நூல் அறிமுகம்: பச்சை வைரம் – ச.ரதிகா

 

ஆதி மனிதன் வாழ்ந்த ஆப்பிரிக்கா குறித்த ஏராளமான ஆவணங்கள் பல விந்தையான கதைகள் வினோதமான நம்பிக்கைகள் என பலவற்றை அறிந்திருப்போம்.நாமும் மனிதர்கள் என்ற முறையில் நமது மூதாதையர்கள் செயல்படுத்திய ‘அடிமை முறை’க்காக இன்றளவும் மனிதகுலமே வெட்கப்பட வேண்டும். அவ்வகையில் டாம் மாமாவின் குடிசைக்கு பிறகு தமிழில் ஆப்பிரிக்க அடிமை முறைப் பற்றி பேசும் மற்றொரு சிறார் நூல்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் வழியாக பெருமளவு அடிமைகள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.அதில் ஒரு பிரிவினர் அமெரிக்காவில் சுதந்திரம் பெற்று நாடு திரும்பிய பிறகு ஓர் இலவ மரத்தடியில் விடுதலை செய்யப்பட்டனர்.அந்த மரம் மக்களிடம் மிகுந்த மரியாதையைப் பெற்றது.அதை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.கதையின் நாயகியான 13 வயது சிறுமி பிளிகி எபோலா வைரஸ்க்கு தனது பெற்றோர்களை பறிகொடுத்து விட்டு ஒரு காப்பகத்தில் வளர்கிறாள்.அவள் வாயிலாக ஆப்பிரிக்க மக்களின் அடிமை வாழ்வின் வேர்களைத் தேடி கதை பயணிக்கிறது. ஆப்பிரிக்க மக்கள் கடுமையான உழைப்பாளிகள் மட்டுமல்லாமல் இயற்கையோடு இயைந்த ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர். அவ்வாழ்வியலை வாய்மொழி கதைகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கிறார்கள்.

பிளிகிக்கு மோரம்மா கற்றுக் கொடுக்கும் இடங்களும் பிளிகியே உற்றுநோக்கி பலவற்றை அறிந்து கொள்வதும் தம்முடைய மூதாதையர்கள் அனுபவித்த வேதனைகளைக் கேட்கும் போது கண்ணீர் விடுவதும் மரங்களுக்கு உயிர் உண்டு அதை அழிக்க கூடாது என்பதும் மிகச் சிறப்பானவை.மனிதர்கள் அனைவரும் சமம் என்றும் இயற்கையே அனைத்திற்கும் ஆதாரம் என்றும் குழந்தைகளுக்கு எளிமையாக கற்றுக் கொடுக்கிறது.தலைமுறை தலைமுறையாக கதைச்சொல்லியாக வாழ்ந்த நாம் இன்று அதை தொலைத்த அவலத்தை இக்கதை நினைவூட்டுகிறது.நித்தம் ஒரு விதை; நிலம் தேடி விதை என்றும் சின்னஞ்சிறிய தேவதையே! நாமெல்லாம் பூமிப்பந்தை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்க உதவவேண்டும். அதைத்தான் இயற்கை அன்னை விரும்புவாள். நலமோடு வாழ அருள் செய்வாள்.

கொ. மா. கோ. இளங்கோ – தமிழ் விக்கிப்பீடியா

இதோ!இந்த விதைகளை எடுத்துக்கொள். முடிந்த அளவு விதைகளை விதைத்து உலகத்தைக் காப்பாற்ற உதவு என்று முதியவர் ஒருவர் கூறுவது குழந்தைகளுக்கானப் பாடமல்ல நமக்கான பாடம். செடியைப் பிடுங்காதே.அதற்கு உயிர் இருக்கு. சுவாசம் இருக்கு.சுதந்திரமான வளர்ச்சி இருக்கு. செடிக்கு வலிக்குமென்று உனக்குத் தெரியாதா? என்ற பிளிகியின் கேள்வியும் உடனே மன்னித்துவிடு பிளிகி என்று பிடுங்கிய செடியை நடும் மட்டுவும் அப்பாடத்திற்கான விளைவுகளாகும். ஆப்பிரிக்க மக்களுக்கு அன்றாட வாழ்க்கை குறித்த ஆலோசனைகள் இருக்குமே தவிர எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்காது என்று கூறுவது நாமும் கற்க வேண்டியதே.உணவு என்பது அடிமை மக்களின் கனவாக இருந்தது என்ற வரிகள் மனிதத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

பிளிகியை தத்தெடுத்த சஹீது பொறுப்புள்ள தந்தையாக இருந்து நம் நாட்டை நேசிக்கவும் மக்களுக்கு உதவும் கற்றுத் தருவேன். சமுதாயப் பற்று உள்ளவளாக வளர்ப்பேன் என்பது இப்படித்தான் நமது குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. ஆப்பிரிக்காவின் பூர்விகத்தை மட்டும் கூறாமல் இன்றும் அங்கு நிலவும் குழந்தைகள் கடத்தலையும் ஆசிரியர் சாடியுள்ளதோடு அப்படிப்பட்ட சூழ்நிலையை குழந்தைகள் கையாளும் வழிமுறைகளையும் கூறியுள்ளார். இந்நூலை குழந்தைகளோடு இணைந்து நாமும் ஆப்பிரிக்காவையும் மனிதத்தையும் அனுபவிக்கலாம்.

நூல் – பச்சை வைரம்

ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ

வெளியீடு: பாரதி புத்தகாலயம் 

விலை: ரூ.120

நூல் அறிமுகம்: ச.ரதிகா