினி எத்தனைக் காலம் காத்திருந்தாள்!. தூரத்தில் தன்னுயிர் உலவிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், என்றேனும் ஓர்நாள் தன்னையது உயிர்ப்பிக்காதா என்று ஏங்கியிருப்பாள்!. புத்தகத்தைப் புரட்டினால் கருப்பொருளாக அவனே இருப்பானே!. கோயிலுக்குப் போனாலும் கருவறையில் அவனே காட்சியளித்தானே!.

அருகிலிருந்து சந்திக்கமாட்டோமா, பக்கத்திலிருந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளமாட்டோமா? தனது உயிருக்கும் உடம்புக்கும் இடையே உள்ள தூரம் குறையாதா? என்றெல்லாம் பரிதவித்து அவள் நினைவுகளைத் தழுவியே நொடிகளை நழுவவிட்டானே அவன்! சங்க இலக்கியமோ இக்கால இலக்கியமோ பாடல் பொருளாக அவள் மட்டுமே இருந்தாளே! இமை மூடினாலும் திறந்தாலும் விழிகளுக்குள் அவளே நிறைந்திருந்தாளே!

ஆனால் இன்று…? மிக அருகே தத்தம் உயிரை தரிசித்துக்கொண்டபோது..-! எத்தனை காலங்கள் தேக்கிவைத்த அன்பு!

அவன் கரங்களுக்குள் முகம் புதைத்துக் கதறியழ துடித்தாள் அவள்! தோள்சாய்த்து தன்னவளின் துயர் துடைக்கத் துடித்தான் அவன்! அந்த மலைக்கோயிலுக்கு அருகே சிறகொடிந்த பறவைகள் இரண்டு துடிதுடித்துக் கொண்டிருந்ததை அங்கே குடிகொண்டிருந்த இறைவனும் ரசித்துக்கொண்டிருந்தானோ என்னவோ? அவனது சூலாயுதமும் வேலாயுதமும் சும்மாவேதான் இருந்தது!,

தனக்கு மட்டும் சிறகுகள் இருக்குமானால் தன்னவளைத் துயரக்கடலிலா மூழ்கவிட்டிருப்பான்? மனிதர்களற்ற இன்ப வானத்தில் அல்லவா அவளோடு பறந்து மகிழ்ந்திருப்பான்!.

தன்னால்மட்டும் காற்றில் கரைய முடியுமானால் தன்னவனைத் தழுவியே களித்திருப்பாளே அவள்! பாவம்!! இயலாமை ஏக்கப் பெருமூச்சாய் அவர்களைச் சுட்டு பொசுக்கியது!.

வினாடிகள் ஏறஏற வேதனையே ஏறிக்கொண்டிருந்தது. உள்ளத்தின் அதிர்வுகள் அவர்கள் உடம்பையும் தாக்கிக் கொண்டிருந்தது. கடந்த காலங்களிலும் சரி! இப்போதும் சரி! உணர்வுகளின் அழுத்தத்தால் தாங்கள் இன்னும் வெடித்து விடாமல் இருப்பது அவர்களுக்கேச் சற்று அதிசயமாகத்தான் இருந்தது!

பூமியில் அன்பை விதைத்த ஆண்டவன் அவற்றிற்குத் தீவைக்கச் சில அரக்கர்களையும் அல்லவா படைத்துவிட்டான்!“…..,மானிடப் படைப்பின் பிரம்மாக்கள் பெண்கள் என்பதால் படைப்பதற்கும் காப்பதற்கும் ஏற்றவாறே அவளது உடலமைப்பை இயற்கை படைத்திருக்கிறது… நாமோ பெண்களின் அழகுதான் அவர்களின் பலம் என்ற ரீதியில் காலம் காலமாக அவர்களது அங்கங்களை வர்ணித்து வர்ணித்து அவர்களை நம் மோக வளையத்திற்குள் வைத்திருப்பதையே விரும்புகிறோம்….!

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப்பெண்ணரசி ஒருத்தி அரசவைப் புலவராக இருந்ததோடு மட்டுமன்றி தூதுவராகவும் திகழ்ந்து நிகழவிருந்த போரையேத் தடுத்திருக்கிறாள்!.

வீட்டைச்சமைத்து நாட்டையும் நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் பெண்மையின் ஆற்றலை ஏற்க மனம் இல்லாததாலோ என்னவோ திறமையின் உச்சத்தை வெளிப்படுத்த நினைக்கும் பெண்மையைப் போற்ற மறந்து அவளதுக் கற்பில் கல்வீசி அவளைச் சிதைக்க நினைக்கிறோம்…..!

‘கற்பென்று கொண்டோமானால் அதனை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ என்ற புரட்சிக்கவியின் வரிகளை வசதியாக மறந்து போனோம்….!

தாயாக, தாரமாக, தமக்கையாக, தனயளாக, தோழியாக, செவிலியாக… நமக்குச் சேவை புரிந்திடும் தியாக தீபங்களை ஆக்கிரமிப்புச் செய்வதும் சிறகுடைத்து அவர்களை அடிமைப்படுத்துவதும்தானே நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறு….

அன்புக்கு அடிமையாலாம்! அதில் ஒரு சுகம் உண்டு! ஆனால் பிறரது ஆசைக்கு அடிமையாவது பரிதாபம்! அதிகாரத்துக்கு அடிமை என்பதோ அவலம்! இத்தகைய பரிதாபத்துக்குரிய அவலத்துக்குரிய நிலையிலேயே பெண்களை வைத்திருப்பதில் அல்லவா நாம் மகிழ்ச்சி காண்கிறோம்….!”

கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர்தின விழாவில் மணிபாலன் ஆற்றிய உரையின் வீச்சு அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருக்க வேண்டும். கரவொலிகளால் அரங்கமே அதிர்ந்துகொண்டிருந்தது! யாழினியின் உள்ளமெல்லாம் பூரித்து, மனம் முழுவதும் மகிழ்ச்சிக்களிப்பில் துள்ளியது!

அவனிடம் அவள் பேசியதில்லை . இனி பேசலாம் என்றாலோ, அதுவும் முடியாது!. ஆனால் தன் உள்ளத்தையோ, இதயத்தையோ, சுவாசத்தையோ ஏதோ ஒன்றை அவன் கவர்ந்துகொண்டு தன்னைப் பாடாய்ப்படுத்துகிறான் என்று மட்டும் உணர்ந்தாள்!. வேறு துறையில் பயின்றாலும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவனைப் பார்வையால் பருகி ரசித்தாள்! அவனைப் பார்க்க முடியாத நாட்களெல்லாம் உயிரற்ற நாட்களாய் கடந்து போனது அவளுக்கு!.அப்பா, பெரியப்பா, சித்தப்பா மூவர் குடும்பமும் ஒன்றாகவே வசித்துவந்த அந்தப் பாரம்பரியமான பெரிய வீட்டில் நடந்துகொண்டிருந்த கலவரங்கள் யாழினியின் பிஞ்சுமனதில் அளவற்ற பயத்தை உண்டாக்கி இருந்தது. பொல்லாத பயங்கரக்கனவுகள் அவள் தூக்கத்தையும் துரத்தியடித்தது.

பெரியப்பா மகள் மதியழகி வேறுசாதிப் பையனுடன் ஓடிப்போய்விட்டாளாம்! பெரும்ம்ம் மானக்கேடு ஆகிவிட்டதாம்! ஆதலால் பசித்தூக்கம் பாராமல், பகலிரவு பாராமல் ஓயாது அவர்களைத்தேடிக் கண்டுபிடித்த கடைவீதியிலேயே, அவர்களை ஓடஓட வெட்டிக்கொன்ற வீர்(!) மனிதர்கள் இருக்கும் வீடல்லவா!.

அந்தவீட்டில் அப்போதைய சூழ்நிலையில் அவளையும் ஒரு பொருட்டாக யார்தான் நினைப்பார்கள்!. ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லவிருந்த அவளுக்குப் பள்ளி நினைவே அற்றுப்போய்விட்டது. அம்புபட்ட மான்குட்டியாக பயத்தில் நடுங்கிப் படுக்கையில் கிடந்தவளை, மருத்துவர்களின் கண்டிப்பான அறிவுரைகளுக்குப் பிறகே வேண்டா வெறுப்பாகப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்!.

மணிபாலன் செய்யும் சின்னசின்ன குறும்புகளால் வகுப்பே கலகலப்பாகிவிடும். சிறுசிறு சேட்டைகள் செய்துவிட்டு எந்த ஆசிரியரிடமிருந்தும் மிக எளிதாகத் தப்பிவிடுவான். ஆசிரியர் எவரேனும் தண்டிக்கவந்தால் அவரிடமிருந்து தப்பிக்க அவன் சொல்லும் வினோத காரணங்களும் செய்யும் நளினங்களும் அவருக்குமேச் சிரிப்பை வரவழைத்துவிடும். எத்தகைய இறுக்கமான வலிமிகுந்த மனநிலையில் இருப்பவர்களைக்கூடச் சிரிக்க வைத்துவிடும் ஆற்றல் அவனிடம் இருந்தது. அதனாலேயே எல்லா ஆசிரியர்களுக்குமே அவன் ‘செல்லப்பிள்ளையாகவே’ இருந்தான்.

