“மதயானைக் கூட்டம்” திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கு வந்திருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் “அத்தனை பாடல்களையும் கேட்டேன். மிகப் பிரம்மாதமாக இருந்தன. அந்த மண்ணின் கதைக்கு இவ்வளவு அடர்த்தியாக உன்னால் தான் எழுதமுடியுமென நினைத்த நொடிதான் கேட்டேன் இந்தப் படத்தின் பாடலாசிரியர் யார் என்று, அவர்கள் ஏகாதசி என்றார்கள். அப்போ நான் யூகித்தது சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்” என்று அவர் என்னிடம் சொல்லி என் தோள்களைப் பற்றி அழுத்திப் புன்னகைத்த நிகழ்வு மறக்க இயலாதது.
அதே போல் தான் தமிழகத்தின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான அண்ணன் தேனி ஈஸ்வர் பாடல்களைக் கேட்டுவிட்டு சிலாகித்துச் சொன்னார், “இந்த படத்தின் பாடல்கள் அத்தனையையும் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்க வேண்டும், இந்தப் பதிவு அப்பகுதி மக்கள் வாழ்வின் ஆவணமாக இருக்கும்” என்று. இப்படியான நூறு நூறு பாராட்டுக்களைப் பெற்றபோதும், சென்னை லயோலா கல்லூரியில் அத்தனை ஆயிரம் மாணவர்கள் மத்தியில் நடந்த “மதயானைக் கூட்டம்” படத்திற்கான பாராட்டு விழாவில், “இப்படத்தின் இரண்டாவது நாயகன் என் நண்பன் ஏகாதசி” என விக்ரம் சுகுமாரன் அவர்கள் சொன்னது எனக்கு மிகப்பெரிய பரிசு.
உறவுகளின் சூழ்ச்சியும் கொலை மிரட்டலும் உயிரைக் காவு வாங்க நெருங்கும் சூழலில் தாயை ஓரிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு மகன் தலைமறைவாவதற்காக காடு கரை வெயில் இருட்டு தாண்டிச் செல்ல, காலமே அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறது.
பல்லவி:
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊர விட்டுப் போற – தாய்
வேர விட்டுப் போற
சண்டாள சனமே – விட்டு
போறாது ஓ இனமே
இருக்குது எட்டுத் தெச – நீ
போறது எந்த தெச
சிரிப்பை மறந்தாய்
சின்னதாக இறந்தாய்
உனக்கு மருந்தாய்
இருக்கிறாள் ஒருதாய்
குத்தி வச்ச அரிசிதான்
ஒலையில கிடக்குது
பெத்துப்போட்ட வயிறுதான்
பத்திக்கிட்டு எரியுது
சரணம் – 1
வெத்தலக் கொடி ஒண்ணு
நெருப்புல படர்ந்திருச்சே
பெத்தவளின் மடி பிரியும்
பெருந்துயர் நடந்திருச்சே
சோறு ஊட்டும் சொந்தம் பந்தம்
சூழ்ச்சியாகப் பேசிருச்சே
வேரறுக்க சாதி சனம்
வெட்டருவா வீசிரிச்சே
என்ன இது கணக்கு
இடி மட்டும் உனக்கு
சாதிசனம் எதுக்கு
சாமியும் தான் எதுக்கு
வெயில சொமந்து
வித்துகிட்டுப் போறதெங்கே
இருட்டப் பாய்போல்
சுருட்டிட்டுப் போறதெங்கே
சரணம் – 2
வழித்தொண இல்லாம
வனவாசம் போவதுபோல்
கரை இல்லா நதியாட்டம்
கண்மணியே போறதெங்கே
கல் விழுந்த குளம்போல
கலங்கிருச்சே உம்பொழப்பு
பூ விழுந்த கண்ணப்போல
போயிருச்சே உம்பொழப்பு
நெஞ்சுக்குழி ஓரம்
பச்ச குத்திப் போன
பச்சைக்கிளி ஒண்ணு
காத்துக்கிட்டுக் கிடக்கு
செல்லமே செடியே
செங்காட்டுச் சித்திரமே
முல்லையே கொடியே
முப்புரத்து வழி நீயே
குரலை கண்ணீரில் ஊறவைத்துப் பாடி, கேட்பவர் நெஞ்சத்தை கலங்க வைத்த நாட்டுப்புறப் பாடகி சகோதரி தஞ்சை செல்விக்கு இந்தப் பாடல் அந்த ஆண்டிற்காக சிறந்த பாடகிக்கான “ரேடியோ மெர்சி” விருதைப் பெற்றுத் தந்தது. ஏன் இந்தப் படத்தின் இயக்குநர் நண்பர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, இறுதிச் சுற்றுபோய் நூலிழை வித்தியாசத்தில் நழுவிப்போனது. இந்த படத்தில் நடித்த விஜியை, சிறந்த குணசித்திர நடிகையாக ஆனந்த விகடன் தேர்வு செய்து விருதளித்தது.
கதையில் ஜெயக்கொடி என்கிற பெரிய மனிதர் இறந்து போகிறார். அவர் தான் நாயகனின் தந்தை. அங்கே கூத்தும் வேடிக்கையும் தடபுடலாக நடத்தப்படுகிறது. இவர் அந்த ஊரின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் பண்பாளர். இவரின் மரணத்தால் சுத்துப்பட்டு ஊர்களும் கலங்கிப் போகிறார்கள். இறுதியாக பிணத்தேர் வீட்டிலிருந்து தூக்கப்படும்போது,
“முக்குலத்து வீரரய்யா
ஜெயக்கொடித் தேவரய்யா”
ஒப்பாரி போல் இப்படியொரு பாடல் தொடங்கும். இதற்காக நாட்டுப்புற பாடல் தொகுப்புகளை வாசித்து அதன் வாசத்தை எடுத்து இப்பாடலின் வார்த்தைகளுக்கு ஊட்டினேன். பாடல் தென் மாவட்டங்களில் ஆட்டோக்களின் மூலம் இழவுச் சேதி சொல்லும் போதும் இழவு வீடுகளிலும் ஒலிக்கத் தவறுவதில்லை. பாடலின் சில சரணங்களை உங்களுக்குப் பகிர விரும்புகிறேன்.
சரணம் – 1
சொப்பணமும் காணவில்ல
சொல்லி யாரும் போகவில்ல
கூடுவிட்டுப் பிரிவாருன்னு
கொஞ்சங் கூட நம்பவில்ல
குடும்பம் ஒரு கண்ணு – தேவருக்கு
கொள்கை ஒரு கண்ணு
சரணம் – 2
பஞ்சாங்கம் பாக்க வந்த
பாப்பனுக்கு கண் குருடோ
எழுத்தாணி கூர் இல்லையோ
எழுதியவர் தான் குருடோ
ஊர் முழுக்கப் பேச்சு – தேவர்
உசுரு எப்படிப் போச்சு
சரணம் – 3
கழட்டிப் போட்ட சட்டையில
காங்கலியே ஒங்க ஒடல
ரெண்டு நாளா ஏஞ்சாமி
சிகரெட்ட வந்து தொடல
சாமி உசுரப் பறிக்க – சனங்க
சாராயத்தக் குடிக்க
சரணம் – 4
காக்கா அழுத கண்ணீர்
கம்மா பெருகி ஓடுதுங்க
குருவி அழுத கண்ணீர்
குளம் பெருகி ஓடுதுங்க
சமுத்திரம் போல் சனங்க – தேவர்
சடலங்கண்டு வணங்க
சரணம் – 5
அழகா எழுதுனவன்
ஆயுள் கூட்டி எழுதலயோ
வடிவா எழுதுனவன்
வயசு கூட்டி எழுதலயோ
இதய தெய்வம் இறக்க – நாங்க
எப்படித்தான் மறக்க
இப்பாடலை மறைந்த தோழர் கரிசல் திருவுடையான் அவர்கள் ஒரே டேக்கில் பாடினார். இயக்குநர், நான், இசையமைப்பாளர், இஞ்சினியர் எல்லாரும் வியந்து ரசித்துக் கொண்டிந்தோம். நினைத்தபடியே பாடல் மக்கள் இதயங்களைக் கனக்கச் செய்தது. ஆனால் என் மீது சில விமர்சனங்கள் வந்தன, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்துகொண்டு உயர் சாதிப் பெருமை பேசும் பாடலை எழுதிவிட்டதாக. இந்த விமர்சனம் அந்த படத்தின் மீது வைக்கப்பட்டது பொய்யானது ஆகும். காரணம், அந்தப் படம் ஒரு சமூகத்தின் சிறப்புகளையும் பலவீனங்களையும் ஆய்வு செய்த படம். அதை அதன் போக்கில் ஒளிவு மறைவின்றி எழுதுவது தானே சரியாகும்.
தவிர்த்தல் என்பது குடிக்கெதிராய் ஒரு படம் எடுக்கப்படும்போது குடிப்பதைக் காட்சி படுத்தாமல் இருப்பது போன்றாகிப் போகுமே. அந்தப் படம் மாற்றுச் சாதியினரைப்பற்றி தாழ்வாக பேசவில்லை. ஏன், சாதி பற்றியே பேசவில்லை. அது ஒரு குடும்பக் கதை. அந்தக் குடும்பத்தின் வாயிலாக அது சார்ந்த சமூகத்திற்காக மட்டுமல்ல, இந்த மனித சமூகமே, பிற்போக்குத் தனத்திலிருந்தும், ஆயுத கலாச்சாரத்திலிருந்தும், மனித நேயத்திற்கு எதிரான மூர்க்கத்தனத்திலிருந்தும் விடுபட வேண்டும் என மன்றாடிய படம். அதன் மீது பூசும் சாதியக் கறை நியாயமற்றது. படத்தின் ஒட்டுமொத்தக் கருவை படத்தின் க்ளைமாக்ஸில் கொண்டு வந்துவிட இயக்குநர் கேட்டுக்கொண்டதற்கினங்க கீழ் காணும் வரிகளை இதய சாட்சியமாய் எழுதியிருந்தேன்.
ஆயுதம் வெதச்ச சாதிக்குள்ள
அறுவடையாகுதே மனுசத் தல
காகிதம் போலொரு மனசுக்குள்ள
காட்டுத் தீ பாயுதே என்ன சொல்ல
வீச்சருவா வாய்செவக்க
வெத்தலையப் போடுதடா
சேன தொட்டு வச்ச மண்ணில்
செங்குருதி சாயுதடா
ஆகாயம் என்னவோ
வெள்ளையாத்தான் தூறுதப்பா
மண்ணத்தோண்டி பாத்தாக்கா
மனுச ரத்தம் ஊறுதப்பா
புத்தி கெட்டுப் புத்தி கெட்டு
பொத குழியத் தேடிக்கிட்ட
சொந்தக் கைய வெட்டியிப்போ
சோத்துக்குள்ள மூடிப்புட்ட
தென்மேற்கா வீசும் காத்தும் – இங்க
தேம்பி அழுறது கேக்கலயா
கட்டாந்தரையும் மாரடிச்சு – இங்க
கதறி அழறதப் பாக்கலயா
கோத்திரத்த அழிச்சுப்புட்டா
கூப்பிடப் பேர் இருக்குமா
ஒருத்தருமே இல்லையின்னா
ஒத்தையில ஊர் இருக்குமா
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.