“அஞ்சனக்கோல்” – நூல் அறிமுகம்
*ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய தோழமையின் படைப்பாற்றலை அறிமுகம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்*
தோழி விமலாதேவி அவர்களின் அஞ்சனக்கோல் என்னும் கவிதை நூலின் தலைப்பே, அடர் மயிரையும், சுடர்விழியையும் அழகுபடுத்தும் அஞ்சனக்கோல் அல்ல இது, வெடித்துப் பொங்கி எழ முடியாத தருணங்களில், மனதில் மருகி நிற்கும் உணர்வுகளை எழுத்தில் சிதறடிக்கும் உணர்ச்சிப் பெருக்கு என தன் நூலை குறித்து அவர் ஏற்றிய தீபத்தின் ஒளியில் நடை பயணிக்க தொடங்கினேன் அவரது கவிநடையை உள்வாங்க..
அந்த வகையில், இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் கவிஞரின் அகத்திற்கும் புறத்திற்கும் இடையே வரையப்பட்ட ஓர் உணர்வு கோடாய் பெண்ணியம், வலி, கோபம், அன்பு, ஏக்கம், எதிர்ப்பு, தன்னம்பிக்கை, சமூக அக்கறை எனப் பல நிறங்களைத் தன்னகத்தே கொண்டு வானவில்லாய் மிளர்கிறது…
*மனம் எனும் கடலில் எண்ண அலைகளை முகந்து தூறல் துளிகளைச் சிந்துகின்றன கண்கள்* என்ற வரிகளில் இந்நூலின் மொத்த உணர்வுலகமே சுருங்கிக் கிடக்கிறது..
வாழ்க்கை எறியும் வெறுப்பு, நினைவு, பிரச்சனை எனும் பந்துகளை விளையாட்டாக எதிர்கொள்ளும் கவிதையில், தோல்விகளை உதைத்து, பிரச்சனைகளைத் திருப்பி அடித்து, தன்னைத் தானே சதுரங்க ராணியாகக் காத்துக்கொள்ளும் பெண்ணின் தன்னம்பிக்கை அழகாக வெளிப்படுகிறது…
மழுங்கிய சொற்களுக்குக் கூட இரும்பைவிடக் கூர்மையான வன்மை உண்டு என்பதை உணர்த்தும் வரிகள், சொல்லின் பொறுப்பை நமக்கு சொல்லி செல்கின்றன
உறவுகளின் நெருக்கம் – விலகல், மனதின் ஈரம், சொல்லப்படாத வலி, நினைவின் அலைகள் என மனித உணர்வுகளின் பல அடுக்குகளை கவிஞர் தொட்டுச் செல்வது கவிநயத்தை மெருகூட்டியுள்ளது…
*பட்ட மரம்* என்று உலகம் நினைத்த ஒரு பெண்ணுக்குள் இன்னும் ஈரம் இருப்பதை, கண்களின் கசிவால் கவிஞர் உணர்த்துகிறார்.. காய்ந்துபோனதாகத் தோன்றும் இதயங்களுக்குள்ளும் கண்ணீரின் ஈரம் இருப்பதைச் சொல்லும் இக்காட்சி, மறைக்கப்பட்ட உணர்வுகளுக்குச் சாட்சியாகிறது..
*எல்லா உயிரினங்களையும் நேசிக்க கற்றுக் கொண்ட பின் மனிதர்களை மட்டும் வெறுக்கத் தொடங்கியது மனம்* என்ற வரி, இந்நூலின் ஆழமான முரணையும் மனித உறவுகளின் கசப்பையும் ஒரே வரியில் நிழலிட்டு காட்டியுள்ளது சிறப்பு..
இந்நூலில் வார்த்தைகள் ஒருபுறம் காயப்படுத்துகின்றன; மறுபுறம் அதே வார்த்தைகளே அந்தக் காயத்திற்கு மருந்தாகின்றன.
*வார்த்தைகளால் பட்ட காயத்திற்கு வரிகளில் மருந்து விடுகிறேன்* என்ற வரி, கவிதையின் இருப்பையே மிக அழகாக வரையறுக்கிறது. *காயமும் கல்பமும் சொல்லிலிருந்தே பிறக்கின்றன* என்ற முரண், கவிஞரின் மொழியுணர்வையும் வாழ்க்கைப் புரிதலையும் வெளிப்படுத்துகிறது..
இந்நூலில் கவிதை எவ்வாறு பிறக்கிறது என்பதையும் தோழி கவிதையாகவே சொல்கிறார்,
*ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு நினைவு இவை சொற்களாகி, சொற்றொடர்களாகி, கற்பனையின் நிறம் பூசி கவிதையாக உருமாறுகின்றன*..
*நிலவன்னையும் வெள்ளி மதலையும் அருகருகே அளவளாவிட கண்டேன் தாய்சேய் புன்சிரிப்பில்* என்ற காட்சியில், வானத்தில் தெரியும் நிலவையும் தாயின் அருகில் இருக்கும் குழந்தையையும் ஒரே அழகியல் சட்டகத்தில் நிறுத்துகிறார், இயற்கையும் மனித உறவும் ஒன்றோடொன்று கலக்கும் இடத்தில் கவிதை பிறக்கிறது.. அருமையான சிந்தனை தோழி..
வார்த்தைகளால் காயப்படுத்தும் உலகில், அதே வார்த்தைகளால் காயங்களுக்கு மருந்திடும் கவிஞரின் நன்முயற்சியே இந்நூல்..
*அஞ்சனக்கோல்* என்பது நூலாசிரியர் சொல்வது போல் விழிகளுக்கு அழகு சேர்க்கும் கோல் அல்ல மனதின் இருளைக் கீறி, சொல்ல முடியாத உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் எழுதுகோலாகவே காணமுடிகிறது…
வலி கண்ணீராகும் முன் கவிதையாகி,
கோபம் வார்த்தையாகும் முன் சிந்தனையாகி,
நினைவு வரிகளாகும் முன் கற்பனையாகி,
மனதைத் தொட்டுச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும்,
சிந்தனையைத் தூண்டும் ஒவ்வொரு சொல்லுக்கும்,
உணர்வுகளை உயிர்ப்பிக்கும் இந்த அற்புதப் படைப்பாற்றலுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளும் இனிய வாழ்த்துகளும்!
எனது அன்பார்ந்த *வாசிப்பை நேசிப்போம்* ஆசிரிய தோழமைகளுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அஞ்சனக்கோல் |
| ஆசிரியர்: | பா.விமலாதேவி |
| வெளியீடு: | தையல் பதிப்பகம் |
| விலை: | ₹.140 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சுகிர்தா. அ |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

