Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிநான் தொடக்ககாலத்தில் கலைஞரின் இரசிகனாக இருந்தேன். இப்பவும் நான் அவருக்கு இரசிகன்தான். காரணம் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் வாசிப்பையும் எழுதுவதையும் சரிவிகிதத்தில் கடைப்பிடித்தார். அதிலும் இந்தக் காரியங்களையெல்லாம் நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளுக்கு நடுவில் கலைஞர் செய்தது தான் உழைப்பின் சான்றாகக் கருதப்படுகிறது. ஒருமுறை என் நண்பர் ஒருவர் ஒரு இசைப்பாடல் கேசட்டைக் கொடுத்துவிட்டு அவரின் அபிப்பிராயத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். கையில் வாசித்தபடி ஒரு நூல், எதிரே தொலைக்காட்சியில் நெடுந்தொடர், அவ்வப்போது குறுக்காலே வரும் நண்பர்களுக்கு பதில், இவைக்கிடையில் ஒரு பக்கம் என் நண்பரின் இசை ஒலி வேறாம்.

என் நண்பருக்கு மனம் கசந்துவிட்டது, நம் பாடல்களை அவர் கணக்கிலே வைத்துக் கொள்ளவில்லை என்று. அப்படிப் பார்த்தோமேயானால் கவிதை நூலை வாசித்துக் கொண்டு நெடுந்தொடரை கவனித்திருக்க முடியுமா என்ன. ஆனால் கலைஞரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடிந்தது, ஏனெனில் என் நண்பர் நொந்துபோய் கலைஞரிடம் விடைபெற்றபோது, அந்த கேசட்டில் வரும் 9 வது பாடல் கொஞ்சம் லென்த் தா இருக்கு அதைக் கொஞ்சம் சரி பண்ணுங்க மற்றபடி பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது என்றிருக்கிறார். குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்த என் நண்பர் தன் வீட்டில் பாடல்களை மொத்தமாகக் கேட்க , அந்த ஒன்பதாவது பாடல் கொஞ்சம் லென்த்துகத்தான் இருந்ததாம்.

ஒரு படத்திற்குப் பாடல் எழுதி படத்தின் கோ டைரக்டரிடம் கொடுத்து அனுப்பிருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள். அந்தப் பாடலை கவனிக்கும் பணியை அந்தப் படத்தின் இயக்குநர் பார்ப்பதற்கு மாறாக படத்தின் தயாரிப்பாளர் பார்த்துவிட்டு, இன்னும் பாடல் பெட்டரா வேணும் எனத் திருப்பி அனுப்ப அந்த கோ டைரக்டர் இப்போது வாலியின் முன் விசயத்தைச் சொல்லிவிட்டு தர்மசங்கடத்தில் நின்றிருக்கிறார்.

கடுமையான கோபத்தில் வாலி அவர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி, அங்கே ஆஃபீஸ் பாயாக வேலைபார்த்தவர்தானே இந்த தயாரிப்பாளர் என்றிருக்கிறார். கோ டைரக்டர் ஆமாம் எனக்கூற. வாலி அவர்கள், படம் தயாரிக்கிற அளவுக்கு பணம் வேண்டுமானால் அவருக்கு வந்திருக்கலாம், என் பாடலைக் குறை சொல்லும் அளவிற்கு அறிவு எப்போது வந்ததென்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றிருக்கிறார்.

என் அருமைத் தோழர் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்களின் மொழிநடை பதர்களற்றது. அது அவரது உரைநடையிலும் கவிதையிலும் ஏன் பாடல்களிலும் கூட தென்படும். தேவையற்ற சொற்களைத் தவிர்த்து எழுதப்படும் ஓர் இலக்கியம் அடர் செழிப்பானதாகும். தன் படைப்புகளில் மட்டும் அல்ல ஒரு வெள்ளை தாளில் எழுதுகையில் கூட இடத்தை விரயம் செய்யாதவர், ஏன் எழுத்துக்களைக் கூட நுணுக்கி நுணுக்கி எழுதுபவர். ஒரு முறை திரைப்படப் பாடல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் சேரன் அவர்களின் “ஆட்டோகிராப்” படத்தில் வரும் “ஞாபகம் வருதே” பாடலில் அதிக முறை “ஞாபகம் வருதே” என்கிற சொல் வருவதாக விமர்சித்தார், அதுவும் ஓர் அழகுதானே தோழர் என்றேன். இல்லை தோழர், திரும்பத் திரும்ப ஒரே சொல் வருவதற்குப் பதிலாக வேறு பல சொற்களைப் பயன்படுத்தினால் அவை அந்தப் பாடலுக்கு இன்னும் கூடுதல் செழுமை சேர்க்கும் தானே என்றார்.

