ஒற்றை நொடியில் கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்த மனம் தனது வாழ்வின் இடையூறுகளை எவ்வாறு தகர்த்தெறித்து உச்சத்தை அடைகிறது என்பதை விளக்கும் உண்மைச் சம்பவத்தின் வரலாறு.
வாழவே வழியற்றுப் போன பாலைவனத்தில் ஆடுகள் மாடுகள் ஒட்டகங்களை மேய்த்து தாங்கள் பேசும் மொழியை எழுத்து வடிவில் காணாமல் வாழ்வின் போக்கிலேயே எலலாவற்றையும் கற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்தும் நாடோடி பழங்குடி இனத்தில் பிறந்த கல்வியறிவற்ற பெண் லண்டனில் நியூயார்க்கில் எப்படி சிறந்த பெண்மணியாக மாறினாள் ஐ நா சபையின் சிறப்பு தூதராக எப்படி நியமிக்கப்பட்டாள் என்பதை திரைப்படமென விளக்கியிருக்கிறது நாவல்.
மதங்களின் கரங்களாலும் சடங்குகளை மனமார்ந்த ரீதியாக தொடர்வதாலும் பெண்களை தங்களின் உடமைகளாக கருதும் ஆண்களின் ஆதிக்கம் பெண் தன் கையை விட்டுப் போகக்கூடாது என்பதற்காக சொந்தம் கொள்ளும் மனோபாவத்தால் அவள் மீது திணிக்கும் அத்தனை கொடுமைகளையும் சுமந்தபடி ஒரு பெண் உலகத்தின் உயரத்தை எட்டி தான் எங்கிருந்து வந்தவள் என்பதை உலகிற்கு வெளிச்சம் இடும் நூல் இது.
ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடிகள் குழுவில் பிறந்த அவர் விவரம் தெரியாத 5 வயதில் பாலுறுப்பு சிதைப்புக்கு உள்ளாகிறார். மதச் சடங்கின் பெயரால் மரபு வழியாக அந்த குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் அது தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. பெண்ணின் அந்தரங்க இச்சைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தச் சடங்கு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் 20 லட்சம் சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த பாலுறுப்பு சிதைப்பு நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள்.
இது நாகரீக முதிர்ச்சியற்ற சூழ்நிலையில் மருத்துவச்சிகளாலும் கிராமத்துப் பெண்களாலும் நடத்தப்படுகிறது. சிறுமிகளின் உறுப்பை சிதைப்பதற்கு எந்த விதமான கருவிகள் கிடைக்கின்றனவோ அதைக் கொண்டு செய்கின்றனர் ரேசர் பிளேடுகள் கத்திகள் கத்திரிக்கோல் உடைந்த கண்ணாடி சில்லுகள் கூர்மையான கற்கள் சில சமயங்களில் பற்களாலும் கடித்து சிதைக்கின்றனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பெண் பிள்ளையின் பிறப்புறுப்பின் முகப்பை வெட்டி எடுத்து விடுகிறார்கள். இதனால் காலம் முழுவதும் பாலியல் இன்பத்தை அடைய முடியாமல் மூத்திர ஒழுக்கு குழாய் சிதைப்பு ஆறாத வடுக்கள் குருதி ஒழுகல் நீண்ட கால பிரச்சனைகளாக சிறுநீர்ப்பையில் மற்றும் இடுப்பு பகுதியில் திரும்பத்திரும்பத் தொற்று மலட்டுத்தன்மை ஏற்படுத்தல் கட்டிகள் உருவாதல் சிறுநீர் கழித்தலில் சிரமம் மாதவிடாயின் போது பெருகும் ரத்தம் வயிற்றில் தங்கி விடுதல் உறைந்து போதல் சோர்வு மரணம் என நீண்டு விடுகிறது இதன் விபரீத விளைவுகள்.

ஐந்து ஒட்டகங்களுக்காக 13 வயது சிறுமி 60 வயது கிழவனை திருமணம் செய்ய சூழல் ஏற்பட அம்மாவின் உதவியுடன் தனது குழுவை விட்டு காணாமல் போகிறாள். யாருமற்ற தனிமையில் பாலைவனத்தில் பல விலங்குகளின் நடமாட்டத்திற்கு நடுவே தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வெறும் கால்களுடன் பல மைல்கள் நடந்தே கடக்கிறாள். சிங்கத்தின் வேஞ்டைக்கு இரையாகாமல் தப்பித்து தனது வாழ்வின் எதிர்காலத்தை நோக்கி ஓடுகையில் பல மனித மிருகங்களின் இச்சைகளுக்கு ஆளாக நேர்கையில் தன்னை ஒப்படைக்காமலும் தனது குறிக்கோளை நோக்கி ஓடுகிறாள்.
பல ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டியும் அச்சத்தை கைவிடாமலும் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கவும் வாரிஸ் திட்டமிடுகிறாள். வாழ வழியேற்ற பாலைவனத்தில் தாவரங்களும் உயிர் வாழ முடியாத சூழலில் எப்படி அதிசய பூவாகப் பிறந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தால் வாரிஸ் என்பதை இந்த நாவல் உண்மையை உள்ளபடி சொல்லி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
மனித மனங்கள் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் பெண்ணை போகப் பொருளாக அனுபவிக்கத் துடிப்பதில் தொடங்கி அவளை தனது அடிமையாகவே மாற்றி வைக்கும் சூழலையும் இந்நாவல் கோடிட்டு காட்டுகிறது. வளர்ந்து ஆளாகி மாடலிங் துறையில் சிறந்த பெண்மணியாக விளங்கிய போதும் ஆண்களின் நயவஞ்சகத்தால் ஒரு முறை இல்லை இரண்டு முறை ஏமாற்றப்பட்டு திருமணம் என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுப்பதற்காக ஏமாந்த சூழலையும் பல ஆயிரக்கணக்கான பணத்தை இழந்த சூழலையும் விவரிக்கையில் இச்சமூகத்தின் ஆண்களின் பார்வை பெண்கள் மீது எப்போதும் ஏமாற்றம் அடைய வைப்பதை உணர்த்துகிறது
தனக்கு கிடைத்த ஒற்றை நொடி சந்தர்ப்பத்தை விட்டு விடாமல் தனது சித்தியின் உதவியுடன் லண்டன் பயணமாகும் வாரிஸ் அங்கே மாடலிங் துறையில் தட்டித் தடுமாறி நுழைகிறாள் ஆங்கிலம் பேசத் தெரியாமலும் தனது மொழியை எழுதிக் காட்ட வழியற்றும் வெறும் கேள்வி ஞானத்தாலேயே தன்னை புதுப்பித்துக் கொண்டு திரைப்படத்துறையிலும் கால் பதிக்கிறாள்
தனது சிறுவயதில் மதச் சடங்கின் பெயரில் தனக்கு நடத்தப்பட்ட பிறப்புறுப்பு சிதைவை வெளியுலகுக்கு தைரியமாக எடுத்துரைக்கிறார் அதன் காரணமாக தனது இமேஜ் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை சோமாலியா நாட்டு பெண்களும் ஆப்பிரிக்க கண்டத்தில் சிறுமிகளும் இக்கொடுமைக்கு மேலும் ஆளாகுவதில் இருந்து தடுப்பதற்கு தன் வாழ்வையே பணயம் வைக்கிறாள் வாரிஸ். இதன் வழியாக ஐநா சபையின் சிறப்பு தூதராக நியமிக்கப்படுகிறாள்
உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போர்க் குரல் எழுப்புகிறாள் போராடுகிறாள் செல்லும் இடமெங்கும் தனது வாழ்வை அதன் அவலத்தை கண்முன் நிறுத்தி தான் எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் முன்னேறிக்கொண்டே இருப்பதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறாள்
மிகச் சிறப்பானதொரு நாவலை வாசிக்கும்படியான தமிழில் மொழிபெயர்த்து அவரது வாழ்வையே நமக்கு படம் பிடித்துக் காட்டி இருக்கிறது மொழிபெயர்ப்பாளரின் உழைப்பு.
சமூகம் இன்னும் பெண்கள் மீதான தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் பெண்கள் நினைத்தால் எட்டாத உயரத்தையும் எட்டி விடுவதற்கான ஆற்றலும் சக்தியும் அவர்களுக்குள் நிரம்பி வழியும் என்பதையும் மதங்களின் பெயரால் நடத்தப்படும் கொடூரங்கள் நிறுத்தப்பட்டு மனிதர்களை பாதிக்காத வகையில் மனிதன் போற்றப்பட வேண்டும் என்பதையும் இந் நாவல் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்தியம்புகிறது
நூலின் தகவல்கள்
நூல் : பாலைவனப் பூ
ஆசிரியர் : வாரிஸ் டைரி , கேத்தலின் மில்லர்
தமிழில் : எஸ் அர்ஷியா
வெளியீடு : எதிர் வெளியீடு
பக்கம் : 368
விலை : 300
முதல் பதிப்பு : ஜனவரி 2016
நூல் அறிமுகம் எழுதியவர் :

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


