இந்த நாவலை வாசித்து முடித்ததும்
மதிப்புரை எப்படி தொடங்குவது என்பதில்
எனக்குள் இரண்டு நாட்களாகவே எண்ணங்களும், வார்த்தைகளும் பிடிகொள்ளாமலேயே அவஸ்தையாக..
நாவலின் நிலவரையியல் என்பது வாசிக்கும் கண்கள்  மனிதர்களுள் வாழும் மனங்களைப் பொறுத்து;  உலகம் எங்கிற்கும் தன்னை பொறுத்திக் கொள்கிறது.. எல்லா நாட்டிற்கும்; எல்லா மனிதர்களுக்கும் ஒத்திசைவாக இந்த நாவலோட்டம் கிஞ்சிற்றும் தடையின்றி சலசலக்கும் நீரோடையின் சப்தத்தையும்.. அயிரை மீனின் சுகமான உரசலையும், தீண்டிடும் நேரமதில் ஆழ்ந்த வலிகளையும் ஏற்படுத்துகிறது. கதாப்பாத்திரங்கள் எந்த ஒன்றிற்கும் பெயர் அடையாளம் கிடையாது.  “ஒரு நாய், மற்ற நாயை பெயர் வைத்தா அறிந்து கொள்கிறது.? அதன் மோப்ப அடையாளமே முக்கியம்.” அப்படித்தான் இந்த நாவலின் கதை மாந்தர்கள் அனைவரும் அவரவர் குரல் வழியாக நாவலுக்குள் உரையாடும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளப்படுத்தப்படுவார்கள்.. வாசிக்கும் நமக்கு..? அதுதான் நாவலாசிரியரின் சவாலான ஒன்றாக நான் அறிகிறேன். அந்த வகையில் “பார்வை தொலைத்தவர்கள்” என்கிற இந்த நாவலின் ஆசிரியர் “சரமாகோ” மிகச் சரியாக செய்திருக்கிறார்.
போர்ச்சுக்கீசிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவலை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து தமிழ் மண்ணிற்கு கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்  எஸ்.சங்கரநாராயணன் அவர்கள். 1998 ம் ஆண்டில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்நாவலை தமிழில் வெளிக் கொண்டு வந்திருக்கும் “பாரதி புத்தகாலயம்” மெச்சத் தகுந்த பணியினை செய்திருக்கிறது.. அனைவருக்கும் பாராட்டுதல்களும் அன்பும்.
பெருநகரமொன்றின் நான்கு வழிப்பாதை போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு அனுமதி கிடைத்ததும் விரைந்து செல்வதற்காக காத்திருக்கும் எண்ணற்ற போக்குவரத்து ஊர்திகளுக்கிடையே தன் காரை ஓட்டிவரும் ஒருவனுக்கு பச்சை விளக்கு எரிந்த அந்த நிலையில் கண்பார்வை போனால் என்னவாகும்.. அவசரமாக போகாக் கிடந்தவர்களுக்கு இந்த கார் நகராமல் இருக்கும் பொழுதில் வந்து எரிச்சலோடு விசாரிக்கும் போலீஸ், கண்பார்வை போன அந்த நபருக்கு தானாக முன்வந்து அந்த நபரை வீடு வரை கொண்டு சேர்த்திட உதவிடும் ஒருவர், தனக்கு உதவிய நபரை வீட்டிற்குள் அழைக்கலாமா வேண்டாமா.. தன் பார்வை போனதை பயன்படுத்தி வீட்டிற்குள் ஏதேனும் அசம்பாவிதத்தை நடத்திடுவாரோ என்கிற நினைப்போடு குருடன் படும் அவஸ்தை, அவர் சென்றதும் வீட்டிற்குள் நுழையும் மனைவியிடம் இவர் சொல்ல.. உடனடியாக கண் டாக்டரை சந்திக்கச் செல்வது; கண்டாக்டரை சந்திக்கச் சென்று ;
அங்கு டாக்டரை சந்திக்க வந்திருக்கும் மாறுகண் உடைய பையன், கண்பொறை நீக்க வந்திருக்கும் ஒருவர்,  கண்வலி நோயின் காரணமாக கருப்புக் கண்ணாடி அணிந்து விலைமாது தொழில் செய்து வாழ்ந்து வரும் இளம் பெண்,  இவர்களை மீறி டாக்டரை சந்தித்து தனக்கு வந்திருக்கும் திடீர் பார்வை போனது குறித்து பேசிடும்போது டாக்டரிடம் ஏற்படும் அதிர்ச்சி, “கண்பார்வை போனதும் இருட்டுக்கு பதிலாக  பால் நிற வெண்மையாக உணர்கிறீர்களா” இதென்ன நான் இதுவரை கேள்விப்படாத நோயாக இருக்கிறதே பேசிமுடித்து; நோயாளி வந்ததிற்காக சில வழக்கமான சிகிச்சயளித்து இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பி, வீட்டுற்கு வந்ததும் இந்த புது வித நோய் குறித்து தன் மனைவியிடம் பேசி, மருத்துவம் குறித்த சில புத்தகங்களை தேடி எடுத்து வாசித்து அப்படியே உறங்கப் போக, விடியற்காலை எழுந்ததும் அவரின் பார்வையும் தொலைந்திட;
BUY Paarvai Tholaithavargal book | பார்வை ...
உடனடியாக தான் சார்ந்த அரசு நிர்வாகத்திற்கு தன் மனைவி வழியாக போனில் தொடர்பு கொண்டு டாக்டர் நேரிடையாக  பேசிட அரசு நிர்வாகம் திகைத்து ஏதோ புதுவிதமான தொற்று நோய் பரவுகிறது போல் தெரிகிறது.. உடனடியாக இவர்களுக்கு சிகிச்சையளித்திட வேண்டும் என நினைத்து மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க, இதுவரை இப்படிப் பட்ட நோய் வந்தது கிடையாது; மருந்து, இனிதான் கண்டுபிடிக்க வேண்டும்.. உடனடியாக அந்த டாக்டரையும், அந்த முதல் குருடரையும் தனிமைப்படுத்திட வேண்டும் என்று சொல்லி,  டாக்டரை அழைத்துபோக
ஆம்புலன்ஸ் வர, டாக்டரின் மனைவியும் தனக்கும் கண் தெரியவில்லை என பொய் சொல்லி டாக்டரோடு ஆம்புலன்சில் ஏறி தனிமைப் படுத்தப் படும் இடத்தில் இருந்து கண் தெரியும் டாக்டரின் மனைவி வழியாக நாவலாசிரியர்  நாவல் முழுதும் நம்மை அழைத்துச் செல்வார்.
தனிமைபாடுத்தப்படும் இடத்திற்கு இருவராக செல்ல அங்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டிருப்பார்கள் முதல் குருடனும், அப்போதுதான் கண்பார்வையிழந்த அவரின் மனைவியும்.. தனிமைப் படுத்துதல் என்கிற பெயரில், அந்த நால்வரும் தப்பித்துப் போகாமல் இருக்க அரசும், நிர்வாகமும் அவர்களை பல வருடங்களாக பராமரிப்பு ஏதுமின்றி மூடிக் கிடந்த பயித்தியக்கார மருத்துவமனை ஒன்றினுள் ராணுவக் காவலோடு அடைத்து வைக்கப் படுவார்கள்.
அன்று மாலையே இன்னொரு ஆம்புலன்சில் ஒரு குழு வந்து சேரும் பார்வை மொத்தமாக இழந்து அவர்கள் யாரென்றால் டாக்டரிடம் மருத்துவம் பார்க்க வந்தவர்கள், விலைமாது,  வீட்டிற்கு சென்றதும்அவரோடு உறவு கொண்டவர், முதல் குருடனுக்கு உதவி செய்தவர், சிக்னலில் நின்ற போலீஸ், கருப்புக் கண்ணாடி அணிந்து மருந்து வாங்கச் சென்ற இடத்தில் மருந்து எடுத்துக் கொடுத்த மருந்தக ஊழியர்,  அப்போது அந்த விலைமாதுக்கு உதவிய காவலர் இப்படியாக அன்று இரவு வந்து சேர்ந்த அனைவரும் அந்த பயித்தியக்கார மருத்துவமனைக்குள் அடைக்கப்படுவார்கள்.
