பால் மனப்பருவம் – சிறுகதை
புல்லட்டில் வந்து நின்ற புவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது பவிக்கு. பள்ளிப்படிப்பு பெரிய பாரமாக இருந்தது.
“இந்தப்படிப்பை யார் தான் கண்டு பிடித்தார்களோ….? கண்டு பிடித்தவர் காதலைப்பற்றித்தெரியாதவராக இருந்திருப்பார்” என்று நினைத்தாள்.
பதினைந்து வயதை முற்றிலும் விழுங்கியவளை உடலில் தோன்றிய உணர்வுகள் விழுங்கப்பார்த்தது. தோழி கவி, பவியை தனியாக அழைத்து திட்டினாள்.
“இத பாருடி. புவனுக்கு படிப்பு வரலே. வருமானத்துக்கான வேலையும் இல்லே. அவனைப்பெத்தவங்க சப்பாதிக்கிறதுனால புல்லட் பைக் வாங்கிட்டு உன்னைச்சுத்தறான். உன்னை மட்டுமில்லே ஊரையே சுத்தறான். வயசுல மூத்த பொண்ணுக பின்னாடி கூட சுத்தறான். வாடி போகலாம். நாளைக்கு எக்ஸாம் இருக்கு படிக்கனம்” மனம் போகவிடாமல் தடுத்தாலும் தோழியின் அறிவுரையும், பிடிவாதமாக அழைத்ததாலும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவி.
“உன்னோட கிளாஸ் டீச்சர கோயில்ல பாத்தேன். கொஞ்ச நாளா நீ சரியா படிக்கிறதே இல்லேன்னு சொன்னாங்க. சின்ன வயசுலயே என்ற அப்பம்போயிட்டதுனால, பள்ளிக்கொடம் போகாம மில்லுக்கு பஞ்சு பொறுக்க தெனக்கூலிக்கு போனாத்தான் சாப்பாடுன்னு இருந்ததுனால படிக்கறதுக்கு ஆசையிருந்துங்கூட என்னால படிக்க முடியல. நம்ம பொண்ணாச்சும் படிக்கட்டுமேன்னு நான் ஊட்டு வேலை செஞ்சு, உன்னோட அப்பா டிரைவர் வேலைக்கு போயி சம்பாதிச்சு பணங்கட்டி படிக்கிற ஸ்கூலுக்கு அனுப்புனா இப்படி படிக்காம கேவலப்படுத்தறியேடி…” திட்டிய தாயின் பேச்சைக்காதில் போட்டுக்கொள்ளாமல் தனது அறைக்குள் ரிங்கான அலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றவள் அறைக்கதவைத்தாழிட்டு விட்டு பேசினாள்.
“என்னடி பேசப்பேச கட் பண்ணிட்டு போயிட்டே? அந்தக்கவி தான் என்னோட முதல் எதிரி. உன் கூட நான் பேசறதே அவளுக்கு பிடிக்கலே. இந்த சின்ன வயசுலயே பணக்கார பாய் பிரண்ட் உனக்கு கெடைச்சுட்டான்னு அவளுக்கு பொறாமை. நீ எனக்கு டெய்லியும் கொடுக்கிறத கொடுக்காம திடீர்னு பேச்சக்கட்பண்ணிட்டு போயிட்டீன்னு நான் அப்படியே பதறிப்போயிட்டேன் தெரியுமா? எக்ஸாம்ல நெறைய மார்க் வாங்கிடாதே…”
“ஏன்?”
“மேல படிக்க அனுப்பிடுவாங்க”.
“நெறையப்படிக்கனம்னு அம்மா சொல்லறாங்க. நீ படிக்கவே வேண்டான்னு சொல்லறே. நீ சொல்லறதக்கேட்கறதா? என்னோட அம்மா சொல்லறதக்கேட்கறதா? ஆனா நீ சொல்லறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. என்னக்கல்யாணம் பண்ணிக்குவ தானே…?” வெகுளியாகக்கேட்டாள்.
“ஒன்னம் மூணு வருசம் எப்ப முடியும்னு ஏக்கமா காத்திட்டிருக்கேன். அப்புறம்பாரு இந்த ஊரென்ன, உலகமே தடுத்தாலும் உன்னத்தூக்கிடுவேன்.” அவனது பேச்சு அவளுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. கற்பனையில் நினைத்தபடி அவனோடு வாழ்ந்தாள். இதுவரை தனிமை இப்படி வாட்டியதில்லை.
விதை விதைக்காமல் இருக்கும் வரை சனலமற்றுக்கிடக்கிறது. மண்ணில் போட்ட பின்பு முளைத்து வளருவது போல் காதலெனும் விதையும் மனதில் விதைத்த பின்பே தானாக வளர ஆரம்பித்து விடுகிறது என்பதை பவியால் புரிந்து கொள்ள முடிந்தது.
“முன்பெல்லாம் போனுக்கு இண்டர்நெட் கார்டு பெற்றோர் கொடுத்தால் தான் பதிவுகளைப்பார்க்கவே முடியும். கொரோனாவுக்குப்பின்னாடி பாடம் படிப்பதே போனில் என்றான பின்பு, பள்ளிப்பாடம் தவிர மற்ற பதிவுகளையும் குழந்தைகள் பார்க்க நேரும் போது படிப்பில் கவனம் சிதறுகிறது. வீடியோவில் பார்ப்பதை தானும் செய்து பார்க்க வேண்டுமென எண்ணும் போது மீன் கரைப்பக்கம் இரையெடுக்க வரட்டும் என்றே மீன் பிடிப்பவன் தூண்டிலில் புழுவைச்சொருகி காத்திருப்பது போல் தன்னை ஒரு முறைக்கு இருமுறை திரும்பிப்பார்த்தாலே சிக்னல் என நினைத்து வலை போட்டு பிடித்து விடும் வாலிபர்களின் வலையில் வீழ்ந்து விடுகின்றனர்”
என பள்ளிக்கு வந்திருந்த புது ஆசிரியை பேசியதை கூர்ந்து கவனித்தாள் பவி.
“சின்ன வயசுல நம்ம மனம் பால் மாதிரி இருக்கும். அத தண்ணீல ஊத்துனா அதோட நல்லாவே மிக்ஸாயிடும். அதை தயிராக்கி கடைஞ்சோம்னா, அதுல வர்ற வெண்ணைய எடுத்து தண்ணீல போட்டா கலக்கவே கலக்காது. பால் போல இருக்கிற உங்க மனதை தயிராக்கி வெண்ணையா மாற்றுகின்ற இடம் தான் ஸ்கூல்.
படிக்கிற வயசுல மனச அலைய விடவே கூடாது. ஒரு பூ பூத்து பிஞ்சாகி, காயாகி, அப்புறம் கனியாகனம். பிஞ்சுல பழுத்திடவே கூடாது. அப்படி என்னோட பதினைஞ்சு வயசுல உங்கள மாதிரி பிஞ்சா இருக்கறப்பவே நானும் பழுத்துட்டேன். யாரும் வழி காட்டலேன்னு சொல்லறத விட யாரு சொன்னாலும் கேக்கற மன நிலைல அப்ப நான் இல்லே. படிப்பு கெட்டு, ஏமாற்றப்பட்டு, சிரமப்பட்டு, சித்திரவதைப்பட்டு, கேவலப்பட்டு இருபத்தஞ்சு வயசுல மனசுல பல காயங்களோட அவன விட்டு ஒரு குழந்தையோட மொத்தமா வெளில வந்தேன். அதுக்கப்புறம் திரும்பவும் படிச்சு இப்ப டீச்சரா உங்க முன்னாடி நிக்கறேன்” கண்கலங்க பேசிய ஆசிரியை மாலதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
“பெத்த தாயப்போல சொல்லறேன். நல்லா படிச்சு ஒரு வேலை வாங்கிட்டு துணையத்தேடுங்க. சுய சம்பாத்தியந்தான் வாழ்க்கைக்கான முதல் படி. படிக்கிற வயசுல காதல் கத்திரிக்காய்னு வழுக்கி விழுந்தீங்கன்னா ஒரு குழந்தை பிறக்கிற வரைக்குந்தான் பிடிச்சமாதிரி நடிப்பாங்க. அப்புறம் நியாயத்தக்கேட்டாக்கூட அடிக்கவும் செய்வாங்க. அப்ப படிப்பு இல்லேன்னா வாழ்க்கையே திசை மாறிடும். ஒடம்பும் கெட்டுப்போயிடும். படிப்ப மட்டுமே லட்சியமா நெனைச்சு படிச்சு முடிச்சீங்கன்னா நீங்க இந்த மாய உலகம்ங்கிற தண்ணீல கலந்து போற பால் போல இருக்க மாட்டீங்க. யாராலையும் மாத்த முடியாத, தண்ணில கலந்திடாத வெண்ணையா இருப்பீங்க” பேசிய ஆசிரியை மாலதி கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அதைக்கேட்டு தானும் கண்ணீர் சிந்திய பவியின் மனம் படிக்க புத்தகத்தை தேடியது. ஆம் புத்தகத்தை மட்டுமே தேடியது.
கதையாசிரியர்:
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

