தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட அழகாகவோ என் உடலுறுப்புக்கள் இருக்கின்றன. உன்னைப் போன்றோ அல்லது உன்னைவிட இனிமையாகவோ பேசுகிறேன் இசைகிறேன். இந்த அல்லதுக்கு அவசியமற்று நான் மட்டுமே உழைக்கிறேன். என்னை நீ கீழ் சாதிக்கார நாயே என்கிறாய். என்னை மட்டுமா நாயையும் சேர்த்து நீ கீழ்த்தரமாகப் பார்க்கிறாய். முதலில் நான் நாயிலிருந்தே தொடங்குகிறேன். உன்னால் நாய் துணையின்றி வாழமுடிகிறதா, நாய் பயமின்றி நடமாட முடிகிறதா. பிறகு என் துணையின்றி உன்னால் நகர முடிகிறதா. நடக்க முடிகிறதா. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த ஏற்றத்தாழ்வு. முதலில் சீவராசிகளில் நீ கீழ் நான் மேல் என்கிற மகா மட்டமான போக்கை நிறுத்து.

உன்னைப் பொருத்தவரை தலையில் இருக்கும் கிரீடம் உயர்ந்தது, பாதம் அணியும் செருப்புத் தாழ்ந்தது. நன்றாகச் சிந்தித்துப் பார் கிரீடத்தை நீ சுமக்கிறாய் செருப்பு உன்னைச் சுமக்கிறது. ஆனால் உன்னைச் சுமக்கும் செருப்பைத்தான் நீ கீழானதாகப் பார்க்கிறாய். அந்த செருப்பைத் தைக்கும் தொழிலாளிகளைக் கீழானவர்களாகப் பார்க்கிறாய். ஒன்று தெரியுமா உன் கிரீடத்தையும் உன் செருப்பையும் நானே உருவாக்குறேன். உன் மயிரை நானே சிரைத்து சுத்தம் செய்கிறேன். நீ ஆண்ட வம்சமென முறுக்கித் திரியும் மீசையை நான் தான் உன் முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கிறேன். நீ என்னை மலக் கழிவு அள்ளுகிறவனென இமையிறக்கிப் பார்க்கிறாய். இப்போதும் கூட நீ மேலே உண்ணுகிறதை கீழே கழிவாக அள்ளுவதை கீழ்மை என்று தான் பார்க்கிறாய், ஆனால் நான் உன் கீழ் கழிவை அள்ளுகிறவன் மட்டுமல்ல  நீ மேல் உண்ணும் உணவை விளைய வைப்பவனும்தான். நான் இத்தனை உனக்குச் செய்தும் நீ என்னை ஏறி மிதிப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறாய். சக மனிதனை தாழ்ந்தவனாகப் பார்ப்பதாலும், சக மனிதனின் வாயிக்குள் மலத்தைத் திணித்துக் கொடுமை செய்வதாலும், சக மனிதன் காதலித்தால் அவனை வெட்டிச் சாய்ப்பதாலும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் நீ தான் கீழ்சாதி. சக உயிரை சமமாகப் பாவிக்காதவன். சக உயிரின் மேல் அன்பு செலுத்த வக்கில்லாதவன் நிச்சயமாக கீழ்சாதி தான். நான் கோபப்படவில்லை என்பதற்காக என்னைக் கோழை என்று நினைப்பது உன் அறியாமையே.

இயக்குநர் சுதா கோங்கரா அவர்களின் “இறுதிச்சுற்று”  படத்திற்கு நான் தீவிர விசிறி. பெண் பிள்ளைகளின் மேன்மையைப் பற்றி மிகவும் அழகாகச் சொல்லியபடம் அது. அவரின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் தனது 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த “சூறரைப் போற்று” படத்தில் ஒரு பாடல் எழுத அழைத்தார்கள். ஜி.வி. பிரகாஷ்குமார் இசை. இயக்குநரும் நானும் பாடலை எப்படி எழுதப்போகிறோம் என்பது பற்றிய விவாதத்தில் இருக்கும் போது அவருக்கு எனது “ஒத்த சொல்லாலே” பாடலுக்கு நான் விசிறி என்று அவர் சொன்னபோது மகிழ்ந்தேன். பாடலின் சூழலை அவர் சொன்ன போதே துள்ளிக் குதிக்க ஆரம்பித்தேன். காரணம் பேச வேண்டிய பொருள். ஒரு தலித்தின் பிணம் எடுக்கபட்டு தேரில் ஊர்வலமாக வருகிறதெனவும் அதில் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த சூர்யா ஆடி வருகிறார் எனவும் சொன்னார்கள். சும்மாவே ஆடுவோம். கொட்டுக் கெடச்சா குமுற மாட்டோமா. அதுவும் இந்த சூழல் திரைப்படத்தில் நடக்கிறது என்பதில் எனக்கு இரெட்டிப்பு மகிழ்ச்சி. இதற்கான மெட்டை அமைப்பதில் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இயக்குநரும் பேருழைப்பைச் செலுத்தினர். ஓர் உதவி இயக்குநர், தம்பி கருமாத்தூர் அருளானந்தத்தின் உதவியுடன் ஏராளமான கூத்துக் கலைஞர்களின் பாடல்களை உசிலம்பட்டி பகுதி முழுக்கச் சேகரித்தார். இவையின் வாசத்தை எடுத்துக்கொண்டு மெட்டமைத்த போது தம்பி செந்தில்கணேஷின் குரல் அதை புயலாய் மாற்றி கேட்பவர் மனதைச் சுழற்றி அடித்தது.

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

பேதமற்று வீசும் காத்து பேதமற்றுப் பெய்யும் மழை ஆனால் மனித சமூகம் அப்படியா இருக்கிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் ஒரு சமூகமே   மிகக் கீழ்த்தரமாக நடத்தப் படுதலுக்காக எதை அழிப்பது.

பல்லவி
மண்ணுருண்ட மேல இங்க
மனுசப் பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்டும் மூடிப் புட்டா
வீதியிலே போகும் தேரு
அண்டாவுல கொண்டுவந்து
சாராயத்தை ஊத்து
ஐயாவோட ஊர்வலத்தில்

ஆடுங்கடா கூத்து ஏழை பணக்காரன் இங்கு
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவாங்க சங்கு

Paadal Enbathu Punaipeyar Webseries 29 Written by Lyricist Yegathasi தொடர் 29: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

சரணம்-1
நெத்தி காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்துதானே – ஐயா
கூட வரும் சொத்துதானே
செத்தவரும் சேர்ந்து ஆட
வாங்கிப்போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்
பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேர் இருந்தாலும்
கூட யாரும் வல்லடா
அடுக்குமாடி வீடிருந்தும்
ஆறடிதான் மெய்யடா

சரணம்-2
கீழ்சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா – ஐயா
ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதிக்காரனுக்கு – அந்த
மேல் சாதிக்காரனுக்கு
கொம்புருந்தா காட்டுங்கய்யா – ரெண்டு
கொம்புருந்தா காட்டுங்கய்யா

உழைக்கிற கூட்டமெல்லாம்
கீழ்சாதி மனுசங்களாம்
உட்கார்ந்து திங்கறவனெல்லாம்
மேல்சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு – அட
சாதியத் தூக்கிப் போடு
என்னங்கடா நாடு – அட
சாதியப் பொதைச்சு மூடு

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான போது உலகத் தமிழர் கொண்டாடினர். படத்தின் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இந்த படத்தை  வெளியிட தடை கோரி புகார் அளித்ததன்பேரில் கோர்ட் படத்தை சில மாதங்கள் தடை செய்தது. புகாரில் மனுதாரர் படத்தில் எனது பாடல் ஜாதிய வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதெனக் கூறியிருக்கிறார். என்னைப் பலபேர் தொலைபேசியில் மிரட்டினர். எனக்கு உருட்டல் மிரட்டலுக்கு எப்போதும் பயமில்லை. போராட்டக் களம் ஒன்றும் எனக்குப் புதிதில்லை. பேட்டிகளிலெல்லாம் கூறினேன் இது சாதிய வன்முறைக்கு எதிரான பாடல் என்று. ஆனாலும் விவாதத்துக்குறிய அந்தப் பாடலின் இரண்டாவது சரணம் நீக்கப்பட்டே படம் ரிலீஸானது. வருத்தம் தான் எனினும் அந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கு என் தம்பிகளும் அண்ணன்களும் டிக் டாக் பண்ணிருயிருப்பதில் தெரிந்த வெறித்தனமே என் பாடலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டேன். மேல் சாதிக் காரனுக்குக் கொம்பிருந்தா காட்டச் சொன்னேன் பாடலில், ஆனால் பிரச்சனையைக் கிளைப்பியவர் அனைவருமே இடைசாதி வகுப்பினரே.

சாதியும் மதமும் சீர்கெட்டுக் கிடக்கும் சூழலில் நாம் பிறர் வலி உணர்ந்தோ உணராமலோ உண்டு உடுத்தி உறங்கி வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடுதான் கீழ் வரும் ஒரு தனி இசைப்பாடலும்.

பல்லவி
மேல் சாதி கீழ் சாதி ஒண்ணுமில்லடா
ஓந்தேதி முடிஞ்சாக்கா மண்ணுக்குள்ளடா
திங்குற சோத்துல சாதி மணக்குதா
போடுற செருப்புல சாதி கனக்குதா… (2)

ரெண்டையும் தந்ததெல்லாம் நாங்கதான்
சண்டை மட்டும் போடுறீங்க நீங்கதான்

சரணம் 1
தோளுமேல துண்டுபோட்டுப் போகக் கூடாதா – நாங்க
காலுலதான் செருப்புமாட்டி நடக்கக் கூடாதா
டீக்கடை பெஞ்சுலதான் உக்காரவும் கூடாதா – அட
எங்கபுள்ள பள்ளியில இங்கிலீசுப் பேசாதா.. (2)

சரணம் 2
மாட்டுக்கறி திங்கிறவன் மட்டம் இல்லடா
நீயும் மனுசனத்தான் திங்கிறியே நியாயம் சொல்லடா
மலத்த கக்கூசுல ஒங்க கையி அள்ளாதா – அட
நாங்க போடும் ஓட்டு என்ன எலக்சனில செல்லாதா.. (2)

சரணம் 3
வேர்வ சிந்தி வெளைய வச்ச அரிசி வெள்ளடா – நாங்க
வெளுத்து வந்து தேச்சுத் தரும் வேட்டி வெள்ளடா
எல்லாத்துக்கும் நாங்க வேணும் பக்கத்தில ஒனக்கு – எங்கள
தொட்டா மட்டும் உங்கமேல ஒட்டிக்குமா அழுக்கு..(2)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *