கவிதை: ரொட்டி எனப்படுவது – பாலைவன லாந்தர் 

கவிதை: ரொட்டி எனப்படுவது – பாலைவன லாந்தர் 



ரொட்டி எனப்படுவது 
******************************
இந்தப் போர்க்களத்தில்
எதுவுமே இம்சிப்பதில்லை அவர்கள்
ரொட்டி சமைக்கும் வாசனையைத் தவிர
உலகின் அதிகாரம் ஓங்கப்படும் போதெல்லாம்
பசித்தவர்களின் வயிறுகள் பணயமாக வைக்கப்படுகிறது
அங்கே ஒரு கிழிந்த ரொட்டித்துண்டு
உயிர்ப்பிழைத்துலுக்கு பாலமாக காற்றில் மிதந்து வருகிறதென்றால்
.. ஆம் காலங்காலமாக இந்த ரொட்டி சமைக்கும் வாசனை
எதிரிகளை மிரட்டிக் கொண்டே இருக்கிறது.
ரொட்டி எனப்படுவது சர்வதேச உணவு
ரொட்டி எனப்படுவது முதலும் முடிவும்
ரொட்டி எனப்படுவது நீயும் நானும்
ரொட்டி எனப்படுவது அதிகாரத்தின் வீழ்ச்சி
எத்தனையோ களங்களில்
ஓயாத ரொட்டி வாசனையை குறித்து
எழுதி இருக்கிறார்கள்
அது வெற்றியின் வாசனையாக
முன்னமே அறிவிக்கப் பட்டிருந்தது
ரொட்டிகளைப் பறிப்பவர்கள் மறைமுகமாக
நிலத்தை
வாழ்வாதாரத்தை
வாழ்வை வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறார்கள்
அதைவிட
ரொட்டிகளை பசிக்கென திருடுபவர்கள்
உலகின் மரியாதைக்குரியவர்கள்
ரொட்டிகளை விளைவிப்பவர்கள்
மரியாதையின் உலகிற்குரியவர்கள்
சட்டென மாவுகளின் மீது தண்ணீர் தெளித்து பிசைந்து
நெருப்பில் வாட்டி ரொட்டி சமைப்பவர்கள்
யுகாந்திர தாய்மையின் வடிவாய் இருக்கிறார்கள்
பிளவுக் கோதுமைகள் வாழ்வின் ஆதாரம்
பிளவுக் கோதுமைகள் வாழ்வின் கோட்பாடு
பிளவுக் கோதுமைகள் வாழ்வின் மூத்த நிலம்
ரொட்டியின் மீதும் பெயர்கள் இருக்கின்றன
பூர்வக்குடி நெற்பயிர்
பூர்வக்குடி கோதுமை
பூர்வக்குடி சொற்கள்
தளமெங்கும் ட்ராக்டர்களால் நிறைக்கப் படுகின்றன
கோடிக்கணக்கான மணல் உழுத ட்ராக்டரின் பற்கள்
அதிகாரத்திற்கு எதிராக எல்லைகளைக் கடிக்கின்றன
நாட்டு காளைகளைப் போன்ற ட்ராக்டர்கள்
ஆம்
வியர்வைத் துடைக்கும் ஒரு நீளத்துண்டு
தோளில் கிடந்தால் என்ன
தலையில் டர்பனாக சுற்றப்பட்டிருந்தால் என்ன
நீயும் நானும் பங்காளி..
      – பாலைவன லாந்தர் 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *