தொடர் 21: பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி
ஒரு பாடலுக்கான வண்ணத்தை அந்த படத்தின் கதையும் அந்தப் பாடலுக்கான சூழலுமே முடிவு செய்கின்றன. இதில் முதலில் இயக்குநர் ஒன்ற வேண்டும். அதன் பின் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இறுதியாக பாடகர்களும் தன் குரலை அந்த வண்ணத்தில் கரைத்து விடவேண்டும். இவற்றில் எங்காவது வேறொரு வண்ணம் எட்டிப் பார்த்தல் என்பது அந்தக் கதைக்கு இழைக்கப்படுகிற கேடாகிவிடும். திரைப்படத்தைப் பொருத்தவரை எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் எடுத்துக்கொண்ட கதையின் அன்பான வேலைக்காரர்களே.

மேற்கூரியவை திரைப்படப் பாடல்களுக்கென்றால் தனிப்பாடல்களைக் கையாளும் போது எனக்கொரு சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. தனிப்பாடல் எழுதுகிற போது பாடலுக்கான சூழலும் அதன் வண்ணமும் என்னுடையதாக இருக்கிறது.

ஒசூர் தமுஎகச நடத்திய ஒரு பாடல் பட்டறையை நடத்தியது. தமுஎகசவின் இன்றைய மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் அந்த பட்டறையை நடத்திக் கொடுப்பதன் பொறுப்பாளராக இருந்தார். அதில்  எப்போதும் போல் நவகவி, நான், வையம்பட்டி முத்துசாமி, தனிக்கொடி போன்ற கவிஞர்களும், கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, கரிசல் திருவுடையான், துரையரசன் போன்ற பாடகர்களும் கலந்து கொண்டோம். அந்த நாள் மறக்கமுடியாத ஒன்றெனக்கு. மறைந்த தோழர் கவிஞர் வையம்பட்டி முத்துசாமி அண்ணன் அவர்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம், இவர் பெயர் ஏகாதசி. இவர் தான் ஆத்தா உன் சேலை பாடலை எழுதியவர் என்று பட்டறை முடியும் வரையிலும் அறிமுகம் செய்துவைத்தபடியே இருந்தார். அவர் ஒசூரைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட மனம் யாருக்கு வருமென்று நான் வியந்த தருணம் அது.

அந்த பாடல் பட்டறையில் நான் எழுதியதுதான்,

“வாக்கப் பட ஆச – நா 
வளவி தொட ஆச 
அப்பன் வீட்டப் பிரிஞ்சு கொஞ்சம் 
அழுது பாக்க ஆச”

எனும் முதிர்கன்னி பற்றிய பாடல். இந்தப் பாடலுக்கும் அங்கே எதிர்ப்பு வந்தது. காரணம்,
எனது “வாக்கப்பட ஆச” மற்றும் அதற்கு முன்னால் எழுதப்பட்ட இன்னொரு கவிஞரின் பாடலான “எத்தன மொற வெக்கப்படுவா எங்கக்கா” போன்ற பாடல்கள் பெண் கல்யாணத்திற்காக ஏங்கியும் அதற்காக இந்த ஆண் சமூகம் படுத்துகிற பாடுகளை தாழ்மையோடு தாங்கியும் கொள்வதாக இருப்பதால்  பெண்கள் சோர்வாகிவிடுவார்கள் என்பது தான். இது உண்மையான காரணம் தான் ஆனால் மக்களின் சம கால வாழ்வை அதன் கண்ணீரை கலையும் இலக்கியமும் பதிவு செய்து ஆவனப்படுத்துதல் என்பது சரியான காரியம் என்றே எனக்கு இப்போதும் படும். அந்த விவாதத்திற்குக் காரணமே  பெண்ணுரிமைக்காக தன் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் அவர்கள் அங்கே இருந்ததுதான். அவர் எப்போதும் பெண்ணை கம்பீரமாக உருவாக்கவே பாடுபட்டுக் கொண்டிப்பார். நான் அவர் வழியிலும் எனது பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.Paadal Enbathu Punaipeyar Webseries: 21 Written by Lyricist Yegathasi தொடர் 21: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அங்கே ஒரு காதல் பாடல் ஒன்றும் எழுதியிருந்தேன். அப்பாடலை அன்றைக்கு மனதார ரசித்துக் கொண்டாடினார் கவிஞர் தனிக்கொடி. இவரைப் போன்று பாடலையோ கவிதையையோ ஒரு எழுத்துப் பதரின்றி எழுத தமிழகத்தில் ஆளில்லை. தேர்ந்த படைப்பாளி கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டிகளில் மரபுக் கவிதைப் போட்டியிலும் புதுக்கவிதைப் போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டிலும் முதல் பரிசைப் பெற்றவர். தற்போது திரைப்படப் பாடலாசிரியராக மின்னிக் கொண்டிருக்கும் இவர் இரசித்த எனது தனிப்பாடலை நீங்களும் இரசிக்க வேண்டாமா.

