தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 18 Written by Lyricist Yegathasi தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இரண்டு நாளைக்கு ஒருவராவது தமிழகத்தின் எதாவது ஒரு மூலையிலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காரணம் நான் கல்லூரி விழாக்களுக்கோ அல்லது வேறு எதாவது இலக்கிய விழாக்களுக்கோ விருந்தினராக சென்று வரும்போது அலுவலகப் பையன் முதல் அதிகாரிவரைக்கும் யார் தொடர்பு எண் கேட்டாலும் கொடுத்து விடுவேன். இதில் 5 வயது குழந்தையும் 80 வயது பெரியவரும் அடங்குவர்.

தான் கதை வைத்திருப்பதாகவும் அந்தக் கதையை சினிமாவில் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதற்கு கிடைக்கும் சம்பளத்தை எனக்கே தந்துவிடுவதாகவும் ஒரு நாற்பது வயதுடையவர். தன்னை மிகச் சிறந்த பாடகரென்றும் ஒரு பாடலையாவது திரைப்படத்தில் பாடுவதென்பதே தனது இலக்கு என்றும் நீங்கள் ‘ஊம்’ என்று சொன்னால் சென்னையில் வந்து நின்று விடுவேனென்று ஒரு அறுபது வயதுக்காரர். ஊரில் பெரிதாக வேலையொன்றும் இல்லை சும்மாதான் இருக்கிறேன், சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள் எந்த வேசம் கொடுத்தாலும் அசத்திடுவேன் ஏனெனில் நான் அந்தக்காலத்திலேயே பள்ளிக்கூட நாடகங்களில் நடித்திருக்கிறேன் என்றொருவர். உதவி இயக்குநராக வேண்டும் உதவி ஒளிப்பதிவாளராக வேண்டும் நடிகராக வேண்டும் என்று கனவுகளை ஜாமன்டரிப் பாக்ஸ்களில் வைத்துக் கொண்டு வாய்ப்புக் கேட்கும் பதினொன்று பன்னிரண்டு வகுப்பு படிக்கும் இளைஞர்கள் ஒருபுறம்.

இதற்கு நடுவில் வில்லன் வேசம் கிடைத்தால் கூட போதும் வாங்கிக் கொடு என்று கேலி பேசும் மாமன் மைத்துனர்கள், சீரியலில் நாங்களும் நடிக்க வரட்டுமா எனக் கேட்டு தெரு குலுங்க சிரிக்கும் பழக்கமான ஊர் முகங்கள் என மனிதர்களை சினிமா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இது சாமானியர்களை மட்டுமல்ல மருத்துவம் படித்தவர்களையும் பொறியியல் படித்தவர்களையும் கூட சென்னை வீதியில் கதைகள் விற்க இறக்கிவிடுகிறது. கோடம்பாக்கம் வடபழனி சாலிகிராமம் போன்ற சினிமாக்காரர்கள் புழங்கும் பகுதிகளில் பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் யாரையாவது எழுப்பி விசாரித்தால், நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிக்க வந்தவன் இரண்டு மூன்று படங்களில் கதாநாயகனுக்குப் பின்னால் நின்றிருக்கிறேன், ஒரு படத்தில் மட்டும் ‘பேமானி வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா” என ஒரு கார் டிரைவராக நடித்த ஷாட்டில் வசனம் பேசியிருக்கிறேன் அவ்வளவு தான், ஆனாலும் இரண்டு மூன்று இயக்குநர்கள் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களென முடியைக் கோதிவிடும்போது நம் ஈரக்கொலை நடுங்கத்தான் செய்யும்.

என் நண்பர் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் பொன் பிரகாஷ் என்பவரும் ஓர் அறையில் தங்கியிருந்து சினிமாவில் பணி புரிந்தார்கள். அது நான் சென்னை வந்திருந்த புதிது. அந்த அறை வடபழனி ஆர் 2 (இப்போது ஆர் 8) போலீஸ் ஸ்டேசன் பின்னால் இருந்தது. அப்போது சுகுமாரன் உதவி ஸ்டில் ஃபோட்டோகிராபர். பொன் பிரகாஷ் அசோசியேட் டைரக்டர், ‘மறுமலர்ச்சி’ பாரதி அவர்களிடம் இருந்தார். எனக்கு பொன் பிரகாஷ் அவர்களிடம் சினிமா வாய்ப்புக் கேட்பதற்காக காலையிலேயே வரச் சொல்லியிருந்தார். அப்போது நான் போரூரில் தங்கியிருந்தேன் எனவே அதற்காக நான் அதிகாலையே எழுந்து தயாராகி இவர்களின் அறை வந்துவிட்டேன். சுகுமார் கதவைத் திறந்து வரவேற்று அமரவைத்தார் என்னை. அசோசியேட் பொன் பிரகாஷ் தூங்கிக்கொண்டிருந்தார். அடுத்து ஒரு மணி நேரம் கடந்தும் எழவில்லை.

