பானை செய்வோம் பயிர் செய்வோம்
இந்த கொரானா காலகட்டத்தில் மிகவும் போற்றத்தக்க பணிகளைச் செய்தவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவுப் பணியாளர்களும் தான்.. உயிரைப் பணயம் வைத்து தங்கள் பணிகளை மேற்கொண்டார்கள்.. நாம் வீட்டு வாசலில் நின்று கைகளைத் தட்டியும் விளக்குகள் ஏற்றியும் நன்றி தெரிவித்தோம்.. இதனால் அந்தப் பணியாளர்களுக்கு என்ன பிரயோஜனம்? கிராமங்கள், நகரங்களில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக , நிரந்தரமற்ற ஊதியத்துடன் அளவுக்கு மீறிய பணிச்சுமையுடன் நாட்களைக் கடத்தும் அந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு நமது கைதட்டல் ஓசையும் விளக்கின் ஒளியும் என்ன தந்துவிடும்?
மருத்துவருக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறதோ அதே சம ஊதியம் பொதுசுகாதாரத்தைப் பேணும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர் காஞ்சா அய்லய்யா. அதை விரிவாகப் பார்ப்போம்.
2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு அறிவித்த போது ஏற்கனவே அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருந்த வசதிமிக்க, உயர் சாதி மாணவர்கள் பலரும் இந்த அறிவிப்பிற்காக போராட்டத்தில் இறங்கினர்.காய்கறிகள் விற்போது போலவும் தெருக்களைக் கூட்டிப்பெருக்குவது போலவும் காலணிகளைத் தைப்பது போலவும் நடித்துக் காட்டினர்.
இவர்கள் வைத்து நடித்துக்காட்டிய காய்கறிகளை இவர்கள் விளைவிக்கவில்லை. கூட்டிப் பெருக்கிய விளக்குமாறும், அந்த செருப்பும் கூட இவர்கள் உருவாக்கியதில்லை. இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உழைப்பாளி மக்களை, அல்லது அவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பணிகளை மிகவும் இழிவாக நினைக்கச் செய்தது எது? என்கிற கேள்வியின் விளைவாக உருவாகியதே பானை செய்வோம் பயிர் செய்வோம்: நம் காலத்தில் உழைப்பின் மதிப்பு என்னும் இச்சிறு நூல்.
நம் காலத்திய குழந்தைகளுக்கு நாம் உழைப்பின் மேன்மையை போதிய அளவுக்கு உணர்த்தத் தவறிவிட்டதன் விளைவு தான் இது. மூளை உழைப்பு தான் உயர்ந்தது. உடல் உழைப்பு மிகவும் கேவலமானது. நமக்கு வாய்த்த வாழ்க்கை. வேறு வழியில்லை. ஆனால் இதே நிலை தன்னுடைய குழந்தைகளுக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் வந்து விடக்கூடாது என்று தான் ஒவ்வொரு உழைப்பாளியும் கூட நினைக்கிறான். காரணம், சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கிற மரியாதையும் ஊதியமும் வாழ்க்கைத் தரமும் அப்படி இருக்கிறது.
நம்முடைய கல்வித் திட்டத்திலும் கூட உடலுழைப்பின் உயர்வு குறித்து பாடப் புத்தகங்களோ இதர நூல்களோ கூட இல்லை. சமூகத்திற்கு அவசியமான பணிகளை தங்களது நுண்ணறிவின் மூலம் படைப்பாக்கச் சிந்தனையுடன் செய்து வந்த மக்களை அவர்களது தொழில்களின் அடிப்படையில் பாகுபாடுகளை உருவாக்கி சாதியக் கட்டமைப்பை வளர்த்தெடுத்து கொண்டாடப்பட வேண்டிய மக்கள் அடக்கி ஆளப்பட்டனர் என்பதை வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறது.
இன்று நாம் உண்ணும் உணவுகளைக் கண்டறிந்த முதன்மை ஆசான்கள் என பழங்குடியின மக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.. இன்று நாம் பலவகையான உணவுகளை உண்கிறோம். ஆதிகாலத்தில் இருந்த மக்களுக்கு இந்த அறிவு எப்படி வந்திருக்கும்? அனுபவத்தின் கண்டுபிடிப்பு அல்லவா? விசச் செடிகளைக் கூட தின்று இறந்திருக்கக் கூடும். அந்த அனுபவம் தான் இது நாம் உண்பதற்கான தாவரம் அல்ல என்கிற அறிவு.
அதே போல நாம் உண்ணும் இறைச்சியில் எந்தெந்த விலங்குகளின் இறைச்சி நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளும், எவையெல்லாம் சுவையாக இருக்கும்? எந்த பருவத்தில் எந்த காய்கறிகள் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களுடைய கண்டுபிடிப்பு இல்லையா? அவர்களை மதிப்புடன் நடத்தி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டாமா என்று கேட்கிறார்.
இதே போல கால்நடைகளைப் பராமரித்து பாலும் தயிரும் நெய்யும் தந்து பால்பண்ணை மற்றும் தோல், இறைச்சி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் மேய்ப்பர்கள்.. முதன்முதலில் வேதிவினை புரியும் சோப்புகளைக் கண்டறிந்த சலவையாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், குயவர்கள், நாவிதர்கள், தோல்பொருள் கைவினைஞர்கள் எனப் பலரையும் பற்றி அறிமுகம் செய்துள்ளார். ஒவ்வொரு தொழிலும் (கண்டுபிடிப்பும்) எந்தெந்த காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு அந்த மக்கள் என்னவிதமான சிரமங்களை எல்லாம் சந்தித்தனர் என்பதை பால், தயிர், நெய் என நக்கித் தின்னும் சில சமூகத்தினர் அறிவதில்லை. அதை உருவாக்கும் மக்களை மிகவும் கீழ்நிலையில் வைத்துப் பார்ப்பது என்னவகை நியாயம் என்று கேட்கிறார் நூலாசிரியர்.
ரோமானியப் பேரரசில் ஒரு பெரிய குடுவையை பொது இடத்தில் வைத்து அதில் பொதுமக்களின் சிறுநீரைச் சேகரித்து அதை துணிகளின் அழுக்கைப் போக்குவதற்கு பயன்படுத்தினர்.
பழங்குடியின மக்களுக்கு சுமார் 10,000 தாவரங்களைப் பற்றித் தெரியும். அதில் 8000 தாவரங்கள் மருத்துவகுணம் உடையவை.
பால் தரும் பசு, எருமை மாடுகளில் பசுவிற்கு மட்டும் சமூகத்தில் உயர்ந்த இடமும் எருமையைத் தாழ்வாகவும் நினைக்கிறோம். எமனுக்கு வாகனமாக எருமையை வைத்திருக்கிறோம். ஆனால் பால் உற்பத்தியிலும் சரி, பாலின் தரத்திலும் சரி, பால் பொருளாதாரத்திலும் சரி எருமையே டாப்..
அரசரின் குடும்பத்தினர், மந்திரிமார் முதற்கொண்டு படைவீரர்கள், குதிரைகளைக் கவனித்துக் கொள்பவர் என அரசு நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் எவ்வளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிற வரையறுக்கப்படுகிறது. 64000ல் தொடங்கி அன்றைய காலகட்டத்தில் உயிர்காக்கும் மருத்துவர்களாகவும் செயல்பட்ட நாவிதர்களுக்கு வெறும் 4 என வழங்கப்பட்டுள்ளது (கௌடில்யரின் அர்த்த சாஸ்திர குறிப்பு) எனப் பல்வேறு ஆர்வமூட்டும் தகவல்கள் பல உள்ளன. இது போல ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவசியமான குறிப்புகள், செய்து பாருங்கள், உங்களுக்கு தெரியுமா போன்றவையும் இடம்பெற்றுள்ளது வாசிப்பை மேலும் சுவாரசியப்படுத்துகிறது.
ஒரு மருத்துவர் நோயாளியைக் கையாளும் போது இருதரப்பினரின் பாதுகாப்புக்காகவும் கையுறை அணிந்து கொள்கிறார். அதே போல ஊர்ப் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்பவர்கள் துப்புரவுப் பணியாளர்கள். அவர்களுக்கும் எந்த வித தொற்றும் ஏற்படாத வண்ணம் உரிய நவீனப் பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவேண்டும். தனிநபர் சுகாதாரம் பேணும் மருத்துவருக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறதோ அதே சம ஊதியம் பொதுசுகாதாரத்தைப் பேணும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இரு சாராருடைய பணிகளும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார் நூலாசிரியர்.
இந்நிலைகளை மாற்ற பள்ளிகளிலும் வீட்டிலும் உடலுழைப்புக்கான மதிப்பைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் வேண்டும். தங்கள் உழைப்பால் உற்பத்தித் தொழில்களை வளர்த்த சமூகங்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களது உழைப்பு கேவலமானதாகக் கருதப்பட்டது. உற்பத்தி தொழில்களில் ஈடுபட்ட சமூகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அறிவியலின் வரலாற்றையும் உழைப்புக்கு உரிய சமூக மரியாதை அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்ற இந்நூலின் ஆசிரியர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் காஞ்சா ஐலய்யா . இதனை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் தமிழகம் அறிந்த கல்வியாளர் அன்பிற்குரிய தோழர் அருணா ரத்தினம் அவர்கள். வித்தியாசமான முறையில் ஓவியங்களை வரைந்திருப்பவர் துர்காபாய் வியாம் என்னும் போபால் கலைஞர். துளிகா வெளியீடு.
— தேனி சுந்தர்