யாழினி அந்த வகுப்பிலேதான் படித்தாள். அதனால் பள்ளி நேரத்தில் வீட்டு நினைவுகள் அவளைவிட்டு விலகியிருந்ததோடு, அஞ்சிநடுங்கிய அவள் மனதிற்கும் அவ்வகுப்பறை ஆறுதல் தருவதாகவே இருந்தது.

ஆசிரியர்களின் அறிவுரைப்படி வீட்டுச்சூழலிலிருந்து விடுபட, மனதைப் படிப்பில் செலுத்த முயற்சித்த யாழினி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றாள். என்றாலும் அவளது விடாப்பிடியான பட்டினிப் போராட்டத்தினாலேயே மேல்நிலைப் பள்ளிக்கல்வி கிட்டியது அவளுக்கு! கணிதத்தில் சென்டம் எடுத்து மேனிலைத் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதுதான் அவளது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என்பது இன்றுவரை அவளுக்கேப் புரியவில்லை!

சரியாகத் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டால் அவள் படிப்புக்கு முடிவுகட்ட அது ஒன்றே காரணமாகியிருக்கும்! எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிடுவாளோ என்று பயந்தேதான் மேல்நிலைப் பள்ளியிலேயே அவள் சேர்க்கப்பட்டாள். அப்படியிருக்க உயர்கல்வியாவது? அவள் கற்பதாவது?

ஆனால் அவள்பெற்ற மதிப்பெண் கண்டு வியந்து பேசியவர்கள் பலர். “நல்ல புத்திசாலிப்பெண் இவள்! கொஞ்சம் ஊக்கம் கொடுத்தீர்கள் என்றால் மிகச்சிறப்பாக வருவாள்! தயவுசெய்து அவள் படிப்புக்குத் தடைபோட்டுவிடாதீர்கள்” என்று ஆசிரியர்கள் சிலர் வீடு தேடிவந்து அவளது அப்பாவிடம் கேட்டுக்கொண்டனர். அதனாலேயே என்னவோ சற்றே மனம் கனிந்து குடும்பத்தார் அனைவரும் கூடிப்பேசி தீரயோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அண்ணாப் பல்கலையில் கிடைத்த இடத்தை நிராகரித்துவிட்டு அவள் கிராமம் இருந்த எடப்பட்டியிலிருந்து மிக அருகிலிருக்கும் திருச்செங்கோட்டில் ஒரு கல்லூரியில் சேர்க்கப்பட்டாள். அக்கல்லூரியில்தான் அவளதுப் பெரியப்பா மகன் படித்துக்கொண்டிருந்தான். தாய்மாமா ஒருவர் ‘லேப் டெக்னீசியன்’ ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவ்விருவரின் கண்ணும் கருத்துமான கண்காணிப்பை நம்பியே யாழினி மேற்கல்விக்கு அங்கு அனுப்பி வைக்கப்பட்டாள்!

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு அங்குதான் மணிபாலனைப் பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு மீண்டும் கிட்டியது. மிகவும் மாறிப்போயிருந்தான். விளையாட்டுத்தனம் குறைந்து நிறையப் பக்குவப்பட்டவனாகக் காணப்பட்டான். பிறரிடம் பேசுவதிலும் பழகும் விதத்திலும் உயர்பண்பு வெளிப்பட்டது. இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பான் போலிருக்கிறது. அவனுடைய கலை நிகழ்ச்சியோ அல்லது பேச்சோ இல்லாமல் கல்லூரியில் எந்த விழாவும் நடப்பதில்லை என்னும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தான்.யாழினிதான் மூத்தவள். அவளுக்குப் பிறகு ஒரு தம்பி, ஒரு தங்கை. பெரியப்பா மகள் மதியழகி கொல்லப்பட்ட பிறகும்கூட, யாழினியின் அப்பா பலராமன், “அப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமானால் அடுத்த நொடியே பொண்டாட்டி புள்ளைய கொன்னுபுட்டு நானும் பொணமாயிடுவேன்ல!” என்று பலருக்கும் கேட்கும்படியே பலமுறை சொல்லியிருக்கிறார்,

சில நாட்களுக்கு முன்புகூட, “மேலத்தெரு சங்கரபாண்டி மக பஸ்ல யாரோ ஒரு பையனோட பேசிக்கிட்டேப்போறா! காலேஜுக்குப் படிக்கப்போறாளா? இல்ல, பசங்களோடக் கூத்தடிக்கப் போறாளான்னுத் தெரியல! என்னதான் பொண்ண வளர்க்கறானுவ! வெட்கங்கெட்டவனுக…..!” என்று அப்பா பல்லை நறநறவென்று கடித்ததை, இப்போது நினைத்தாலும் உடல் நடுநடுங்கியது யாழினிக்கு!

உள்ளத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டாலும் வெளிப்படையாகப் பேசுவதற்கு அவளுக்கு எப்படி தைரியம் வரும்? ‘இப்படிப் பறிபோன உள்ளங்களோடு எத்தனை சடலங்கள் இங்கு உலவிக் கொண்டிருக்கிறதோ!’

தன்னைக் கொன்றழித்து இன்பம் காணும் மனிதக் கூட்டத்திற்கே தன் வளத்தையெல்லாம் வாரி வழங்குகிறதே இயற்கை…! அந்த இயற்கைதான் யாழினியின் எண்ணங்கள் மணிபாலனைச் சென்றடையப் பாலம் அமைத்திருக்க வேண்டும்! யாழினியின் பார்வைச்சிறகு அவன்மீது படும்போதெல்லாம் அவனுக்குள் ஏதோ ஓர் சிலிர்ப்பு! பாசமும் பரிவும் கலந்த தன் நேசப்பார்வை தன்னையறியாமலேயே அவளைத் தழுவுவதை உணர்வான்!.

மொட்டு மலர்வதையோ, மணம் காற்றோடு கலப்பதையோ தடுப்பவர் யார்? இருவருக்குள்ளும் பார்வைகளே மொழிகளாகி உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன! ஒருவற்பால் ஒருவர் கொண்ட அன்பு நாளுக்குநாள் பெருக்கெடுக்க அதை அடைக்கும் வழிதெரியாமல் இருவரும் தத்தம் உணர்வுகளைக் காகிதத்தில் வடித்தெடுத்தனர். அவன் வடித்த காதல்ச்சிற்பங்கள் ‘மெல்லியலாள் மௌனங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பாய் பவனி வருகிறது.

காலம் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. இன்னும் சிலமாதங்களில் கல்லூரி வாசம் முடிந்துவிடும். பிறகு? தன் சுவாசமே அவன்தான் என்றிருக்கும் நிலையில் இதற்கு மேலும் தாமதித்தால்…? ஒரு முடிவோடு, (பாடக்குறிப்பு எடுப்பதற்குப் பதிலாக) தன் எண்ணங்களையெல்லாம் முடிந்தவரைக் காகிதத்தில் கொட்டினாள், காலநேரம் பார்த்துப்பார்த்து பேருந்தில் யாரும் கவனிக்காத வினாடி நேர வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியோ அவனிடம் சேர்ப்பித்துவிட்டாள்.

நதி தன்னையணைத்துத் தன் தாகத்தைத் தீர்க்காதா என்றல்லவா காலம் காலமாகக் கடல் காத்திருக்கிறது! வேதனைச் சுமையில் உள்ளம் கணக்க குறிப்பிட்ட நாளில் அந்த மலைக் கோயிலுக்கு அருகில் அவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான்!.

எரிமலைக் குழம்பாய் குமுறும் உணர்வுகளை அவன்தான் கலைத்தான், தன் நேசத்திற்குரியவளை நோக்கி மிக மென்மையாக, “……யாழினி உன் இந்த கண்கள் என் இதயத்தில் எழுதிய கவிதைகளாலல்லவா என் சுவாசம் நீடிக்கிறது! குறிப்பிட்ட அந்த முடிவைத்தான் நீ மேற்கொள்ளப் போகிறாய் என்றால், என்னை ஏன் விட்டுச்செல்ல நினைக்கின்றாய்? நீயில்லா இவ்வுலகில் நான் மட்டும் இருப்பேன் என்று எப்படி நினைத்தாய்? உன் சுவாசம் நீளும் வரைதான் என் ஆயுளும் நீடிக்கும் என்பதை மறவாதே! சாவதென்றால் வா! இருவரும் இன்பமாய்ச் செத்துப்போவோம்” என்றான்.அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வற்றாத அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது! தன்னை அவனோடுச்சேர விடமாட்டார்கள்! அவனைப் பிரிந்து தனக்கு வாழ்வே இல்லை! அதனால் சில நொடிகளேனும் அவன் தோள் சாய்ந்து ஸ்பரிசித்து அந்த நினைவுகளுடனே இறந்துவிடத் துணிந்திருந்தாள் அவள்!.

அவன் தொடர்ந்தான்……

“என்னை இழந்தாலும் உன்னை இழக்க நான் தயாரில்லை யாழினி! என் குடும்பத்தார் எப்போதும் என் விருப்பத்திற்குத் தடையாக இருக்கமாட்டார்கள்! ஆனால் உன் நிலை…….? ……ஆணவம் கொண்ட மூடர்களால் உடல்களைத்தானே வெட்டமுடியும்! ஒன்று கலந்துவிட்ட நம் உள்ளத்தை அவர்களால் என்ன செய்துவிடமுடியும்? வாழ்க்கைச் சிறப்புற ஆனந்தமாக நாம் வாழவேண்டும் யாழினி!. பொறுத்திருப்போம்! என்றேனும் ஒருநாள் ஆணவத்தை அன்பு வெல்லும் என்று காத்திருப்போம்! அதுவரை நினைவுகளே நம்மை வாழவைக்கும்! என்னிதயத்தில் நீயிருந்து என்னை இயக்கும்வரை நிச்சயம் என்னால் எதையும் எளிதாகச் சாதிக்கமுடியும்! நம்பிக்கையோடு இரு யாழினி….!” என்று அவள் கரத்தைப்பற்றி மென்மையாக அழுத்தினான்!.

அவனின் அந்த நேர்மறையான வார்த்தைகளும், இதமான தொடுதலும் அவளது துயரத்தைச் சற்றேத் தளர்த்தியிருக்க வேண்டும்! அப்படியேத் தன்னை அவன் தோள்மீது சாய்த்துக்கொண்டாள்!. அவனதுக்கரம் அவளது கண்ணீரைத் துடைத்தது! அவளது கேசத்தையும் முதுகையும் வருடிக்கொடுத்தது! அவள் மறந்தாள்!. தன்னை மறந்தாள்! சொர்க்கம் போன்றதொரு உலகில் பறந்தாள்!. ‘பூமிப்பந்தின் இயக்கம் நின்று இந்த நொடி இப்படியே நின்றுவிடக்கூடாதா…’ என்று எண்ணி ஏங்கினான் அவன்!.

கல்வியிலோ, பொருளாதாரத்திலோ, ஏனையப் பண்பு நலன்களிலோ எந்த விதத்திலும் மணிபாலனின் குடும்பம் யாழினியின் குடும்பத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல! பிரபஞ்ச சக்திகளாம் காற்றை விட, கடலை விட, வானை விட, மண்ணை விட… மனிதனின் சாதீயத்திற்குச் சக்தி அதிகமாய்ப் போய்விட்டது! அதனால் தான் அது அவனின் வாழ்வையும் உயிரையுமே வேரறுத்துக் கொண்டிருக்கிறது!

‘தான் மடிந்தாலும் தன்னை நேசிக்கும் அவன் இதயத்தில் ஆனந்தமாய் வாழ்ந்திருப்போம்’ என்று எண்ணியிருந்த யாழினிக்குள் மணிபாலன் நம்பிக்கை விதைகளைப் போட்டிருப்பானோ? அவனது அன்பின் அரவணைப்பில் தன் நெஞ்சு லேசானதாக உணர்ந்தாள்! அவன் கைகளை எடுத்துக் கண்ணீரால் காய்ந்த தன் கன்னங்களில் அழுத்தமாக ஒற்றிக்கொண்டாள்! அதே ஆழமான அழுத்தத்தோடு தன் இதழ்களை அக்கைகளில் பதித்துவிட்டுப் நம்பிக்கையோடு புறப்பட்டாள்.

தற்போதைக்குத் தன்னவளைத் தேற்றிவிட்ட திருப்தியில் அவள் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டே சிலையாக நின்றான் மணிபாலன்! “தங்களையேக் காவு கட்கும் இச்சாதீயச் சகதியிலிருந்து மானுடச்சமுதாயம் என்று மீண்டெழுமோ?” என்று எண்ணிய போது அவனது உள்ளம் ஏனோ நடுநடுங்கியது.

*****************

ப.சிவகாமி,

புதுச்சேரி