இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் தீவிர ரசிகன் நான். அவரின் “என் இனிய தமிழ் மக்களே” குரலை கேட்கிற போதெல்லாம் என் மனம் இப்பவும் சிறகடிக்கும். இவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட வேண்டும் என்பது என் கனவு. அந்நாளில் என் உடன்பிறவாச் சகோதரர் அண்ணன் ஐந்துகோவிலான் அவர்கள் அவரிடம் உதவி இயக்குநராக பணி செய்துகொண்டிருந்தார். ஒரு உதவி இயக்குநராக இருந்துகொண்டு இயக்குநரிடம் இன்னொருவருக்கு உதவி இயக்குநர் வாய்புக் கேட்பதெல்லாம் ஒரு சங்கடமான விசயம்.
அதே போல் திரைப்பட ஸ்டில் ஃபோட்டோகிராபர் “அருள் ஸ்டுடியோ” மனோகரன் அண்ணனிடமும் யாரிடமாவது உதவி இயக்குநராக சேர்த்துவிடும்படி கடிதம் மூலம் தொடர்பில் இருந்தேன். முதலில் யாரிடமாவது உதவி இயக்குநராக உள் நுழைந்து கொண்டால் பின்னர் பாரதிராஜா அவர்களிடம் சேர்வதற்கு சென்னையிலிருந்தபடியே முயற்சி செய்யலாம் என் எண்ணம், ஆனால் சொல்லும்படியாக ஒன்றுமே சாதிக்காமல் காலம் ஓடிக் கொண்டே இருந்ததை என்னால் ஏற்க இயலாமல் எந்த ஒரு செயல்பாடும் களத்திலிருக்கும் போதுதான் சாத்தியம் என்று முடிவெடுத்தேன்.
வத்தலக்குண்டு G.தும்பைப்பட்டியில் என் அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமுதம். அது பாரதிராஜா அவர்கள் திருமணம் முடித்த ஊர். அங்கே இயக்குநர் இமயத்தின் நண்பர் கோபால் அவர்களிடம் என்னை குமுதம் அக்கா அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் கோபால் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம் நான் உதவி இயக்குநராக சேர்ந்துகொள்ள ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். கடிதம் பெற்றுக் கொண்டு பார்சன் காம்ப்ளக்ஸ் முன் நின்றேன் அது இமயத்தின் அலுவலகம். அவர் “கிழக்குச் சீமையிலே” வெற்றியைக் கொண்டாட வெளிநாடு போயிருப்பதாகச் சொன்னார் செக்யூரிட்டி. அதை கேட்டு விட்டு வெளியேறுவதைத் தவிர வேறுவழி அப்போதைக்குத் தெரியவில்லை எனக்கு.
நடிகர் பெரியகருப்பத்தேவர் அப்பாவின் வீட்டிற்குச் சென்று விசயத்தைக் கூறினேன். பாரதிராஜா சாரிடம் எவருடைய சிபாரிசும் செல்லாது என்கிற உண்மையைத் தெரிந்து கொண்டு அந்த கடித்தை சூட்கேஸின் அடியில் வைத்துவிட்டேன். சாப்பிட எதுவும் இல்லையென்றால் அக்கம் பக்கத்தில் பஸ்ஸிற்கு காசு புரட்டிக் கொண்டு நம் வீட்டிற்கு வந்துவிடு. இங்கு எப்போதும் உணவிருக்கும். பட்டினி மட்டும் கிடந்துவிடாதே என்று நந்தனம் வீட்டிலிருந்து பெரியகருப்பத்தேவர் அப்பா சொன்னது இன்னும் என் காதுகளில் கேட்கிறது ஆனால் இன்று அவர் இல்லை. நான் அவர் வார்த்தைகளை புதிதாக வாய்ப்புத் தேடிவரும் தம்பிமார்களிடம் சொல்கிறேன். அந்த நல்ல இதயம் நூறு படங்களுக்கும்மேல் நடித்தும், தம்பி ஞானகரவேல் எழுதிய “சிவகாசி ரதியே” பாடலை பாடியும் நம்மோடு இருக்கிறார். இன்று அவரது மூத்த மகன் இனிய தம்பி விருமாண்டி “ரணசிங்கம்” என்கிற படத்தை இயக்கி வெற்றிபெற்றுள்ளதை நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன்.
பிற்காலத்தில் “அன்னக்கொடி” படத்தில் ஒரு பாடல் எழுதி அதற்கு பாரதிராஜா அவர்களின் கையால் கையெழுத்திட்ட சம்பளக் கவரை வாங்கி வெளிவந்தது அதே பார்சன் காம்ப்ளக்ஸ் தான். பின்னொரு நாள் தேனியில் இருந்துகொண்டு அழைத்தார் போனேன். அன்னக்கொடி படத்தின் அதுவரைக்கும் எடுத்துள்ள 3.30 மணிநேர ரஷ் காண்பித்தார். அதில், மனைவியை சந்தேகிப்பதையும் கொடுமைப் படுத்துவதையுமே வாழ்வாகக் கொண்ட ஒரு முரட்டுத்தனமான கணவனிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்து காடு கரை தாண்டி ஓடிவந்து எதார்த்தமாக தன் காதலனின் குடும்பத்திலேயே அடைக்கலமாகிற ஒரு மாறுபட்ட சூழலைச் சொன்னார்.
படத்தில் காட்சியாகக் கூற வேண்டுமானால் நான் ஏழு காட்சிகளை எடுக்கவேண்டும். படம் மிகவும் பெரிதாகி விடும்., ஆனால் ஏழு காட்சிகள் சொல்லவேண்டிய விசயத்தை நீ மூன்று நிமிடங்களில் சொல்லி முடிக்க வேண்டும் என்றார் இயக்குநர் இமயம். அந்த பாடலைத் தான் சென்ற வாரம் தொடங்கினேன், இப்போது முடித்தும் வைக்கிறேன். இது ஜி.வி. பிரகாஷ் குமாரும் பூஜாவும் பாடியது. வெயிலில் நனையும் இவர்களது குரலை ஒலி கேட்டுப் பிரமிக்கலாம்.
ஆண்:
உண்ணப் பழ மில்ல
உக்காரக் கொப்பு மில்ல – இனி
எங்கதான் போவாளோ
எங்க கிளி
ஆண் – பெண்
மகளேன்னு மாரடிக்க
ஒரு தாயுமில்ல – ஒரு
தாயுமில்ல
ஆத்தான்னு ஓடிவர
ஒரு அப்பனுமில்ல – ஒரு
அப்பனுமில்ல
பெண்:
சுத்திரது இந்த பூமியா
ஏ பக்கத்தில நிக்கிறது சாமியா
ஒன்னப் பாத்தது – ஏ
ரெண்டாம் பொறப்பு
இனிமேல் ஏது என்
உசுருக்கு இறப்பு
ஆண்:
உசுர எடுத்துக்கிட்டு
ஒருநாள் போனபுள்ள
தொட்டிச் சீல சுத்திக்கிட்டா – இவ
இனி இந்த வீட்டுப் புள்ள
இயக்குநர் இமத்திற்கும் எனக்குமான தொடர்பு என்பது மிகச் சிறியது தான். ஆனால் அது சிலந்தி வலை போன்று பின்னப்போனது. நான் அவரைப் பற்றி எதை எழுதினாலும் அதற்கு மேலும் எழுத முன்னும் பின்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
ஒருவன் உண்மையாய் காதலிக்கப்படுகிற ஒரு விசயம் அவனிடம் ஒரு நாளில் வந்தடைந்தே தீரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படித்தான், இலக்கியம் தெரிந்த ஓர் உதவி இயக்குநர் வேண்டுமென அண்ணன் சீமான் அவர்களிடம் பாரதிராஜா அவர்கள் கூற, அவரைச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தபோதும் சீமான் அண்ணன் என்னை அழைத்துக் கொண்டு அறிமுகம் செய்து வைத்தார். அந்த நாளன்று அவரிடம் நான் ஒரு குறுங்கதை சொன்னதும் அவரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதும் மறக்க முடியாத தருணம்.
தமிழ்த்திரை சேனலுக்காக அவர் இயக்கிய “மயிலு குயிலு” நிகழ்ச்சிக்கு அவரோடு உட்கார்ந்து காட்சிகளை விவாதித்தபோது அவரிடம் நான் கண்ட ஈடுபாட்டை எண்ணி வியந்திருக்கிறேன். உதவி இயக்குநர்களை வெறும் எடுபுடியாக மட்டும் பயன்படுத்தும் பல இயக்குநர்களுக்கு மத்தியில் அவர் உதவியாளர்களின் சிந்தனையை மதித்து அவர்களை வார்த்தெடுக்கும் விதம் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.
எனது “கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை” படத்தைப் பார்த்து விட்டு அவர் 20 நிமிடங்கள் பாராட்டிப் பேசியது இன்னும் என் இதயத்தில் மிதக்கிறது. என் நடிப்பையும் இயக்கத்தையும் கூட அவர் பாராட்டியது எனக்குள் இன்னும் பூக்காலமாக இருக்கிறது.
ஒருமுறை கலைஞர் டிவிக்காக அவர் இயக்கிய “தென்பாண்டி சிங்கம்” தொடரில் என்னை நாயகனாக நடிக்கக் கேட்டு நான் பாடல் எழுதும் பணி கெட்டுவிடுமே என்றெண்ணி மறுத்தபோது. “நீ நடி.. சங்கரபாண்டி வந்துட்டா ஒன்ன விட்டுடுறேன்” எனச்சொல்லி தேனிப்பக்கம் ஒரு கிராமத்தில் அவர் இயக்கத்தில் ஒருநாள் கதாநாயகனாக நடித்துவிட்டு மறுநாள் சங்கரபாண்டி வந்ததும் நான் சென்னை வரை அவர் முன் நடித்ததை எண்ணி தலைகால் புரியாமல் ஆனந்தித்ததை எப்படி சொல்வேன்.
“மதயானைக் கூட்டம்” பாடல் வெளியீட்டு விழாவில் என்னைப் பாராட்டி அன்பெனும் மழையில் நனைத்தது தொடங்கி இன்றுவரை எங்கு பார்த்தாலும் நான் எழுதி வெளியாகிற புதிய பாடல்களையெல்லாம் கேட்டுவிட்டு பாராட்டுகையில் என் விழிகளில் நீர் முட்டாமல் என்ன செய்யும். என் உடல் சோறு தின்று வளர்ந்தது ஆனால் என் உயிர் அவரின் சினிமா உண்டு வளர்ந்தது.
“எவன் எவனோ என் காசைத் தின்கிறான் என் பிள்ளை நீ ஏன் தள்ளி நிக்கிற அடிக்கடி அலுவலகம் வா.. என்ன வேணும்னாலும் கேளு செய்யிறேன்” என்று சொன்ன அவர் தாயன்பின் முன்னால் உருகிக் கிடக்கிறேன்.
‘மஜா’ ‘கண்ணும் கண்ணும்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து பின்னாளில் “சட்டென்று மாறுது வானிலை” எனும் படத்தை இயக்கிய என் நண்பர் ரவி பெருமாள் என் பயணத்தில் மறக்க முடியாத பண்பாளர். எப்போதும் இனிமையாகப் பேச அவரைப் போன்று என்னாலெல்லாம் இயன்றதில்லை. அவர் இயக்கிய படத்திற்கு மூன்று முத்தான பாடல்களை எழுதினேன். படம் வெளியாவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது, ஆனாலும் உற்சாக குறையாத மனிதர். அவர் படத்திற்கெழுதிய ஒரு பாடலின் ஒரு சரணத்தை மட்டும் இப்போதைக்கு உங்களுக்கு. இது காதலனும் காதலியும் படுக்கையறையில் எழுதிய காமத்துப்பால். ஷியாம் இசையில் உன்னிமேனனும் சித்ராவும் உருக்கி உருக்கி ஊற்றித் தந்த பாடல் இது.
ஆண்:
யாழ் தொட்டு நான் மீட்ட
உடல் கொண்டு வந்தாய்
உன் சிணுங்கலையே
இசையெனத் தந்தாய்
பெண்:
தேரொன்றை மலர் தான்
இழுத்திடும் இங்கே – என்
தேவைகள் அறிந்து
முழங்கிடு சங்கே
ஆண்:
என் ஆறாம் திணை
நீயல்லவா
உனை ஏழாம் சுவை
எனச்சொல்லவா
பெண்:
நீ யானைக் கன்று
போன்றல்லவா
பூவே என்று
பொய்சொல்லவா
ஆண்:
காமம் தான்
உயிரினை எரிக்க – அன்பே
படுக்கைகள் எதற்கடி
நாம் விரிக்க
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.