ஆதிக்க கருத்தியலை உடைத்து அநாயசமல்லாத திரைமொழியுடன் கூடிய நல்ல கமர்சியல் படம்

Pa. Ranjith's Sarpatta Parambarai movie review in Tamil By Subash. Book Day is Branch of Bharathi Puthakalayam.“நமக்கெல்லாம் அவ்ளோ ஈசியா வாய்ப்பு கிடைச்சிடாது. நீ இறங்கி ஆடு கபிலா. இது நம்ம காலம்” என ஒடுக்கப்பட்ட ஜீவராசிகளின் அடக்கப்பட்ட குரல்களை ஓங்கி ஒலிக்க செய்திருக்கிறார் ரஞ்சித். சமீபத்தில் அமேசான் பிரைமில் ஆர்யா நடித்து வெளியாகியிருக்கக் கூடிய “சார்பேட்டா” பரம்பரை படம் சாதாரண மக்களின் மனங்களிலும் சந்தோச அலையை மிதக்க விட்டிருக்கிறது.

1970 காலங்களில் மெட்ராஸ் நகரில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். படத்தில் பரம்பரை பகை, மானம், நாயக பிம்பம் ஆகியவற்றை வடிகட்டி விட்டு பார்த்தால் ரஞ்சித் தன் கருத்தியலோடு படத்தை எடுத்திருப்பது கண்டிப்பாக புரியும். படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கான முக்கியத்துவம் சரியான முறையில் வெளிப்பட்டிருக்கும். டான்சிங் ரோஸ் முதல் எம்ஜிஆர் ரசிகரான அதிமுக பிரமுகர் வரை எல்லோரும் சமமான முக்கியத்துவத்தோடு காட்டியிருப்பது சிறப்பு. குறிப்பாக கலை இயக்கம், வசனம் என 1970களை கண்ணில் நிறுத்தியிருப்பதும் அருமை. 70களில் தமிழ்நாடு திமுக வின் கோட்டையாக மாறியதும் அதன் பின்னால் எமர்ஜன்சி காலம் அதைத் தொடர்ந்து எம்ஜிஆரின் சகாப்தம் என யாவற்றையும் கருக் குன்றாமல் திரையாக்கியிருப்பது இயக்குநர் ரஞ்சித்தின் திறமையை வெளிக்காட்டியிருக்கிறது.

Image

ஆனாலும் தொடர்ந்து வடசென்னையை படமாக்குபவர்களான ரஞ்சித் வெற்றிமாறன் போன்றோர்கள் மீது சரியான வடசென்னையைதான் காட்டுகிறார்களா என்ற விமர்சனம் எழாமல் இல்லை. அந்த வகையில் இந்த படம் விமர்சனங்களை தாண்டி ஓரளவு நிஜத்தோடு ஒட்டியதாகவே இருக்கிறது. சிறந்த பாக்சர்களான கபிலன்களும் அவர்களின் அப்பாக்களும் எப்படி ரவுடியாக்கப்பட்டார்கள் என்ற பிண்ணனி சரியாக காட்டப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு வரலாறுதான் சாட்சி. ஒவ்வொரு பாக்சர்களும் ரிங்குக்குள் இறங்கி சண்டையிடும்போது ஏதோ நாமே சண்டையிடுவது போல் உணர வைத்திருப்பதுதான் ரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவின் வெற்றி. ஆர்யா தன்னுடைய முந்தைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதன் வெளிப்பாடு இப்படத்தில் பிரதிப்பலிக்கிறது. பட வசனம் போல் தான் யாருனு இவங்களுக்குள்ளா நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

ரஞ்சித் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது போல் பெண் என்றால் புரட்சிக்காரியாக போராளியாக காட்டினால்தான் முற்போக்கு என்பது இல்லை. நான் தினம் தினம் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும் போராளிதான். அவர்கள் ஒரு நாள் வாழ்க்கையை கடக்கவே அத்தனை போராட்டம் நடத்துகிறார்கள் என்றிருப்பார். அப்படியே அவர் வடிவமைத்த கதாபாத்திரங்களும் உள்ளன. முதலிரவு காட்சியென்றாலே அடக்க ஒடுக்கமான பெண், பால் சொம்பு, விளக்கணைப்பு என்றிருந்த ஸ்டீரியோடைப்புகளை உடைத்து குத்தாட்டம் போட வைப்பதெல்லாம் வேற லெவல். ஆங்காங்கே ஆதிக்க கருத்தியலை உடைத்து அநாயசமல்லாத திரைமொழியுடன் கூடிய நல்ல கமர்சியல் படம் “சார்பட்டா”.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.