கவியரசு கண்ணதாசன், பழநிபாரதி, நா. முத்துக்குமார் போன்றோர் பாடல்களில் ஒரு பொருளை மையமாக கொண்டே ஒரு முழு சரணத்தையும் எழுதியிருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஒரு சரணத்தில் 12 வரிகளுக்கான மெட்டு இருக்கிறதென்றால் ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கும் ஒரு பொருள் கூற வேண்டும் என்பது எனது பாணி. 12 வரிகளையும் ஒரு பொருளே விழுங்கிவிடல் என்பது காட்சிப் படுத்துவதற்கும் ஒரு தத்துவத்தை முழுமையாகச் சொல்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ஆனால், ஒரு பாடலுக்கான கனம் இதில் கிடைத்துவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

அதே போல் ஒரு பாடலில் முதல் வார்த்தைக்காக அத்தனை மெனக்கிடுவோம். காரணம் முதல் வார்த்தையில் இருக்கும் எளிமையும் புதுமையும் தான் மக்களின் மனங்களில் ஒட்டிக் கொண்டு முணுமுணுக்க வைக்கும். பாடல் முழுக்க முடிந்து போனாலும் இயக்குநர்கள், அந்த பல்லவிக்கு மட்டும் ஒரு ரெண்டு ஆஃப்சன் ட்ரைப் பண்ணுங்க கவிஞரே என்பார்கள் காரணம் பாடலை எப்படியாவது முணுமுணுக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். பல்லவியின் முதல் வார்த்தையை இரு முறை வருவது போல் செய்தால் அந்தப் பாடல் ஹிட் ஆகும் என்பார்கள். அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு, காரணம் ஒரு வார்த்தை இருமுறை பயன்படுத்தப்படும்பொழுது பாடல் குழப்பமின்றி நினைவிற்கொள்ள வசதியாக இருக்கும். “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” எனும் சிவகார்த்திகேயன் பாடலும், “நாங்க வேறமாரி” எனும் அஜித் பாடலும் கூட இதற்காகத்தான். கடைசியாய்க் கூறிய பாடல்களில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. இதில் நம் சொந்த உழைப்பில் சொந்த வார்த்தைகளில் உருவாகிற பாடல்கள் வெற்றியடையும் போது தான் அது நமக்கானதாக இருக்க முடியும். ஒரு பாடலை வெற்றியடையச் செய்ய என்ன வேணும்னாலும் செய்யலாம் என்பது எப்படி சரியாகும்.

எண்ணற்ற கவிஞர்கள் என்னிடம் வந்து, எப்படி திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெறுவதெனக் கேட்கிறார்கள். முதலில் அவர்களிடம், உங்களுக்கு பாடல் எழுதத் தெரியுமா, என்கிற கேள்வியை முன் வைப்பேன். எழுதியதைக் காட்டுவார்கள். மிகவும் சுமாராக இருக்கும். வாய்ப்புக் கேட்பவர்கள் பாடல் எழுத தெரிந்து வருவதை விட ஆர்வக் கோளாறில் வருபவர்களே அதிகம். நான் யாரையும் நிராகரிப்பதில்லை. பாடல் எழுதத் தெரியாதவர்களுக்கு தேவையான பயிற்சியையும், பாடல் எழுதத் தெரிந்தவர்களுக்கு திரைப்படத் துறைக்குள் நுழைவதற்கான வழிகாட்டுதலையும் சொல்லித் தருகிறேன்.

சில கவிஞர்கள் அவர்களே மெட்டுப் போட்டு பாடலை உருவாக்கி பேப்பரில் வைத்துக்கொண்டு டெமோவாகப் பயன்படுத்துகிறார்கள். அது பாடும் போது கேட்கலாம் போல் இருக்கும். ஆனால் கவிதையாக ஓர் ஒழுங்கு இருக்காது. பாட்டுக்கு ஒரு சந்த நயம் இருக்கும் போதுதான் சப்த சுகம் இருக்கும். கவிஞர்கள் ஒரு நீளமான இசையற்ற சொற்களைக் கூட்டி ஒரு மெட்டில் பாடிக்காட்டுவது சுலபம். அது நாளை திரைப்படத்தில் கொடுக்கும் மெட்டுக்கு உங்களால் எழுதுவது கடினம். அல்லது எதற்கு தெரியாத ஒன்றை தவறாக செய்ய வேண்டும். குறைந்த பட்ச இலக்கண நடையாவது கற்றலே மெட்டுக்கான பயிற்சியாகவும் அமையும்.

சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி புரியுங்கள். இதில் வரும் சம்பளம் உங்கள் இலக்கைத் தின்றுவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். அதற்காக வேலையின்றி கையில் காசின்றி லட்சியத்தை அடைய முற்பட்டால் பசி உங்களையே தின்றுவிடும். முதலில் வாழ்தலிலேயே பெரும் கவனம் வேண்டும் பிறகே லட்சிம். எவராலும் நிராகரிக்க முடியாத அல்லது ஓர் ஐம்பது கவிதைகளில் எந்தக் கவிதையைப் படித்தாலும், இவன் விசயமுள்ளவன் இவனால் சிறந்த பாடலைத் தர முடியும் என்கிற நம்பிக்கையைத் தருவதுமாதிரியான ஒரு கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு அதைத் தனக்கான விசிட்டிங் கார்டாக வைத்துக் கொள்ளவேண்டும். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரின் முதல் கவிதை நூலான “வைகரை மேகங்கள்” தான். நண்பர் நா. முத்துக்குமாருக்கும் “பட்டாம்பூச்சி விற்பவன்” எனும் அவரின் முதல் நூல் தான் விசிட்டிங் கார்ட். இதற்காக நீங்கள் சில ஆண்டுகள் கூட உழைக்கலாம், காரணம் உங்கள் வாழ்க்கைப் பயணம் இதுதான் என முடிவு செய்துவிட்டால் உங்கள் பாதையை செப்பனிடுவது என்பது சிறந்த செயல்பாடுதானே.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

இது “பாடல் என்பது புனைபெயர்” எனும் தொடரின் இறுதி வாரம் இன்று பாடல் வரிகள் இல்லையென்றால் எப்படி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், சூர்யா நடிக்க நண்பர் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்திற்காக எழுதப்பட்ட ஒரு டம்மி பல்லவி உங்களுக்காக.

Paadal Enbathu Punaipeyar Webseries 30 Writter by Lyricist Yegathasi தொடர் 30 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

“வெய்யில ஊதக் காத்தா
மாத்திப் புட்டாளே
கையில பூவச் சுத்தி
ஏத்தி விட்டாளே
கண்ணுல சந்தோசத்த
ஊட்டி விட்டாளே
நெஞ்சுல குப்பை யெல்லாம்
கூட்டி விட்டாளே

கருகரு மேகந்தான்
கறுத்த தேகந்தான்
உருக்கி ஊத்துறா
கிறுக்கு ஏறுதே

அடியே நெஞ்சுமேல நெல்லுக்
காயப் போடேண்டி
உசுர மல்லிப்பூவு
கட்டிகிற தாரேண்டி

ஒன்னநா கட்டிக்கிற
என்னாடி செய்ய
இல்லன்னா சொல்லிப் போடி
என்னான்னு வைய

கொம்புகுத்திக் கூட நானும்
சாகவில்லயே
கொமரிப்புள்ள குத்தி
செத்துப் போனேனே”

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *