புத்தக அறிமுகம்: கண்ணீரும் ரத்தமும் வடியும் வாழ்வு – ரா. ஜான்சி ராணி (இந்திய மாணவர் சங்கம்)

ஆப்பிரிக்க மாடல் அழகியான வாரிஸ் டைரி எழுதிய “பாலைவனப் பூ” என்கிற இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஆப்பிரிக்காவின் பரந்து விரிந்த பாலைவனத்திற்குள் நாமும் பயணிப்பதுப் போல் உணர முடியும். புத்தகத்தின் எளிமையான எழுத்துநடையும்   எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் அழகிய மொழியாக்கமும்  பாலைவன மக்களின் வாழ்க்கை முறையும் நம்மை புத்தகத்திற்குள் கவர்ந்திழுத்துச் செல்கிறது.

வழிவழிச் சடங்கு

வாரிஸ் டைரி 5 வயது சிறுமியாக இருக்கும் பொழுது, வழிவழிச் சடங்கு, கலாச்சாரம் என்ற பெயரில் பிறப்புறுப்பு சிதைப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார். பிறப்புறுப்பு சிதைப்பு என்பது, பெண் உறுப்பை பிளேட் அல்லது கூர்மையான கருவியை கொண்டு அறுத்து, ஊசி நூல் கொண்டு பிறப்புறுப்பு  தைக்கப்படும் கொடுமையாகும். இக்கொடுமை, ஆப்பிரிக்க கண்டங்களில் தொடந்து மிகச் சாதாரணமாக அச்சிறுமிகளின் அம்மாக்களை கொண்டு நடக்கிறது.

பிறப்புறுப்பு சிதைப்பு செய்யாத பெண்கள் மிகவும் மோசமானவர்களாகவும், மாசுடயவளாகவும், காம வேட்கை கொண்டு திரியும் பெண்ணாகவும், திருமணம் செய்ய தகுதியற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். பிறப்புறுப்பு சிதைப்பு செய்யாத பெண்களை ஆண்கள் மணக்க விரும்புவதில்லை. தன் பெண் பிள்ளைகளின் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்பட்டுவிடக்  கூடாதென்பதற்காக அவர்களின் அம்மாக்களே இக்கொடுமையை நிகழ்த்துகின்றனர். இவையெல்லாம் கலாசாரம் என்ற பெயரில் மிக நுட்பமாக ஆண் ஆதிக்கவாதிகளாலும், மத அடிப்படைவாதிகளாலும் பெண்களை கொண்டே  நிறைவேற்றப் படுகிறது.

Interview with Sherry Hormann who directed the film "Desert Flower ...
ஐந்து ஒட்டகங்களுக்கு பதிலாக தன் 14 வயது  சிறுமியை அறுபது வயது கிழவனுக்கு மணம் முடிக்க முடிவு செய்கிறார்  வாரிஸ் டைரியின் தந்தை. இதையடுத்து, தனக்கான வாழ்வு இங்கில்லை என்ற முடிவோடு, வீட்டை விட்டு வெறியேறி பல நூறு மைல்கள் நடந்தும், ஓடியும் தப்பிக்க முயன்றார் வாரிஸ். ஆனால் வழி முழுக்க பாலியல் வன்முறையையும்,  பாலியல் சீண்டலையும் எதிர்கொண்டு சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷியை வந்தடைகிறார். அங்கிருந்து பணிப் பெண்ணாக  லண்டனுக்கு பயணிக்கிறார்.

அங்கு கிடைக்கும் வேலைகளை எல்லாம்  செய்து கொண்டிருந்தார்.  மாடலாக வேண்டும் என்ற கனவோடு,  தன் தொடர் முயற்சியால் ஆப்பிரிக்க மாடல் அழகியாகவும், ஜேம்ஸ்பாண்ட் படக் கதாநாயகியாகவும் வளர்த்து புகழ்பெற்றார். அதன்பின், ஒரு நேர்காணல் அவரின் வாழ்க்கையை வேறொரு களத்திற்கு இட்டுச் சென்றது. தன் வாழ்வின் மிக முக்கிய ரகசியமான பெண்ணுறுப்பு சிதைப்பு பற்றி, ஆப்பிரிக்காவின் பல கோடி பெண்களின் பிரதிநிதியாய்  உலகறிய செய்தார் வாரிஸ்.

நான்காயிரம் ஆண்டுகால  கலாசாரம்  

பெண் விருத்த சேதனம் அல்லது பெண்ணுறுப்பு சிதைப்பால் ஆப்பிரிக்காவில் உள்ள 28 நாடுகளில், 13 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்துள்ளது. பிறப்புறுப்பு சிதைப்பு செய்வதன் மூலம், பெண்களின் பாலியல் உரிமை மறுக்கப் படுகிறது. பிறப்புறுப்பு சிதைப்பிற்கு பின், பிறப்புறுப்பில் தொற்று, சீழ் வடிதல், மூத்திர ஒழுக்குக் குழாய் சிதைவு, ஆறாத வடுக்கள் உள்ளிட்ட பிரிச்சினைகள் ஏற்படுகிறது. பலர் இறந்துபோவதும் நிகழ்கின்றன.

வாரிஸ்  தான் கடந்து வந்த பாதையையும், சந்தித்த இன்னல்களையும் ஒரு நேர்காணலில் வெளிப்படுத்திய பிறகு தான், பிறப்புறுப்பு சிதைப்பு பற்றிய உண்மை நிலையை இவ்வுலகம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியது. வாரிஸ் தனக்கு நடந்த கொடூரம் இனி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக அவ்வழக்கத்தை ஒழிக்க பணியாற்ற தொடங்கினார். நான்காயிரம் ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் ஆப்பிரிக்க  கலாச்சாரமான பிறப்புறுப்பு சிதைப்பை தடுப்பதற்கான ஐநாவின் சிறப்பு தூதுவராக வாரிஸ் இருப்பதோடு, உலக சுகாதார நிறுவனத்துடன் இணைத்து அதற்காக பணியாற்றியும்  வருகிறார்.

அனி பிராக்கின்(Anne Frank) டைரி குறிப்பு எப்படி ஹிட்லர் நடத்திய கொடுரங்களை வெளிக்கொணர்ந்ததோ அதேபோல், வாரிஸ் டைரியின் “பாலைவனப் பூ” கலாச்சார போர்வைக்குள் நடத்தப்பட்ட ஒரு கொடுர வழக்கத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியது.

ANBUOVIYA: பெண் எழுத்து: கொடுமையை ...

நூல் பெயர்: பாலைவனப் பூ
ஆசிரியர்:  வாரிஸ் டைரி
தமிழில்:  எஸ். அர்ஷியா
வெளியீடு:  எதிர் வெளியீடு
பக்கங்கள் : 368
விலை:  ₹300