‘மதயானைக் கூட்டம்’ எனும் ஒரு தமிழ்படம். மிகச் சிறப்பாக நெறியாளகை செய்யப்பட்டு சில அரசியல் சூழ்ச்சிகளால் மக்களிடம் பெரிதும் கவனப்படாமல் போன ஒரு மகத்தான படைப்பு. தென்மாவட்டங்கள் கொண்டாடின ஆனால், அவர்களும் கதையை சரியாக புரிந்து கொண்டார்களா என்பதிலும் சிக்கல் இருந்தது என்பதே உண்மை. இந்த படத்தின் இயக்குநர் என் நண்பர் விக்ரம் சுகுமாரன். இது இவரின் முதல் படம். அவர் இந்தப் படத்திற்காக சிந்திய உதிரத்தின் வாசம் அத்தனை சுலபமாக காற்றிலிருந்து அகன்றிருக்காது. ஆனந்த விகடன் தனது பக்கங்களில் இப்படத்தின் விமர்சனத்தை எழுதாமல் போனதெல்லாம் கலைக்குச் செய்த துரோகமன்றி வேறில்லை. ஒரு சமூகத்தின் வாழ்வு முறையை குறுக்கு விசாரனை செய்த ஒரு திரைப்படத்தை சாதிய முத்திரை குத்திய சதியை காலம் தன் உடலின் காயமாக நிச்சயம் கருதும். ஆனாலும் என் நண்பர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சுருங்கிப் போய்விடவில்லை. கதைகளை தனது கால்களாவும் கைகளாவும் யானைப் பலங்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
உதவி இயக்குநர்களாக சென்னை வீதிகளில் சுற்றித் திரிந்த காலம் தொட்டு ஒத்தக் கருத்தோடு பயணித்து வருகிறோம் இன்றுவரை நானும் அவரும். மதயானைக் கூட்டம் திரைப்படத்திற்கான மொத்தப் பாடல்களையும் எழுத வாய்ப்புத் தந்த தருணம் இன்னும் என் நெஞ்சில் அகழாத சித்திரமாக இருக்கிறது. அந்த படத்தின் பாடலுக்காக விக்ரம் சுகுமாரன் அவர்களும் நானும் இசையமைப்பாளர் N.R. ரகுநந்தன் அவர்களோடு தேனியிலும் சென்னையிலும் பணி செய்த நாட்கள் பனி பூக்கிறது.
அந்தப் படத்தில் ஒரு காதல் பாடலை முதலில் தொடங்கினோம். கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு கல்லூரி பயிலவந்த நாயகிக்கு விடுதியில் சேர்வதற்காக கொஞ்ச நாட்கள் நாயகனின் வீட்டில் தங்கிப் படிக்கும் சூழல் ஏற்படுகிறது. நாயகன் கதிர். நாயகி ஓவியா. ஓவியா மீது காதல் கொண்டு கதிர் மனம் சிறகடிக்கிறது. எத்தனையோ பல்லவி எழுதிப் பார்த்தும் இயக்குநரின் இதயம் ஒரு பட்டாம்பூச்சி பூச்சி போல ஒரு பல்லவியில் வந்து அமர்ந்தது.
பல்லவி
கோணக் கொண்டக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
தெனம் தெனம் திருகைக்குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்கிறா
அய்யய்யோ கடுகுதுண்டு எடைய வச்சு
கெறங்க அடிக்கிறா
குமரி புள்ள நேசம் -அட
கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற..
சரணம் – 1
சொளகப் பாக்குறேன்
இதயம்போல் தெரியுது
அடுப்பு தீயப்போல்
உசுரும் எரியுது
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவ மொகம் பாத்துட்டா
அரையடி வளருறேன்
சேதாரம் இல்லாம
செஞ்சதாரு அவள – அவ
பஞ்சாரம் போட்டுத்தான்
கவுக்குறாளே ஆள
நா ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவ கூட்டிப் பெருக்கும்போது – நா
கூடைக்குள்ள போவேன்
சரணம் – 2
ஒதட்டுச் சிரிப்புல
உசுரு கரையுதே
அவள நினைச்சுதான்
வயிறு நெறையுதே
சோளத் தட்ட தான்
சுமையத் தாங்குமா
ஆளச் சாய்க்குதே
அல்லிப்பூ ரெண்டுதான்
போரால சாவில்ல
மாரால தான் சாவு
நூறாள தாக்குதே
உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்கத் தானே
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு – அவ
பத்துபுள்ள என்னப்போல
பெத்து கொடுக்கணும்
நண்பர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், என் வரிகளை உருகி உருகிப் பாடியது இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு. இதைப் படம்பிடித்த விதம் மீளாத காட்சி எதார்த்தம். இந்தப் பாடலை நான் இன்றைக்கும் கேட்கும் போதெல்லாம் நாயகி ஓவியாவை உசிலம்பட்டி சேவு என்று எழுதியது ஞாபகத்தில் வந்துபோகும்.
எங்கள் ஊரில் யாராவது இறந்துவிட்டால் வேசக்காரர்களை ( கூத்துக்காரர்களை) வேடிக்கை பார்க்கப் போகிற முதல் ஆள் நானாய்த்தான் இருப்பேன். உட்கார வைக்கோல் போட்டிருப்பார்கள் உட்கார, அதுதான் நான் அமர்ந்த முதல் ஷோபா. பாடியை எடுக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். கோமாளி தான் இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஹீரோ. எழவு வீடுகளில் போத்தம்பட்டி கோமாளியவோ வடக்கம்பட்டி கோமாளியவோ பார்த்துவிட்டால் அன்றைக்குப் பள்ளிக் கூடம் கட். அத்தனை ஒரு ஈர்ப்பு அதன் மீது ஏனென்று இன்றுவரை தெரியவில்லை.
பெண் வேசதாரிகள் மாருக்கு சிரட்டையை வைப்பதும், உதடுகளுக்கு சாயம் பூசுவதும், கோமாளி கன்னத்தில் வெள்ளைக் கலர் வட்டம் வரைவதும் மட்டுமன்றி பந்தக்காலும், பாடையும், பட்டம் எடுத்தலும், உயிரை உருக்கும் பெண்களின் ஒப்பாரியும், பிணக் குளிப்பாட்டலும் அழியா கோலமாக என் அடிநெஞ்சில் கிடக்கின்றது.
மேற்கூறியவற்றை நினைவு கொள்ளும் வகையில் இந்தப் படத்தின் தொடக்கத்தில் ஒரு பாடல், நண்பர் விக்ரம் சுகுமாரன் அவர்கள் ஆணி அடித்தது போல் பாடலின் சூழலைச் சொல்லிவிட்டார். நாட்டுப் புற மெட்டு. ஒரு திரைப்படப் பாடலைப் போன்று இது இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஏனெனில் இந்தப் பாடலை சரியாகச் செய்துவிட்டால், படம் வெளியான பின் எழவு வீடுகளின் கூத்தில் நிச்சயமாகப் பாடப்படும் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது. சரியாகச் செய்தோம். இன்று எங்கள் பாடல் ஒலிக்காத எழவு வீடுகளில்லை. ஏன் மறந்து சிலர் கல்யாண வீடுகளில் கூட ஒலிபரப்பி விடுகிறார்கள். இதோ அந்தப் பாடல்:
தொகையறா:
எட்டு நாடு
இருபத்து நாலு உப கிராமத்திலும்
கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வந்திடுவோம்
தோட்டி செத்தாலும்
தொரமாரு செத்தாலும்
எங்களோட பாட்டுத்தான்
சீரும் சிறப்புமா நிகழ்ச்சி அமைய
சின்னவங்க பெரியவங்க
அமைதி காக்கணும் – இப்போ
கலக்கப் போறேன் கருமாத்தூர் கோமாளிங்க…
பல்லவி:
உன்னை வணங்காத நேரமில்லை
எங்கள் கருப்பையாவே
வாழ்க்கையில் ஒளி வீசும்
வரம் தரும் மூணுசாமி
மதயானைக் கூட்டத்துக்கு
மரியாதை செலுத்துகின்றோம்
குத்தங்குறை இருந்தாக்கா
மன்னிக்கவும் வேண்டுகிறோம்
சரணம் – 1
குத்திப்புட்டுப் போனாலும்
கோழி கொண்டு பாப்பாக
கொல செஞ்சு போனாலும்
எழவுக்கு வருவாக (2)
குடமென இருக்கு
குடிக்கிற சரக்கு
வேகுற கறிய
பாதியில் நொறுக்கு
சரணம் – 2
தழும்புகள் இல்லாத
தலைமுறை இல்லையப்பா
ஜெயிலிங்கு கட்டியது
இவர்களால் தானப்பா (2)
காப்பியும் கலர்களும்
சாப்பாடும் ஏற்பாடும்
எழவுல கூட
தெனந்தெனம் நடந்திடும்
என் ஞான குரு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தந்தையார் மரணத்தின் போது கவியரசு கண்ணதாசன் அவர்கள் தத்துவப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது, அப்போது வைரமுத்து அவர்கள், “ஒன்பதாயிரம் பாடல்கள் எழுதியிருக்கேன்.. ஆனால் என் மரணத்திற்கு என் பாடல் இல்லையே” என வருந்தினாராம். கவிப்பேரரசே வருந்தாதீர் வாழ்கையெல்லாம் கொண்டாட உங்களின் ஆயிரம் பாடல்கள் இருக்கின்றன எங்களிடம்.
வைரமுத்து அவர்களின் வருத்தத்திற்கு முன்னால் ஒரு நாள் என் நண்பரும் மாப்பிள்ளையுமான கவிஞர் ரோஸ் முகிலன் என் காதில் வந்து சொன்னார்,
“கோவிச்சுக்காதடா மாப்ள
பத்தாயிரம் பாடல் எழுதுன வைரமுத்துக்கே அவர் சாவுக்கு அவர் பாட்டு இல்ல.. ஆனா
உன் சாவுக்கு
உன் பாட்டு உண்டு என்றார்”
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.