பச்சை மட்டை – நூல் அறிமுகம்
‘’பங்கருக்கை ஓடுங்கோ கிபிர் வருகுது’’. பபி கூறிக்கொண்டே பிள்ளையைத் தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி வீட்டின் அருகோரம் சடைத்து, வளர்ந்து நின்ற மாமரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்தாள்’.
‘பச்சை மட்டை’யும், இலங்கை இராணுவமும் முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்களின் மீதும் அவர்களின் மனங்களின் மீதும் எப்படி அழிச்சாட்டியம் புரிந்தனர் என்பதை வலி நிறைந்த நாவல் வடிவில் நமக்குக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள். உலகில் போர்கள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆனால் இலங்கையில் நடந்தது போர் என்று சொல்வதா அல்லது மக்களோடு மக்களாக உள்நுழைந்து அம்மக்களையே பினையக் கைதிகளாக பிடித்துச் சென்று பச்சை மட்டை பேர்வழிகள் புலிகளின் படைகளில் நிற்க வைத்து அவர்களின் வாழ்வை சூறையாடியதை சொல்வதா அல்லது இலங்கை இராணுவம் அப்பாவி மக்களைப் பிடித்து ‘நீ புலியென்று’ துன்புறுத்தி சாகடித்ததை சொல்வதா. எதை இங்கே பேசுவது என்று புரியவில்லை. போர் என்றால் எப்படி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பலியாவார்களோ அதேபோல் ‘போர் என்றும்’, ‘மண் காக்கிறோம்’ என்றும் மனதைக் கலங்கடித்து மக்களை மாய்த்த புலிகளின் அட்டூழியத்தைக் கூறுவதா. எல்லாவற்றையும் விட மக்களை நம்ப வைத்தே கழுத்தறுத்த கொடுமை தான் மிக அதிகம்.
‘இராணுவம் மன்னாரிலிருந்து வெளியேறியது அது முள்ளிவாய்க்காலை நோக்கி வருகிறது’ என்று ஒரு தரப்பு கூறிக்கொண்டிருக்கும்போது ‘அப்படி வந்தால் புலிகள் பொடியாள்கள் விடமாட்டார்கள்’ என்று கடைசி வரை மக்களை நம்ப வைத்தே மக்களை இராணுவத்திடம் பலிகடாக்களாக்கிய நிலையை சொல்வதா. மக்கள் நடந்தும், மிதிவண்டியிலேயேயும் குடும்பம் குடும்பமாக பசியும் பட்டிணியுமாக சாலையில் நடந்துச் சென்றது எவ்வளவு கொடூரம். அதைவிட பங்கருக்குள் அதாவது பாதாள அறைக்குள் புகுந்து காற்று இல்லாமல் புழுக்கத்துடனே எவ்வளவு நாட்கள் வாழ்ந்தும், மடிந்துள்ளனர் என்பதும், ஓடி ஆடி விளையாடிய குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு பங்கருக்குள்ளே அடைத்து வைக்க முடியும் என்பதையும் நினைத்தாலே மனதெல்லாம் வலிக்கிறது. அப்படி வாழ்ந்த அதாவது புலியை நம்பி ‘அவர்கள் விடமாட்டார்கள் எப்படியும் நம் மக்களை காப்பாற்றி விடுவார்கள்’ என்று ஏமாந்த பரமன் நிலையும், அதற்கு மாறாக அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நிலையையும் மையக் கருவாகக் கொண்டு இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இறுதி அத்தியாயத்தில் வரும் நாவலின் எழுத்துகள் தான் மக்களை எந்தளவுக்கு கேவலமாக நடத்துகிறது போர் என்னும் சுயநலம் புரியும். மக்களை ஒவ்வொரு இடமாக இடம்பெயர வைத்துக்கொண்டே இருந்த இராணுவமும், கடைசியில் புலிகள் தரப்பு அதுதான் பச்சை மட்டை கோஷ்டிகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையிலும் கட்ட கடைசியாக கடற்கரையோரம் வந்து ஒதுங்கிய மக்களின் நிலையோடு நாவல் இறுதி கட்டத்திற்கு வருகிறது.
மனிதர்கள் கக்கூஸ் கண்டுபிடிக்கும் முன்பும் ஏன் இப்போதும் வளர்ச்சி எட்டிப்பபார்க்காத மக்களும் தங்களின் இயற்கை உபாதைகளை ஓர் ஒதுக்குப்புறமாக சென்று தான் முடித்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நாவலில் கடற்கரையோரம் குவிந்த மக்கள் ஒதுங்கிய காட்சி மனதை என்னமோ செய்தது. ஆம் கொலு வைப்பது போல் உட்கார்ந்துள்ளனர். இதில் ஒதுங்குவதற்கு இடமில்லாத நிலையும், சூரியன் வருவதற்கு முன்பு ஆண் பெண் முகம் பார்க்காமல் அமர்ந்து எழுந்த நிலையும் வலி நிறைந்தது. இதில் கொடுமை என்னவென்றால் கடல் அலைகள் வரும்போது உடனடியாக காலைக்கடன் கழிக்கிற நிலையால் அது அடித்துச்செல்லும் என்ற நம்பிக்கையில் உட்கார்ந்தவர்கள் அதிகம். மொத்தத்தில் கடற்கரையில் காலை வைக்க முடியாத நிலை தான் இருந்தது இறுதிப் போர்க்காலம். இறுதியில் இராணுவம் பங்கருக்குள் இருக்கும் மக்களை வெளியே வரவழைத்து கூட்டாக இழுத்துச்செல்லும் காட்சியும், ஆங்காங்கே மக்களின் பிணங்களும், காயம்பட்டவர்களை இராணுவ வாகனத்தில் அள்ளிப் போட்டுச் செல்லும் காட்சியுடனும் நாவல் நிறைவு பெறுகிறது. இலங்கை மக்களின் துயர் என்று தான் முடிவுக்கு வருமோ. இப்போதும் அவர்கள் அகதிக் கூண்டுக்குள் சிக்குண்டு கிடப்பது வலி நிறைந்த வடுக்களே. மக்களின் துயர் துடைக்கும் காலத்தை நமக்கானதாக விரைவாக மாற்றுவோம்.
இந்நூல் நிறைய வலிகளை கொடுத்துள்ளது. ஆனால் அதில் ஒரு துளி மட்டுமே உங்களோடு பகிர்ந்துள்ளேன். இன்னும் இலங்கை இராணுவத்திடம் சிக்குண்ட மக்கள் எப்படி துன்புற்றார்கள், தென்னை மரத்தின் பச்சை மட்டை கொண்டு தாக்கும் புலிகளின் கொடூரம் அதாவது புலிகளின் படைக்கு இளம் பிஞ்சுகள் வரவில்லையென்றால் அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகளையெல்லாம் எடிட் செய்துள்ளேன் இவ்வெழுத்தில். வாசியுங்கள் அவசியம். இலங்கை தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நம்மீது விழுந்த மாதிரியே உணருவோம்.
உலகினை அழித்திடும்
யுத்தமே வேண்டாம்
வேண்டும் சமாதானம்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
இந்நூலை கேட்டவுடன் அனுப்பி வைத்த பாரதி புத்தகாலயம் அன்புத் தோழர் சிராஜூதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. அதேபோல் இந்நூலின் அட்டைப்படமும் என்னமோ செய்கிறது. அவற்றை வடித்த தோழர் அ.சி.விஜிதரன் அவர்களுக்கும் மிக்க நன்றி!
நூலின் தகவல்கைகள் :
நூல் : பச்சை மட்டை
ஆசிரியர் : அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு : நிச்சாமம் பதிப்பகம்
விலை : ரூ.250
முதல் பதிப்பு : 2025
நூலைப்பெற : 35/18, 2வது தெரு,
அசோக் நகர் சென்னை 600083
நூல் அறிமுகம் எழுதியவர் :
தோழமையுடன்
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.