“பூமியை வாழ வைப்போம்” – நூல் அறிமுகம்
“இயற்கையைப் பாதுகாப்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவை”
இயற்கை, சூழலியல் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான அக்கறையோடு எழுதப்பட்ட ஒரு விழிப்புணர்வு நூல்தான் பத்திரிகையாளர் ப. திருமலையின் “பூமியை வாழ வைப்போம்”. ஒரு பத்திரிகையாளரின் கூர்மையான பார்வையோடு, உலகளாவிய சூழலியல் மாற்றங்களையும், நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் இயற்கைப் பேரழிவுகளையும் இந்நூல் அலசுகிறது.
நீர், நிலம், காற்று, கழிவுகள் எனும் தலைப்பில் 12 கட்டுரைகளும், பிளாஸ்டிக் எனும் தலைப்பில் 3 கட்டுரைகளும், விலங்குகள், பறவைகள் எனும் தலைப்பில் 6 கட்டுரைகளும், காலநிலை மாற்றம் எனும் தலைப்பில் 5 கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இயற்கை மனிதன் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றிக்குமான நெருங்கிய தொடர்பு குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசு, காலநிலை மாற்றம் விலங்குகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பிரச்சனைகள் குறித்து ஏராளமான தரவுகளுடன் விளக்கி உள்ளார் நூலாசிரியர்.
மனிதனின் பேராசையால் சுருங்கிப் போன காடுகள், நச்சாக மாறிவரும் நீர்நிலைகள், மாசுபட்டு வரும் காற்று மண்டலம் மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற மிக முக்கியமான சமகாலப் பிரச்சனைகளை எளிய தமிழில் வாசகர்களுக்குப் புரிய வைக்கும் ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது.
பூமியைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை வெறும் அறிவியல் தரவுகளாக இல்லாமல், ஒரு தார்மீகக் கடமையாக இந்நூல் வாசகர்களின் மனங்களில் விதைக்கிறது.
பத்திரிகைத் துறையில் பல ஆண்டுகள் கால அனுபவம் கொண்ட எழுத்தாளர் ப. திருமலை எழுத்து நடை மிகவும் வீரியமானதாகவும், அதே சமயம் பொதுமக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.
சிக்கலான சூழலியல் மற்றும் அறிவியல் உண்மைகளை எளிய உதாரணங்களுடன் விளக்கியிருப்பது ஆசிரியரின் பலம்.
சுற்றுச்சூழல் சீரழிவு:
நவீன நாகரிகம் என்ற பெயரில் நாம் இயற்கைக்கு இழைத்து வரும் துரோகங்களை புள்ளிவிவரங்களோடும், நிதர்சன உண்மைகளோடும் ஆசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.
தீர்வுகளை நோக்கிய பார்வை:
வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், பூமியை மீட்டெடுக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய எளிய நடைமுறை மாற்றங்கள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. மரங்களை வளர்ப்பது, நீர்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்ற அடிப்படை விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
எச்சரிக்கை மணி:
மனிதன் சமூகம் தன் சுயநலத்திற்காக இயற்கையின் சமநிலையை எந்த அளவுக்குக் சீர்குலைத்து உள்ளார்கள் என்பதையும், இதன் விளைவாக வரவிருக்கும் பேராபத்துகளைப் பற்றியும் இந்நூல் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது. இயற்கையைப் பாதுகாப்பது ஒரு விருப்பம் மட்டுமல்ல. அது மனித இனத்தின் அடிப்படைத் தேவை என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் நூலாசிரியர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சூழலியல் துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் மிகையல்ல.
“பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; சகல உயிரினங்களுக்கும் சொந்தமானது” என்ற பேருண்மையை உரக்கச் சொல்லும் நூல் இது. இன்றைய இளைய தலைமுறையினரும், மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு அவசியமான புத்தகம்.
பூமியை வெறும் வாழும் இடமாகப் பாராமல், அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்நூல் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படுத்துகிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பூமியை வாழ வைப்போம் |
| ஆசிரியர்: | மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை |
| வெளியீடு: | சுற்றமும் நட்பும் பதிப்பகம் மதுரை-625016 |
| விலை: | ₹.160 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 எம்.ஜே.பிரபாகர் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

