பாவண்ணன் எழுதிய “பன்னீர்ப்பூக்கள்” கட்டுரைத் தொகுப்பு புத்தகம் | Paavannan's Paneer Pookal Tamil Book Review | எஸ்.ஜெயஸ்ரீ | www.bookday.in

பாவண்ணன் எழுதிய “பன்னீர்ப்பூக்கள்” கட்டுரைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

   “பன்னீர்ப்பூக்கள்” கட்டுரைத் தொகுப்பு – நறுமணம் பரப்பும் நன்மலர்கள்

தன்னுடைய பல்வேறு விதமான எழுத்து வகைகளிலும்  தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொடர்பு படுத்தி எழுதுவதிலும், பேசுவதிலும் சிறந்தவர் பாவண்ணன். இலக்கியத்தில் வாழ்வியல் அனுபவங்களையும், வாழ்க்கையில் இலக்கிய இன்பங்களையும்  தேடி அனுபவித்து அவற்றை வாசகர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் தேர்ந்தவர்.  அவர் இன்று பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். நாற்பதாண்டு காலமாக இலக்கிய உலகில் கோலோச்சும் மூத்த எழுத்தாளர்.  தனக்குப் பிடித்த கதைகள் என்று பல்வேறு சிறுகதைகளையும்,  தான் ரசித்த கவிதைகளையும், வாழ்வியல் அனுபவங்களோடு இணைத்து, சுவைபட எழுதியவர்.  அந்தக் கட்டுரைகள் அந்தந்தக்  கதைகளையோ, கவிதைகளையோ தேடிப்பிடித்து வாசகரை வாசிக்கத் தூண்டும். அவருடைய, சிறு வயது வாழ்க்கை, வாழ்க்கையில் பார்க்கவும், பழகவும் நேர்ந்த   மனிதர்கள்,  அவரை  எழுதவும், படிக்கவும் தொடர்ந்து தூண்டிய ஆசிரியர்கள், பெரியவர்கள்  என  தன் வாழ்க்கை முழுவதையும், தொடர்ந்து வாசகருக்கு அறிமுகப்படுத்தியபடியே இருக்கிறார்.

அப்படி அவருடைய வாழ்க்கையில் தான் சந்தித்த பல்வேறு மனிதர்களின் சித்திரங்களை  தீட்டிக்காட்டியிருக்கும் ஒரு அருமையான வண்ண ஓவியம்தான் இந்தப் புத்தகம்..

கிழக்கு டுடே இணையதளத்தில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள் அது வெளிவந்த போதே பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. 25 கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில், முதல் நான்கு  கட்டுரைகள் மட்டுமே வேற்று மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. மற்ற கட்டுரைகள் அனைத்தும், அவருடைய சொந்த ஊரான வளவனூரைச் சேர்ந்த மனிதர்கள் பற்றியே பேசுகிறது.  அந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது, ஆசிரிய, மாணவ உறவின் மேன்மையையும், நட்பின் சிறப்பையும், அன்றாடம் சிறுவர்களோடு உரையாடும் மனிதர்களையும் நாமும் சந்தித்து மகிழ்கிறோம். அந்தக் கட்டுரைகள், ஒரு சிறுகதை நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .  பாவண்ணன் பள்ளி மாணவனாக   இருக்கும்போது,   ஆசிரியர்கள் எந்த அளவுக்கு மாணவர்கள் மீது அன்போடும், மிகுந்த அக்கறையோடும், மாணவர் நலனில், அவர்களின் பெற்றோருக்கு நிகரான ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைக்  காண முடிகிறது.

“ ஒரு சொல்” என்று ஒரு கட்டுரை. அது, பாவண்ணன் கல்வி கற்ற கோவிந்தைய்யர் பள்ளியில் ஆசிரியராக இருந்த சுப்பையா சார்  என்பவரை அறிமுகம் செய்கிறது. ஜார்ஜ் பள்ளி என்ற பெயர் மாறி கோவிந்தைய்யர்  பள்ளி என்பதற்கான பெயர் வருவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.  கோவிந்தைய்யர் என்பவர் அந்தக் காலத்தில் வளவனூரில் வாழ்ந்த ஒரு எண்ணெய் வியாபாரி.  கடலைஎண்ணெய்க்கு அந்தக் காலத்தில் பர்மாவில் நல்ல கிராக்கி இருந்தது. கல்கத்தா வியாபாரி ஒருவர்தான் இதைப் பெருமளவு செய்து வந்தார். அந்த வியாபாரியின் விளம்பரம் ஒன்றினை செய்தித் தாளில் பார்த்து, தான் அவருக்கு பெருமளவு எண்ணெய் வழங்குவதாக ஒத்துக் கொண்டார். அதற்காக, நிலக்கடலை கொள்முதல் செய் வதற்காக ஊர் ஊராகச் சென்றார். அதன் பிறகு, தன்னுடைய ஊரைச் சுற்றியே கடலை பயிரிடுவதற்காக ஏற்பாடு செய்தார். கடலை பயிரிடுதல், எண்ணெய் எடுத்தல் என பல தொழிலாளர்களை நியமித்தார். தனக்காக, பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக , பள்ளி ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற முனைப்போடு, பள்ளியைக் காட்டினார். அதற்கு, பிரிட்டிஷ் அரசனான ஜார்ஜ் பெயரையே வைத்தார். நம் நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு,

அந்தப் பள்ளிக்கு  “ கோவிந்தைய்யர் பள்ளி “ என்று பெயர் சூட்டப்பட்டது. இதைச் சொல்லும்போது, சுப்பையா சார், கோயில் , அணை  எல்லாம்தான் சரித்திரம் என்பது இல்லை; பள்ளிக்கூடம், ஏரி, குளம் எல்லாமே சரித்திரம்தான் என்று சொல்லும் இடம் மிகவும் முக்கியமானது.  இப்படிச் சொன்ன சுப்பைய்யா சார்தான், பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை, மரக்கன்றுகள் நடுவதற்குத் தூண்டியிருக்கிறார். பாவண்ணன், அவர்கள் குடும்ப நிலைமையை உத்தேசித்து, படிப்பை முடித்துக் கொள்ள முடிவு செய்தபோது, படிப்புதான் முக்கியம் என்று அவர் சொன்ன ஒரு சொல்தான் அவரை இன்று இவ்வளவு பெரிய ஆளாக சமூகத்தில் நிற்க வைத்திருக்கிறது என்பதனை அவர் உணர்ந்து இந்த க் கட்டுரையில் சொல்கிறார். இதைப் படிக்கும் வாசகன், இப்படியெல்லாம் வாத்தியார்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதையும், சுப்பைய்யா சார் மீண்டும் பிறந்து வர மாட்டாரா என்ற ஏக்கத்தையும் தருகிறது.

“ திறப்பு விழா”  என்றொரு கட்டுரை. அதில், அந்த ஊர் பஸ் கம்பெனிக்காரர் பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டித் தரப் போவதாக ஒப்புக் கொண்டிருப்பதை அறிவிக்கிறார் சுப்பையா சார். அந்தக் கட்டிடம் முடிந்து , அதன் திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கிறார்கள். அந்த விழாவிற்காக, பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கும் வேலையில், மாணவர்களை ஈடுபடுத்துகிறார் சுப்பையா சார்.  அவரும் மாணவர்களோடு  இணைந்து  திடலை அலங்கரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். மாணவர்களுக்கு, விழாவில் பாடுவதற்காக, பாரதியார் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.  இவர்கள் அந்தப் பாடல்களைப் பாடி பயிற்சியெ டுக்கும்போது  அந்தப் பள்ளியின் முத்துராமன் சார்,( மீசை ராமன் என்று மாணவர்களால், பட்டப் பெயர் சூட்டப்பெற்றவர்) இவர்கள் பாடுவதையும், திடல் அலங்காரங்கள் செய்வதிலும் ஈடுபடு -வதிலெல்லாம் ஆரவமற்றவராக இருக்கிறார்.  திறப்புவிழா அன்று, விழா முடிந்து, அந்த பஸ் கம்பெனிக்காரர்களே ஏற்பாடு செய்திருந்த விருந்து நடந்து கொண்டிருக்கும்போது, முத்துராமன்  சார், பந்தி பரிமாறும் சிப்பந்தியிடம் சரியாகப் பரிமாறவில்லை என்று சத்தமாக சண்டையைக் கிளப்புகிறார். தலைமையாசிரியர் அவரை அமைதிப்படுத்துகிறார். அப்போது, முத்துராமன் சார், சுப்பையா சாரைப் பார்த்து, “  எல்லாம் உன்னால்தான்யா” என்று சாடுகிறார். இதற்கு எந்தக் காரணமுமில்லை. ஆனால், என்னவோ பொறாமை. இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, தி. ஜானகிராமனின், :பாயசம்” கதை நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

“முகம்”   என்றொரு கட்டுரை. இக்கட்டுரையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், இன்றளவும், சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஆற்றுத்திருவிழா பற்றி விவரிக்கிறார்.   சிறுவர்களான  பாவண்ணனும், அவருடைய தம்பியும் அவர்களது அம்மாவிடம் எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி பக்கத்து வீட்டுக்காரர்களுடன், ஆற்றுத் திருவிழாவுக்குச் செல்கிறார்கள்.  ஒவ்வொரு தின்பண்டம், விளையாட்டு எல்லாவற்றையும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டு, இறுதியில் பாவண்ணன், அம்மா தனக்குக் கொடுத்த பத்து பைசாவில், குடை ராட்டினம் சுற்றி மகிழ்கிறார் . தம்பி. குச்சி ஐஸ் தின்று பத்து பைசாவை செலவழித்து விடுகிறார். காலையிலிருந்து சுற்றி விட்டு, மாலை வேளையில், அவர்கள் அங்கிருந்து கிளம்பும் நேரத்தில்,  வித்தை காட்டும் கூட்டம் ஒன்றைப்  பார்க்க நேர்கிறது. பெரியவர் ஒருவர்  மேளம் அடிக்க அடிக்க , சிறுமி ஒருத்தி, இரும்பு வளையத்துக்குள் உடலை நெளித்துச் சுற்றியும், கம்பத்தில் ஏறி , மெல்லிய கயிறு மேல் நடக்கவும் செய்கிறாள். பெரியவர், கூட்டத்தினரிடம், தட்டில் காசு போடச் சொல்லி கூவியபடியே இருக்கிறார்., அம்மா அவரவருக்குக் கொடுத்த பத்து பைசாவை செலவழித்து விட்டதால், இவர்கள் இருவரிடமும்  கையில் காசு இல்லை. அப்போது அவருக்கு, அந்தப் பெண்ணின் மேல் கழிவிரக்கம் தோன்றுகிறது. பைசாவை செலவழிக்காமல் வைத்திருந்தால், இப்போது தட்டில் காசு போடலாமே என்று வருத்தப்படுகிறார். வீட்டிற்கு வந்த பிறகும், அந்தச் சிறுமியின் முகமே நினைவில் வருகிறது என்று முடிக்கிறார். ஒரு அழகான கவிதை போல முடியும் இந்தக் கட்டுரை, ஒரு திருவிழாவின் காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது.

“ஜெயதேவி இல்லம்” கட்டுரையில் வரும் ஜெயராமன் சித்தப்பாவும், தேவி சித்தியும், அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் வெளிப்பகுதியில், பொருட்கள் காய வைப்பதற்கும் , சாமான்களைப் போட்டு வைப்பதற்கானவுமான இடத்தைச் சுத்தம் செய்து. குழல் விளக்குகள் போட்டு, தினமும் தெரு விளக்கடியில் சென்று பாடம் படிக்கச் செல்லும் பிள்ளைகளை, இனிமேல், தெரு விளக்கில் சென்று படிக்க வேண்டாமென்றும், அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் உற்சாகமாக படிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடு கட்டுகிறார்கள். அந்த வீட்டிலும், பிள்ளைகள் படிக்க என்று ஒரு பகுதியை ஒதுக்கி கட்டுகிறார்கள். வீட்டிற்கு “ ஜெயதேவி இல்லம்” என்று பெயர் எல்லாம் முடிவு செய்து, புதுமனை புகுவிழா செய்யும் முன் ஓர் இரவு அந்த தேவி என்பவர், திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்படுகிறார். அவருக்கான மருத்துவச் செலவுக்காக, அந்த வீட்டையே விற்கின்ற நிலைமை ஏற்படுகிறது, அந்த தேவி காப்பாற்ற முடியாமல் இறந்து விடுகிறார். இப்படி முடிகிற இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது,  தாங்கள் படிக்காவிட்டாலும், பிள்ளைகள் படிப்பிற்கு உதவி செய்யும் மனிதர்கள்  இப்படியெல்லாம் அன்பானவர்களாகவும், தயாள உள்ளம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து உள்ளம் நனைகிறது.

இது போலவே,  “தப்புக்கொட்டை “    என்ற கட்டுரையில் வரும் அக்கா, தான் படிக்க முடியாமல் போனாலும், படிக்கிற பையனை உற்சாகமூட்டுபவளாகவும், அவனைப் பசியாற வாய்ப்பவளாகவும் இருப்பது எவ்வளவு அரிய மனிதர்களை அந்தக் காலம் பாவண்ணன்  வாழ்க்கையில் கண்ணில் காட்டியிருக்கிறது  என்பதை வாசகனை உணர வைக்கிறது. “ ஊற்று” கட்டுரையில் வரும், அடிபம்பு போடும் மனிதர், சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவர்களை எல்லாம், அவரவர் என்னென்ன வேலைக்குச் செல்லப் போகிறார்கள் என்று கேட்டு, எல்லாரும் நன்றாகப் படித்து கலெக்டர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று உற்சாக ஊற்றினை வழங்கியபடியே இருக்கிறார். “ நெம்புகோல் மேடை” கட்டுரையில் வரும் காசி மாமா என்கிற ரயில்வே பாயின்ட்ஸ் மேன், பிள்ளைகள் மேல் மிகுந்த அன்பு கொண்டவராகவும், ஆற்றுபடுத்துபவராகவும் இருக்கிறார். ஆடு மேய்க்கும் தாத்தா, சிறுவர்களோடு கதை பேசுவதும் அவர்களுக்காக ஊஞ்சல் கட்டித் தருபவராகவும் இருக்கிறார். ஆனால், பிள்ளைகளிடம் படிப்புதான் முக்கியம் என்று எப்போதும் சொல்பவராக  இருக்கிறார்.

“ ஒரே ஒரு அடி “ என்ற கட்டுரையில், பள்ளியில் இருந்து இடை நிற்கும் ஒரு மாணவனைப் பற்றிக் கவலைப்படும் ஆசிரியர், அவனை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்காக படுகின்ற வருத்தமும், பாடுகளும் நெஞ்சத்தை நெகிழச் செய்கிறது, இப்படி புத்தகம் முழுவதிலும், பாவண்ணன் அவருடைய சொந்த ஊரான வளவனூரின் எளிய மனிதர்களையும், அவர்களது  கள்ளம் கபடில்லாத  அன்பையும் பதிய வைத்துக் கொண்டே செல்கிறார்.  முக்கியமாக, ஆசிரியர் – மாணவ உறவு  மிகவும் நெகிழ்ச்சியுறச்  செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாவண்ணனுடைய ஆத்ம நண்பன் பழனியை வேறு ஒரு கட்டுரையில் காட்டுகிறார். அவர் சிறுவனா யிருக்கும்போது, வளவனூருக்கு எம். ஜி. ஆர். வருவதையொட்டி சிறுவர்களெல்லாம் அவரை நேரில் பார்க்கும் ஆவலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர் வருகையின் முதல் நாள் மாலை பாவண்ணனுக்கு அம்மை கண்டு விடுகிறது. அவருடைய மற்ற நண்பர்கள் எல்லாம் எம் ஜி ஆர். ஐப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். பழனி மட்டும் செல்லாமல், பாவண்ணன் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். பாவண்ணன் அவரைச் சென்று வரச் சொல்லி வற்புறுத்தியபோதும், அவர் செல்லவில்லை. அவர்கள் இருவருடைய நட்பு என்பது சிறிய வயதிலிருந்தே இப்படி ஆழங்கால் பட்டிருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

புத்தகம் முழுவதும் பன்னீர்ப் பூக்கள்  சரம் சரமாக நம் மேனியைத் தழுவுவது போலவும், பன்னீர்த் துளிகள் சில்லென தூவுவது போலவும் இனிமையான வாசிப்பனுபவத்தைக் கொடுப்பதாகவும், அந்தக் காலத்திற்கே சென்று விடுவது போன்ற உணர்வையும் ஒருங்கே தருகின்றன.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:பன்னீர்ப்பூக்கள்
ஆசிரியர்:பாவண்ணன்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்
விலை:₹.525
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ்.ஜெயஸ்ரீ, கடலூர்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. Kanthi natarajan

    சிறப்பான நூல் அறிமுகம்
    விரைவில் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வண்ணம் இருக்கிறது இந்த பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *