ஓர் அரசுப் பள்ளியின் கலை விழா!
🌹💥🌹💥🌹💥🌹💥🌹💥🌹
கலகலப்பாகிவிடும்
ஒரு மாதத்திற்கு முன்பே!
பொறுப்பாசானிடம்
பெயர்களைப் பதிந்து
என்னப் போட்டியென
ஊர்ஜிதப் படுத்திய
அந்த நிமிடத்திலிருந்து….
மாணவரென்ற
நிலை மாறி….
இராஜா மந்திரி கவிஞர்
ஓவியர் அதிகாரி ஆசிரியர்
நடிகர் பாடகர் நாட்டிய விற்பன்னர்…..
இப்படியானவர்களின்
கூடாரமாகிவிடும்
கல்விச் சாலை!
கற்றலில்
செய்துக் கற்றல் முறை
மிகச் சிறந்தது!
அது
கலை விழா
பயிற்சியில்
கரை புரண்டோடும்!
ஆசிரியரெல்லாம்
அந்தக்கால நினைவுகளில்
தன்னிலை மறந்து
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் குறைந்து….
இசை மேதைகளாக
நாட்டியப் பேரொளிகளாக
கற்பனைப் பெருக்கெடுக்கும்
கவிஞர்களாக…
பன்முகத் தன்மையின்
ஒருமுகமாகி
கோப தாபம் மறந்து
கலைஞர்களை உருவாக்கும்
கலை ஞானியரென்ற
உண்மையை நிரூபிக்கும்
உயர் பேரருளாளராகி….
கலைகட்டும் கலை வளரும்
மனிதம் மலரும்
மகத்துவம் புலரும்!
தன்னலமற்ற
சமூக நீதிமான்கள்
ஆசான்கள்!
அவர்களுக்குத் தெரிந்த
சட்டமெல்லாம்
சமத்துவம்… சமத்துவம்… சமத்துவம்!
பல்கலை வித்தகர்
ஆசான்கள்!
கலைக்கழகத்தில் போட்டிகள்;
பூக்களுக்களுக்கிடையே
ஏது போட்டி?
எந்தப் பூ அழகுப்பூ?
எந்த மின்னல் அழகு மின்னல்?
எந்தக் குயில் இனிமைக்குரல்?
எந்த மயிலின் ஆட்டம்
எடுப்பு?
சிப்பம் பிரித்தெடுத்த
சிங்காரச் சிலைகளில்
எந்தச் சிலை கவின் மிகு கண் சிமிட்டும் சிலை?
அழகை… அன்பான வடிவத்தை
அன்றலர்ந்த அழகு மலரை
அளப்பதற்கு ஏது அளவுகோல்?
அளவுகளை….
கற்றுத் தரும்
ஆசான்களுக்கோ
தர்ம சங்கட நிலை!
ஆசான்களே…
உங்களை
நீதிபதிகளேயென
விளிக்க முடியவில்லை;
நீதிபதிகளுக்கும்
நீதியைச் சொல்லிக்கொடுத்த
நீதியாசான்கள் நீங்கள்!
அவன்
ஆடும் ஆட்டத்தில்
‘அடவு’ கள்
அவன் மாமன் ஆடிய
சாவுக்கூத்தின் சங்கதியிருக்கும்;
அவள் பாடும் பாட்டின் ராகத்தில்
பாட்டியின் ராகம் இருக்கும்!
அந்த
ராஜபார்ட்
நடந்து வரும் நடையில்
அவனப்பன்
சேற்றில் நடந்த நடை வாசம் இருக்கும்;
அவள் ஆடும்
அந்த நடன அசைவில்
அவள் அம்மாவின்
நாற்று நட்டொடிந்த
இடுப்பின்
வலியசைவுத் தெரியும்!
அவர்களுக்குத்
தெரிந்த மொழியில்தானே
அவர்களால்
பேச முடியும்?