நண்பர் பாடலாசிரியர் ந.முத்துக்குமார் அவர்கள் இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் சிஸ்யர்களில் ஒருவர். நானும் அவரும் பேசும்போதெல்லாம் அவர் அடிக்கடி, கதையை தயார் செய்து தயாரிப்பாளர்களிடம் சொல்லி இயக்குநர் ஆகிடு ஏகாதசி, நாற்பது வருசம் பாட்டெழுதி சம்பாதிக்கிற பணத்த ஒரு படத்தில் சம்பாதிச்சிடலாம் என்பார். அவர் சொன்னது எத்தனை அனுபவப்பூர்வமானது என்பதை நான் இன்றுவரை உணர்ந்தவண்ணம் உள்ளேன். இங்கே “ஒரே படத்தில் பெரிதாக சம்பாதித்து விடலாம் என்பதை” அவ்வாறாக எடுத்துக் கொள்ளாமல், சம்பள விசயத்தில் பாடலாசிரியர்களுக்கு இழைக்கப்படும் வதைகளைத் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ரூபய்க்கு ஒரு பாடலை எழுதக்கேட்டு நாளொன்றுக்கு ஐயாயிரம் ரூபாயிக்கு மது அருந்திக் கொண்டாடும் மகான்களே இங்கு அதிகம். இது எனக்கு முதல் படம் பார்த்துச் செய்யுங்கள் அடுத்த படத்தில் நீங்கள் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்கிறேன் சார் என்பார்கள். நாமும் எழுதிவிடுகிறோம். அவர்கள் அடுத்த படத்தில் அள்ளிக் கொடுப்பார்கள் என்பதை நம்பி அல்ல நமக்கு வயிற்று வலி என்பதால் ஒண்ணாரூபாய்க்கும் எழுத ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது பல நேரங்களில். அதே சமயத்தில் அள்ளிக் கொடுப்பதாக சொன்னவர்கள் அடுத்த படத்தில் நேராக முன்னணி பாடலாசிரியர்களிம் போய் நின்று விடுகிறார்கள். அவர்கள் இரண்டாவது படத்திலேயே பெரும் கூட்டணியோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்றாம் நிலைப் பாடலாசிரியர்கள் முதல் பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முட்டுக் கொடுத்தபடி மட்டுமே வாழ்வைக் கடக்கிறார்கள்.

பெரும்பாலோனோர் பாடலை எழுதி வாங்கிக் கொண்டு. சம்பளத்தை பாடல் பதிவின் பின் கொடுப்பதையே விதிமுறையாகக் கையாளுகிறார்கள். பாடல் பதிவு நடைபெற இரண்டு வருசம் ஆனாலும் நாம் காற்றைக் குடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதிலும் பாடலை முடித்துக் கொடுத்தபின் படம் நின்றுவிட்டால் நாமம் தான் போடுவார்கள் வேறு வழியில்லை. அவரவர் வேலை முடிந்துவிட்டால் அவரவருக்கான ஊதியத்தை கொடுத்துவிட வேண்டும். ஒரு பாடலாசியருக்கு ஒப்பந்தம் செய்யும் போது ஒருபகுதி முன்பணமும் பாடலை எழுதித்தந்து இறுதிசெய்தபின் மறுபகுதிப் பணமும் கொடுத்திட வேண்டும் என்பதுதான் என்னைப்போன்ற பாடலாசிரியர்களின் விருப்பமாக இருக்கிறது. இதுதான் சரியான விசயமும் கூட. ஆனால் ஒரு திரைப்படம் தொடங்கும்போது எல்லாருக்கும் முன் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வார்கள். பாடலாசிரியர்களை மட்டும் பந்தாடுவார்கள். அதே சமயம் கவிஞர்களை மரியாதையோடும் அன்போடும் நடத்துபவர்களும் உண்டு. நான் சம்பளம் பெறாமல் பாடல் எழுதி பாட்டும் படமும் வெளியாகாமல் போனவை நூற்றுக்கும் மேல்.

இத்தனை காயங்களுக்குப் பிறகு நாம் முன் பணம் பெற்றுக்கொண்டே பாடல் எழுதவேண்டும் என்கிற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இதில் பலருக்கும் என் மீது தவறான அபிப்ராயம் வந்துவிடுவதை நான் என்ன செய்ய முடியும். அப்படித்தான் சமீபத்தில் ஒரு பெரிய படம். அதன் மேனேஜர் பாடல் எழுதக் கேட்டார். ஒரு சம்பளம் முடிவு செய்து பின் பாடலுக்கான சூழலை இயக்குநரிடம் கேட்டுவிட்டு மெட்டை வாங்கிக் கொண்டு வந்து எழுதத் தொடங்கும் முன் முன்பணம் கேட்டேன். அதற்கு அவர் முன் பணம் கொடுத்தால்தான் எழுதுவீங்களா என்றார். நானோ, நான் அப்படிச் சொல்லவில்லை முன் பணம் பெற்றுக் கொண்டால் இந்த படத்தில் நான் பாடல் எழுதுவதற்கான சாட்டிசியமும் உத்தரவாதமுமாகிவிடும் என்றேன். அதற்கு அவர் நீங்கள் பாடல் எழுதுவதற்கு முன் முன்பணம் கேட்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். பிறகென்ன, நீங்கள் அதிர்ச்சியோடே இருங்கள் எனச் சொல்லிவிட்டு என் முடிவில் மாற்றமின்றி முன் பணம் பெற்ற பின்னரே தான் பாடல் எழுதிக் கொடுத்தேன். நானாவது முன்பணம் பெற்று எழுதுகிறேன். ஆனால் அய்யா கவிஞர் வாலி அவர்கள் முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்ட பின்னரே பேனாவையே திறப்பார்.