பின்னர் ஒருவழியாக அவர் எழ, நான் உடனே எழுந்து நின்று வணக்கம் வைத்துவிட்டு நான் என் சோல்னா பேக்கிலிருது பாட்டுத் தொகுப்பை எடுத்து நீட்ட, அவரோ, இருப்பா பாத்ரூம் போகவிடு என்ன என்று சொல்லிவிட்டு எழுந்து அதுக்குப் போனார். நான் காத்திருந்தேன். அவர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது என் பாட்டுத் தொகுப்பை நீட்டினேன். அவர் பொறுமையானவர் என்பதால் என்னைத் திட்டாமல், இருப்பா டீ சாப்பிட்டு அப்பறமா பாக்குறேன் எனக் கூறி டீக்கடை சென்றுவிட்டார். அன்றைக்கு அவர் என் பாடலைப் பார்க்க மணி பதினொன்றாகிவிட்டது. நான் வந்தது 5. 30 க்கு. நான் எழுதி வைத்திருந்த பாடல்களை விட அவற்றின் கவர்மேல் நான் எழுதியிருந்த,

“இது
வீட்டு வரி அல்ல
பாட்டு வரி” என எழுதியிருந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பின் நாட்களில் என்னை பாரதி, ஷக்தி சிதம்பரம் போன்ற இயக்குநர்களிடம் அறிமுகப்படுத்தினார். நான் வந்தது இயக்குநராவதற்கு ஆனால் பாடல் எழுதவும் தெரியும் என்பதால் இரண்டு வழிகளிலும் முயற்சித்தேன் உள் நுழைய.

பிறகு பத்தாண்டுகளில் நான் இயக்குநரானேன். பின்னர் பாடலாசிரியர் ஆனேன். என் நண்பர் சுகுமார் இன்று பெரிய ஒளிப்பதிவாளர். அசோசியேட் பொன் பிரகாஷ் இன்னும் அசோசியேட் பொன் பிரகாஷ் தான். நான் இயக்கிய இரண்டு படங்களிலும் இணை இயக்குநராக வைத்துக் கொண்டேன். அவர் சென்னைக்கு தயாரிப்பாளராக வந்தவர். இன்று அந்த பணம் அவரிடமில்லை. அவர் என்னைப் போன்ற பல நண்பர்களுக்கு நண்பர் அவ்வளவே. அவர் சொல்லவும் கதை இருந்தது வடிவேலு நடித்த சில படங்களில் முகத்தைக் காட்டியிருக்கிறார் ஆனால் கனவு, அவருக்குள்ளேயே நீர்த்துக் கொண்டிருக்கிறது. திட்டமில்லாமல் சரியான புரிதல் இல்லாமல் சினிமாவின் புகழில் நனைந்துவிட எண்ணிய எண்ணற்ற மனிதர்கள் வடபழனி முருகன் கோவில் வாசலில் பொங்கல் பிரசாதம் உண்டு பசி தீர்க்க வரிசையில் நிற்பது கண்டு என்னால் வெம்பாமல் இருக்க முடிவதில்லை. அதனால் தான் என்னிடம் வாய்ப்புக் கேட்பவர்களை நான் கண்டுகொள்ளாமல் போவதில்லை. நேரம் ஒதுக்கி அவர்களோடு உரையாடுகிறேன். சரியான முடிவெடுத்து அதற்கான தகுதியோடு இருப்பவர்களை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் ஏன் பயிற்சி அளிக்கவும் கூட செய்கிறேன், ஏனெனில் வாழ்வு என்பது எத்தனை முக்கியமானதாகும். ஒருவரின் தவறான செயற்பாட்டால் எத்தனை குடும்பங்கள் தெருவிற்கு வந்துவிடுகின்றன.

இங்கே ஒவ்வொருவருக்கும் தனக்கான திசையைத் தேர்வு செய்வதில் பிரச்சனை இருக்கிறது. உழைப்பின்றி உயரத்திற்கு வர நினைக்கிறார்கள். தனிமனிதனுக்கும் இயக்கங்களுக்கும் ஒரு சுயபரிசோதனை அவசியமாகிறது, இது சாத்தியமாகின் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது.