நகரம் முழுவது  குருட்டுத்தனம் பரவிடும் இத் தொற்று நோய்க்கு அரசாங்கம் “வெண்மை நோய்” என்று பெயர் சூட்டி இருக்கிறது என்பதை வந்தவர்கள் சொல்லி தெரிந்திடுகிறார்கள் டாக்டரும் அவர் மனைவியும். அரசாங்கம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வோடு இருப்பதாகவும், அறிந்தவர்கள் உடனடியாக அரசுக்கு தகவல் சொல்லிட வேண்டும் என்றும், இந்த நோய் கண்டவர்களை தனிமைப் படுத்துவதே சிறந்த வழி என்று அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தனிமைப் படுத்தப் படுபவர்கள் தங்கள் தனிமனித பொறுப்புணர்ந்து அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவர்களின் கடமை என்றும் தெரிவித்து இப்படி தனிமைப் படுத்தி அடைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். இப்படி குருட்டுத்தன்மை அடைந்தவர்களை அருகில் இருப்பவர்களும் தங்களோடு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறது இந்த அரசாங்கம்; ஏனென்றால் அவரால் தானும் இத் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் அவர்களிடம் வந்து விடுவதால் நமக்கு வேலை கடினமாக இருக்காது என அரசும் நம்புவதாக தெரிவிப்பார்கள் வந்தவர்கள்.
கொரோனா வந்து உலக மக்கள் எல்லாம் அச்சத்திலும், லட்சக்கணக்காணோர் தினமும் உயிர்பலியாகிட.. இன்னும் ஊரடங்கும், தனி மனிதப் பொறுப்புகளும், தனிமைப் படுத்தலும் , அரசின் வெத்துவேட்டு அறிவிப்புகளும் தினமும் வந்து கொண்டிருப்பது வாடிக்கையாகிட ஏதும் செய்திட வழியற்ற குருடர்களாகவே நாமும்.
சரி நாவலுக்குள் வருவோம் நாம். நான்கு பேரோடு தொடங்கிய தனிமைப் படுத்தல் தற்போது 240 படுக்கைகைகள் கொண்ட பரமரிப்பு ஏதுமற்ற மருத்துவமனைக்குள் 300க்கும் மேற்பட்ட குருட்டுதனம் கொண்டவர்களின் அன்றாட வாழ்வதனை டாக்டர் மனைவியினுடைய ஒளிவழியும் இரண்டு கண்களில் இருந்து பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். கண்பார்வை திடீரென போகும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும்.. அவரின் தேவைகளை எப்படி கண்பார்வையற்ற எதிரில் இருப்பவருக்கு புரிய வைப்பார்.. எதிரில் இருப்பவர் எந்தப் பக்கம், யார் இருக்கிறார்.?
பார்வையின்மை வழியாகப் பார்த்தல் ...
அவரின் கைகளில் என்ன வைத்துக் கொண்டு இருக்கிறார்? இவர்களிடையே தனிமனிதனாக இருக்கும் நம் ஒவ்வொருவரின் அனுகுமுறையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை பல இடங்களின் டாக்டர் மனைவியின் செய்கை வழியாக பதிவாக்கி இருப்பார். இப்படியொரு புது வகையான தொற்று நோய் பரவி வருவதை மென்மையோடு.. பொது மக்களின்பால் அனுசரணையோடு அனுகவேண்டிய அரசும், நிர்வாகமும் எப்படி கையாளுகிறது என்பதை நாவலாசிரியர் அவருக்கேயுரிய நையாண்டித்தனத்தோ வாசகன் யோசிக்க பதிவாக்கி இருப்பார்.
பேரிடர்காலத்தில் அரசு அறிவிப்பென்று..
 “குருட்டுத்தனம் ஒரு தொடர் வியாதியாய்ப் பரவிக் கொண்டிருக்கிறது. இக்கட்டான நேரமிது. தற்போது அதற்கு ‘வெண்மைநோய்’ என்று பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. இந்த “வெண்மை நோய்” பாதிக்கப் பட்டவர்களை தனிமைப் படுத்தி ஓர் இடத்தில் வைக்கிறோம். இதற்கு பக்கத்திலேயே அவர்களோடு பழகியவர்களையும் பொது மக்களிடம் இருந்து தனித்து வைக்கிறோம்”. இப்படி வைக்கப் பட்டவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் அரசுக்கு, பொது நலன் கருதி முழு ஒத்துழைப்பு அரசுக்கு நல்க வேண்டும்.
கட்டிடத்தை விட்டு ஒருவரும் வெளியேற முயற்சி செய்யக் கூடாது. முயற்சி செய்தால் மரணம் நிச்சயம். அரசு வேடிக்கைப் பார்க்காது. சுகாதாரத்தை அவர் அவரே பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக ஒழுக்கத்தை, ஒழுங்கை அனைவரும் கடை பிடிக்க வேண்டும். தினசரி உணவு வாசல் கதவருகே கொண்டு வந்து வைக்கப்படும், அவர்களே வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிச்சமான உணவும் அதன் பொதிவுகள், கரண்டிகள், தட்டுகள் உடனே எரித்தாக வேண்டும். வேண்டாத சாமான்கள் வார்டு முற்றத்தில் வைத்து அவ்வப்போது எரித்திட வேண்டும். எரியூட்டும் போது ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் உள்ளே  இருப்பவர்கள்தான் அதற்கு முழு பொறுப்பு. தீயணைப்புப் படையினர் நிச்சயம் உள்ளே வரமாட்டார்கள்.
உள்ளே இருப்பவர்களுக்கு உடல் சுகமின்ன்மை ஏற்பட்டால், வெளியில் இருந்து உதவிகள் எதையும் எதிர் பார்க்கக் கூடாது. மரணம் ஏற்பட்டால்.. இறந்தவர் உடல் எந்த சம்பிரதாயமும் இன்றி வெளி முற்றத்தில் புதை. க்கப் படும். இந்த அரசும், தேசமும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறது.” என்று சொல்லி, தொற்றை ஒழிப்பதற்கு முன்கை எடுக்கவேண்டிய அரசு கைகழுவி அதற்கு அவர்களையே பொறுப்பாக்கி செயல்படும் விதத்தை எள்ளி நகையாடியிருப்பார் சரமாகோ.
முகாமில் இருப்பவர்களுக்கு ராணுவம் உணவுப் பொட்டலங்களை இரும்பு கேட் வழியாக உள்ளே தள்ளிவிடும் போது, குருடர்களுக்கு இடையயே ஏற்படும் தள்ளு முள்ளு, அதைப் பயன்படுத்தி ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு.. துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்களைக் கொள்வதால் தொற்றாளர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிக்கும் அரசின் குரூரம்; இறந்தவர் வழியாக தொற்று அழிக்கப் பட்டுவிட்டதாக அறிவிப்பு.. முகாமில் இராணுவத்தால் சுடப்பட்டு இறந்தவர்களை புதைப்பதற்காக கண் தெரியாத தொற்றாளர்கள்படும் அவஸ்தை.. “மக்கள் சேம நல அரசு” எனும் அரசாங்கத்தின் பீத்தல்.. இப்படியாக நாவலை வாசிப்பவருக்கு மக்கள் நலன் மறந்த அரசின் செயல்பாடுகளை கிண்டலாக்கி நகர்த்தி வருவார் சரமாகோ.
இன்றும் நம் அரசுகளுக்கும் இவைகள் அப்படியே பொறுந்துகிறதே, இந்தக் கொரோனா காலத்தில். ஊரடங்கின் பெயரில்தான் எத்தனையெத்தனை கூத்துகள் தினம்தோறும். கடந்த 40 நாட்களாக அரசு வெளியிடும் அறிவிப்புகளில் உண்மையையும், நலத்திட்டங்களையும் தேடத்தானே வேண்டி இருக்கிறது.
கீழ்மை எண்ணம் கொண்டவன் குருடாகிப் போனால்… அதே எண்ணத்தோடு மற்ற குருடர்களை மிரட்டி வாழும் தன்மை, அதன் உச்சமாக அங்கே குருடாகிக் கிடக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக தன் உடல் பசிக்கு ஆளாக்கிடும் கொடுமை; இந்தக் கொடுமைக்குள்ளாகும் டாக்டரின் மனைவி குருட்டுப் பெண்களோடு திட்டமிட்டு அந்தக் கயவனை குத்திப் பழிவாங்கி மற்றவர்களுக்குப் பாதுகாப்பாகவும், வழி நடத்துபவளாகவும் இருப்பவளாக இருப்பாள். “நம்மால் முழுமனிதனாக வாழ முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் மிருகங்களுக்கு மேலானவர்களாகவாவது நடந்திட வேண்டுமல்லவா” என அவளின் எண்ணமதில் நின்று பொதுச் சமூகத்திற்கு சொல்லி இருப்பார் நாவலாசிரியர் சரமாகோ.
Caín, Saramago y por qué deberías leerla
புதிய தொடர்புகள்தான் இவர்களின் குருட்டுத்தன வாழ்க்கையில் நிறைய போலியில்லாத பிரியத்தை ஒருவருக்கொருவரின் இணைப்பையும் நாவல் முழுக்க எளியான வார்த்தைகளைக் கோர்த்து செழுமையாகச் சொல்லிடுவார். காலை, மாலை, இரவுப் பொழுதுகளை அவர்கள் எப்படி அறியமுடிகிறது, கணித்துப் பேசிட முடிகிறதென்பதை பார்வையற்றவர்கள் தங்களின் செவி உணர்வதை டாக்டரின் மனைவி பேசுவதில் இருந்து வாசிப்போர் உணரும்படியான நிலைக்குக் கொண்டு செல்வார் ஆசிரியர்.
ஒருநாள், முகாமிற்கு வரவேண்டிய உணவு வந்து சேராதபோது, விசாரிக்க ராணுவம் இருக்கமிடம் சென்று ராணுவத்தினரை அழைக்கின்றனர் டாக்டரின் மனைவியும் அவர்கள் குழுவினரும். அழைக்கும் குரலுக்கு பதில் இல்லை, மேலும் முன்னேறினால் ராணுவம் சுட்டுத்தள்ளும். நின்ற இடத்தில் இருந்தே ராணுவத்தினரை அழைக்கிறார். பதில் வரவில்லை. மனதில் தைரியத்தை வரவழைத்து அழைத்துக் கொண்டே கேட்டை நோக்கி முன்னேறுகிறார். தனக்குத்தான் கண் தெரியுமே சுட்டால் கீழே குனிந்துவிடலாம் என்று நினைத்து. முன்னேறி செல்கிறார். கேட் திறந்திருக்கிறது. இராணுவத்தினர் ஒருவரும் இல்லை. ஆம் ராணுவத்தினர் அனைவருக்குமே தொற்று பரவி குருடாகிப் போனார்கள்.
அனைவரையும் அழைத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை நுகர வெளியே வருவார். வந்துப் பார்த்தால், வீதிகளெங்கும் கண் தெரியாத குருடர்கள் ஒருவரை முண்டியடித்து ஒருவர், ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடக்கிறார்கள், ஆங்காங்கே கார்கள், டூ வீலர்கள், பேருந்துகள் நிறுத்திக் கிடக்கிறது. பேருந்தின் சக்கரத்தின் கீழ் மனிதர்கள் செத்துக் கிடக்கிறார்கள். செத்த உடலை நாய்கள் கடித்து தன் பசியைப் போக்கிக் கொண்டு, எங்கும் மரண ஓலங்கள், அழுகைகள். நாட்டில் எவர் ஒருவருக்கும் கண்பார்வை கிடையாது. எப்படி வாழ்வது. ஒருவரை சார்ந்து ஒருவர் வாழ்ந்தாக வேண்டும்.
உணவிற்கு, குடிநீருக்கு, உடுத்தும் துணிமணிகளுக்கு, உடம்பில் சேரும் அழுக்குகளை, மூத்திரத்தை. மலம் கழிக்க இடம் வேண்டி, இப்படி எவருக்கும் தெரியாது. ஆனால் எல்லாமும் வீதிகளில் நடைபெறும். வீதி முழுக்க குப்பைகளும், மூத்திர, பீ நாத்தம், செத்துப்போன மனிதர்களின் அழுகிய வாடை இப்படி எல்லாமும் சேர்ந்து உயிரோடு இருப்பவர்களின் குடலை வாய் வழியாக இழுத்து வருகிறது..
Jose Saramago’s ‘Year of the Nobel’ Last Journal Published | News …
பார்வைகள் தொலைத்தவர்களின் வாழ்வதனை பார்வையிருக்கும் இரு விழிகள் வழியாக நாவலை நகர்த்தி இருப்பார் சரமாகோ அவர்கள்.
டாக்டரின் மனைவிக்கு பார்வை தெரியும் என்பதை டாக்டருக்கும்.. வாசகனுக்கு மட்டுமே தெரியும்படி உரையாடல்களை நிகழ்த்தி இருப்பார் நாவல் முழுமைக்கும். நாவலின் இறுதியில் பார்வை தொலைத்த மனிதர்களுக்கு பார்வை கிடைக்கிறதா? அரசு என்ன செய்கிறது? டாக்டரின் மனைவிக்கு என்னவானது..? நாவலை நீங்கள் வாசியுங்கள்.. ஒரு புதியதொரு அனுபவம் கிடைக்கும் உங்களுக்கும். நாவல் முழுக்க சாமானியர்களின் வாழ்வை பேசி இருப்பார். வாழ்வின் நேசத்தை சொல்லி இருப்பார். எளிய மக்களின் நம்பிக்கையை ஒவ்வொருவரின் குரல் வழியாக நமக்கு உரைத்திடுவார். நாவலின் எங்கேயும் எதார்த்த வாழ்வினை மீறிய உரையாடல்கள் இருக்காது.
வலுத்தவர்களின் நீசத்தனமான செயல்களை சாடி இருப்பார். மனம் விரும்பிய பயணம் என்றால் இலகுவாகி பயணிக்கும் பாதங்களின் அன்பைப் பேசி இருப்பார். பிரச்சனைகள் வரும்போது மனிதர்களைக் குழப்பிடும் பயம் கூடாதெனெ உரைத்திடுவார். செங்கோல் மட்டுமே ஒரு நல்ல அரசனை ஆட்சியை உருவாக்கிடாது என்பதை ஓங்கி சொல்லிடுவார். இந்த நாவலுக்குள் நுழையும் போது பல அன்பனவர்கள் உங்களோடு பயணிக்கலாம். நீங்கள் மறக்க நினைகும் எவராவது தென்படலாம். வாசியுங்கள் “பார்வை தொலைத்தவர்கள்” புதினத்தை. மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.. “பார்வை தொலைத்தவர்களை” விரல் பிடித்து அழைத்து வந்த பாரதி புத்தகாலயத்திற்கும், சிறந்த முறையில் மொழி பெயர்த்து உதவிய எஸ். சங்கரநாராயணன் அவர்களுக்கும்.
பார்வை தொலைத்தவர்கள் 
நோபல் பரிசு பெற்ற நாவல்
யோசே சரமாகோ
தமிழில் எஸ் சங்கரநாராயணன்
பாரதி புத்தகாலயம் வெளியீடு.
கருப்பு அன்பரசன்.
3 thoughts on “பார்வை தொலைத்தவர்கள் – யோசே சரமாகோ (தமிழில் எஸ் சங்கரநாராயணன்) | நூல் அறிமுகம்: கருப்பு அன்பரசன் ”
  1. எஸ்.சங்கர நாராயணன் ஏராளமான சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழுக்கு வழங்கியுள்ள இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துள்ளவர். அவரது இந்த நாவல் தேர்வுக்களமும் அருமை. கறுப்பு அன்பரசன் நாவல் அறிமுகத்தை நன்றாகச் செய்து சஸ்பென்சோடு முடிக்கிறார். சமசால அரசியலையும் பொருத்திச் சொல்கிறார். காலத்துக்குப் பொருத்தமான நாவல். மூலநாவல் எழுதியவர், தமிழில் மொழிபெயர்த்தவர், அறிமுகம் செய்தவர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  2. நாவலை வாசிக்கிற அனுபவத்தை இனிமேல்தான் பெற வேண்டும் – புத்தகம் கிடைக்கப் பெற்ற பின். ஆனால் கருப்பு அன்பரசனின் நாவல் அறிமுகத்தை வாசித்த அனுபவம் அலாதியானது. எழுத்துப்பிழைகளைக் களைந்து, குருடர், விலைமாது போன்ற சில சொல்லாடல்களைத் தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். தொடர்க அன்பரசன்.

  3. மிக்க நன்றி கருப்பு அன்பரசன். ஆங்கிலத்தில் வாசிப்பது மிக சிரமமான ஒன்று. உரையாடல்களைப் பிரிக்காமல் யார் பேசுவது, யாரிடம் பேசுகிறார்கள்…எல்லாவற்றையும் ஒரே பாத்தியில் போட்டிருப்பார்கள். நான் தமிழுக்காக முடிந்த வரை புரியும் படி உரையாடல்களைப் பத்தி கள் – தனித்தனியாக அல்ல என்றாலும்… யார் எவர் என யூகிக்கிற அளவில் பிரித்தே பயன்படுத்தி யிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *