நூல் அறிமுகம்: கால்நடைகளைப் போல் விற்கப்பட்ட மனிதர்கள் – ஆதிநூல்: பச்சை வைரம்
ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: 120.00

தொடர்புக்கு: 044-24332924
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/pachai-vairam-by-ko-ma-ko-elango/

பலரும் படித்த பிறகு எந்த வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்ய ஆசைப்படுகிறார்கள், தெரியுமா? அமெரிக்கா. அமெரிக்கா போவது, அமெரிக்காவில் வாழ்வது பலருடைய கனவாக இருக்கிறது.

அமெரிக்கா என்கிற அந்தத் தேசத்தின் நவீன வரலாறு 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியது. ஒரு நவீன நாடாக அது வளர்வதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து லட்சக்கணக்கான அடிமைகள் அமெரிக்காவுக்கு வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள் இல்லாமல் கடுமையாக வேலை வாங்கப்பட்டதுதான்.

ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைத் தங்கள் காலனி அடிமை நாடுகளாக நடத்தி, ஐரோப்பிய நாடுகள் வளத்தைக் கொள்ளையடித்து, பெரும் வளர்ச்சி பெற்றன. இதற்குப் பதிலாக அமெரிக்க நாட்டினரோ, ஆப்பிரிக்க மக்களைத் தங்கள் நாட்டுக்குக் கடத்திச் சென்று, தங்கள் நாட்டு வளத்தைப் பெருக்கிக்கொண்டார்கள்.

நீடித்த போராட்டம்

அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்கள் மனித உரிமைகளற்று, கால்நடைகளைப் போல் விற்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். இப்படி அந்த மக்கள் எந்த உரிமையும் அற்று, கொடூரமாக நடத்தப்பட்டது சட்டப்பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. தாங்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு எதிராக ஆப்பிரிக்கர்கள் தொடர்ந்து போராடிவந்தார்கள்.

250 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்த அடிமைத்தனம், 1860களில் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் காலத்தில் சட்டப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய 100 ஆண்டுகளிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டே வந்தன. இதை எதிர்த்து மார்டின் லூதர் கிங், ரோசா பார்க்ஸ், மால்கம் எக்ஸ் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இன்றைக்கும்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அந்த நாட்டில் சமமாக நடத்தப்படுவதில்லை.விடுதலை விடுதலை

அடிமைகளாக நடத்தப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்கர்கள் அனுபவித்த துயரங்கள், அமெரிக்கர்களின் ஆதிக்க மனப்பான்மை, இதனால் மனித குலம் அடைந்த கீழ்மை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் கொ.மா.கோ. இளங்கோவின் ‘பச்சை வைரம்’, மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டின் பின்னணியில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் வழியாகவே பெருமளவு ஆப்பிரிக்க அடிமைகள் கப்பலில் அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்கள். அவர்களில் ஒரு பிரிவு ஆப்பிரிக்க அடிமைகள் சுதந்திரம் பெற்று நாடு திரும்பியபிறகு, ஓர் இலவ மரத்தடியில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதனால், அந்த மரம் சியரா லியோன் மக்களிடையே பெருமதிப்பைப் பெற்றிருக்கிறது.

பிளிகியும் நாடகமும்

அந்த மரத்தைப் பின்னணி யாகக் கொண்டு பிளிகி என்கிற சிறுமியின் வழியாக ஆப்பிரிக்க மக்களின் அடிமைத்தன வாழ்க்கை குறித்த தடங்களை இந்தக் கதை தேடிச் செல்கிறது. எபோலா தொற்றுநோய்க்குத் தாய், தந்தையை இழந்த பிளிகி, ஒரு காப்பகத்தில் வளர்கிறாள். அந்த இல்லத்தின் பொறுப்பாளர் மோரம்மாவுடன் மிகுந்த நெருக்கமாக இருக்கிறாள்.

பிறகு சஹீது என்பவர் பிளிகியைத் தத்தெடுத்து வளர்க்கிறார். புதிய வீட்டில் பிளிகி குடியேறுகிறாள். சஹுதுவின் குழந்தைகளும் அங்கே இருக்கிறார்கள். தனது மூதாதையர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாகக் கடத்தப்பட்டது முதல், அந்நாட்டிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பியது வரையிலான பெருங்கதையை ஒரு நாடகத்தில் நடிப்பதன் வழியாக பிளிகி முழுமையாக அறிந்துகொள்கிறாள்.

அரசு விழாவில் அவர்களுடைய நாடகம் அரங்கேற்றப்படுவதற்கு முன்னதாக பிளிகியும் மோம்கா என்கிற சிறுவனும் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா, நாடகம் நடைபெற்றதா என்பதை எல்லாம் பரபரப்பான சம்பவங்களுக்கு இடையில் சுவாரசியமாகக் கூறுகிறது இந்தச் சிறார் நாவல்.

நன்றி: தமிழ் இந்து (மாயா பஜார்)

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)