பாரதிராஜா தன் ஹீரோயின்களுக்கு ‘ஆர்’ பெயர்களை வைத்ததைப்போல், சிறுத்தை சிவாவின் ‘வி’ டைட்டில்களைப் போல் இரஞ்சித்துக்கு ‘க’ முதல் எழுத்து நாயகப்பெயர்களில் ஆர்வம்போலும். காளி (மெட்ராஸ்), காலா, கபாலி, இப்போது கபிலன் – சார்பட்டா பரம்பரை.
‘சார்பட்டா‘ ட்ரெய்லர் வெளியானபோது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. குறிப்பாக பசுபதியின் தோரணையில் ‘ஆடுகளம்’ பேட்டைக்காரன் தெரிந்தார். ஆடுகளமும் இதற்கு முன்பு பரம்பரை குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு, ஜனநாதனின் வலிமையான வசனங்களுடன் முதலீட்டியத்தின் அரசியல் பற்றிப் பேசிய பூலோகமும் சார்பட்டாவுக்கான சவாலாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அசால்ட்டாக டீல் செய்து, வேறொரு களத்தையும் மனிதர்களையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் பா. இரஞ்சித்.
இரஞ்சித்தின் தனித்துவங்களில் ஒன்று கதைசொல்லல் முறையும் பாத்திரச்சித்திரிப்புகளும். பெரும்பாலான தமிழ் மக்கள் பெரும்பான்மை தமிழ் சினிமாக்களில் பார்க்காத மனிதர்களைத் திரையில் கொண்டுவந்து அதைக் கலைநேர்த்தியுடன் படைப்பார். எம். ஆர். ராதா, ரஜினி, சத்யராஜ், வடிவேலு என்று தனித்துவமான உடல்மொழியால் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட நடிகர்கள் உண்டு. ஆனால் அவர்கள் எல்லாம் தாங்களே தனக்கான உடல்மொழியை உருவாக்கித் தனித்துவப்படுத்திக்கொண்டவர்கள். ஆனால் பா. இரஞ்சித்தோ ஓர் இயக்குநராகத் தனித்துவமான உடல்மொழியைக் கொண்ட பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்துகிறார் என்பது முக்கியமானது. ‘மெட்ராஸ்’ ஜானி முதல் ‘சார்பட்டா‘ டான்ஸிங் ரோஸ் வரை விதவிதமான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் தனித்துவ உடல்மொழிகள் இரஞ்சித்தின் பெரும்பலம். இன்னும் பல சினிமாக்களில் பதிவுசெய்வதற்கு அவருக்கு மனிதர்களும் வாழ்க்கையும் இருக்கின்றன.
தமிழ்ப்பிரபாவின் பங்களிப்பும் இதில் இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது ‘பேட்டை’ தமிழின் முக்கியமான அதேநேரம் சுவாரஸ்யமான நாவல். அந்த நாவலின் பெரும்பலம் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் உடல்மொழியைத் தமிழ்ப்பிரபா சித்திரித்திருக்கும் விதமும். மனிதர்களையும் அவர்கள் உடல்கள் இயங்கும்முறையையும் கவனிப்பதில் பிரபாவுக்கும் இரஞ்சித்திக்கும் அலைவரிசை பொருந்தியிருக்கிறது. அது சார்பட்டாவின் கூடுதல் பலம். அதேநேரத்தில் தமிழ்ப்பிரபா – பா. இரஞ்சித் கூட்டணியில் வசனங்கள் மீது எனக்கு அதிகம் எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் அது ஏமாற்றமாகத்தான் முடிந்தது.
1974 காலகட்டத்து மனிதர்கள், வாழ்வியல், பாக்ஸிங் இவற்றுக்கிடையில் பொருந்தாமல் தெரிந்த இரண்டு அம்சங்கள் ஆர்யாவும் அவர் அம்மா பாத்திரமும். மற்றவர்கள் எல்லாம் அந்தக் காலத்திலும் இடத்திலும் கரைந்துபோக ஆர்யா மட்டும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் – பார்ட் டூ’வுக்கு நடித்துக்கொண்டிருந்ததைப் போல் ஒரு பிரமை. உடலைச் செதுக்கிய அளவுக்கு உடல்மொழியையும் பேச்சுமொழியையும் ஆர்யா மாற்றிக்கொள்ளவில்லை. அதேபோல் அந்த அம்மா பாத்திரம். ஊரெல்லாம் சண்டை போடும் முரட்டு மகனின் மணிக்கட்டில் கயிறுகட்டி ”இனிமேல் யாரையும் அடிக்கக்கூடாது” என்று சத்தியம் வாங்கும் ரஜினி படத்து அம்மா. கபிலன் அப்பா கொல்லப்படும் காட்சியெல்லாம் எதற்கு இவ்வளவு விரிவாக என்று தெரியவில்லை. இந்த இரண்டு அம்சங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக ‘சார்பட்டா பரம்பரை’ முக்கியமானது.
அடுத்து அதன் அரசியல் சித்திரிப்பு. ‘அட்டக்கத்தி’ படம் வந்தபோது ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். தினகரன் ( ‘அட்டக்கத்தி’ தினேஷ். இதில் ‘க’ நாயகன் இல்லை) ‘காதல் தோல்வி ஃபீல்’ வருவதற்காக ‘ஒரு தலை ராகம்’ படம் பார்க்கப்போயிருப்பார். படம் முடிந்து திரும்பும்போது கூட்டத்தில் பின்னால் ஒருவர் கறுப்பு – சிவப்பு துண்டு அணிந்திருப்பார். “ஏன் மலையாள சினிமாக்களைப் போல் தமிழ் சினிமாக்களில் நேரடி கட்சிக்காரர்கள் வருவதில்லை?” என்று எழுதியிருப்பேன். ‘வடசென்னை’யில் ராதாரவி அ.தி.மு.க.காரர். இதிலோ தி.மு.க, அ.தி.மு.ககாரர்கள் படம் முழுக்க வருகிறார்கள். அந்தவகையில் முக்கியமான முயற்சி. அதேநேரத்தில் இதில் சில பிரச்னைகளும் போதாமைகளும் இருக்கின்றன.
ரங்கனின் அரசியல் ஈடுபாடு, அவரின் பாக்ஸிங் ஆர்வம், சக மனிதர்களுடனான அவர் உறவு எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. பாக்ஸிங்கில் மீரானும் கபிலனும் அணியும் உதயசூரியன் ஜெர்சி – வேம்புலி அணியும் காங்கிரஸ் ஜெர்சி – இறுதியில் கபிலன் அணியும் நீல ஜெர்சி என அவையும் குறியீடுகளாக நிற்கின்றன. ரங்கனைத்தாண்டி வடசென்னை மக்களுக்கும் தி.மு,க.வுக்குமான உறவு என்பது சித்திரிக்கப்படவில்லை.
ரங்கனும் கூட முரசொலி படிப்பது, திமுக மற்றும் தி.கவினருடன் உரையாடுவது என்கிற அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாரே தவிர, ஒரு கட்சிக்காரர் என்ற முறையில் அந்தப் பகுதி மக்களுக்கும் அவருக்குமான உறவைச் சித்திரிக்கும் ஒரு காட்சி கூட இல்லை. “நடிகர் கட்சியில் சேரக்கூடாது” என்று உரையாற்றும் ரங்கன் வாத்தியாரின் மகனே எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தபிறகும் அவரிடம் எந்த விதமான எதிர்வினைகளும் இல்லை. ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ படத்தில் துல்கர் சல்மான் சி.பி.எம். அவர் தந்தை காங்கிரஸ். இருவரும் வீட்டில் ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். அதேநேரத்தில் அரசியல் முரண்பாடும் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான அப்பாவுக்கும் மகனுக்குமான அரசியல் முரண் குறித்த காட்சிகள் ‘சார்பட்டா’வில் இல்லை.
கலைஞரின் மீது பற்றுகொண்ட, ‘செங்கோட்டை தூள் தூளாகும்’ என்று முழங்கும் ரங்கன், கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது, தமிழகத்திலும் எமெர்ஜென்சி எந்தத் தடையுமின்றித் தன் கொடுங்கரங்களை நுழைத்துவிட்டது என்று அறிந்தும் அதற்கு அதிர்ச்சியடையாமல் குத்துச்சண்டையைத் தொடர்ந்து நடப்பதில் ஆர்வம் காட்டுகிறார். ‘கட்சியைவிட, அரசியல் உணர்வைவிட சார்பட்டா பரம்பரைதான் ரங்கனுக்கு முக்கியம்’ என்று எடுத்துக்கொள்ளலாமா என்று தெரியவில்லை. ரங்கனும் கட்சிக்காரர்களும் ”தலைவர்”, “கழகத்தலைவர்” என்கிறார்களே தவிர ‘கலைஞர்’ என்ற வார்த்தையை உச்சரிப்பதில்லை. கலைஞர் படம், உதயசூரியன், திமுக துண்டுவரை சித்திரித்தவர்கள் ஏன் இந்த வார்த்தையை விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. கருணாநிதி என்ற பெயரை போலீஸ்காரரும் டாடியும் மட்டும்தான் உச்சரிக்கிறார்கள். ஒரு குத்துச்சண்டை வாத்தியாராக ரங்கனின் பாத்திரம் முழுமையடைந்திருக்கிறதே தவிர, ஒரு கட்சிக்காரராக பாத்திரம் முழுமையடையவில்லை.
இதேபோல் இந்தியக் குடியரசுக் கட்சிக்காரர்களும் கபிலன் கெலித்தவுடன் மாலையிட வருகிறார்கள். இறுதியில் கபிலனுக்கு நீல ஜெர்சி தருகிறார்கள். மற்றபடி தி.மு.க.வும் இந்தியக் குடியரசுக் கட்சியும் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்தீவில் இயங்குகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க.வினர் பரவாயில்லை. சாராயம் காய்ச்சி விற்று மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் 🙂 ஆனால் அ.தி.மு.க தொடர்பான காட்சிகள் ஏன் ஃபாஸ்ட் பார்வர்ட் மோடில் வேகமாக நகர்கின்றன என்று தெரியவில்லை.
கபிலன் இறுதியில் நீல ஜெர்சியை அணிவதையும் ரங்கன் சிறையிலிருந்து வெளிவரும் காட்சியையும் இணைத்து, ‘மிசா கொண்டுவந்த இந்திராகாந்தியுடனே கூட்டுவைத்து தி.மு.க. லட்சியவாதத்தை இழந்துவிட்டது. அதனால் தான் பதிலீடாக தலித் அரசியலை இரஞ்சித் முன் வைக்கிறார்’ என்று ஒரு வாசிப்பு முன்வைக்கப்படுகிறது.
ரங்கன் சிறையைவிட்டு வெளியே வரும் காலம் 1977.
அப்போது ஜனதா கூட்டணியில்தான் தி.மு.க. இருக்கிறது. இந்திராவை எம்.ஜி.ஆர் ஆதரிப்பதும் படத்தில் காட்டப்படுகிறது. 1980ல்தான் இந்திரா காங்கிரஸும் தி.மு.க.வும் கூட்டணி வைத்தன. நெருக்கடிநிலை காலத்தில்தான் தி.மு.க. கடும் சவால்களைச் சந்தித்தது. யார் யார் சிறையில் இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை. முரசொலிக்கும் தணிக்கை. ‘அண்ணா நினைவுநாளில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள்’ என்று தந்திரமாக ‘முரசொலி’யில் கலைஞர், மிசாவில் கைதானவர்களின் பட்டியலை வெளியிட்டார். கலைஞர் குடும்பப்பெண்கள் சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டனர். ஸ்டாலின் மீதான தாக்குதலைத் தடுக்க முயன்றதில் சிட்டிபாபு மரணமடைந்தார். ஆற்காடு வீராசாமிக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திலோ ரங்கன் கொஞ்சம் கசங்காமல் சிறையைவிட்டு வெளியேவருகிறார்.
நெருக்கடிநிலைக்குப் பயந்து கட்சிக்காரர்களில் சிலர் ‘எனக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பில்லை’ என்று எழுதிக்கொடுத்து வெளியேறினார்கள். கலைஞரின் கார் டிரைவரே ஓடிப்போனார். கண்ணப்பன் ‘காரோட்டி’ ஆனார். ஆனால் சார்பட்டாவிலோ மிசாவில் கைதாகி சிறையிலிருந்து வெளிவரும் ரங்கன் வாத்தியாரை மேளதாளத்துடன் வரவேற்கின்றனர். சற்றும் பொருத்தமில்லாத சூழல்.
‘தி.மு.க.வின் முதலியார் அரசியலை’ விமர்சிக்கலாம்தான். ஆனால் அதற்கான காலம் மிசாகாலகட்டம் அல்ல. முதலியார்கள் என்ன மிசா காலத்தில் தான் திமுகவுக்குப் படையெடுத்து வந்தார்களா என்ன? பலரும் கட்சியைவிட்டு பயந்து வெளியேறி, ஆட்சியை இழந்து கடும் சோதனைக்காலத்தைத் திமுக சந்தித்தபோது இந்தக் காட்சி பொருத்தமற்றது. வேலூர் முதலியாரை மாலை போட்டு வரவேற்கும் சூழலில் அன்றைய தி.மு.க. இல்லை என்பதே எதார்த்தம். படம் முழுமையான தி.மு.க. ஆதரவுப் படமாகப் புரிந்துகொள்ளப்படுமோ என்ற தயக்கமும் தலித் அரசியல் பார்வையிலிருந்து தி.மு.க. மீது விமர்சனத்தை முன்வைத்தாக வேண்டுமே என்ற முனைப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பொருத்தமான காட்சி இதுவல்ல.
தி.மு.கவில் முதலியார் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது, அதனால்தான் இரஞ்சித் தலித் அரசியலைச் சுட்டிக்காட்டுகிறார் என்றும் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. படத்தில் ரங்கன் வாத்தியார் தலித்தா என்பது குறித்த உறுதியான சித்திரிப்புகள் இல்லை. தணிகை, கபிலன், மீரான்மைதீன், டாடி ஆகியோரின் அடையாளங்கள் குறித்துமட்டுமே சித்திரிப்புகள் உள்ளன. தணிகை தலித் அல்லாத ஆதிக்கச்சாதி என்பது மட்டும் புலப்படுகிறது. ”மாடு செத்தா சொல்லிவிடறேன். புறவாசலில வந்து தூக்கிட்டுப்போகட்டும்’னு தணிகை கபிலனைப் பார்த்து சொல்வதாக வசனம் வருகிறது. இத்தகைய தீண்டாமை சென்னையில் இருந்ததா?
மேலும் தி.மு.க. லட்சியவாதத்தில் இருந்து விலகிவிட்டது என்று லட்சியவாதத்தின் அடிப்படையில் திமுக X இந்திய குடியரசுக்கட்சி என்றும் நிறுத்திவிட முடியாது. சக்திதாசன் போன்ற அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் இந்திய குடியரசுக்கட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் வெகுமக்களுக்கு ‘இந்திய குடியரசுக்கட்சி’ என்றதும் நினைவுக்கு வரும் முகம் செ.கு.தமிழரசன். அவர் அ.தி.மு.க.வின் தொங்குசதையாக இருந்து ஜெயலலிதாவின் ஊழல்களையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் நியாயப்படுத்தியவர். இந்திய குடியரசுக்கட்சியின் இன்னொரு பிரிவான ராமதாஸ் அத்வாலே பிரிவு, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவின் சார்பில் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் யார் தெரியுமா? பவர் ஸ்டார் சீனிவாசன். எனவே இதுவும் பொருத்தமற்ற வாதம்.
