பாவமன்னிப்பு – கவிதை
நண்பரொருவர்
மன்னிப்புக் கேட்டுத்
தலைகுனிந்து நிற்கிறார்.
உடைந்து நொறுங்கிய
சத்ரபதி சிவாஜியின்
துண்டு துண்டான
பாகங்களைக் கையிலேந்தி
செவாலியே சிவாஜியை நடிப்பில்
பின்னுக்குத் தள்ளுகிறார்.
நாடாளுமன்றம் கட்டினார்
சவப்பெட்டி வடிவமாயினும்
சகித்துக் கொண்டோம்.
விதானமெல்லாம் ஒழுகுகிறது
மழை நீரா?
மக்கள் அழுத கண்ணீரா?
அவையெல்லாம்
ஊழலோடி கிடக்கிறது.
ஆங்காங்கே பிளாஸ்டிக் வாளிகளில்
மழை நீர் சேகரிப்பதாக
மாமன்றத்தினர் மறுகுகிறார்கள்.
பாபரிடம் இருந்து
பறிக்கப்பட்ட பால ராமர் கோவில்
எப்போதும்
கண்ணீர் வடித்தபடி இருப்பதாக
பூசாரிகளிடமிருந்தே
புகார்கள் வருகின்றன.
களவாடப்பட்ட நிலமென்று
கண்ணீர் வருகின்றதா?
களவாணிகள் கட்டிய கோவிலில் இருந்து
தண்ணீர் வடிகின்றதா?
அயோத்தி ராமனுக்கே வெளிச்சம்.
தீபங்களைக் களவாடியதால்
அயோத்தி நகரம்
இருளில் மூழ்கி அரற்றுவதாகத்
தகவல்கள் வருகின்றன.
மக்களுக்குத்தான் நாமம் போடுகிறார்கள்.
ஆண்டவனுக்குப் போட்ட கூரையிலும்
அந்த விண்மீனே விழுந்து மாய்கிறது
மேம்பாலங்கள் யாவும்
நீருக்குள் மூழ்குவதும்
திறப்பு விழா காணும் முன்னே
உடைந்து நொறுங்குவதும்
அன்றாடங்காய்ச்சிகளின்
அன்றாடக் காட்சிகளாயின.
நல்ல வேளை
படேல் சிலையை
சீனாக்காரன் கட்டினான்.
பழைய இரும்பு கடைக்காரனின்
கல்லாவிற்குப் போகாமல்
இன்று வரை நிற்கிறது.
இடித்தே பழகியவர்களுக்குக்
கட்டுவதென்பது கடினம்தானே.
மன்னிப்பில் இடம் பெறுபவை
நேற்றைய பாவங்கள்
இன்றைய பாவங்கள்
நாளைய பாவங்கள்
எத்தனை பாவங்களைத் தான்
பாழும் அந்த கடவுள்
சகித்துக் கொள்வார்.
அத்தனைப் பாவங்களும்
நண்பனின் பாவனையில்
நாண்டு சாகும்.
பாவங்கள் மன்னிப்பிற்குரியவை அல்ல
தண்டனைக்குரியவை…
எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
மதுரை
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

