கொடைக்கானலை நஞ்சாக்கியப் பாதரசம்
1982 ஆம் ஆண்டு அழகுப் பொருள்கள் தயாரிக்கும் சீஸ்ப்ரோ – பாண்ட்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பாண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து யூனிலீவர் நிறுவனம் அதனுடைய தெர்மாமீட்டர் (பாதரச வெப்பமானி) தயாரிக்கும் தொழிற்சாலையை வாங்கியது. மாசு உருவாக்கும் தொழிற்சாலைகள் குறித்து வளர்ந்த நாடுகளிடையே ஏற்பட்டு வந்த விழிப்புணர்வினாலும் எதிர்ப்பினாலும் பாண்ட்ஸ் நிறுவனமானது அதனுடைய தொழிற்சாலையை தமிழ்நாட்டில் இருக்கும் எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு மாற்றியது. 1987 ஆம் ஆண்டு சீஸ்ப்ரோ-பாண்ட்ஸ் குழுமத்தை உலகளவில் யூனிலீவர் வாங்கியதால் அதன் கீழ் இயங்கி வந்த பாண்ட்ஸ் நிறுவனமும் தெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனமும் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிட் என்கிற பெருங்குழுமத்தின் ஒரு பகுதியானது.
இத் தொழிற்சாலையால் கொடைக்கானல் மக்களுக்கும் அந்தப் பகுதியில் இருக்கும் இயற்கை வளங்களுக்கும், காட்டுயிர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளையும், இத் தொழிற்சாலையை மூடுவதற்காக இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் மேற்கொண்ட போராட்டங்களையும் எடுத்த முயற்சிகளையும், பெருங்குழுமத்தின் வரலாற்றையும் `Heavy Metal : How a Global Corporation Poisoned Kodaikanal’ என்கிற ஆங்கில நூல் வாயிலாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண தீவிரமாகப் போராடியவர்களில் ஒருவரான அமீர் ஷாஹூல் விளக்கியிருக்கிறார். இந்த நூலைத் தமிழில் `பாதரசம் எனும் நஞ்சு: ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது’ என்கிற பெயரில் சுமார் 80 நூல்களை எழுதியும், மொழியாக்கமும் செய்திருக்கும் பேராசிரியர் ச. வின்சென்ட் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.
1980களில் தமிழ்நாடு அரசானது தொழிற்வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இந்த நிறுவனமானது பாதரசத்தை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதை உபயோகித்துத் தயாரிக்கப்பட்ட தெர்மாமீட்டர்களை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது.
இந்தத் தொழிற்சாலைக்கு இந்திய அரசு அனுமதியளிப்பதற்கு வேறெந்த இடத்தையும் தேர்வு செய்ய முடியவில்லை. சீஸ்ப்ரோ-பாண்ட்ஸ் நிறுவனமும் கொடைக்கானல் வாட்டர்டவுன் பகுதியைப் போல தட்பவெப்ப நிலை கொண்டிருந்ததால் அதனைத் தெரிவு செய்திருந்தது. சாதாரண பாதரசம் 24 டிகிரி செண்டிகிரேடில் ஆவியாகும். கொடைக்கானலில் குளிர் காலத்தில் சராசரி வெப்பநிலை 8 டிகிரி செண்டிகிரேட், கோடைகாலத்தில் சராசரி 20 டிகிரி செண்டிகிரேட்.
எனவே, இதுவே பொருத்தமான இடம் எனத் தீர்மானிக்கப்பட்டு அனுமதி கேட்க, அனுமதியும் அளிக்கப்பட்டது.
இத் தொழிற்சாலைப் பணியாளர்களில் முதல் மரணம் 1984 ஆம் ஆண்டிலேயே நிகழ்ந்தது. உலகெங்கும் பாதரச வெப்பமானிகளை ஏற்றுமதி செய்யும் வசதியைப் பிரம்மாண்டமான தொடக்க விழாவாகக் கொண்டாடிய ஓராண்டில் இது நடந்தது. ஆனாலும் உற்பத்தித் தொடர்ந்தது. பாதரசக் கழிவுகளைப் பொறுப்பில்லாமல் காடுகளிலோ, நீரோடைகளிலோ, ஏரிகளிலோ கொட்டி வருவதைப் பாண்டிச்சேரியில் நீர்ப்பாசன மேலாண்மையில் பணிபுரிந்துவிட்டு கொடைக்கானலுக்குக் குடிபெயர்ந்த நவ்ராஸ் மோடி என்பவர் கண்டறிந்தார். அதன் பின் அவர் அந்தப் பகுதியில் பழைய சாமான்கள் வாங்கும் சிலரை அணுகி தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொண்டார். அதன்பின் இது எந்நேரமும் வெடிக்கக்கூடிய `டைம்பாம்’ என்பதை உணர்ந்தார். காடுகளிலும், நகரத்தின் உள்ளூர் மக்கள் மேலும் தொழிற்சாலை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தாக்கத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள அவருக்கு பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
வாட்டர்டவுனில் இருந்த தொழிற்சாலையைப் பிரித்து இங்கே கொண்டுவரப்படும்போது, கூடவே பல தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவும் வந்தது. அவர்கள் இங்குள்ளவர்களுக்கு ஒரு மாத காலம் பயிற்சியளித்தார்கள். அதன்பின் சோதனை முறையில் உற்பத்தித் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பாதுக்காப்புக்கென கண்ணாடிகள், முகக்கவசம், கையுறைகள், சீருடை என அனைத்தும் கொடுக்கப்பட்டதோடு தொழிற்சாலையில் பாதரசம் உபயோகப்படுத்தும் பகுதியில் வேலைபார்ப்பவர்கள் வேலை முடித்து வெளியே செல்லுமுன் குளித்துவிட்டுச் செல்வதற்கான வசதிகளும் இருந்தன. ஆனால், நாளடைவில் இவையெல்லாம் கைவிடப்பட்டன.
இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொழிற்சாலை இயங்கி வர பல தொழிலாளர்கள் சிறுநீரகக் கோளாறு, மலட்டுத் தன்மை, நுரையீரல் பாதிப்பு என பல பாதிப்புகளுக்கு உள்ளாயினர். நிறுவனமும் இதற்கென ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது ஆனால் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இறுதியில், இந்தப் பிரச்சனை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், கிரீன்பீஸ், பசுமைத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளுக்குச் செல்ல ஒரு வழியாக 2001 ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் அதற்குள் இருபத்திரண்டு முதல் முப்பத்தைந்து வயதுக்குள் இருந்த ஏறக்குறைய பத்துத் தொழிலாளர்கள் இறந்துவிட்டிருந்தனர். இங்கு வேலைபார்க்கும்போது இறந்தவர்களோடு வேலையை விட்டுச் சென்ற பின் இறந்தவர்களையும் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை சுமார் முப்பதாகும் என்று தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர் சங்கத் தலைவரும், பாதிக்கப்பட்டவரும் இந்நூலாசிரியரிடம் கூறியிருக்கிறார்.
மூடப்பட்டபின்னும் அங்கிருந்தப் பாதரசக் கழிவுகளில் சுமார் 290 டன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை ஊடகங்கள் `திருப்பிக் கொட்டுதல் (reverse dumping)’ எனப் புகழ்ந்தன.
இருப்பினும் பெருங்குழுமங்களின் பேராசையாலும் கவனக் குறைவலும் உண்டான, உண்டாகிக் கொண்டிருக்கும் துயரங்களின் நீண்ட பட்டியலில் இதுவும் இப்போது இடம் பெறுகிறது. மலை வாழ்விடங்களின் இளவரசி யூனிலீவரால் சீரழிக்கப்பட்டிருக்கிறது. நிலம், நீர், காற்று, மக்கள், காட்டுயிர் ஆகியவற்றில் அடர் உலோகமான/திரவமான பாதரசத்தினால் ஏற்பட்ட நஞ்சு முழுவதும் நீக்கப்படுவதற்கான நம்பிக்கை இல்லை.
ஹிந்துஸ்தான் யூனிலீவரால் ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கான இழப்பீட்டைப் பெற பதினைந்து ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அப்படி இருப்பினும் இன்னும் இயற்கையோடு கலந்திருக்கும் டன் கணக்கான பாதரசக் கழிவானது எத்தனை தலைமுறைக்கு மக்களைப் பாதிக்கும் என அறுதியிட்டு கூற முடியாது.
1980 களில் யூனியன் கார்பைடு, 2000களில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் பாதரசமானி தொழிற்சாலை, ஸ்டெர்லைட் ஆகியவை போதாதென்று மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்து பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் பல பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் அனைத்தையும் அனுமதித்தால் பல பேரழிவுகளை நாம் பார்க்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் அவர்களுடைய ஆதாயத்துக்காக எதையும் செய்வார்கள். எனவே, சாமான்ய மக்கள்தான் விழிப்போடு இருக்க வேண்டும்.
நூலின் தகவல்கள்
நூல் : பாதரசம் எனும் நஞ்சு – ஒரு பன்னாட்டு நிறுவனம் கொடைக்கானலை எப்படி நஞ்சாக்கியது
நூலாசிரியர் : அமீர் ஷாஹூல்
தமிழில் : பேரா. ச. வின்சென்ட்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கம் : 336
விலை : ரூ 450
நூலறிமுகம் எழுதியவர்
சித்தார்த்தன் சுந்தரம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