தென்மாவட்டங்களிலும் வடமாவட்டங்களிலும் சுயமரியாதை உணர்வுடன் ‘திருப்பி அடி’ முழக்கத்துடன் தலித் எழுச்சி ஏற்பட்டது. திராவிடக் கட்சிகள், இடதுசாரிக்கட்சிகள் ஆகியவை தலித் பிரச்னைகளுக்குப் போதிய முக்கியத்துவம் தரவில்லை, போதுமான தலித் பிரதிநிதித்துவம் தருவதில்லை என்ற மன உணர்வுடன் தலித் இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இணைந்தனர். சென்னையைப் பொறுத்தவரை ஒடுக்கும் சாதி என்று ஒரு குறிப்பிட்ட சாதியைச் சொல்லிவிட முடியாது. எனவே நேரடியான சாதி ஒடுக்குமுறை, அதற்கு எதிர்வினையாக இயக்கங்கள் என்றில்லாமல் அம்பேத்கர், பௌத்த அடையாளங்களின்வழி தலித் அரசியல் எழுச்சி உருவானது. ஆனால் ‘சார்பட்டா’வில் கபிலன் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சரிவையும் சந்தித்தவனாகவும் பாக்ஸிங் மீதான ஆர்வம் கொண்டவனாகவும் காட்டப்படுகிறானே தவிர அவனது அரசியல் உணர்வு குறித்த சித்திரிப்புகள் இல்லை. திராவிட அரசியல் ஏமாற்றுவதால் தலித் அரசியல் உணர்வு கொள்வதற்கான அடிப்படைகளும் இல்லை. ஏனெனில் அதற்கான சம்பவங்களும் படத்தில் இல்லை.
அவனுக்குத் திராவிட மற்றும் தலித் அரசியல் குறித்த எந்த அடையாளங்களுமே இல்லை என்னும்போது திடீரென்று நீலத்துண்டு, நீல ஜெர்சி என்பது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. நீலத்துண்டு, நீல ஜெர்சி இருந்தாலும் அடிவாங்கிய கபிலனை ஆறுதல்படுத்தி, அவனை வெல்ல வைப்பது கறுப்பு-சிவப்பு ரங்கன் வாத்தியார்தான். கபிலனும் வென்றபிறகு ‘ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா’ என்றுதான் பெருமையுடன் கூறுகிறான். எனவே இதை வெறும் வண்ணங்களின் அரசியல் மாற்றமாக மட்டும் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
மேலும் தணிகை மட்டும் சாதி வெறி கொண்டவராக சித்திரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர ‘பரம்பரை’களில் சாதியுணர்வும் அதுதொடர்பான முரண்களும் இருந்தனவா என்றும் காட்டப்படவில்லை. எனவே சாதி ஒடுக்குமுறையின் காரணமாகத்தான் கபிலன் நீலத்தைத் தேர்ந்தெடுக்கிறானா என்றும் அறிய முடியவில்லை.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற எமெர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் பல தியாகங்களைச் செய்திருந்தாலும் எவ்வளவோ விலை கொடுத்தாலும் தமிழக மக்கள் அதைப்பொருட்படுத்தவில்லை. எமெர்ஜென்சி கொண்டுவந்த இந்திராவைத் தோற்கடித்து ஜனதா கட்சி 1977ல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் தமிழகத்தில் 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர்தான் வென்றார். எமெர்ஜென்சியை எதிர்த்த தி.மு.க. தோற்றது. அதற்குப்பிறகுதான் கலைஞர் 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞருக்கு 13 ஆண்டுகால வனவாசம். தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் கவர்ச்சி வென்றது என்றாலும் அது தோற்றுப்போன இடம் சென்னை.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் சென்னை, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கியது. “கருணாநிதியை மெட்ராஸை விட்டு வெளியில நிக்கச் சொல்லுய்யா” என்று அ.தி.மு.ககாரர்களும் “எம்.ஜி.ஆரு ஏன்யா ஆண்டிப்பட்டிக்கு ஓடுறாரு? மெட்ராஸ்ல நிக்கச் சொல்லு” என்று தி.மு.க காரர்களும் வாக்குவாதம் நடத்துவது அப்போதெல்லாம் இயல்பு. “படிச்சவங்க அதிகம் இருக்கிறதாலதான் மெட்ராஸ்ல திமுகவுக்கு ஓட்டு அதிகம் விழுது” என்று சென்னைக்கு வெளியே உள்ள ஊர்களில் பேசிக்கொள்வோம். அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் திமுகவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருந்தது. இன்றும் திமுக படுதோல்வி அடையும் தேர்தல்களில்கூட தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலையில் வருவதைப் பார்க்கலாம்.
ஆனால் சென்னையில் திமுக வெல்வதற்கு அரசு ஊழியர்கள் மட்டுமல்ல காரணம். தலித்துகள், மீனவர்கள் என சென்னையின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் காரணம். தென்மாவட்டங்களில் முக்குலத்தோர்கள், மேற்குமண்டலம், வட, தென்மாவட்டங்களில் தலித் மக்கள், நரிக்குறவர்கள், தாய்மார்களின் ஆதரவைப் பெற்ற எம்.ஜி.ஆரால் சென்னை மக்களைக் கவர முடியவில்லை. அப்படிப்பட்ட திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை மக்களுக்கும் திமுகவுக்குமான உறவு இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியாரோடு சுருங்கிப்போய்விட்டதுதான் துயரமானது.
கட்சி அடையாளமும் சாதி அடையாளமும் இல்லாமல் எடுத்திருந்தால் கூட இந்தப் படம் சுவாரஸ்யமான ஒன்றாக வந்திருக்கும். ஆனால் நேரடி அரசியல் சித்திரிப்புகள் கூடுதல் சுவாரஸ்யத்தை உருவாக்குகின்றன. ஆனால் அரசியல் மற்றும் சாதி சித்திரிப்புகள் முழுமையாகவும் இயல்பாகவும் இல்லை என்பதுதான் ‘சார்பட்டா’வின் முக்கிய பிரச்னை.
அடுத்தடுத்த நேரடி அரசியல் படங்கள் இந்தக் குறைகளைக் களையும் என்று நம்புவோம்.
பின்குறிப்பு 1 : ஜல்லிக்கட்டைப் போலவே பாக்ஸிங்கை ரொமான்டிசைஸ் செய்வதும் ஆபத்தானதுதான். யார் பங்குபெற்றாலும், என்னவிதமான கலாசார அடிப்படைகள் இருந்தாலும் இறுதியில் அது ஆண்கள் மட்டுமே பங்குகொள்ளும் வன்முறை விளையாட்டுதான்.
பின்குறிப்பு 2 : எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தி.மு,க. கோட்டையாக விளங்கிய சென்னையை ஜெயலலிதா அசைத்துப்பார்த்தார். ஜெயலலிதா காலத்தில் தி.மு.க.வின் கோட்டையில் ஓட்டை விழுந்தது. இதற்கான காரணங்கள், சென்னை மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை முன்வைத்து யாராவது படம் எடுத்தால் அது இன்னும் சுவாரஸ்யமான படமாக இருக்கும். ஆனால் சித்திரிப்புகள் முழுமையாகவும் வெளிப்படையாகவும் இயல்பாகவும் இருக்கவேண்டும்.
நன்றி: சுகுனா திவாகர் முகநூல் பக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Not at all a worth review. While Ranjith is making mistakes by inserting his political metaphors with out any real need in his craft… He is a good craftsman. அவரின் கலைத்திறன் அபாரமானது. அதை பற்றி பேசாமல் ரிவ்யூ அவர் செய்யும் அரசியல் குறியீட்டு தினிப்பு பக்கம் அதிகம் நகர்கிறது. இது உங்களின் குறை மட்டுமல்ல இன்றைய தேதியில் குறைந்தது தமிழகத்தில் சினிமாவை விமர்சிக்கிற , கலையின் பால் கொண்டுள்ள தட்டைபார்வையின் வெளிப்பாடு. காலத்தின் கோலம். லெனினின் ஆவி சும்மாவிடாது.