பல்லவி
மழையென நீ பேச 
இலையென நனைகின்றேன் 
அலையோசை வளையோசை 
ஒன்றென உணர்கின்றேன் 

நுரையீரல் பை நிறைய 
அன்பினை ஊட்டுகிறாய் 
கறை ஏதும் படியாமல் 
காதலைச் சூட்டுகிறாய்

சரணம் – 1
ஒத்தடம் போல உன் தடம் பதிய 
பின்வரும் எந்தன் காலம் 
தாவர கீதம் படித்திட நாளும் 
பனித்துளி யாவேன் நானும்

காற்று வெளிகளில் பாறை முகடுகளில் 
காதலின் ரத்தம் கலந்திருக்கும் 
இறந்த காக்கைக்கும் இதயம் துடிக்கையில் – உன்
காதல் என்னில் கலந்திருக்கும் 

ஒருகாலும் உடையாமல் நாம் வாழ – ஒரு 
ஒப்பந்தம் செய்தே சேர்ந்தோமடி 
சிறு நேரம் மனத்தாபம் உண்டானால்
பெருந் தவத்தாலே தீர்த்தோமடி

சரணம் – 2
பிரியும் கண்ணில் பிரியம் வைத்து 
மீண்டும் அருகில் வருவாய் 
நாளை வரைக்கும் பாராதிருத்தல் 
நரகக் கொடுமை என்பாய்  

வளர்ந்த மரங்களும் வாயாடி பெண்போல் 
பூக்களை சாலையில் இரைக்கையிலே 
பாரதி கவிதைப் பேசி சென்றோம் 
நிலாவும் பழம்போல் மிதக்கையிலே 

இரு மேகத் துண்டாக கடல் வானில் – நாம் 
தலைகீழாய் அலைவ தில்லையடி 
சுடும் மண்ணில் நாம் நின்று விடும் மூச்சில் – சோறு 
செய்துண்ணல் என்றும் இன்பமடி

திரைப்படதிற்கு ஒரு பாடலாவது எழுதிட மாட்டோமா என்று புலம்பித் தவிப்பது முதல் கட்டம். முதல் பாடல் வாய்ப்புக் கிடைத்து எழுதி திரைக்கும் வந்தபின் இன்னொரு கட்டம் நோக்கி நகர்வோம், பின்பு நான்கைந்து பாடங்களுக்குப் பாடல்கள் எழுதிவிட்டோம் ஆனால் ஒரு பாடலும் வெளியில் சொல்லும்படி இல்லையே என மனம் அலையுறும். அதையடுத்து பத்துப் பதினைந்து பாடல்களுக்குப் பின் ஒரு பாடல் அல்லது இரு பாடல் வெற்றியான பின் மூன்றாம் கட்டம் நம்மை இழுக்கும். அந்தக் கட்டம், ஒவ்வொரு படத்திலும் இப்படி நான்கைந்து பாடலாசிரியர் பட்டியலில் சிக்கித் தனித்துவமின்றி கிடக்கிறோமே டைட்டிலில் நம் பெயர் சிங்கள் கார்டா வந்தா எப்படி இருக்கும் என்று தோன்றும். இப்படியாக அடுத்தடுத்த கட்டங்கள் வந்துகொண்டே இருக்கும். நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் எல்லா கட்டங்களையும் தாண்டிவிடலாம் என்பது உண்மையிலும் உண்மை.

இப்போதெல்லாம் எனக்கு பாடல் வாய்ப்புக் கிடைப்பதில் சிரமமில்லை, நமக்கு கிடைக்கும் பாடல் நாளை சேனலில் ஒளிபரப்பும் பாடலாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. சோகப் பாடலையோ அல்லது கதையை நகர்த்தும் (montage)  பாடலையோ சேனலில் ஒளிபரப்ப மாட்டார்கள்‌. சேனலுக்கு வராத பாடல் அவ்வளவாய் ஹிட் ஆகாது, ஆனால் அவ்வப்போது ஹிட் கொடுத்துக் கொண்டே வந்தால்தான் நமக்கு மார்க்கெட் இருக்கும். அதனால்தான் நாம் சினிமாவில் நிலை நிறுத்திக் கொள்ள ஒரு காதல் பாடல் அதிலும் டான்ஸ் இருப்பது போன்ற பாடலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.Paadal Enbathu Punaipeyar Webseries: 21 Written by Lyricist Yegathasi தொடர் 21: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

அப்படியான பாடல்களில் ஒன்றைத் தான், நண்பர் ரமேஷ் சுப்பிரமணியம் அவர்கள் இயக்கி, நவீன் அவர்கள் இசைத்து, அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் பாடினார். பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட். அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்லாது இப்போதும் சேனலில் வலம் வந்துகொண்டிருக்கும் அந்தப் பாடல் தான் “வில் அம்பு” படத்தில் “ஆள சாச்சுப் புட்டா கண்ணால”.

பல்லவி
ஆள சாச்சுப்புட்டா கண்ணால
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கிப் போறா முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால

நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி
குந்திக்கிட்டு ஆடுறா
நூத்தி எட்டக் கொண்டாங்கடா
பி.பி.யத் தான் ஏத்துரா

காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

சரணம் – 1
நா லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா
நா சேட்டைய சேவையா செய்யுவேன்
ஏ வாலத்தான் சுருட்ட வச்சா

நானோ தனி ஆளு
அவ சேந்தா செம தூளு
ஒண்ணாம் நம்பர் ஃபோர் ட்வொன்டிய 
ஹீரோவா ஆக்கிப்புட்டா

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால 

சரணம் – 2
ஓ நகத்த நீ கடிச்சிதான் துப்புற
அட தரையெல்லாம் பூக்குதடி
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற
உள்ள ஜீவ்வுனு ஏறுதடி

போடி சண்டாளி 
உன்னால தவிச்சேன்டி
ஒண்ணாம் நம்பர் ஃபோர் ட்வொன்டிய 
ஹீரோவா ஆக்கிப்புட்டா

நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

காணாம போனேன்டா கொய்யால (கொய்யால)
என்னமோ ஆச்சுடா மெய்யால (மெய்யால)
தலைகீழா நடக்குறேன் கையால (கையால)
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாடல் இயக்குநரின் வண்ணம். முதல் பாடல் என் வண்ணம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.