பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் – நூல் அறிமுகம்
கரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட Her Stories பதிப்பகம் பெண்களை எழுத வைத்துப் புத்தகங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அந்த முறையில் சமீபத்தில் பார்ப்பனக் குடும்பத்தின் உள்ளிருந்தே ஒரு பெண்ணின் குரலைத் தொடராக வெளியிட்டு அதனை புத்தகமாக்கியும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தை இரண்டே நாளில் படித்து விட்டாலும், அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு அதைப் பற்றி எழுதுவதற்கே அவகாசம் தேவைப்பட்டது. அதனால்தான் ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பிராமணரல்லாத பலருக்கும் பார்ப்பனர்களுக்குள்ளேயே பல படிநிலைகள் உண்டு என்பது தெரிந்திருக்காது. அதை அவர்களது பல இடுகைகளைப் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். வடமாவிலிருந்து வாத்திமா, சிகண்டி வரைப் பல படிகள் அங்கு உண்டு. கிராமங்களில் (நான் பிறந்த அம்மாவின் ஊர் ஒரு கிராமம்) ஒரு படிநிலையிலிருந்து அடுத்த படிநிலையில் பெண் எடுத்ததைக் கூடப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் சேலை உடுத்தும் முறையிலிருந்தே அவர்கள் இன்னார் என்று சொல்ல முடிந்திருக்கிறது என்று என் தோழியர் ஒருவர் கூறினார். அந்த அளவுக்குக் கூர்மையாக இந்தப் பிரிவினை இருந்திருக்கிறது. முன்பு, ஒரு ஒற்றைப் பிராமணன் எதிரில் வந்தால் சகுனம் சரியில்லை என்று கூறுவர். அதற்கான விடை பின்னால்தான் தெரிந்தது. அரவிந்தசாமி ஒரு படத்தில் சிகண்டியாக நடித்திருப்பார். ஸ்ரீதேவி கதாநாயகி.
இப்போது மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி கடைசிக் காரியத்திலும் லாபம் பார்ப்பது ஒரு தொழிலாகி விட்டது. ஒருவரது வசதியைப் பொருத்து லட்சக் கணக்கில் கூட 13ஆம் நாள் காரியம் வரை கேட்டு வாங்குகிறார்கள். அதே நேரத்தில் அங்கேயே சில பிராமணர்கள் துவண்டு போய் நின்றிருப்பார்கள். அவர்கள் அதையே நம்பி பிராமணார்த்தம் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள். இதே போல் பல பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் செலவு செய்து திவசம் செய்வது என்பதும் ஒரு பெரும் சுமையாகவே பலருக்கு உள்ளது. செய்யாவிட்டால் முன்னோரின் சாபத்துக்கு ஆளாக நேரும் என்ற அச்சமும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
பெண்கள் படும் பாட்டையும் வசுந்தரா சிறப்பாக எடுத்துரைக்கிறார். ஒரு வீட்டில் ஆண் அதிகாலையில் எழுந்து பூசை முதலியவற்றைச் செய்தால், அதற்காக அந்த வீட்டில் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவர்கள் அவருக்கு முன்பே எழுந்து அனைத்தையும் செய்து வைக்க வேண்டும். எங்கள் வீட்டில் திவசம், பிற பண்டிகைகள் நடக்கும் போது நானே கவனித்திருக்கிறேன். ஆண்கள் பூசை முடித்து சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போய் விடலாம். ஆனால் பெண்கள்? குற்ற உணர்வுடன் தான் இதை நான் எழுதுகிறேன்.
அதேபோல் menstruation cycle குறித்தும் ஆசிரியர் எழுதியுள்ளார். இன்னும் கூட பல ஆண்களுக்கு சமையல் தெரியாது. அவர்களுக்கு சமைத்துப் போட வெளியிலிருந்து ஆள் வரும். என் வீட்டில் என் பாட்டி உடனே வந்து விடுவார்.
அதேபோல் சிறு வயதில், அறியாத வயதில் திருமணம் செய்யப்பட்டு கணவன் இறந்து விடும்போது அவர்கள் கைம்பெண்ணாகவே வாழ்க்கை முழுதும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டது எத்தகைய கொடுமை? அது மட்டுமல்ல, அவர்கள் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்திருப்பர்? அவர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அவர்களது எரிச்சல் வெளிப்படும். சிறுவர்கள் அவர்களைத் துரத்திச் சென்று மேலும் வேதனை அடையச் செய்வதுண்டு. மொட்டப்பாட்டி என்று தூற்றுவர். அப்போது அவர்களது வேதனை புரியவில்லை. இப்போது புரிகிறது.
இந்த நிலையில்தான் மகாத்மா பூலே செய்த காரியம் எவ்வளவு மேன்மையானது என்பது புரிகிறது. அந்தப் பெண்களில் யாராலோ பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடையும் பெண்களை வீட்டில் சேர்த்து அவர்களுக்குப் பிரசவம் பார்த்து அனுப்பும் வேலையை பூலேவும், சாவித்திரிபாய் பூலேவும் செய்துள்ளனர். அப்படிப் பிறந்த ஒரு குழந்தையைத்தான் தத்தெடுத்தும் உள்ளனர்.
மேலும் புத்தகத்தில் மனுஸ்மிருதியிலிருந்து ஏராளமான எடுத்துக் காட்டுகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மனுஸ்மிருதியை யார் கடைப்பிடிக்கிறார்கள் என்று வெட்டிப் பேச்சுப் பேசலாம். ஆனால் உண்மையில் அது கண்ணுக்குத் தெரியாமல் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில்! இன்றும் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், சாதியை மீறித் திருமணம் செய்தால் எத்தகைய விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பெரியார் கூறுவது போல் பெண்களின் கைகளிலிருந்து கரண்டியைப் பிடுங்கிக் கொண்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்பதுதான் சரியான தீர்வு என்று தோன்றுகிறது. ஆம். அப்படிப் படித்த முதல் தலைமுறை இரட்டை சுமைகளைச் சுமந்தாலும், இன்றைய மேல்தட்டு, ஓரளவுக்கு நடுத்தட்டுப் பெண்கள் அதை மீறிச் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இது வரவேற்கத் தகுந்த மாற்றமே. அதையும் தாண்டி பெரியார் சொன்னது போல் பிள்ளைப் பேறே வேண்டாம் என்றும் இந்தத் தலைமுறை நினைப்பதையும், திருமணம் ஒரு தேவையற்ற பிணைப்பு என்று கருதுவதையும் கூடப் பார்க்க முடிகிறது. குடும்ப அமைப்பு என்பது நாகரீகத்தின் உச்சம் என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். ஆனால் ஆணாதிக்க மனோபாவத்தில் இருந்து குடும்பம் நடத்தப்படும்போது, சமூகம் செயல்படும்போது, அந்த நிறுவனமே நொறுங்கி விடும் நிலையில் செல்கிறது. சோஷலிச சமுதாயத்தில் சமுதாய சமையலறை என்று இருந்தது. அது பெண்களின் கரண்டியைப் பிடுங்கும் வேலை என்றே சொல்லலாம். இனி வரும் காலத்தில் இதுவும் நடக்கலாம்.
வரதட்சணை. இது தற்போது குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் குடும்பத்தை வைத்து மட்டும் கணக்கிட முடியாது. எனினும், பெண் வீட்டார் பெரும் செலவு செய்து திருமணம் செய்து கொடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல செலவுகள் வீணானவை என்றே தோன்றுகிறது.
மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைத்துப் பிரிவினரும் படிக்க வேண்டும். உள்ளிருப்பவர்களுக்கு ஓரளவுக்கு அதில் உள்ள செய்திகள் தெரியும். ஆனால் உள்ளிருந்தே ஒரு புரட்சியைக் கிளப்பி விட்டிருக்கிறார் தோழர் வசுந்தரா. அவருக்கு அவரது வீட்டினரே தகவல்களைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள், எழுத ஊக்குவித்திருக்கிறார்கள் என்பது இன்றும் கூட அதிசயமே.
எனக்குப் பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. பல தோழர்கள் எழுதும் போது, இந்தப் பிரிவில் பிறந்திருந்தாலே அவர்கள் பிற்போக்கானவர்களாகத்தான் இருக்க முடியும், அவர்களை இரக்கமின்றித் தாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். விவாதித்தும் இருக்கிறேன். என் எண்ணம் என்னவென்றால், சிலர் அதை மீறி எதாவது செய்யும் போது, உதாரணமாக, கலப்பு மணம் செய்தல், அவர்களை ஊக்குவித்து, அவர்களை முழுமையாக இந்த பார்ப்பனீயத்திலிருந்து வெளியே கொண்டு வர முயல வேண்டும் என்பதாகும். பார்ப்பனீயத்தையோ, அவர்களது முந்தைய செயல்பாடுகளையோ விமர்சிக்க வேண்டாம் என்பது என் கருத்து அல்ல. ஆனால் அவர்கள் செய்தது தவறு என்பதை உணர வைத்து விட்டால், முற்போக்கு முகாமுக்கு அவர்கள் வந்து சேரும் வாய்ப்பு அதிகமாகும் என நினைக்கிறேன். அதை விடுத்து எல்லாரும் அப்படித்தான் என்று தாக்கும் போது, மீண்டும் அவர்கள் பிற்போக்காக மாறி விடுகிறார்கள். இன்று முற்போக்கு முகாம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டிய நிலை உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், உள்ளிருந்தே எழுந்திருக்கும் இந்தக் கலகக்குரல் பாராட்டுக்குரியது. சாதி, மதக் கட்டமைப்பை உடைத்து மனிதர்களாக மீண்டெழ இத்தகைய முயற்சிகள் உதவும்.
நூலின் தகவல்கள் :
நூல் : பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்
ஆசிரியர் : வசுந்தரா ராமன்
வெளியீடு: Her stories
நூல் அறிமுகம் எழுதியவர் :
கி.ரமேஷ்
மொழி பெயர்ப்பாளர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.