நூல் அறிமுகம்: செவ்வியல் கணங்கள் – பாவண்ணன் 

நூல்: பாட்டையாவின் பழங்கதைகள்
ஆசிரியர்: பாரதி மணி.
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்,
80, ஸ்ரீசத்ய சாய் நகர்,
ராஜ கீழ்ப்பாக்கம்,
தாம்பரம்,
சென்னை -73.
விலை: ரூ.130

பாரதி மணி மிகச்சிறந்த உரையாடல்காரர். ஒரு நிகழ்ச்சியை அவர் விவரிக்கும்போது, ஒவ்வொன்றும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோலவே துல்லியமாக இருக்கும். புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்னும் தலைப்பில் அமைந்த நூலில் அவர் தன் அனுபவங்களின் சித்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். பழகிய மனிதர்களைப்பற்றியும் பழகிய சூழலைப்பற்றியும் அவர் தீட்டிக்காட்டியிருக்கும் சொல்லோவியங்களைப் படித்ததும் அந்த மனிதர்கள் நாமறிந்த மனிதர்களாகவும் அந்தச் சூழல் நாமும் அறிந்த சூழலாகவும் மாறிவிடுகிறது. அவருடைய தேர்ந்தெடுத்த சொற்கள் வழியாக மனிதர்களையும் சூழலையும் சிந்தாமல் சிதறாமல் மறுஆக்கம் செய்துகொள்ள முடிகிறது. எந்த இடத்திலும் குறை என்றோ மிகை என்றோ தோன்றியதே இல்லை. அவருடைய சொற்கள் கச்சிதமாக உள்ளன. பாரதிமணி தன் ஒவ்வொரு நூலிலும் ‘நான் ஒரு எழுத்தாளனல்ல’ என்னும் வாசகத்துக்கு அழுத்தம் கொடுத்துப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளராக இல்லாத ஒருவருக்கு இந்த ஆற்றல் எப்படிக் கைவந்த கலையாக மாறியது என்பது முக்கியமான கேள்வி.

பாரதி மணி முக்கியமான மேடை நடிகர். நாடக இயக்குநர். தலைநகர் தில்லியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாடகங்களை மேடையேற்றியவர். நடிப்பு என்பது எளிதான செயலல்ல. ஒரு குறிப்பிட்ட பாத்திரம் குறிப்பிட்ட தருணத்தில் தன்னை எப்படி வெளிப்படுத்தும், அக்கணத்தில் அதன் மெய்ப்பாடுகள் எப்படி இருக்கும் என்பவை அனைத்தையும் முற்றிலும் அறிந்துகொண்டு, பாத்திரமாகவே மாறி மேடையில் வாழ்ந்துகாட்டும் ஆற்றலே நடிப்பு. அந்தத் திறமை உள்ளவர்கள் இயற்கையாகவே பிறரை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ஆற்றலும் நிறைந்தவர்கள்.

அடுத்து அவர் தன் பணிக்காலம் முழுதும் ஒரு பெரிய நிர்வாகத்தில் சிக்கல்களை வீழ்த்தி வெற்றிக்கனியைக் கொண்டுவந்து கொடுக்கும் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்தவர். மாற்றான் வலிமையையும் குணத்தையும் கணித்துச் செயலாற்றும் பயிற்சியை அந்தப் பணியே அவருக்கு அளித்திருக்கக்கூடும். தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் வெற்றிக்குரிய வாய்ப்பாக மாற்றும் தேர்ச்சியையும் அந்தப் பணியே அவருக்கு வழங்கியிருக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தம்மை எப்படி வெளிப்படுத்துவது, எந்த அளவுக்கு வெளிப்படுத்துவது, எதைப் பேசுவது என ஒவ்வொரு விஷயத்திலும் கச்சிதமாகச் செயல்படும் ஆற்றலுக்கு, அந்தப் பயிற்சியும் ஒரு முக்கியமான காரணம்.

ஒவ்வொரு கணத்திலும் இயற்கையாகவே தன்னுடைய மிகச்சிறந்த ஆற்றல் மட்டுமே வெளிப்படும்படி தனக்கே உரிய வழிமுறையில் பாரதி மணி நடந்துகொள்கிறார் என்பது நான் கண்டறிந்த உண்மை. எந்தப் பாராட்டுக்காகவும் இல்லாமல் அவருடைய இயற்கையான பண்பாகவே அது அமைந்திருக்கிறது. மிகச்சிறந்த என்னும் தரத்துக்கு ஒரு குண்டுமணி கூட குறைவாக அவரால் எதையும் செய்ய இயலாது. பீன்ஸ் நறுக்குவது, பருப்புவடை போடுவது, பாசந்தி தயாரிப்பது, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு மது பரிமாறுவது, நாடகத்தில் நடிப்பது, நிர்வாகத்தின் சார்பாக அதிகாரிகளை மனங்குளிர வைப்பது, தமிழகத்திலிருந்து செல்லும் திரையுலக அரசியல் ஆளுமைகளுடன் அணுகாது அகலாது நம்பகத்தன்மையுடன் பழகுவது என எல்லாச் செயல்களிலும் ஒரேவிதமான அக்கறை. ஒரேவிதமான ஈடுபாடு. கிஞ்சித்தும் மாற்றமில்லாத மிகச்சிறந்த அர்ப்பணிப்பு.

ஒரு நடிகராகவோ அல்லது தொடர்பு அதிகாரியாகவோ இல்லாத பால்யகாலத்தில் பார்வதி புரத்தில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தன் அப்பாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தனியொருவனாக வாகனத்தை எடுத்துச் சென்று சம்பந்தி வீட்டாரை அழைத்துவந்த அனுபவக்குறிப்பைப் படித்தவர்கள் அந்த இயற்கைப்பண்பைப் புரிந்துகொள்ள முடியும். அவரால் அப்படித்தான் நடந்துகொள்ள முடியும். வேறெந்த விதமாகவும் நடந்துகொள்ளவும் முடியாது. இயற்கை அளித்த கொடை அது. அந்தக் கொடையைத்தான் மிகச்சிறந்த நடிகர், மிகச்சிறந்த தொடர்பாளர் என இரு நிலைகளிலும் மெல்ல மெல்ல மெருகேற்றிப் பெருக்கிக்கொண்டார். நெருக்கடி மிகுந்த சூழலாக இருந்தாலும் சரி, நெருக்கடிகளே இல்லாத சூழலாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றையும் கச்சிதமாக எதிர்கொண்டு வெற்றிபெறத் தெரிந்திருந்த காரணத்தால், எழுத்தாளராக இல்லாதபோதும், எழுத்தாளருக்கு இணையான வகையில் சூழலைப் பொருத்தமான மொழியில் விவரிக்கும் ஆற்றல் கொண்டவராக உள்ளார் பாரதி மணி.பாரதி மணியை நினைக்கும்போதெல்லாம் சத்யஜித்ரே எழுதிய சிறுகதையொன்றை நினைத்துக்கொள்வது வழக்கம். அச்சிறுகதையின் பெயர் படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம். இக்கதையில் இடம்பெறும் படோல் பாபு நடிப்புத்திறமை மிக்கவர். காலமெல்லாம் முயற்சி செய்த போதும் அவருக்கு உரிய வாய்ப்பு அமையவே இல்லை. அந்தத் தேடலிலேயே தன் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார் அவர். இளமை போய் முதுமையும் வந்துவிடுகிறது.

ஒருநாள் அவருடைய நண்பரின் மகனுக்கு ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவரை நடிக்க அழைக்கிறார். இயக்குநர் குறிப்பிட்ட இடத்துக்கு உரிய நேரத்துக்கு முன்னதாகவே சென்று காத்திருக்கிறார் முதியவர். ஒரே ஒரு வார்த்தை மட்டுமே பேசக்கூடிய ஒரே ஒரு காட்சி மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை அந்த இடத்துக்குச் சென்றபிறகே அவர் புரிந்துகொள்கிறார். ஒரு வங்கியின் வாசலில் வேகமாகப் படியேறச் செல்லும் ஹீரோ, அவசரத்தில் எதிரே வரும் முதியவர் மீது மோதிவிட, அவர் திகைத்து ஆ என்ற அலறலோடு கீழே சரிந்து விழவேண்டும். அதுதான் காட்சி. ஒரே ஒரு சொல். அதுதான் அவருக்குரிய வசனம். ஒரே ஒரு கணம். அந்த அளவுக்கு மட்டுமே அவர் முகம் திரையில் நீடித்திருக்கும். அதை நினைத்து தொடக்கத்தில் அவருக்கு வருத்தமெழுந்தாலும், மறுகணமே அதிலிருந்து மீண்டு விடுகிறார் அவர்.

கண்ணிமைக்கும் நேரத்துக்கும் குறைவான அந்தத் தருணத்தை தன் மிகச்சிறந்த நடிப்புத்திறமையால் எப்படி பொன்னான தருணமாக மாற்றுவது என்றெல்லாம் மனத்துக்குள் திட்டமிடுகிறார். அந்த ஒற்றைச்சொல்லைப் பல விதங்களில் பலவிதமான ஏற்ற இறக்கங்களோடு சொல்லிப் பார்த்து பயிற்சி செய்கிறார். இயக்குநர் அக்காட்சியைப் படமாக்க அழைத்தபோது பதற்றமே இல்லாமல் நடந்து சென்று கேமிரா முன்னால் நிற்கிறார். இயக்குநர் ஸ்டார்ட் சொன்னதும், தன்னுடைய மிகச்சிறந்த திறமை வெளிப்படும் விதமாக நடித்துமுடிக்கிறார்.

ஒரு வாய்ப்பு அமையும் தருணத்தில் தன் முழு ஆளுமையும் வெளிப்படுத்தி, அதைத் தனக்குரியதாகத் தகவமைத்துக்கொள்ளும் முனைப்பும் தயாரிப்பும் அர்ப்பணிப்பும் சொல்லி வரும் கலையல்ல. தன்னிச்சையாக எழவேண்டிய ஆற்றல். அந்த ஆற்றலே ஒருவருடைய சொந்த இயல்பாக அமையுமென்றால், அவர் சென்று நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் வெற்றிக்கதவுகள் தாமாகவே திறந்து வழிவிடும்.

இந்தத் தெளிவோடு பாரதி மணியின் சமீபத்திய கட்டுரைத்தொகுப்பான பாட்டையாவின் பழங்கதைகள் புத்தகத்தைப் படிக்கும்போது அவருடைய மொழிக்கூர்மையையும் சித்தரிக்கும் ஆற்றலையும் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் முதல் திரைப்பட பைரசி என்னும் கட்டுரை உண்மையில் கண்கலங்க வைக்கும் மரணத்தைப்பற்றிய கட்டுரை. ஆனால் அந்தத் துயரின் சாயலே படியாதபடி, ஏதோ ஒரு வேடிக்கைக்கதையைச் சொல்லும் போக்கில் எழுதியிருக்கிறார் பாரதி மணி. தன் தந்தையாருக்கு உடல்நலம் சரியில்லை என்று தாயார் எழுதியிருந்த கடிதத்தைப் படித்துவிட்டு அலுவலகத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு பார்வதிபுரத்துக்கு வருகிறார் பாரதி மணி. வரும்போது அப்போதுதான் இந்தியாவுக்கு அறிமுகமான ஒலிப்பதிவு நாடாப் பெட்டியை வாங்கிக்கொண்டு வருகிறார். அப்பாவுக்குப் பிடித்த காருகுறிச்சி, மதுரை மணி, அரியக்குடி ஆகியோரின் கச்சேரி நிகழ்ச்சிகளின் ஒலிநாடாக்களையும் எடுத்துச் சென்று ஒலிக்க வைக்கிறார். கரகரப்பு இல்லாத இசையைக் கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கி வலியை மறக்கிறார் அவர் அப்பா. அந்தப் பெட்டி பாடுவதோடு, மற்றவர்கள் பேசும் பேச்சையும் பதிவு செய்யும் என்பதைத் திண்ணையில் அமர்ந்து உரையாடிப் பொழுதுபோக்கும் பக்கத்துவீட்டுப் பெண்களின் பேச்சைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்கவைக்கிறார். ஒவ்வொருவரும் தத்தம் குரலைக் கேட்டு மகிழ்கிறார்கள்.

அப்பாவுக்கு அருகிலேயே இருக்கும் சலிப்புக்கு மாற்றாக நகரத்துக்குச் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு வருமாறு ஒருநாள் சொல்கிறார் அவர் அம்மா. அது தில்லானா மோகனாம்பாள் வெளியான நேரம். அவரும் போய் பார்த்துவிட்டு வருகிறார். திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இசைநிகழ்ச்சிகள் அவருக்கு நிறைவாக உள்ளன. அந்த இசைநிகழ்ச்சிகளை எல்லாம் தன் தந்தை கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் பத்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் ஒலிப்பதிவு நாடாப்பெட்டியோடு மீண்டும் திரையரங்கத்துக்குச் செல்கிறார். திரையரங்க முதலாளியை நேரில் சந்தித்து, அவர் தற்செயலாக தொலைப்பேசியில் பேசிய சொற்களைப் பதிவு செய்து, பிறகு அவரையே கேட்க வைத்து, அவருடைய அன்பையும் மதிப்பையும் சம்பாதித்துக்கொள்கிறார் பாரதி மணி. அடுத்து அவருடைய அனுமதியோடு மொத்தத் திரைப்படமும் ஒலிச்சித்திரமாக ஒலிநாடாவில் பதிவாகிவிடுகிறது.மறுநாள் காலையில் அந்த ஒலிச்சித்திரம் அவர் அப்பாவுக்காக ஒருமுறை ஒலிபரப்பப்படுகிறது. பிறகு தெருவோருக்காக ஒருமுறை ஒலிபரப்பப்படுகிறது. அந்த இசையில் லயித்தபடியே ஒருநாள் அவருடைய உயிர் பிரிந்துவிடுகிறது. உருக்கமான சித்தரிப்பு. ஆனால் உருக்கத்தின் சாயலே தெரியாமல் இசையின் திரைகொண்டு அதை மூடிவைக்கிறார். திரையரங்க உரிமையாளரின் நெஞ்சை வெல்லும் தருணம் இக்கட்டுரையின் முக்கியமான தருணம். அந்த வெற்றிக்காக அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் அக்கணம் ஒரு சிறுகதைக்கே உரிய கணம்.

இதற்கு இணையான இன்னொரு நெருக்கடியான தருணமும் அதை அவர் எதிர்கொண்டு வெல்லும் விதத்தையும் மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன கட்டுரையில் நாம் பார்க்கமுடியும். தன் திருமணம் நடந்தேறிய விதத்தை மிகவும் குறைவான சொற்களால் தொகுத்துச் சொல்கிறார் பாரதி மணி. அவர் நடை தாவித்தாவிச் செல்கிறது. கடன் வாங்கித்தான் அவர் அந்தக் கல்யாணச் செலவைச் சமாளிக்கிறார். பொது சேமநல நிதியிலிருந்து கடன் பெற்று அந்தச் சில்லறைக்கடன்களை அடைத்துவிடலாம் என்பது அவர் எண்ணம். துரதிருஷ்டவசமாக அவருடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடுகிறது. கடன் கிடைக்கவில்லை. திருமணச் செலவுக்குக் கடன் கொடுத்த நண்பர்கள் நச்சரிக்கத் தொடங்குகிறார்கள். அதற்குள் அவசரப்பட்ட நண்பரொருவர் ஒரு வக்கீல் வழியாக நோட்டிஸ் அனுப்பிவைக்கிறார்.

எல்லாமே சாட்சியம் எதுவுமின்றி, கடன்பத்திரம் எதுவுமின்றி வாங்கிய கடன். வழக்கு மன்றத்துக்குச் சென்றால், அது மறுக்கப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். அதனால் தானே ஒரு பின் தேதியிட்ட கடன் பத்திரம் தயாரித்து கையெழுத்துப் போட்டு அந்த வக்கீலுக்கு அனுப்பிவைக்கிறார் பாரதி மணி. அதைப் பெற்றுக்கொண்டதும் அந்த எதிர்க்கட்சி வக்கீல் அவரைப் பார்க்க வருகிறார். “உன் காலில் நீயே ஏன் கோடலியைப் போட்டுக்கொள்கிறாய்?” என்று செல்லமாகக் கடிந்துவிட்டுச் செல்கிறார். திரும்பிச் செல்லும்போது யாரும் அறியாமல் அந்தப் பத்திரத்தைக் கிழித்தெறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு சேமநல நிதி அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்ததும், அந்தக் கடனை வட்டியுடன் திருப்பி அளித்துவிடுகிறார். அந்த நண்பரைவிட, நண்பருடைய வக்கீலின் நட்பு நீண்ட காலம் நீடிக்கிறது.  இக்கட்டுரையிலும் அந்த வக்கீலின்  நெஞ்சை வெல்லும் தருணம் மிக முக்கியமானது. அந்த வெற்றிக்காக அவர் தன்னை முற்றிலும் புதியதொரு கோணத்தில் வெளிப்படுத்தும் அக்கணம் ஒரு சிறுகதைக்கே உரியக் கணம். 

பாரதி மணியின் கட்டுரைகளில் காணப்படும் நகைச்சுவை மிளிரும் வரிகள் சட்டென உச்சம் பெற்று நெஞ்சை ஆட்கொள்வதை, அவரைத் தொடர்ந்து வாசிக்கிறவர்கள் உணர்ந்திருப்பார்கள்.  உன்னைப்பெற்ற வயிற்றில், நரேந்திர மோதியும் நானும், தி.ஜா.வின் புன்னகை என எல்லாக் கட்டுரைகளிலும் அந்தத் தீவிரத்தை உணரமுடியும். அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், செலுத்திய மயக்கமருந்து வேலை செய்கிறதா எனச் சோதிக்கும் வழிமுறையாக “உங்கள் பெயர் என்ன” என்று மருத்துவர் கேட்ட கேள்விக்கு அவர் முழு நினைவுடன் புன்னகைத்தபடி ”நரேந்திர தாமோதரதாஸ் மோடி” என்று பதற்றமின்றி பதில் சொல்கிறார். நகைச்சுவைக்காக என்றபோதும் இத்தருணத்தில் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தருணத்தை ஒரு செவ்வியல் கணம் என்றே சொல்லவேண்டும். 

நூல்: பாட்டையாவின் பழங்கதைகள்
ஆசிரியர்: பாரதி மணி.
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்,
80, ஸ்ரீசத்ய சாய் நகர்,
ராஜ கீழ்ப்பாக்கம்,
தாம்பரம்,
சென்னை -73.
விலை: ரூ.130