தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசிPaadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
ஊர் எல்லையில் இருக்கும் கருப்புசாமி சிலையை எவராலும் புகைப்படம் எடுக்க முடியாது என்பது எங்கள் ஊர் சனங்களின் நம்பிக்கை. எனக்கு எதையும் புதிதாகச் செய்யவேண்டும் என்பதும் அதற்கான துணிவை வரவழைத்துக் கொள்வதும் பிடித்தமான விசயம் இப்போது வரையிலும் கூட. இதற்கு முன் கடவுள் தொடர்பான அனுபவம் ஒன்றிரண்டு எனக்குள் இருந்தது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் மதிய உணவ வாங்க தட்டோடு வரிசையில் நின்றிருந்தேன், ‘எ’ பிரிவின் தமிழாசிரியர் தாராப்பட்டி பெரியசாமி அவர்கள் வரிசை கண்காணிப்பு பணியில் இருந்தார். நான் அன்றைக்குத்தான் அவர் முகத்தை மிக அருகில் பார்த்தேன். அவரின் மீசை சிற்றெறும்பின் ஒரு வரிசை போன்றிருந்தது எனக்குள் பெரும் சிரிப்பை வரவழைத்தது, இருப்பினும் அடக்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த என் நண்பனிடம் “இங்க பார்றா இந்த வாத்தியாருக்கு எத்தனூண்டு மீசைன்டு” எனச் சொல்ல, இது தமிழ் அய்யா காதில் விழுந்து மறுநொடி எதிரே பார்த்தார், நான் நின்றிருந்தேன். அந்த வாக்கியத்தையைச் சொன்னது நான்தான் என்பது என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது போலும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

என் செவிப்பறை அதிர்ந்த விசயம் என் வகுப்பறை முழுக்க நிரம்பி வழிந்தது. மன்னிக்கணும் பள்ளிக்கூடமே நிரம்பி வழிந்திருக்கிறது, காரணம் நான் பள்ளியின் கதாநாயகன், அடித்தவர் என்னை அறிந்திருக்கவில்லை போலும்.

“அறிந்திருக்கவில்லை என்றால் அப்புறமென்ன கதாநாயகன்”

என்றுதானே கேட்கிறீர்கள். அது அப்படித்தான். இந்த லட்சணத்திற்கே நான் முட்டி முட்டி மக்கப் பண்ணிக் கிடந்து, செத்து சுண்ணாம்பானது எனக்குத்தான் தெரியும். அடுத்து வகுப்பிற்கு வந்த குருசாமி வாத்தியார்,

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு”

என்கிற அய்யன் வள்ளுவரின் குரலோடு வகுப்பைத் தொடங்கினார் என்பதல்ல செய்தி. துயரம் தாளாது நான் அன்று மாலை எங்கள் ஊர் காளியம்மன் கோவிலில் முன் நின்று என் கோரிக்கையை முன்வைத்தேன். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை என்னவென்றால்,

“சாமி…, என்னை ஒரு சிறுவன் என்றுகூட பாராமல், விபரம் தெரியாமல் பேசிவிட்ட ஒரு சாதாரண விசயத்திற்காக ஈவு இரக்கமின்றி அறைந்த பெரியசாமி அய்யா, இந்தப் பள்ளியிலிருந்து மாற்றலாகிப் போய்விட வேண்டும்” என்பதுதான். இதில் என் கண்ணியம் என்னவென்றால், நான் பெரியசாமி அய்யாவை வேறு பள்ளிக்கு மாற்றத் தான் சொன்னேனே தவிர காளியிடம் அவரை வேலையிலிருந்தே தூக்கச் சொல்லவில்லை. இன்னொன்று நான் உங்களிடம் தமிழய்யாவிற்கு நாங்கள் வைத்திருந்த ‘மூக்கு நோண்டி’ என்கிற பெயரை சொல்லாமல் மறைத்ததும்தான். இன்னும் அவர் மேல் இவனுக்குக் கோபம் தீரவில்லை என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ் இல்லையா. இல்லை என் கோபம் அய்யா மீது அல்ல, அவரை பள்ளியிலிருந்து மாற்றலுக்கு வழிவகை செய்யாத கடவுள் மீதுதான். கடவுள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பிறகென்ன நானும் கடவுளைக் கண்டுகொள்ளவில்லை. மிக்க நன்றி பெரியசாமி அய்யா உங்களின் அறை தான் ஒரு பகுத்தறிவுவாதி உருவாக மூல காரணம்.

பல்லவி
காவிகள் செய்யும் லீலையை இனியும்
ஒத்துக் கொள்வதா
ஆவிகள் பேசும் என்கிற சொல்லை
நம்பிச் செல்வதா

மருந்திட்டால் போதும்
ஆறிவிடும் காயம்
இல்லாத கடவுளை
இழுப்பதென்ன நியாயம்

சரணம் – 1
தேர்வினில் வெல்லத் தேங்காய் உடைத்தல்
எப்படி ஞாயமடா
ஒழுங்காய்ப் படித்தால் உடைக்கும் தேங்காய்
சட்டினி ஆகுமடா

வைத்திடும் பொங்கலை வாரி வழித்து
சாமி தின்கிறதா
வட்டிக்கு வாங்கி வீட்டிற்கோர் ஆடு
வெட்டு என்கிறதா

பேய்கள் வருவதை நாய்கள் அறித்திடும்
பேச்சினை நம்பாதே
பூனை குறுக்கே விதவை எதிரே
தடையெனக் கொள்ளாதே

வேல்கள் உடம்பில் குத்திக்கொள்ளும்
வேண்டுதல் தேவையா
வாள்கள் சுமக்கும் சாமியின் உருவம்
வன்முறை தானய்யா

சரணம் – 2
கூழுக்கு வழியின்றி குடிசைக்குள் வாழும்
ஏழைகள் ஒரு பக்கம்
பாலுக்குள் நாளும் நீச்சல் அடிக்கின்ற
சாமிகள் யார் பக்கம்

மூக்குத்தி இல்லாமல் தங்கச்சி கல்யாணம்
நடக்காமல் இருக்கு
தெய்வத்தின் உண்டியல் தங்கத்தைத் தின்று
செறிக்காமல் கிடக்கு

ஆசைகள் துறந்த சாமியார் கூட்டம்
ஏசியில் வாழ்கிறது
பூஜைக்கு வந்த பெண்களின் கற்பு
தீபத்தில் வேகிறது

தூணிலும் துரும்பிலும் சாமிகள் இருந்தால்
தவறுகள் நடந்திடுமா
பூகம்பம் வந்திங்கு பூமியும் பிளந்து
உயிரினம் அழிந்திடுமா

இந்தப் பாடலை முற்போக்கு மேடையெங்கும் தோழர் துரையரசன் அவர்கள் தானே அமைத்த மெட்டில் பாடி கேட்போரை விழிப்படையச் செய்துகொண்டிருக்கிறார், மற்றும் பாடலையே தனது சுவாசமாகக் கொண்டு என்னற்ற சமூகப் பாடலை இடைவிடாது பாடிக் கொண்டிருக்கும் தோழர் உமா சங்கரும் இப்பாடலைப் பாடி பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எங்கள் ஊர் எல்லையில் விட்டுவிட்டு வந்த கனவாய் கருப்புசாமியை அழைத்து வருகிறேன். நண்பர்கள் பந்தமும் கூட கட்டினார்கள் கருப்பனை புகைப்படம் எடுத்தால் கருப்பன் கருப்பாக இருக்கமாட்டான் ஃபிலிம் வெள்ளையாகத்தான் வருமென்று. நான் 1997, 98 களில் “விவிட்டார்” அப்படின்னு ஒரு காமிரா வைத்திருந்தேன். சனங்களின் அறியாமையை போக்குவதற்காக காமிராவை கழுத்தில் மாட்டி களத்தில் இறங்கினேன், அதாவது கருப்பனின் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று ஓர் அழகான ஃபிரேம் வச்சு புகைப்படம் எடுத்துவிட்டு இறங்கினேன். பிறகு மதுரையில் கிளாசிக் லேபில் பிரிண்ட்க்கு கொடுத்தேன்.

அய்யோ.. நண்பர்களிடம் சவால் விட்டோமே, கருப்பன் வருவாரா வெள்ளையன் வருவாரா என்றெல்லாம் பதட்டத்தில் நான் காத்திருக்கவில்லை. கருப்பன் மிக அழகாக கலர்ஃபுல்லாக குறையின்றி நேர்த்தியாக ஜம்மென்று வந்திருந்தார். பிறகென்ன ஒரு பகுத்தறிவாளன இந்த சனங்க அன்புத் தொல்ல செஞ்சு, கருப்பனை முந்நூறு காப்பி பிரிண்ட் போடச் சொல்லி வீட்டு வீட்டுக்கு மாட்டிக்கிட்டாய்ங்க.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

“அன்னக்கொடியும் கொடிவீரனும்” என்று முதலில் பெயர் சூட்டப்பட்ட ஒரு திரைப்படம், பிறகு அந்தப் படம் “அன்னக்கொடி” என பெயர் மாற்றம் பெற்று வெளியானது. இந்தப் படம் ஜாதியத்திற்கு எதிரான கருவைக் கொண்டது. இசை ஜி.வி. பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு சாலை சகாதேவன். இதில் நாயகனாக லட்சுமணனும் நாயகியாக பிரபல நாயகி ராதா அவர்களின் மூத்த புதல்வியான கார்த்திகா மற்றும் மணிவண்ணன் மனோஜ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் டைட்டில் ஸாங் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சிறுதெய்வ வழிபாட்டுப் பாடல் வழியாக படத்தின் மையக் கருத்தை வலியுறுத்துகிற வகையே சூழல்.

கொலை வாள எடுங்கடா
குரல்வலைய அறுங்கடா
கொடி வீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்

கெட்டவன் பொறந்திட்ட ஊருக்கு – அட
கொடிவீரன் கிளம்புவான் போருக்கு

சாதிய அழிங்கடா
சாஸ்த்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காய்கறிகள் ஆறட்டும்

சூதுகளை நாளும்
சொக்கப்பன் கொளுத்துவோம்
கேக்காமல் சுத்தினால்
பூமியைக் கொளுத்துவோம்

துடியான சாமிக்கு
பலிகடா நேர்ந்தது
இன்னைக்குத் தானடா
பட்டகடன் தீர்ந்தது

இந்தப் படத்தின் இயக்குநர் பெயரை சஸ்பென்ஸாக கடைசியில் சொல்லலாம் என்றுதான் பொறுத்திருந்தேன். எங்களுக்குத் தெரியாதாடா டே… ஓ சஸ்பென்ஸில் மண்ணப்போட என்று நீங்கள் கொந்தளிப்பது எனக்கு அக்யூரெட்டா தெரியுது, இருந்தாலும் அவர் பேர லாஸ்ட்டா சொன்னா நல்லாருக்குமென்று தோன்றியது அவ்வளவுதான். அவர் பெயர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரை எனக்கு அப்பாவாகப் பார்க்கத் தோன்றும் நண்பராகப் பழகத் தோன்றும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 11 Written by Lyricist Yegathasi தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

நான் கருப்பசாமியைப் புகைப்படம் எடுத்த கதையையெல்லாம் சொன்னேன், ஆனால் நான் மதிக்கும் கருப்பசாமி செவக்காட்டு மண்ணின் சிகரம் பாரதிராஜா தான். அன்னக்கொடி படத்தில் இன்னொரு முக்கிய பாடலுக்கு என்னை அழைத்த தருணத்தையும் எனக்கும் அவருக்குமான இனம்புரியா காதலையும் அடுத்த வாரம் பகிர்கிறேன்.

ஆண்:
அன்னமே – ஏ
அன்னமே
தெச தொலச்ச – ஏ
அன்னமே

நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியே…

பெண்:
தப்பி வாரா ஒரு
தங்கப் பொண்ணு
செங்காட்டு மண்ணே
சொல்லாதே

ஓடிவார இங்க
ஒத்த பொண்ணு
நடுக் காட்டு முள்ளே
குத்தாதே

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.