பா. ரஞ்சித்தின் மெட்ராஸ் தவிர மற்ற படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது. ஒன்று அந்தப் படங்களில் எளிய மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதல்களை சித்தரித்திருந்தார். இன்னொன்று ராஜனிகாந்த என்கிற நாயகனை மய்யப்படுத்தியிருப்பது. இதில் அந்த இரண்டு அம்சங்களும் இல்லை. ஆனால் இதிலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாகக் காட்டியிருக்கிறார். 70களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டைப் போட்டிகளே படத்தின் முக்கிய அம்சம். சார்பட்டா பரம்பரை என்கிற குழுவில் பிராதனமாக இருந்த மீனவ சமுதாயத்தினர் குறித்தும் அவர்களுக்கும் பெரியார், அண்ணா ஆகியோருக்கும் இருந்த நெருக்கம் ஆகியவை சித்தரிக்கப்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. (காண்க தோழர். பகத்சிங் (Bhagath Veera Arun) முகநூல் பதிவு:-
சார்பட்டா பரம்பரைக்கும் இடியாப்பப் பரம்பரைக்கும் இடையே நிலவிய போட்டியில் இடியாப்பப் பரம்பரையை சேர்ந்த டான்சிங் ரோசையும் வேம்புலியையும் சார்பட்டாப் பரம்பரையினரால் வெல்ல முடியவில்லை. அந்தக் குழுவின் வாத்தியார் ரங்கன் மகன் வெற்றி, சற்று வசதியான ராம் ஆகியோரைக் களம் இறக்க விவாதிக்கின்றனர். அந்தப் பகுதியை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் முனுசாமியின் மகன் கபிலன் ராமை வென்றுவிடுவதால் அவன் டான்சிங் ரோசுடன் மோதுகிறான். சவால் விட்டபடி இரண்டே சுற்றுகளில் அவனை வீழ்த்துகிறான். அடுத்தபடியாக வேம்புலியுடன் மோதுகிறான். வெற்றிபெறும் நிலையில் இருக்கும் கபிலனை ராமின் மாமன் நாற்காலிகளை வீசி காயப்படுத்துகிறான். ஆட்டம் நிறுத்தப்படுகிறது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் திமுக தலைவரான ரங்கன் கைது செய்யப்படுகிறார்.
ராமின் மாமனுடன் நிகழ்ந்த ஒரு கைகலப்பில் கபிலனும் சிறை செல்கிறான். திரும்பிவந்த கபிலனின் வாழ்க்கை திசை மாறுகிறது.சாராயம்,அடிதடி என சீரழிகிறது. போதையில் தாயாரையே அடிக்கப் போகிறான். தாயார் அவனைப் பிரிந்து செல்கிறார். ஒரு குத்து சண்டையில் ராம் அவனை படுகாயப்படுத்தி வீழ்த்தி விடுகிறான். இதனால் மனமுடைந்த கபிலன் தாயிடமும் மனைவியிடமும் கதறி அழுகிறான். அவர்களும் அவனுடன் எப்பொழுதும் இருக்கும் டாடி எனும் ஆங்கிலோ இந்தியரும் அவனை தேற்றி பீடி ராயப்பன் எனும் மீனவரிடம் குத்து சண்டை பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு மீண்டும் வேம்புலியுடன் மோதுகிறான். கடுமையான போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருக்கும் அவனை சிறையிலிருந்து திரும்பிய ரங்கன் வாத்தியாரும் ஊக்கப்படுத்துகிறார். இறுதியில் வெற்றி பெறுகிறான்.
படத்தின் ஊடே நெருக்கடி நிலைமை, கள்ள சாராயம் காய்ச்சுதல், திமுக சார்பாளர்கள் சிலர் அண்ணா திமுக பக்கம் போவது போன்ற அன்றைய அரசியல் நிலவரங்களை உறுத்தாமல் கீற்று போல காட்டுகிறார். மேலும் இரண்டு மூன்று இடங்களைக் குறிப்பிட வேண்டும். கபிலனின் மீது பகைமை கொண்ட ராமின் மாமா வேம்புலியிடம் சென்று கபிலனை குறுக்கு வழியில் வீழ்த்துவது குறித்து பேசும்போது வேம்புலி அவரை கடிந்து திருப்பி அனுப்பிவிடுகிறான். உண்மையான விளையாட்டு உணர்வு இங்கே வெளிப்படுகிறது.
இன்னொரு இடத்தில் நண்பர்கள் தன் வீட்டுக்கு வந்திருக்கும்போது கபிலன் மனைவியிடம் ‘ராகி மால்ட் வாங்கி வா’ என்கிறான். ‘ஏன் சத்தம் போடறே?வாங்கி வருகிறேன்’என்று சொல்லும்போது ஆண்-பெண் உறவுகள் அடித்தள மக்களிடம் இயல்பாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. ‘சார்பட்டா பரம்பரை ஜெயிக்க வேண்டும். எங்கள் மானமே அதில்தான் இருக்கிறது’ என்று கபிலன் கூறும்போது மாரியம்மா ’பரம்பரையில மானத்தை எல்லாம் ஏன் இழுக்கிற? நல்லா விளையாடினா ஜெயிக்கப்போற.’ என்று சொல்லும்போது விளையாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பகைமை, மாவட்டங்களிடையே ஊர்களுக்கிடையே வெடிக்கின்ற விரோதம், ஜாதி வெறி ஆகியவற்றை சாடுவது போல தோன்றுகிறது.
நடிகர்கள் தேர்வை பாராட்ட வேண்டும். அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்றவர்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். இசையும் சிறப்பாக உள்ளது. இந்தப்படம் சர்வதேச அளவில் பாராட்டு பெறும் என்று தோன்றுகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.