சில இயக்குநர்கள் கதை தயாராவதற்கு முன்னரே பாடலை முடித்துவிடும் முனைப்பில் இறங்கி நம்மை வதைப்பதுமுண்டு. அது அவரவர் இஷ்டம் எனினும் அதை செய்துகொடுக்க இயலாத சூழலில் நம் மீது உமிழப்படும் பொல்லாப்பு ஏற்புடையதல்ல தானே. இதில் அம்மன் ஆல்பத்தையும் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி ஆல்பத்தையும் தவிர்த்துவிடுகிறேன். அதே சமயம் விசய ஞானமுள்ள இளம் இயக்குநர்கள் குறும்படமோ பெறும்படமோ நேர்மையோடு எடுக்க முற்படுகிறபோது என் ஒத்துழைப்பு அவசியம் இருக்கும்.

நான் திரைப்படத்திற்காக எழுதுகிற பாடல்களை இணைய தளத்தில் தேடினால் கிடைத்துவிடும். ஆனால் எல்லா தனியிசைப் பாடல்களையும் இதுபோல் இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியாது. பல பாடல்கள் மேடையிலேயே நின்றுவிடுகிறது. எல்லா தனியிசைப் பாடல்களையும் பதிவு செய்தல் என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. அதற்கு பெரும் பொருளாதாரத் தேவை இருக்கிறது. அப்படியே செலவு செய்து தயாரித்தாலும் பிஸ்னஸ் சிக்கல் இருக்கிறது. அதுவும் போக ஒரு திரைப்படப் பாடல் என்பது அந்த குறிப்பிட்ட படத்தின் கதைக்காக எழுதப்படுவது தான். ஆனால் தனியிசைப் பாடல்கள் பலகோடி கதைகளைக் கொண்ட மனித சமூகத்திற்காக எழுதப்படுவது. திரைப்பாடப் பாடல்கள் மேல் பொது மக்களுக்கு பெரிதும் ஈர்ப்பிருப்பினும் இது மாதிரி சந்தர்ப்பத்தில் நான் தனியிசைப் பாடல்களின் வரிகளைப் பதிவு செய்ய தவறவிடக்கூடாதென விரும்புகிறேன்.

Paadal Enbathu Punaipeyar Webseries 26 Writter by Lyricist Yegathasi தொடர் 26 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிசுகந்தி என்கிற பாடல் பாடுகிற ஒரு பெண்ணை விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு தமுஎகச மாநில மாநாட்டில் சந்தித்தேன். அந்தப் பெண் தோழர் தபேலா குமாரின் மனைவி என்றறிந்தேன். அவர் என்னுடை “மல்லிக் கொடியே மகனே ராசா” என்கிற சோகத் தாலாட்டை என் முன் பாடிக் காட்டினார் வியந்தேன். குரலில் அத்தனை இனியை. இனிக்க இனிக்க சிலர் பேசுவர். இவர் இனிக்க இனிக்க பாடுபவர். அதற்கு முன் அப்பாடலை திருவுடையான் மட்டுமே பாடினார். இவர் அவருக்கு இணையாகப் பாடினார். திருவுடையான் போட்ட மெட்டை அவரைத் தவிர வேறொருவர் பாடுவது சிரமம். அதை இவர் செய்தது சவாலான விசயம். அதன் பிறகு சுகந்தியோடு தோழமை இன்றுவரை நீடிக்கிறது. எனது பல தனியிசைப் பாடல்களை பாடியுள்ளார். ஏர் டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டாப் 10 வரை வந்து உலகத் தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். இப்போது திரைப்படங்களிலும் மேஸ்ட்ரோ இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர் பலரின் இசையிலும் பாடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அழைத்து தோழர் தமிழ் தேசிய அமைப்பொன்றின் மேடை. தமிழரின் நிலை குறித்து அவசரமாக ஒரு பாடல் வேண்டும் எனக்கேட்க அடுத்த சில மணித்துளிகளில் எழுதி அனுப்பி வைத்தேன். அதற்கு மிகச் சிறந்த மெட்டொன்றை அமைத்து அன்று மாலையே பாடி அசத்தினார். அந்த பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல்லவி

தொண்டக் குழிக்குத் தண்ணி கேட்டோம்
தப்பிருக்கா – அட
கண்டவங் கிட்ட மிதிவாங்குறோமே – தமிழா
துப்பிருக்கா

எத்தனை மறியல் எத்தனை மரணம்
நல்லது நடந்திருக்கா
மத்திய மாநில சர்க்காருக்கு
மான ரோசமிருக்கா

சரணம் – 1

உலகத்திலே மூத்த குடி
நம்ம தானடா – இப்ப
உலை வைக்கத் தண்ணி இல்ல
உண்மை கேளடா

நடுவர் மன்றத் தீர்ப்பைத் தானே
நாடு மதிக்கல – நம்ம
ஏழை சனங்க வயித்துக்குத்தான்
சோறு கிடைக்கல

கோடி கோடியா அடிச்ச மந்திரி
குதூ கலத்தில – எங்க
விவசாய சனத்தப் பாரு
கோ வணத்தில

சரணம் – 2

இந்தியாவ கூறுபோட்டு
விக்கத் திட்டமோ – பங்கு
தண்ணியத்தான் குடுத்தாத்தான்
என்ன நட்டமோ

வானம் பூமி காத்தும் மழையும்
யாருக்குச் சொந்தம் – இத
கேக்க நாதி இல்லாமத்தான்
ரோட்டுக்கு வந்தோம்

அழுத கண்ணீர சேத்திருந்தா
அணையக் கட்டிருப்போம் – அட
மூணு போகம் தானியத்த
வெளைய வச்சிருப்போம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *