தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
ஒரு பாடல் வெற்றி பெறுகிறதென்றால் அந்தப் பாடலாசிரியனுக்கு அந்தப் பாடலை ஒத்த சூழலுக்கு அதிக வாய்ப்பு வரும். அந்தப் பாடலை முன்னுதாரணமாகச் சொல்லி “அதைப்போல” வரிகள் இருந்தால் நன்றாக இருக்குமென அடுத்தடுத்து பாடல் எழுத அழைக்கும் இயக்குநர்கள் கூறுவார்கள். அதே தாக்கத்தை வெற்றி பெற்ற படமும் ஏற்படுத்தும். இயக்குநர்களிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தின் பெயர் சொல்லி “அதைப்போல” ஒரு கதை இருந்தா உடனே பண்ணிடலாம் என்பார்கள். இந்த அணுகுமுறை சரியா என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்வேன்.

இந்த விசயத்தை நம் ஆட்கள் சிலரின் விவசாய முறையை உதாரணமாகக் காட்டலாம். ஒருவர் வெங்காயம் விளைவித்த நேரத்தில் சந்தையில் அதற்கு நல்ல விலையென்று கேள்விப்பட்டால், ஊரே வெங்காயத்தை நடுவார்கள், பின்பு குறிப்பிட்ட பொருள் மட்டுமே சந்தையில் அதிகம் குவியும்போது விலைச் சரிவு ஏற்பட்டு விவசாயம் நட்டமாகும். இது போன்ற சிக்கலை சினிம பல காலகட்டங்களில் சந்தித்திருக்கிறது.

இதே போலே ஒரு பாடலாசிரியருக்கு எந்தப் பாடல் முதல் வெற்றியை ஈட்டித் தருகிறதோ அந்தப் பாடலின் ரகம் அவரின் அடையாளமாகிவிடும். அது கிராமத்துப் பாடலென்றால் அவருக்கு அது தான் வரும் என்றும் அது நகரத்துப் பாடலென்றால் இவருக்கு இதுதான் வரும் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள். இதில் நானும் சிக்கிக்கொண்டவன் தான். என்னை கிராமத்துப் பாடல் எழுதும் பாடலாசிரியர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் அதற்குக் காரணம், என் முதல் பாடலும் என் முதல் வெற்றிப் பாடலும் கிராமத்து சூழல் கொண்டது என்பதனால்.

இதிலிருந்து மாறுபட்டு பல நகரத்துப் பாடல்கள் எழுதியிருக்கிறேன், அந்தப் படங்கள் வெற்றி பெறாததால் பாடல் வெளியே தெரியவில்லை. வெளியாக இருக்கும் நகரத்தை நிலமாகக் கொண்ட படங்களில் ஒன்றுதான் “சட்டென்று மாறுது வானிலை”. இதிலிருந்து இன்னொரு பாடல்,

பல்லவி:
சுடச்சுட விழிகளில் இரு சூரியன் தருகிறாய்
தொடத்தொட அருகினில் ஒரு நிலவென வருகிறாய்
உன் வீட்டின் வாசலில் செய்தித்தாளைப் போல்
வந்து வீழ்கிறேன் நானடி
என் வெள்ளை வானத்தில் நீ வண்ணம் பூசினாய்
என் வெட்கப் பூவினை தீண்டினாய்

சரணம் – 1
வளையலின் அளவெடுத்து இடையினைப் படைத்தானோ
திருஷ்டிகள் கூடாதென்று என் இதயத்தை உடைத்தானோ
வாழ்க்கையே இன்று பூக்களாய் அட வாசனை சொல்லுதே
வானவில் சொல்லா வண்ணம் என் தேகத்தைக் கொல்லுதே
அன்பே உன் கையில் ரேகை போல் நானிருப்பேன்
வீட்டின் கண்ணாடி போல் என்றும் காத்திருப்பேன்

சரணம் – 2
இமைகளைத் தொலைத்தாயோ கண்களைத் திறந்து வைக்க
காதலை அழைத்தாயோ உயிரினை விருந்து வைக்க
வார்த்தைகள் நீயும் பேசிட சில வாரங்கள் ஆகுதே
வானமும் எந்தன் மூச்சினில் பல மாதமாய் வேகுது
அன்பே முள் மீது பனித்துளி நீ அல்லவா
வெட்கம் உடையாமல் உன்னை நான் அள்ளவா

பொதுவாக, பாடகர்கள் எல்லா பாடல்களையும் பாடிவிடுவார்கள், ஆனால் எந்தப் பாடலின் அழகான வரிகளால் தாங்கள் ஆட்கொள்ளப் படுகிறார்களோ அதைக் கொண்டாடிவிடுவார்கள். ஏனெனில் வெறுமனே பாடுவதற்கும் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படித்தான் இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கும் போது நடந்தது,

“வளையலின் அளவெடுத்து
இடையினைப் படைத்தானோ
திருஷ்டிகள் கூடாதென்று – என்
இதயத்தை உடைத்தானோ”

என்ற வரிகளைப் பாடும் பொழுது, சற்றுப் பதிவை நிறுத்தி இந்தப் பாடலை யார் எழுதியது என்று கேட்டு மனதாரப் பாரட்டிவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார் பாடகர் உன்னிமேனன் அவர்கள். இந்தப் பாடத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களை மட்டும் அல்ல மொத்தப் பாடல்களையும் இசையமைப்பாளர் ஷியாம் இழைத்து இழைத்து இனிமை செய்திருக்கிறார். எல்லா புகழும் இயக்குநர் ரவிபெருமாளுக்கே.

Paadal Enbathu Punaipeyar Webseries 13 Written by Lyricist Yegathasi தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

இந்தியாவின் மிகச் சிறந்த நடன இயக்குநரும் இயக்குநருமான பிரபு தேவா அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த நண்பர் ஷக்தி வசந்த பிரபு அவர்கள் “ஏன் இந்த மயக்கம்” எனும் படத்தை இயக்கினார். அதன் கதை மிக முக்கியமானது. நம் பெண் பிள்ளைகள் இணையதள காமுகர்களிடம் சிக்கி வாழ்வைத் தொலைத்துக் கொள்ளும் கொடுமையை அசலாகக் காட்டிய படம் அது. நானும் சக்தி வசந்த் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். பல கதைகளைப் பேசி விவாதித்திருக்கிறோம். வாழ்வில் எது நடப்பினும் அதிர்வின்றி கடந்து பயணிக்கும் அன்பர். உழைப்பை தன் நிழலாக உடன் வைத்துக்கொள்பவர். அவர் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். அதில் “ஒரு காதல் ரீங்காரம்” எனும் பாடலின் சரணத்தில்,

“வான வில்லிலே தோன்றும் காதல்
எந்த வண்ணத்தில் மறைந்திருக்கும்
பூவனத்திலே தோன்றும் காதல்
எந்தப் பூவினில் நிறைந்திருக்கும்

காதலில் யாரும் ஏழைகள் இல்லை
காசுகள் பார்த்தா காதல் வரும்
சாலை எங்கிலும் தூறல் பூக்கும்
காட்சி இன்றியே காதல் வரம்”

என எழுதியிருப்பேன். சித்தார்த் பாபு அவர்களின் இசை பாதங்களை தாளமிட வைக்கும். ஷான் ஜான்ஷனும் அருண் பிரபாகரும் என் வரிகளுக்கு வலு சேர்த்திருப்பார்கள்.

“மழைக்காலம்” படம் 2012 ல் வெளி வந்தது. அதன் இயக்குநர் எஸ். தீபன் அவர்கள் என் நண்பர். அவரின் இயற்பெயர் தங்கராஜ். அவர் போராட்டம் நானறிவேன். திரைப்படத் துறையில் ஒருவர் முதல் பட வாய்ப்புப் பெற்று இயக்குவது என்பதை உணர்ந்தாலே தவிர ஒருவர் சொல்லி ஒருவருக்குக் கடத்த முடியாது. இவரின் முதல் பட போராட்டமும் அதுபோன்றதுதான். இந்த “மழைக்காலம்” படத்தில் ஒரு காதல் பாடலும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பைப் போற்றும் பாடலும் எழுதினேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 13 Written by Lyricist Yegathasi தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எல்லா பாடலாசிரியர்களின் பாடல் பட்டியலிலும் காதல் பாடல்களே நிரம்பி வழியும். மாற்றுச் சூழலுக்கு பாடல் வாய்ப்புக் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது. நட்பைப் பற்றிய பாடல் வரிசையில் ஆண்களின் நட்புப் பற்றியும் பெண்களின் நட்புப் பற்றியும் நிறையப் பாடல்கள் வந்திருக்கின்றன ஆனால், ஆண் பெண் நட்புப் பற்றிய பாடல் மிகவும் குறைவு. காரணம் ஆண்-பெண் நட்பு என்பதை புரிந்து கொள்ளும் பண்பைப் பின்னுக்கிழுக்கும் பிற்போக்குத் தனங்கள் இங்கே வேரூன்றியிருக்கின்றன. இந்த விசயத்தில் நகரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறதெனச் சொல்லலாம். “சக்கரைக் கட்டி” படத்தில் ‘டாக்ஸி.. டாக்ஸி’ , “ஆட்டோகிராஃப்” படத்தில் ‘கிழக்கே பார்த்தேன்’, “பாண்டவர் பூமி” படத்தில் ‘தோழா தோழா’ போன்ற சில பாடல்கள் மட்டுமே நம்மிடம் இருப்பதாய்ப் பார்க்கிறேன். எனது பாட்டுப் பயணத்திலும் ஒரு ஆண்-பெண் நட்புப் பாடல் எழுதும் வாய்ப்பு பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். இப்பாடலுக்கு இசை: பிரேம் ஆனந்த். குரல்: ஹரீஷ் ராகவேந்திரா – சைந்தவி.

பல்லவி:
ஆண்:
தேவதை நீ தான் மண்ணில் எனக்கென
தோழியாய் பிறந்திட்டாய் – அடி
உனக்கென கடவுள் உயிரையும் கேட்டால்
ஏற்பேன் தருவதாய்

அட நிலவிலும் கூட கறையுண்டு பெண்ணே
நட்பில் இல்லையம்மா
நடு ஆற்றில் அள்ளிய நீரைப் போலவே
உன் மனம் வெள்ளையம்மா

பெண்:
தேவனே நீ தான் மண்ணில் எனக்கென
தோழனாய்ப் பிறந்திட்டாய் – அட
உனக்கென கடவுள் உயிரையும் கேட்டால்
ஏற்பேன் தருவதாய்

சரணம் – 1
ஆண்:
புகைப்படம் எடுத்தால் பிரிவோம் என்று
நாம் அதை விரும்பல

பெண்:
நான் இரண்டடி குறளில் ஓரடி பிரித்தேன்
பொருளொண்ணும் இருக்கல

ஆண்:
நீ பேசும் வார்த்தைகள் கவிதையாகும்
இரவெல்லாம் பேசடி

பெண்:
நீ தூக்கம் இழந்தால் உன்னுடல் மெலியும்
கொஞ்சம் தூங்குடா

ஆண்:
அடி சண்டை போடவா சாதம் ஊட்டவா
சொல்லடி செல்லத் தோழி

சரணம் – 2
ஆண்:
தாயும் தந்தையும் தராத சுகத்தை
தோழி நீ தந்திட்ட

பெண்:
என் பூமியும் சாமியும் தராத வரத்தை
தோழனே தந்திட்ட

ஆண்:
நான் ஒற்றைச் சிறகிலும் உயரப் பறப்பேன்
என்னுடன் நீ இரு

பெண்:
உன் கண்கள் துடிக்க கைகள் தந்தியே – நீ
கடவுளின் திருவுரு

ஆண்:
அட நீயும் நானும் தான் இரட்டைப் பிறவியோ
சொல்லடி செல்லத் தோழி

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.