மதுரையில் நடந்த தமுஎகச 40 வது ஆண்டுவிழா சில ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது. மேடையில் பேசிய எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உருப்பினருமாகிய தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் தமிழின் சிறப்பைப் சொல்கிறபோது சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் 47 பேர் இருந்ததாக புள்ளிவிபரம் சொன்னார். நான் அப்போதுதான் தோழர் கவிஞர் நவகவி அவர்களின் “நவகவி ஆயிரம்” என்கிற நூலைத் தொகுத்திருந்தேன். நான் சென்னைக்குத் திரும்பும்வரை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது ஒரே விசயம் தான், சங்க காலத்திலேயே 47 பெண்கள் பாடல் எழுதியிருக்கிறார்களே, நாற்பதாண்டு காலமாக முற்போக்கு இலக்கியங்களை ஏழை எளிய மனிதர்களின் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கும் தமுஎகச ஒரு பெண் பாடலைக்கூட மேடையிலோ தெருக்களிலோ ஒலிக்கச் செய்ய தவறிவிட்டதே என்று எண்ணி குற்ற உணர்விற்கு ஆளானேன். மறு நாளே மாநில செயலாளருக்கும் தலைவருக்கும் கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற்றுப் பணியைத் தொடங்கினேன். முதலில் தமுஎகச வில் உறுப்பினர்களாய் இருக்கிற தமிழக அளவிளான பெண் கவிஞர்களின் பட்டிலைத் தயாரித்தேன். அதில் பெரும்பாலானோர் கவிதை எழுதுபவர்களாகவே இருந்தார்கள். அவர்களில் பாடல் எழுதவும் பாடல் பயிற்சி பெறவுமென ஒரு பதினாறு பேர் தேர்ந்தார்கள், பின்னர் அதுவும் குறைந்து எட்டுப் பேர் இறுதியானார்கள்.

Paadal Enbathu Punaipeyar Webseries 18 Written by Lyricist Yegathasi தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

கோவை உமா மகேஸ்வரி, சென்னை ச. விசயலட்சுமி, தேனி கலை இலக்கியா, கடலூர் வெற்றிச்செல்வி சண்முகம், திருச்சி ரத்திகா, திருமங்கலம் பாண்டிச்செல்வி, மதுரை பா. மகாலட்சுமி, ஒத்தக்கடை அம்பிகா பழனிவேல் இவர்களே அந்த எட்டுப் பேர். தபால், தொலைபேசி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் போன்றவற்றின் மூலமாக விவாதங்களும் உரையாடல்களும் பயிற்சிகளுமென எங்களுக்குள் மூன்று ஆண்டுகள் நடந்தன. இறுதியில் எட்டுப் பெண் கவிஞர்களும் பாடலாசிரியர் ஆனார்கள். அதுவரை அவர்கள் எழுதிய 56 பாடல்களைத் தொகுத்து அதற்கு “ஒரு முழம் வெயில்” எனப் பெயர் சூட்டி சென்னையில் விழா ஏற்பாடு செய்து நூலை வெளியிட்டோம். மேடையில் எட்டுப் பெண் பாடலாசிரியர்களையும் மையத்தில் எங்கள் பாட்டுச் சிகரம் நவகவியையும் அமரவைத்து அழகு பார்த்து மேடையின் கீழ் நின்று நான் ரசித்துக்கொண்டிருந்த தருணம் போல் வேறொன்று எனக்கில்லை.

Paadal Enbathu Punaipeyar Webseries 18 Written by Lyricist Yegathasi தொடர் 18: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

பாடல்கள் உருவாக உருவாக அதற்கு மெட்டமைத்து அவரவர் காதுகள் இனிக்கப் பாடிக்காட்டி அவர்களுக்கு மேலும் ஊக்கமூட்டிய அண்ணன் கரிசல் குயில் கிருஷ்ணசாமியும், தனது “செம்பருத்தி” பதிப்பகத்தின் மூலம் இதை நூலாகக் கொண்டுவந்த தோழர் மலர்விழியும், இடைவிடாப் பணிகளுக்கு நடுவே நூலுக்கு எழிலுரை எழுதித் தந்து சிறப்பித்த அண்ணன் பாடலாசிரியர் பழநிபாரதி அவர்களும், மேடையில் ஒவ்வொரு பாடலாசிரியர் பேசுவதற்கு முன் அவரவரின் ஒரு பாடலைப் பாடிய தம்பி தமிழ்ச்செல்வனும் தபேலா இசைத்த தோழர் செல்லப்பாண்டியும், விழாவை எப்படி நடத்தப் போகிறோம் என்று முழித்தபோது கைகொடுத்த சைதை ஜெ மற்றும் மயிலை பாலு அவர்களும் மற்றும் உடனிருந்து உழைத்த அத்துணை தோழர்களும் நன்றிக்குறியவர்கள். விழாவில் ஒவ்வொரு பாடலாசிரியரும், இதெற்கெல்லாம் காரணமாக இருந்த ஏகாதசிக்கு என்ன நன்றிக்கடன் செய்வதென்று பேசினார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுவதே எனக்கான நன்றிக்கடன் என்று கூறினேன். விழா முடிந்து ஊர் திரும்பினவர்களில் புதிய பாடலொன்றை எழுதி அனுப்பியவர் தோழர் பாடலாசிரியர் கலைஇலக்கியா. அவர் இன்று நம்மோடு இல்லை என்பது துயரிலும் துயர்.

“இமையும் விழியும்
இணைந்திடத் தடையென்ன
செவியும் இசையும்
கலந்திடத் திரையென்ன
குருதியும் நிறமும்
பிரிந்திடப் பகையென்ன
பாதையில் பாதங்கள்
நகர்ந்திட வழியென்ன”

இது கலை இலக்கியாவின் ஒரு பல்லவி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.