கலப்பை வரைந்த கவிதைகள்
“கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது.
உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் போது.
சாதாரண மக்களின் பேச்சு நடையையும் உரைநடையையும் கவிதைக்கான கருவிகளாக்குகிறது.
இது வெளியிலிருந்து நம்மீது வந்து போதும் ஏதோ ஓர் காற்றை எதிர்த்து நிற்கிறது”
-என்பார் கலைவிமர்சகர் கவிஞர் இந்திரன் (சனங்களின் கதை- முன்னுரை)
எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம், என்கிற இலக்கியக் கோட்பாட்டின் படி, இந்திய நாட்டின் தலைநகரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை மய்யமாக கொண்டு ‘பச்சை ரத்தம் எனும் சிறப்பான கவிதை தொகுதியைத் தந்துள்ளார் கவிஞர் நா.வே. அருள்.
அருள், அடிப்படயில் வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர், கூடுதலாய், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். எனவே இந்நூலுக்கான அடிப்படை தகுதியும், உரிமையும் நா.வே. அருளுக்கு நிறையவே உண்டு.
தாராள மயம், தனியார் மயம் என்ற வெகு மக்களுக்கு எதிரான கொள்கைகள் நம் நாட்டில் திணிக்கப்பட்டு, அரசு என்பது சாமான்யர்களைக் காக்கும் மக்கள் அரசு (Peoples Government) என்பதற்குப் பதிலாக தனியாருக்குச் சேவை செய்யும் அரசாக மாறிட்ட அவலத்தையும் எதிர்த்த வெகுமக்கள் போராட்டம் பல்லாண்டுகளாக தொடர்வது நாமறிந்தது தான்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தில், தாராள தனியார் மயத்தை எதிர்த்துக் குரலெழுப்பும் கூட்டத்தில் உழுகுடிகளான வேளாண் பெருமக்களும் இணைந்ததை, தன் கவிதைகளில் ஆவணப்படுத்தியிருக்கிறார் அருள்.
“விவசாயிகளிடம் / வேறெதுவுமேயில்லை/
அவர்களிடம் இருப்பதெல்லாம் விதைகள்/
வெறும் விதைகள்/ போர்க்களங்களைக் கூட வயல்களாக மாற்றும்/
நம் விவசாயிகளுக்கு எந்தக் காலத்தில் விதைக்க வேண்டும் ; எந்த விதையை விதைக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
‘அவர்கள் கைகளுக்கு விதைப்பதும்
விதைத்த பின் வளர்ப்பதும்
வளர்ந்த பின் அறுவடை செய்வதும் தான் வழக்கம்’
ஆடிப்பட்டம் தேடி விதைப்பவர்கள் அறிவார்கள் அறுவடை செய்யும் முறையை!
தீநுண்மிக் காலம் தொடங்கியது. தேசமே 2020-ல் முடங்கியிருந்த நேரத்திலும் 2020, நவம்பர் தொடங்கி, 2021 திசம்பர் வரையில் சற்றேக்குறைய 11 மாதங்களாக போராட்டக் களத்தில் தம்மை நிரப்பி, ‘வெற்றியின்றி வீடு திரும்புவதில்லை’ என்ற கொள்கையோடு கூடி நின்ற விவசாயிகள் மேல் சுமத்தப் பட்ட அவமானங்கள், எகத்தாளங்கள் எத்தனை எத்தனை? கூலிக்கு மாரடிக்கும் சில ஊடகங்களும் கோரஸ் பாடியதையும் நாம் மறந்து விடலாகாது.
‘விவசாயிகளை வெல்ல நினைப்பவன்
முதலில் ஆயுதங்களைக் கீழே எறிந்தாக வேண்டும்
விவசாயிகள் முன் நிராயுதபாணியாக நிற்க வேண்டும்’ (பக் 41)
ஆனால் நடந்ததென்ன! அரசும், அதன் தொங்கு சதைகளும்; விவசாயிகள் இடையே, வகுப்புவாதத்தை, சாதியப் பிளவுகளை உருவாக்கினர், தேசவிரோத முத்திரைகள், பொய்ப் பிரச்சாரங்கள், பொய் வழக்குகள் என எண்ணிலடங்கா அடக்கு முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன.
இதைத் தான் அருள் அம்பலப்படுத்துகிறார் :
“உலகின் எந்த நதியை விடவும் நீளமானது
உலகின் எந்த மலையை விடவும் பெரிதானது
உலகின் எந்த கடலை விடவும் ஆழமானது
பொய்களின் நாக்குதான்”
விவசாயிகளின் வாழ்வும், போராட்டக்களமும், கோட்டோவியங்களாக தீட்டி, வெற்றியும் பெற்றிருக்கிற அருளின் இக்கவிதைகள் ஒரு காலத்தின் பதிவு ; களத்தின் வரலாறு.
“உயிரை நீக்கியபின்
பிணத்துக்கு மருத்துவம் பார்க்கிற
விசித்திரங்களே
புதிய வேளாண் சட்டங்கள்!
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
விவசாயிகளின் டிராக்டர்களுக்கு
விடுதலை விவசாயம் தெரியும்! (பக் 35)
அருள், பச்சை ரத்தம், நூலுக்கானக் கவிதைகளுள் படிமம், குறியீடு, இருண்மை என ஜல்லியடிப்பதில்லை. எளிய மொழி, உண்மை தெறிக்கும் மொழி, வாசிக்கும் போதே வலியுணரும் மொழி…. யைத் தன் கருவியாககொண்டு இக்கவிதைகளைத் தந்திருக்கிறார்.
மலைச் சுனைநீரில், ‘மினரல் வாட்டர் ‘டேஸ்ட்டை’, குகை ஓவியங்களில் கோட்டோவிய வாழ்வியலில் நவீன ஓவியத்தின் அம்சங்களை தேடும் பகட்டு விமர்சக கண்களுக்கு இக் கவிதைகள் பிடிபடாமல் போகக் கூடும். ஆனால் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை தெளிந்தே அருள் இக்கவிதைகளை உருவாக்கியுள்ளார்.
‘பச்சை ரத்தம்’ – தொகுப்பின் கவிதைகளில் வன மலர்களின் வாசத்தை, பொங்கிப் பிரவசிக்கும் நதியின் சலசலப்பை, பாறைகளூடே பயணித்தோடும் காட்டோடையின் இசையை உணர்பவர் அறிவர் இந்தக் கவிதைகள் தமிழுக்கு புதிது மட்டுமல்ல; காலத்தின் தேவை என்பதையும்!
நூலின் தகவல்கள்
நூல் : பச்சை ரத்தம்
நூலாசிரியர் : நா.வே.அருள்
விலை : ரூ. 100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலினைப் பெற
தொடர்பு கொள்ளுங்கள்: 44 2433 2924 , 9444960935
எழுதியவர்
அன்பாதவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.