வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய (Vaikom Muhammad Basheer) பால்யகால சகி (Paalyakala Saki) - நூல் அறிமுகம் - Novel | https://bookday.in/

பால்யகால சகி (Paalyakala Saki) – நூல் அறிமுகம்

 பால்யகால சகி (Paalyakala Saki) – நூல் அறிமுகம்

தன் நாட்டிலிருந்து சுமார் 1500 மைல்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் ஒரு வெளி நாட்டில் , ஒரு பெருநகரத்தில் , ஒர் ஒட்டலில் , மஜீது மனிதர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் பாத்திரங்களை கழுவிக் கொண்டு ஜீவித்திருக்கிறான்.

காலையில் நான்கு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரையிலும் இப்படியே எச்சில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்க வேண்டியது அவன் வேலை . மூன்று வேளை சாப்பாடும் , வீட்டிற்கு அனுப்புவதற்கு மாதம் ஏதோ சில ரூபாய் சம்பளமும் . அவனுக்கு கொடுக்கப் படும் . இது தான் அவனது தற்போதைய வாழ்க்கை. ஆனால் அவன் வாழ வேண்டிய வாழ்க்கை இதுவல்ல . வேறு ஒன்றிருக்கிறது . அது அவன் மனதிற்குள் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

தன் பால்ய கால சகி, தன் இதயத்து ராணி சுகாறாவை அவன் மணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்..

ஒரு காலத்தில் ஊரில் பெரும் செல்வந்தராக இருந்து ,பிறகு நொடித்துப் போய் , இப்போது வறுமையின் பிடியில் உடல் தளர்வுற்று கிடக்கும் வாய்பாவுக்கு நல்ல மருத்துவம் பார்க்க வேண்டும். . ஒரு காலத்தில் வெள்ளந்தியாக , ஒவ்வொருவருக்கும் ஒடி ஒடி உதவிகள் செய்து, இன்று ஒரு வேளை சாப்பாட்டிற்கே அல்லாடும் உம்மாவிற்கு நல்ல வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் . செல்வ செழிப் போடு வளர்ந்து, இன்று வறுமையில் வாடி , கல்யாணக் கனவுகளோடு நெகு நெகுவென வளர்ந்து நிற்கும் இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இத்தனை கனவுகளையும் சுமந்து கொண்டு தான் மஜீது இந்த தேசத்திற்கு வந்து சேர்ந்தான்.

இங்கே வந்தது முதல் அவன் வாழ்க்கையில் பெற்றது எதுவுமில்லை. ஆனால் இழந்தது நிறைய இருக்கிறது. ஆம் தன்மானம் , உடல் நலம் , மன நலம் மகிழ்ச்சி எல்லா வற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் எழுந்து நடமாடுவதற்கு தேவையான கால்கள். ( ஆம் அவனது வலது காலை அவன் ஒரு விபத்தில் இழந்து விட்டான். ) என எல்லாவற்றையும் இழந்து விட்டான்.

இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பெனியில் ஒரு தோல் பையில் சாம்பிள்களை எடுத்துக் கொண்டு, சைக்கிளில் சென்று ஆர்டர் எடுத்து வர வேண்டும். மாதம் நூறு ரூபாய் சம்பளம். தங்குமிடம் உணவு இலவசம். ஆனால் விதி அவனது வாழ்வில் விளையாடி விட்டது. ஒரு திங்கள் கிழமை அவன் சைக்கிள் விபத்துக்குள்ளானது. . அதல பாதாளத்தில் விழுந்ததான்.அறுபத்து நான்கு கொடிய இரவுகளுக்குப் பின் ஒரு நீண்ட ஊன்று கோலுடன் மஜீத் தெருவில் இறக்கி விடப்பட்டான்.. அடடா இந்த வாழ்க்கை ஏதுமற்றவர்களைத் தான் மேலும் மேலும் கசக்கிப் பிழிகிறதா..?

இனி காதலி சுகறாவின் முகத்தில் எப்படி போய் அவன் விழிப்பான் ? அவள் அவனை விரும்புவாளா ? ஒன்றரைக் கால் மஜீது என்று அழைப்பாளா? இல்லை இல்லை அவள் வாழ்க்கையையே அவனுக்காக அர்ப்பணித்தவள். ‘கொஞ்சம் பெரிய ஒண்ணு , ‘ இப்படித் தான் அவள் அவனை முதலில் அழைப்பாள்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனது வாழ்க்கை அவனது பால்ய கால சகி சுகாறாவோடு தான் கழிந்தது. அப்போது அவளுக்கு ஏழு வயது . அவனுக்கு ஒன்பது வயது, அண்டை வீடுகள் அந்த வயதில் மோதலில் ஆரம்பித்த அந்த தூய சிநேகம் பிறகு காதலாகி கசிந்துருகி இன்றும் இப்படி துயரத்திலும் தொக்கி வந்து நிற்கிறது. சுகறா மஜீத்திற்காக உயிரை கேட்டாலும் உடனே கொடுத்து விடுவாள். அவன் படிக்கிற காலத்திலேயே தன் தந்தையோடு மனஸ்தாபம் கொண்டு , ஊரை விட்டே ஓடிப் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்பு திரும்பி வருகிறான். அவனிடம் இருப்பதெல்லாம் இப்போது பயண அனுபவங்களும் சில புத்தகங்களும் மட்டும் தான் .

ஊரில் பழைய மாதிரி எதுவும் இல்லை அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரான வாப்பா , இப்பொழுது சில நபர்களால் ஏமாற்றப்பட்டு வறுமை கோட்டிற்கு கீழே வந்து விட்டார்.

உம்மா பொலிவிழந்து போய் விட்டாள். தங்கைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். வீடு எந்த நேரத்திலும் கடன்காரர்களினால் ஏலத்திற்கு போய் விடும் என்ற நிலமை

அவன் இத்தனை வருடங்களில் தன் காதலி சுகறாவுக்கு ஒரு மடல் கூட எழுதவில்லை எத்தனை வருடங்கள் கழித்து திரும்பி வந்தாலும் அவள் காத்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவன் வந்து சேர்ந்தான் அந்த நம்பிக்கையிலும் இப்போது மண் விழுந்து விட்டது ஆம் ஒரு வருடத்திற்கு முன்பு தான் | அவள் இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டாள். தந்தையில்லாத குடும்பம். அவளுக்கு அடுத்த தாக இரண்டு சகோதரிகள் . வேறு வழியில்லை. ஏற்கனவே மணம் முடித்து குழந்தை உள்ளவனுக்கு , அவள் இரண்டாவதாக முடித்து வைக்கப்பட்டாள்.

அந்த இன்னொருவன் அதாவது அவளது கணவன் இனியவன் அல்ல பேராசைக் காரன். இவளுடைய சில பொன் நகைகளுக்காகவும் , பணத்திற்காகவும் மட்டுமே ஆசைப் பட்டு ,அவளை அவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டான். அவனிமிருந்து அவள் வாழ்க்கை முழுவதும் பெற்றது வெறும் அடியும் உதையும் தான். மேலும் குடும்ப சொத்தில் அவளுடைய பாகத்தைப் பிரித்து வாங்கி வரச் சொல்லி அவளுடைய சொந்த வீட்டிற்கு அனுப்பி விட்டான் .

அவள் தந்தை அவளை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் பாதியிலே இறந்து போனார் .. அவளது தந்தை இறந்ததிலிருந்து , அவளது வாழ்க்கையில் அவள் கண்ட ஒரே மகிழ்சி மஜித் மட்டுமே.
.

விதி இப்படி விளையாடி விட்ட நிலையில் அவனைப் பார்க்க அவள் மறுபடியும் அவனுடைய வீட்டிற்கு வருகிறாள் ,எந்த மஜீத்தை அவள் உயிராக நினைத்தாளோ , அவனுடைய முகத்தை கூட இப்போது ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை..

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் , சீட்டு கட்டுக்களைப் போல கலைத்துப் போட்டு விளையாடுகிறது. ! அடக் கடவுளே ! மஜீத் பார்க்கிறான் . சுகறா பழைய சுகறாவாக பேரெழில் கொண்ட வளாக இல்லை. எலும்பும் தோலுமாக துருத்திக் கொண்டு உருக்குலைந்த பிண்டமாக மாறிப் போயிருக்கிறாள்..

விதியே விதியே இனி இவர்களை என்ன செய்யப் போகிறாய் ? சுகறா இனி கணவன் வீடு செல்லப் போவதில்லை. செத்தாலும் இங்கே மஜீத் தோடு தான் சாவாள்.
மஜீத்துக்கும் அவளை மண முடித்துக் கொள்ள ஆசை தான். ஆனால் குடும்பம் . வீடு வாப்பா….. உம்மா … சகோதரிகள் கடமை ?

அம்மா கடன் வாங்கி பணம் கொடுத்து அவனை கண் காணாத இந்த தேசத்திற்கு அனுப்பி வைத்தாள். வந்த இடத்தில் அவன் எதையும் வருமானமாக சேர்த்து வைக்கவில்லை . ஆனால் இழந்ததோ ஏராளம்.

ஒரு மனிதனை காலம் இதற்கு மேல் சோதிக்க முடியாது . சென்ற மடலில் உம்மா சுகாராவைப் பற்றி மிகவும் விசனமாக எழுதியிருந்தாள். சுகாறா கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து கொண்டிருக்கிறாள் . எப்போதும் இருமல் தான் . அவளுக்கு மருத்துவ வசதி செய்து சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி இருந்தாள்.

அதை வாசித்ததும் இவனுக்கு உயிர் உதறியது. பணத்திற்கு எங்கே போவான் ? மாதச் சம்பளமாக கிடைப்பதே சில ரூபாய்கள் தான் .அதையும் வீட்டுக்கு அனுப்பி விடுகிறான்.

சொகறா சொகறா !உனக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது. நான் மீண்டும் ஒரு முறையாவது உன் முகம் பார்க்க வேண்டும். பிழைத்துக் கிட என் இராஜகுமாரியே!

உன் முகம் பார்த்த பின்பு தான் என் உயிர் பிரிய வேண்டும் ” என் பால்ய சகியே எனக்காக உயிர்த்திரு. அவசரப் படாதே. ஒரு வேளை மரணிப்பதாக இருந்தால் நானும் உன்னருகே வந்து விடுகிறேன். இருவரும் சேர்ந்தே மரணிப்போம் . என் ராஜ குமாரியல்லவா நீ அவசரப் படாதே !

ஆனால் அவனது ராஜ குமாரி அவசரப் பட்டு விட்டாள். அடுத்த சில நாட்களில் உம்மாவிடமிருந்து மீண்டும் ஒரு மடல் வருகிறது. நடுங்கும் கரங்களால் ம அதைப் பிரித்து வாசித்துப் பார்க்கிறான் மஜீது . அடுத்த நொடி இந்த பிரபஞ்சமே அவனுக்கு சூன்யமாகி ப் போய் விட்டது.

அவன் யாரை உயிருக்கு உயிராக நினைத்திருந்தானோ, யாரைப் பார்க்க வேண்டுமென்று அவன் உடலில் இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ அந்த அந்த சுகறா மரித்துப் போய்விட்டதாக உம்மா எழுதியிருந்தாள்.

” அன்புள்ள மகன் மஜீது அறிய , உன் உம்மா எழுதுவது, முந்தா நாள் நேரம் வெளுக்கும் போது நம்ம சுகறா மரித்துப் போய் விட்டாள் ”

மஜீது இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போதே செத்து கல்லாகி கொண்டிருந்தான். இனி மேல் அவன் தினம் தினம் சாக வேண்டியது இருக்காது.கடவுள் கைவிடமாட்டார் என நினைத்திருந்தான். நினைத்ததா நடக்கிறது ?

இந்த இதயமற்ற உலகில், அவன் இதயமாக துடித்துக் கொண்டிருந்த அந்தப் பால்ய கால சகி சுகாறா வும் நிரந்தரமாகப் பறந்து போய் விட்டாள். அவளுடன் வாழப் போகும் வாழ்க்கையை நினைத்து தான் அவன் மூச்சை இழுத்து வைத்துக் கொண்டிருந்தான் . கடைசியில் அவளும் தன் மூச்சை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

இந்த இறுதி நிமிடத்தில் மஜீதின் மனதில் உறுத்திக் கொண்டு இருப்பது ஒரே ஒரு கேள்விதான் . அவன் ஊரை விட்டு ,இந்த தேசத்தை நோக்கி கிளம்பி வரும்போது , அவள் சுவரோடு சுவராக சுவராக சாய்ந்து கொண்டு அவனிடம் ஏதோ சொன்னாள்.

அவன் வேகமாக கிளம்பி வந்த நேரத்தில் அது என்ன வார்த்தை என்று சரியாக காதில் சரியாக விழவில்லை … அது என்ன வார்த்தையாக இருக்கும். ? இப்போது மஜித்துக்கு அவள் அவனிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்னவென்று தெரிந்தால் தலை வெடித்து விடாமல் இருக்கும்.

இனி இப்படி மறுபடியும் கேட்டதற்கு அங்கே மஜீது உயிரோடு இருப்பானா என்னவோ ?

நண்பர்களே ! பால்ய கால சகி என்ற இந்த சிறிய குறுநாவலை இவ்வளவு உயிர்ப்போடு படைத்ததற்கே நாம் முகமது பஷீர் என்ற அந்த மகத்தான கலைஞனை உச்சி மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் .. நான் முறிந்த சிறகுகளை மொழி பெயர்த்த போது அடைந்த பரவசத்தை மறுபடியும் இந்த பால்ய கால சகியை வாசித்த போது அடைந்தேன். இதை வாசித்த பின்பு

கலில் ஜிப்ரான் – செல்மா பேரல
மஜீது – சுகறா என்ற இருவரும் என்றுமே நம் மனதை விட்டு அகலப் போவதில்லை.

குளச்சல் யூசுஃப் ( முகமது பஷீராகவே மாறி மிகவும் உயிர்ப் போடு தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார். அவரை நாம் போற்ற வேண்டும்.

நூலின் தகவல்கள் : 

நூல் : பால்ய கால சகி (மலையாளம் )
குறு நாவல்
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
மொழி பெயர்ப்பு : குளச்சல் யூசுஃப்
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ 130 /

நூல் அறிமுகம் எழுதியவர் : 

தங்கேஸ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *