அலுவலகம் செல்லும்போதும், கடற்கரைக்குச் செல்லும்போதும், பேருந்துகளில் ஜன்னலோரம் உட்கார்ந்து ஆ…. வென ஆச்சர்யமாய் பார்க்கும் தமிழக சட்டமன்றத்தின் வெள்ளை மாளிகையான “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” பற்றியதுதான்…..
வரலாற்றுப் புகழ் பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் தான்……
“கோட்டையின் கதை” எனும் புத்தகம்..!
ராமலிங்க விலாசம் ராமநாதபுரத்தில் உள்ளது. மண் சுவரால் கட்டப்பட்ட கோட்டையின் அப்போதய மன்னர் கிழவன் சேதுபதி. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். பின் தலைநகரை போகனூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு மாற்றிய போது அதை இடித்து கொலு மண்டபம், உயர்ந்த மதில் சுவர் என கட்ட வள்ளல் சீதக்காதி உதவியிருக்கிறார் என்கிறது வரலாறு.
இதில் முக்கியமான வரலாற்றுச் சம்பவம் நடந்திருக்கிறது. அது “ஜாக்சன் துரையை கட்டபொம்மன் சந்தித்தது” என நீள்கிறது.
சேதுபதிக்கோட்டை, பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டை, மதுராந்தகம் அருகில் ஆலம்பறைக் கோட்டை, கருங்குழிக்கோட்டை, வந்தவாசிக் கோட்டை, டேனிஷ்க் கோட்டை, இப்படி ஒவ்வொரு கோட்டையின் வரலாறு பற்றி விரிகிறது. அவை ஆண்டுகளோடும், அப்போதய ஆண்ட மன்னர்கள் பற்றியும், அது கருங்கல் கோட்டையா, மண் கோட்டையா எனவும் விரிகிறது. இதில் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை மண், பனஞ்சாறு, கம்பஞ்சக்கை ஆகியன கொண்டு அற்புதமாக கட்டப்பட்ட கோட்டையை மெக்காலே இடித்து தகர்த்து தரைமட்டமானது சோக வரலாறு.
தமிழகம் பனிரெண்டு நாடுகளாக இருந்து இருக்கிறது. அதிலும் சென்னை என்பது ” புழல் கோட்டம் 2. புலியூர் கோட்டம் 3.மணவில் கோட்டம் ஆகிய மூன்றைச் சுற்றியது என விவரிக்கிறார்கள்.
தொண்டை மண்டலத்தை ஆண்ட தாமல் வேங்கடபதியிடம் 1637 ஆகஸ்ட் வில் பிரான்சிஸ் டே ஒப்ந்தத்தின் மூலம் இப்போது உள்ள இடத்தை வாங்குகிறார். ஆனால் காலம் நானூறு ஆண்டுகள் அவர்களால் நாம் அடிமைப்படுத்தப்பட்டோம். பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் இவர்கள் இருவரால்தான் சென்னை நிர்வாக நகரமாக ஆவதற்கு அடித்தளம் இட்டவர்கள். அடுத்து அதைச் சுற்றிய மொத்த இடத்தையும் தங்கள் கைகளுக்கு கொண்டு வருகிறார்கள்.
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சர் எட்வர்ட் விண்டர் என்பவரால் கோட்டை நிர்வகிக்கப்பட்டு வந்த காலத்தில் அவர் செய்த முக்கியமான காரியம் அந்த இடத்தில் நூலகத்தையும், மருத்துவமனையும் அமைக்கிறார். அதுதான் இன்றைய புகழ் பெற்ற சென்னை பொது மருத்துவமனை. இப்படி இந்த நூலில் வரலாறு விரிகிறது.
மூன்று பேரிடம் ஆதிக்கம் நிலவுகிறது. போர்த்துக்கீசியர், டச்சு, பிரெஞ்சு, இவர்களின் மூர்க்கத்தை நசுக்கியவர்கள் ஆங்கிலேயர். ஆனால் இந்த சுழல் யுத்தத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே பெரும் பங்கு. ஆனால் இவற்றில் ஆங்கிலேயர் ஆட்சி நிர்வாகத்தை குடிசையில் இருந்தே அவர்களின் ஆரம்பகாலம் அமைகிறது. அதே குடிசை இருந்த இடத்தில்தான் இன்று கம்பீரமாக கோட்டை நிற்கிறது என்கிறார் ஆசிரியர் ஆய்வுகள் மூலமும், ஆதாரங்கள் மூலமும்.
இந்தப் புத்தகத்தில் சில தகவல்கள் பெறுவதற்கும், அந்தக் காலத்தின் போர்களையும், சூறையாடப்பட்ட நிகழ்வுகளையும், வறுமையையும், சிப்பாய்கள் பற்றியும், மொழிகள் பற்றியும் தெரிவதற்கு நாட்குறிப்பு வேந்தர் அனந்த ரங்கம் பிள்ளையின் டைரி இந்த புத்தகம் எழுதுவதற்கும், பெரிதும் உதவியாக இருந்த இருக்கிறது.

அனந்தரங்கம் பிள்ளை அவர்கள் சென்னப் பட்டிணத்தை லட்சாதிபதிகள் நிறைந்த பட்டணம் என கூறுவதாக ஆசிரியர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
ராபர்ட் கிளைவ் சென்னை வந்ததும் ஆங்கிலேயப் படைகள் வலுப்பெறத் தொடங்குகிறது. எழுத்தராக உள்ளே நுழைபவர். அசைக்க முடியாத சக்தியாக மாறுகிறார். இங்கு வந்த பின் இவருக்கு கிடைக்கும் வெற்றியால் சேரும் தொகை கொண்டு தனது 5 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
போரிடும்போது இவர் செய்யும் மனிதாபிமான செயல்கள் மக்களை பெரிதும் கவர்கிறது. ஊர் மக்களைத் தாக்க கூடாது, கோட்டைக்குள் இருக்கும் மற்றவர்களைக் கொல்லக் கூடாது. இதுதான் அவர் செய்த மிகப் பெரிய காரியம். இதன் வாயிலாகத்தான் ஆற்காடு கோட்டையை கைப்பற்றுகிறார்.
இப்படியெல்லாம் இருந்த கிளைவ், சென்னை வந்த புதிதில் தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் எனும் செய்தியைப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது. தன்னைத்தானே துப்பாக்கி வைத்து சுடுவதற்கு முயற்சித்து இருக்கிறார். ராபர்ட் கிளைவ் என்ற மனிதனை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உருவாக்கியது எனலாம்.
1799 செப்டம்பர் 16ல் பேனர் மேனனால் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதும், அறிக்கையை 21 அன்று வெளியிடுகிறார்கள்.
அந்த அறிக்கை சொல்வது….
1. கோட்டை இனி யாரும் கட்டக்கூடாது.
2. வெடிகுண்டு துப்பாக்கி வைத்திருக்க கூடாது.
3. ஈட்டி, வேல், வாள் வைத்திருந்தால் மரண தண்டனை
இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆசிரியர் அதற்கு பின்னதாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து நமக்கு அறிக்கை கொடுக்கிறார்கள். அவ்வளவு பொருட்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஆச்சர்யம் தருகிறது.
இதற்கு பின்னதாக 1801 டிசம்பர் 26 ல் முழுமையாக முடிவுக்கு வந்து எல்லாப் பகுதியும் ஆங்கிலேயர் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.
இதற்குப் பின்னரே முழுமையாக நம்மை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பிக்கிறார்கள் என ஆசிரியர் நமக்கு ஆதாரப் பூர்வமாக கூறுகிறார்கள்.
ஆனாலும் யுத்தங்கள் விடவில்லை. அது வேறு மாதிரியாகவும், சுதந்திரப் போராட்டத்தின் முன்னத்தி ஏராக நடைபெற்ற போராட்டம் என வேலூர் கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தை வரலாறு நினைவில் கொள்கிறது. அதற்கு காரணம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ஆங்கிலேய தளபதியாக இருந்த ஜான் கிராடெக்.
அவரின் மத துஷ்பிரயோகங்கள் கொண்ட அறிக்கையினால் போராட்டம் வெடித்தது.
1. இந்துக்கள் நெற்றியில் திருநீறு இடக் கூடாது.
2. முஸ்லிம் இளைஞர்கள் தாடி வைக்க கூடாது.
இதனால் வெடித்த முதல் சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல இந்தியர்கள் ஒற்றுமையாய் கிளர்ந்தெழுந்த போராட்டம். அதை “சிப்பாய்க் கலகம்” என்றார்கள்.
ஜவஹர்லால் நேரு ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாராகிறார்.

1932 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய தேசிய மூவண்ணக் கொடி ஒன்றை வுவரே தைத்து, நடுவில் மையினால் ராட்டை வரைந்து, அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதி, ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, மெதுவாய் யாரும் பார்க்காதவாறு 140 அடி உயரம் குறுக்களவு 3 அடி உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சுழலும் விளக்கின் வெளிச்சம் படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு அதில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி சாமர்த்தியமாக ஓடி தப்பிவிடுகிறார். இது நடந்தது இப்போது செல்கிறோம் கோட்டை கொத்தளம் அந்தக் கொடிக் கம்பத்தில்தான். காலையில் ஒரே பரபரப்பு தொற்றிக் கொள்ள கோட்டையில் ராணுவ வீரர்கள் பதட்டமடைந்து, கவர்னருக்குச் செய்தி சேருகிறது. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.
அந்த வழி செல்லும் போதெல்லாம் கம்பீரமாய் காற்றில் அசையும் கொடியில் பாஷ்யமும் தெரிகிறார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறுகளினால் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதற்குப் பின் 1947 ஆகஸ்ட் 15 ன் படி பிரதமராக நேரு பதவியேற்கிறார். 1950 ல் ஜனவரி 26 ன் படி மாநிலத்தில் அரைத்துக் கொண்டிருந்த பிரதம மந்திரி என்ற சொல்லாடல் நீக்கப்பட்டு “முதல் அமைச்சர்” என அழைக்கும் முறை தொடங்குகிறது.
டெல்லியில் ஜனவரி 26ம் நாளில் குடியரசுத்தலைவரும், ஆகஸ்ட் 15ல் பிரதமரும் கொடியேற்றுகிறார்கள். அதன்படி மாநில முதல்வர்களுக்கும் சிறப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதன்படி, முறையாக 1969 ஆகஸ்ட் 15ல் முதல்வர் கருணாநிதி கொடியேற்றுகிறார். வரலாற்று நிகழ்வு அது ஜனநாயகத்தால் தேர்வு செய்யப்பட்டவரால் ஏற்றப்பட்ட கொடி.
இதுவும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை மிகப்பெரிய புகழாக விளங்கியது எனலாம். இந்த வரலாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டை மூலமாகத்தான் இந்தியாவுக்கே கிடைத்தது.
முதன் முதலாக சுப்பராயலு ரெட்டி அமைச்சரவை 1920 டிசம்பர் 17 ல் பதவியேற்கிறது. பின் பனகல் அரசர் முதல்வராகிறார். 1926 ல் சுப்பராயன் முதல்வராகிறார். பின் முனுசாமி நாயுடு ஆகிறார். 1937ல் ராஜாஜி முதல்வராகிறார். 1946 ல் டி. பிரகாசம் முதல்வராகிறார். பின் ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தை ஆள்கிறார். அதன் பின் நேர்மையின் மறு உருவம் குமாரசாமி ராஜா பதவி வகிக்கிறார். இதில் முக்கியமான தகவல் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் இவர் ஆட்சியில் நடைபெற்றது. 21 வயதுக்கு வந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் என்பதும் அவரது ஆட்சியில் தான். பின் ராஜாஜி முதல்வராக வந்தார். குலத்தொழில் திட்டம் கொண்டு வந்து 1954ல் ராஜினாமா செய்தார். பின் காமராசர் தமிழக முதல்வரானார். 1967 ல் அறிஞர் அண்ணா முதல்வரானார். மதாஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். பின் கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார்.
1977 ல் எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1988 ல் ஜானகி பொறுப்பேற்று பொம்பான்மை நிரூபிக்க இயலாததால் பல்வேறு குழப்பத்தால் ஜனவரி 30 அரசு கலைக்கப்படுகிறது. பின் கலைஞர் கருணாநிதி முதல்வராகிறார்.

இதற்கிடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற சுவாரஸ்யமான செய்திகளையும், சில அவலமான நிகழ்வுகளையும், ஆச்சர்யமான விசயங்களையும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு கோட்டை பாரம்பரியம் கொண்டது மட்டுமல்ல. அதனுள்ளே இன்னும் வரலாறு வாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.
அந்தக் கோட்டையின் பின் சர்ச் ஒன்று இருக்கும். அந்த சர்ச்சில் தான் ராபர்ட் கிளைவ் ற்கு திருமணம் நடந்தது என ஆசிரியர் சொல்லி இருப்பார்கள். அந்த சர்ச் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதன் தொன்மை அப்படியேதான் இருக்கிறது. சர்ச்சின் உள் நுழைகையில் அங்குள்ள ஒவ்வொன்றையும் பார்க்கும்போது ஆச்சர்யங்களால் ஆணி அறையப்பட்டு இருப்போம்.
இந்தப் புத்தகம் வாசிப்பதற்கு மட்டுமல்ல, அதனுள் நிறைய செய்திகள் புதையலாய் புதைந்து இருக்கிறது. அவ்வளவு மெனக்கெடல்கள். ஆவணமாய் நிறைந்திருக்கிறது புத்தகம். இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் முக்கிய பங்கு வசிக்கும். பொதுஅறிவுக்கு உகந்த புத்தகமாகவும் விளங்குகிறது.
அரசியலை, வரலாறைப், போர்களை, கோட்டையை, உடன்படிக்கையை, என தமிழகத்தின் அரசியல் பக்கங்களை அலசுகிறது.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை ஆவணமாக்கி இருக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் வரலாற்றின் துளிகள் படிந்திருக்கின்றன. அதைத் தோம் போதுதான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. எவ்வளவு பெரிய உண்மை..!
கம்பீரமாய் மிளிர்கிறது கோட்டை மட்டுமல்ல. இப்புத்தகத்தை படித்த மனதும் தான்.
புத்தகம் – கோட்டையின் கதை
ஆசிரியர் – திரு. ப.திருமாவேலன்.
பதிப்பகம் – ஆனந்த விகடன்.
வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

