தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி
எல்லாத் திருவிழாக்களையும் விட தமிழர்களுக்குத் தைத்திருநாள் முக்கியமானது. ஏனெனில், திருவிழா பத்து நாட்கள் இருக்கும் போதே இதற்கான ஆயத்தப் பணி தொடங்கிவிடும். அதேபோல் இந்தத் திருவிழாதான் ஆடு மாடுகள் மற்றும் விவசாயத்திற்கு துணைபுரிகிற அல்லது வளர்ப்பு விலங்கினங்களுக்கான திருவிழாவாகும்.
விலங்கினங்களுக்கான இவ்விழாவில் மனிதன் விருந்தினராகக் கலந்து கொள்கிறான்.

எங்கள் ஊர்களில் பொங்கல் விழாவிற்கு மட்டுமல்ல என்ன விழா வந்தாலும் அதற்கு முன் கந்துவட்டி கடை முன் எம் ஏழை எளிய மக்கள் நின்று விடுவார்கள். விழாக் காலங்களில் மட்டும் தான் கிராமத்து மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள் மற்ற நாட்களில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் கடன் பெற்றாவது வீட்டிற்குள் மகிழ்ச்சியைக் கூட்டி வருவார்கள். காலமெல்லாம் உழைப்பவர்கள் எதற்காக கடன் பெற வேண்டும் என உங்களுக்குத் தோன்றும் தான். ஆனால் கொடுக்கப்படும் கூலிப் பணம் அன்றாடம் குடலை நிரப்பத்தான் சரியாய் வரும். இன்னொன்று விழாக்களுக்கு விருந்தினர்களை அழைத்து உபசரிக்கும் பழக்கம் கிராமத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றன. இதை அவர்கள் சுமையென நினைத்ததில்லை ஒருபோதும். ஒரு விழாவிற்கு கடன் பெறுவதும் அதை அடுத்த விழாவரை கட்டுவதும் இவர்களுக்கு வழக்கம். என்ன கஷ்டம் என்றால் கிராமத்தில் மாதம் ஒரு திருவிழா வரும். இந்த சூழலில் நான் எழுதிய ஹைக்கூ ஒன்று நினைவிற்கு வருகிறது.

“திறந்தே இருக்கின்றன
திருவிழா காலத்திலும்
அடகுக் கடைகள்”

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

எங்கள் கிராமத்தில் பொங்கல் வரப்போகிறது என்றால், ஒரு வாரம் முன்பே என் அம்மா நாகமலையின் அடிவாரத்தில் புற்றுமண் அள்ளி வந்து வீட்டின் சிறு சிறு ஓட்டைகளைத் தீற்றுவார். பிறகு சாணம் கரைத்து அந்த இடங்களில் மெழுகி விடுவார். சுவரில் ஈரம் காய்ந்தபின் சிமெண்ட் தொட்டியில் ஊறப் போட்டிருந்த சுண்ணாம்புப் பாலெடுத்து வீட்டிற்கு வெள்ளை பூசுவோம். பின்னர் காவிப் பொடியாலான நீள் கோலத்தால் வீடு அழகாகும். கிராமப் புறங்களில் போகிக்கு எரிக்க ஒன்றுமிருக்காது காரணம் நகரங்களில் எரிக்கப்படுகின்ற பழைய பொருட்கள் இங்கே வாழ்வோரின் அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். தை ஒன்றாம் தேதியன்று மாவிலை கூரைப்பூ ஆவாரம்பூ போன்றவற்றை முடிசெய்து வீட்டின் முன் கூரையில் செருகுவோம். விவசாய நிலத்தின் வடகிழக்கு மூலையில் செருகி வைப்பதும் ஏன் அவரவர் வீட்டருகிலோ தொலைவிலோ வைத்திருக்கும் சாணக் குப்பைகளிலும் இதை செருகி வைப்போம்.

எங்கள் பணியான் கிராமத்து தலைமேடு தான் நாகமலை. அங்கிருந்து கூரைப்பூவும் ஆவாரம் பூவும் அம்மா பறித்து வந்து விடுவார்கள், ஆனால் மாவிலைக்குப் பெருங் கஷ்டம். ஊர் முடிவில் ஒரு மாந்தோப்பு இருக்கிறது. தோப்புக்காரர், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி காவல் காத்துக் கொண்டிருப்பார். அவர் கண்ணைக் கட்டிவிட்டு மாவிலை பறித்தால் தான் பொங்கல் காலை எங்கள் ஊரின் கூரைகளுக்கு வந்துசேரும். வேறு வழியின்றி எங்கள் திருட்டு நடந்தேறும். வருடா வருடம் அவரும் நாங்களும் அப்படி அப்படியே தான் இருக்கிறோம். பொங்கலோ.. பொங்கல்..!

ஆடு மாடுகளை ஊருணியில் அழுக்குத் தீரக் குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டு வைத்து வெயிலில் உலரச்செய்து பின் பச்சைப் புற்களை தின்க விடுதலும், வாசலில் பொங்கலிட்டு கரும்பு வைத்தலும், ஊரில் ஒரு குழு வீடு வீடாக வந்து வட்டி தெளித்தலும், காலை மாலையில் தொடங்கும் சாமியாட்டமும் எழுத வேண்டுமென்றால் இங்கே எனக்கு வழங்கப்பட்ட பக்கங்கள் பத்தாது. அத்தனை அழகு. அத்தனையும் அழகு.

எனது “Oru Cup Tea” யூ டியூப் சேனலில் பொங்கலுக்கு ஒரு பாடல் உருவாக்கலாம் எனத் திட்டமிட்டு எழுதினேன். எழுதிமுடித்து தோழர் சுகந்திக்கு அனுப்பினேன். அந்த வரிகளுக்கு சுகந்தி அமைத்த மெட்டும் பாடிய விதமும் எனக்கு கேட்கும் நாளெல்லாம் பொங்கல் வந்து போனது.

பல்லவி:
தை தை தை தைமாதத் திருவிழா
தலைநிமிர்ந்து நடந்த எங்கள்
தமிழனோட திருவிழா
கை கை கை கைமாறுத் திருவிழா
உலகுக் கெல்லாம் சோறுபோட்ட
உழவனுக்குத் திருவிழா

வீட்டுக்கு வண்ணங்கள் தீட்டணும் – நம்ம
வீதிக்கு மாவிலையில் தோரணம் – பொட்டுப்
பூக்களை மாட்டுக்கும் சூட்டணும் – நம்ம
நேசத்த உலகுக்குக் காட்டணும்

சரணம் – 1
பருத்தி நூல்களால் ஆடைகளை நெய்து
உடுத்தி நடந்தது தமிழ்நாடு
கருத்திலே கலையின் நுட்பத்திலே
சிறந்து விளங்கிய பண்பாடு

மெரினா கடற்கரை மீதினிலே
வீரத்தைக் காட்டினோம் பாத்தீரோ
சங்க காலத்து ஓலைகளில் – எங்கள்
சக்கரைத் தமிழைக் கேட்டீரோ

குழு:
அட கோலத்தில் அரிசி மாவு தான்
அதன் மத்தியில் பூசணிப் பூவுதான்
அட பொங்கிடும் பொங்கச் பானைதான்
அங்கே ஆடிடும் கரும்புத் தோகைதான்

சரணம் – 2
சாலை மனிதர்கள் இளைப்பாற
திண்ணை கட்டியது தமிழினம் தான்
வாழை இலையில் விருந்து வைத்து
வாட்டம் போக்கியதும் தமிழினம் தான்

சிலம்பம் கபடி வழுக்குமரம் – ஜல்லிக்
கட்டு வில்வித்தை ஆடிடுவோம்
சிந்துச் சமவெளிக்கு முழுந்தியது – எங்கள்
கீழடி என்றே பாடிடுவோம்

குழு:
நாங்கள் சாதி மதங்களை அறுத்திடுவோம்
நல்ல சமத்துவப் பொங்கலை வைத்திடுவோம்
அந்த உதய சூரியனின் கிழக்குதனை
எங்கள் உலகின் திசைக்குத் திருப்பிடுவோம்

தை மாதம் முழுக்க நாடு பூராவும் ஜல்லிக்கட்டு நடக்கும். அந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு எத்தனையோ தடைகள் வந்தன. தமிழரின் ஒரு பண்பாட்டு அடையாளம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக உலகம் முழுக்க வாழுகின்ற தமிழ் பெருமக்கள் கொடுத்த குரலின் ஓசை வானம் தொட்டுத் திரும்பியதை எவராலும் மறுக்க இயலாது.

என் நண்பர் முருகேஷ் பாபு அவர்கள் ஒரு மருத்துவர். திரைப்படத்துறையில் நெறியாள்கை செய்வதில் விருப்பம் உள்ளவர். அவர் தமிழ் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். அவர் ஒரு வீடியோ பாடல் ஒன்றை இயக்குவதற்காக, ஜல்லிக்கட்டுப் பாடல் ஒன்று வேண்டும் என என்னிடம் கேட்டார். அவருக்காக எழுதிய பாடலில் கரும்பைப் போல ஒரு துண்டு தருகிறேன்.

“வாடி வாசல் தள்ளி நின்னு
தாவிப் பாயிடா – அட
வால் பிடிச்சா வெற்றி இல்ல
ஏறிப் பாயிடா
வாங்கி வரும் பரிசையெல்லாம்
சீரு செய்யுடா
திண்ணையில தூங்குறவன்
வீரன் இல்லடா”

Paadal Enbathu Punaipeyar Webseries 9 Written by Lyricist Yegathasi தொடர் 9: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

தமிழர் திருநாளையும் ஜல்லிக்கட்டையும் பல திரைப்படங்கள் உன்னதமாகப் பதிவு செய்திருக்கின்றன. அதில் ஜல்லிக்கட்டை மிகத் தத்துரூபமாகக் காட்டிய படம் விருமாண்டி. என் நண்பர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்கள் “தேரும் போரும்” என்கிற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்திற்கு நண்பர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் இசை. ‘அட்டைக்கத்தி’ தினேஷ் நாயகன். இரண்டு பாடல்கள் உருவாக்கப்பட்டன. இரண்டும் நானே எழுதியிருந்தேன். அவற்றில் ஒன்று ஜல்லிக்கட்டுப் பாடல். மிக மிக நேர்த்தியாக உருவாக்கினோம். ஏதோ சில காரணத்தால் படம் இடை நிற்க. அதே ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நான் பாடல் எழுதி, சாந்தனு நாயகனாக நடிக்கும் “இராவண கோட்டம்” எனும் படத்தைத் தொடங்கி படப்பிடிப்பை முடித்தும் விட்டார். ஒரு படம் நிற்கக் கூடாது. அது எண்ணற்ற தொழிலாளிகளின் வாழ்வு. தடைகள் தீர்ந்து “தேரும் போரும்” வரக் காத்திருப்போம். இது அந்த ஜல்லிக்கட்டுப் பாடலின் பல்லவி.

“வீரத்துக்குப் பேரு போன
வேலுநாச்சி ஆண்ட சீம
சூறக் காத்தா சுத்தி ஆடும்
காளமாட்டப் புடிடா மாமெ

நம்ம மானங்காத்த மருதுபாண்டி
அந்த மண்ணில் பாரு மஞ்சுவிரட்டு
அட கொம்பு குத்தி கொடலு சரிஞ்சா
ஒரு துண்டெடுத்து அள்ளிக்கட்டு

அட சீத்தி அடி ஏத்தி – நம்ம
சில்லாவே அதிரட்டும் ஆத்தி”

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 8: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.