கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
(2)
வெள்ளையும் ஒன்று
கொள்ளையும் ஒன்று
கொடி நிறம் வேறு
(3)
தாளமிசைக்கும் கால்கள்
தலையசைக்கும் பயிர்
களை பறிப்பவள் பாட்டு
(4)
கொடி பறக்கிறது
கோட்டைகள் எழுகிற வயல்வெளி
குடியானவன் ஆண்டி
(5)
மருந்தில்லா உணவுமில்லை
மதுவுண்ணா பயிருமில்லை
வயலெல்லாம் சாராய புட்டிகள்
(6)
மன உறைக்குள் வாள்
கைக் குலுக்கல் நடிப்பு
அரசியல் களம்
(7)
தேதிகள் அறிவிப்பு
கடன் வாங்கும் பெற்றோர்
வசூல் மையங்கள் திறப்பு
(8)
கோடை வெப்பம்
குளு குளு குளிர்ச்சி
பெருங்கோயில் கருவறை
‘அதன் பெயர் காதல்’
*********************
எப்படிங்க சொல்ல முடியும்?
வேண்டாமென்றோ…..
அல்லது
செய் என்றோ?
அது என்ன
உடல் சார்ந்த வேலையா?
இயல்பூக்கத்தை
இத்யாதி… இத்யாதியென
எப்படிங்க
கற்பனை செய்ய முடியும்?
குழந்தைகளுக்குப் புரியாது;
குழந்தைப் பருவம் கடந்து
குமரப் பருவம் நின்று… கடந்து
வந்தவரே…..
சொல்லுங்கள்;
வேண்டாம் என்றோ
அல்லது
செய் என்றோ
எப்படிச் சொல்ல முடியும்?
நமக்குத் தேவையற்றயொன்றை
தேவையான ஒன்றுக்காக
வேண்டாம் என
அடுத்தவரை
நிர்பந்திக்கலாமா?
மனித மனமென்ன
சொல்லுவதை கேட்கும்
கணினியா?கருவியா?
மனம் மனம் மனம்!
இரு மனம் கலந்த
உயிர்க் கலப்பு!
அதன் பெயரை
வேண்டுமானால்
‘ காதல்’என்று சொல்லலாம்.
–பாங்கைத் தமிழன்