நீங்களும்
அவாளானால்?
**
உங்களைப் போலவே
கோவணங்கட்டி..
ஏர் ஓட்டியவன்
விதை விதைத்தவன்
நாற்று நட்டவன்
களை பறித்தவன்
சேற்றுக் கையுடன்
கஞ்சிக் குடித்தவன்
கருவாடு ருசித்தவன்
காவல் காத்தவன்
கதிரறுத்தவன்
கட்டுச் சுமந்தவன்
களம் கண்டவன்
மூட்டை சுமந்தவன்
வியர்வை நாத்தத்தில்
வித்தியாசமற்றவன்
வீணாய்ப் போன
சாராயம் குடித்தவன்
ஓலை குடிசையில்
உண்டு உறங்கியவன்
விடியாத வாழ்க்கையை
புரியாமல் வாழ்பவன்
என்னத்த உன்னிலும்
ஒசரத்தில் போயிட்டான்?
கல்லை சுமந்தவன்
காட்டைத் திருத்திட
கை கோர்த்து நின்றவன்
என்னத்த வாழ்ந்திட்டான்
உன்னிலும் உயர்ந்திட்டான்?
கோயிலைக் கட்டிட
கூட இருந்தவன்
குளத்தினை வெட்டிட
குருதியைச் சிந்தினான்
ஓடோடிச் சென்று
உதவியக் கரங்கள்தான்
உள்ளே வராதே
ஓரமாய்ப் போவென
கள்ள மனத்தினால்
கடுமையாய் எதிர்க்கிறாய்;
கோயிலைத் தொடாதே
கும்பிட வராதே
குலசாமி குத்தமாம்
மொத்தமாய்ச் சொல்லுறே;
அவாளைப் போலே நீர்
ஆனது எப்போது?
ஆருதான் உனக்கிந்த
ஆலோசனைத் தந்தது?