தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
எட்டு ஒன்பது வயதுகளில் மொத்த வானத்தையும் பொதி மூட்டையைப் போல் தலையில் கட்டிச் சுமந்து திரிந்த நான் இன்னும் இறக்கி வைக்கவில்லை. அந்த நாட்களில் எங்கள் பணியான் கிராமத்தில் விருமாண்டி மாமா டீ கடை ஒன்றிருக்கும். தினத்தந்தி படிக்கிற சாக்கில் பத்துப் பாடல்களைக் கேட்டு விடுவேன் அல்லது பத்துப் பாடல்கள் கேட்கிற சாக்கில் தினத்தந்தியின் அத்தனை பக்கங்களையும் மனப்பாடம் செய்துவிடுவேன். ஆனால் ஒரு நாளும் டீ குடித்ததில்லை.

பார்க்கிற விசயமோ கேட்கிற விசயமோ நமக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை செய்து பார்த்தால் என்னவென்று எல்லாருக்கும் தோன்றுவது போலத்தான் எனக்கும். வைகாசித் திருவிழாவின்போது நடக்கும் நாடகங்களில் பபூன் டான்ஸ் காமிக் இருவரின் ஆடலும் ஆர்மோனியம் வாசிப்பவரின் பாடலும் வெகுவாக என்னை ஈர்த்தன. இழவு வீடுகளில் கோமாளியின் நகைச்சுவையும் ராஜபார்ட்டின் நேர்மையும் பெண் வேடத்தில் நடிப்பவர்களின் வசீகரமும் என்னை ஆட்டுவித்தன. இளம் பெண்களுக்கு பேயோட்டும் போது கோடாங்கியின் உடுக்கை இசையும் மண்டியிட்டு மாராப்பு சேலையை பின்கழுத்தோடு முடிச்சிட்டு தலைவிரித்து ஆடும் ஆட்டமும் அந்த முடி நடுவே தெரியும் உக்கிரப் பார்வையும் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. இவை எல்லா வற்றுக்குள்ளும் கதைகளும் வார்த்தைகளும் பின்னிக் கிடந்தன.

எங்கள் கிராமத்தில் ரோட்டில் போகிற வருகிறவர்கள் எல்லாம் பாட்டும் சொலவடைகளுமாய் வீசி விளையாடினார்கள். எனக்கு பித்து தலைக்கைறி சங்கீதம் தெரிந்தே சேவல் கூவுகிறதெனவும், பாட்டி ரிதத்தில் வெற்றிலை இடிக்கிறாளெனவும், ஓட்டைக் கூரையில் ஒழுகும் மழைநீர் பாத்திரத்தில் தாளமிடுகிறதெனவும் தோன்றியதெனக்கு. நாகமலையில் விறகு பொறுக்குகிற மகளை வீட்டிலிருந்து தாய்காரி அழைப்பது
எத்தகைய உன்னதமான ராகம். மாலை நேரம் பஞ்சாரத்தில் கோழிகளை அடைக்கக் கூப்பிடுவது ஒரு பாட்டு. நாயை சோறு திங்கச் சொல்வதொரு பாட்டு. ஈசல் பிடிக்க பாட்டு எருமை மேய்க்கவொரு பாட்டு.

ஏர் உழுகப் பாட்டு. எழவு வீட்டில் பாட்டு. இப்படி பாட்டாலே நிரம்பிக் கிடந்த பூமியில் முளைத்தேன் நான். கதை ஊட்டி வளர்த்த லட்சுமி அம்மத்தாளும் சொக்கர் சியானும் நினைவின் ஆழத்தில் மௌனிததுக் கிடக்கிறார்கள். கதை வேறு பாடல் வேறு அல்ல. பாட்டிற்குள் கதை இருக்கும் கதைக்குள் பாட்டிருக்கும்.

“நாகமல ஓரத்தில
நாலுபேரு போயில
சாரக்கெடா மொகத்துப்பலே
சாடையென்ன எம்மேல”

என்கிற காதல் பாடலும்

“ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
மாடு வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறு
ஆல எலபோல காஞ்சிருக்கு”

என்கிற சமூகப் பாடலும் தான் எனக்கு பாடல் மீது தீராத காதலை ஏற்படுத்தியது. இவ்விரு பாடல்களுக்கும் எழுதியவர் பெயர் இல்லையெனினும் அவ்விருவரே என் பாட்டு ஆசிரியர்கள். எங்கள் ஊரில் 1994 ல் நடந்த மதுரை மாவட்ட அளவிலான அறிவொளி இயக்க நாடகப் பயிற்சிப் பட்டறையில் நானும் ஒரு குழுவிற்கு பயிற்சியாளனாக இருந்தேன். அப்போது தான் என் முதல் தனிப்பாடலை எழுதினேன்.

“சோழவந்தான் வெத்தலையே – என்
சோகம் இன்னும் தீரலியே
தனியா பேசக்கூட வெக்கப்பட்டாயே – இப்போ
வேற ஒரு மச்சானுக்கு வாக்கப்பட்டாயே

தாலிக் கடை நான் இருக்க – ஒரு
தாலி தேடிப் போனாயோ”

இப்படித்தான் பல்லவி தொடங்கும். 7 நாட்கள் நடந்த பயிற்சி பட்டறையில் இறுதி நாளன்று ஒவ்வொருவரும் பயிற்சி அளிக்கப்பட்ட அத்தனை அறிவொளிப் பாடல்களையும் விட “சோழவந்தான் வெத்தலையே” பாடல் தான் மனதில் தங்கிப்போனது என்று சொன்னபோது கண்களில் நீர் சொல்லாமல் சுரந்தது. அப்போது எனக்கு வயது 18. ஒரு மழை நாளில் விருமாண்டி மாமா டீ கடையில் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. உட்கார இடமின்றி நின்று கொண்டிருந்தபோது தான்,
“ஒரு நாள் இதே டீ கடையில் என் பாடலும் ஒலிக்க வேண்டும்” என்று பெருங்கனவு கொண்டேன். களையெடுக்கக் கூலியாக மூன்று ரூபாய் பெற்றுவந்து எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழைத்தாயின் பிள்ளைக்கு இது பெருங்கனவன்றி வேறென்ன.

1999 ல் சென்னையை நோக்கிப் பயனமானேன் பாடலாசிரியராக வேண்டும் என்பதற்காக அல்ல. இயக்குநராக வேண்டும் என்பதற்காக. வந்து ஒரே மாதத்தில் சின்னத்திரையில் ஸ்டில் ஃபோட்டோ கிராபர் குமார் அண்ணன் சொல்லி “மந்திரவாசல்” நாடகத் தொடரில் இயக்குநர் C.ஜெரால்டு அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதே காலகட்டத்தில் அண்ணன் ஐந்துகோவிலான் அவர்களின் அறிமுகத்தில் இசை அண்ணன் சாந்தக்குமார் அவர்களிடம் சில நாட்கள் மெட்டுக்குப் பாட்டெழுதிப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தேன். நான் காலையில் பயிற்சி வகுப்பு முடித்து உதவி இயக்குநர் பணிக்குச் செல்வேன். கல்லூரி முடித்து மாலை பயிற்சி வகுப்பிற்கு வந்து செல்வார் நண்பர் நா. முத்துக்குமார். நாங்கள் அங்கே சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் அவர் என் பாடல் வரிகளைப் பாராட்டியதாக இசை அண்ணன் என்னிடம் சொல்வார். நான் ஆயிரம் பாட்டெழுதி ஓடிவர நீ, ஒரு பாட்ட எழுதி வரலாற்றுல இடம் பிடிச்சிட்டியேயா” என கடைசியாவும் என்னைப் பாராட்டித்தான் போனார் நா.முத்துக்குமார். இதுதான் அவர் பாராட்டிய பாடலின் பல்லவி.

“ஆத்தா ஓஞ்சேல – அந்த
ஆகாயத்தைப் போல
தொட்டி கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க
அப்பனுக்குத் தல துவட்ட

பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான்
செத்தாலும் என்னப் போத்த வேணும்”

பாடலாசியர்களால் ஒரு படத்தை ஜனரஞ்சக ரசனையோடு இயக்கிவிட முடியாது என்கிற தப்பிதம் திரையுல தயாரிப்பாளர்களிடம் இருந்ததால் நான் பாடல் எழுதும் வித்தையை மறைத்து வைத்துக்கொண்டு இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் “விருமாண்டி” படப்பிடிப்பில் நண்பர் கரிசல் கருணாநிதி பாடிய

“கொலகாரி வாரா – என்ன
கொல்லத் தானே போறா”
Paadal Enbathu Punaipeyar Webseries 1 Written by Lyricist Yegathasi தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
எனும் எனது பாடலைக் கேட்ட நடிகர் பசுபதி, தான் கதாநாயகனாக நடிக்க இருந்த “ஆயுள் ரேகை” எனும் படத்தின் சூழலுக்கு இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் இதை எழுதியவர் யார் என்கிற கேள்வியில் தொடங்கி இறுதியாக படத்தில் கருணாநிதியின் குரலிலேயே நண்பர் அப்பாஸ் ரஃபீக் இசையில் பாடல் பதிவு செய்தார் இயக்குநர் அசோக். ஆனால் படத்தில் நாயகனாக பசுபதி நடிக்கவில்லை. திரையில் தென்னவன் தோன்றி என் திரைப்பயணத்தின் முதல் பாடலுக்கு உருவம் தந்தார். என் எழுத்தை நேசித்த இயக்குநர் அசோக் அதே பணத்திற்காக இன்னொரு பாடலையும் எழுதச் சொன்னார் எழுதினேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேடைக்காக மட்டுமே எழுதிக்கொண்டு திரைத்திரையில் ஒளிந்து கொண்டிருந்த நான் “ஆயுள் ரேகை” படத்திற்காக நான் ஒத்துக்கொண்டதற்கு காரணம் அது எனக்கு திருமணமாகியிருந்த 2004 ம் வருடம். வாழ்வை நகர்த்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதைத் தொடர்ந்து எனக்கு அவள் பெயர் தமிழரசி, ஆடுகளம் ஆகிய திரைப்படங்கள் என்னை உலகறியச் செய்தன.

முதல் பாடல் வெளியான ஆண்டு அம்மாவைப் பார்ப்பதற்காக எங்கள் ஊர் சென்றிருந்தேன். அந்த நாளில் விருமாண்டி மாமா கடையில் என் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் முதன்முறையாக அங்கே டீ குடித்தேன்.

“ஓல எலக் காத்தாடியா
என்ன சுத்துறா
எட்டுமணி ரயிலப்போல
சத்தம் போடுறா
கண்ணால உயிர் பறிச்சு
மால கட்டுறா
உள்ளுக்குள்ள தீக்கொளுத்தி
மேளங் கொட்டுறா”

தொடரும்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 3 Comments

3 Comments

  1. இளவல் ஹரிஹரன்

    இந்தத் தொடர் அடித்தட்டு மக்களிலிருந்து ஒரு கலைஞன் எவ்வாறு உருவாகிறான் என்பதை வலியும் கடந்து போதலுமாய்ப் பதிவு செய்தால் நன்று. இதில் பாடல்களில் அவ்வாறு தான் வெளிப்படுவது தொடர்ந்தால் இனிது

  2. kabilan v

    கவிஞர் ஏகாதசியின் இந்தத் தொடர் படித்தேன்;சிலிர்த்தேன்;பரவசம் அடைந்தேன்;மதுரை மண்ணிலிருந்து ஒரு கலைஞன்; உங்கள் இலட்சியம், குறிக்கோள் வெல்க; உங்கள் கட்டுரை அருமை; நானும் நாகமலை புதுக்கோட்டை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 1976-1977ல் படித்தவன்; இப்பொழுது 61 வயது; ஓய்வூதியம் இல்லாத நிலையில் வாழும் தமிழ் ஆசிரியர்; இப்பொழுது எனக்கு ஒரு வேலை, ஊதியம் வேண்டும்;உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால் என்னை 9677055451 ,9952904694 என்ற‌ எண்களில் அழைக்க அன்புடன் வேண்டுகிறேன்! உங்கள் அறிமுகம்,நட்பு அவசியம் எனக்கு வேண்டும்!-அன்புடன் து.வே.கபிலன், சென்னை.(சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர்)

  3. காரைக்குடி கிருஷ்ணா

    அருமை தோழர் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *