மதிய உணவு இடைவேளை. உணவுக்கூடத்தில் மாணவர்களை நேர்படுத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் அறிவொளி. அவரை நோக்கி ஓடிவந்த கவிமுகிலன், “ஐயா தங்களைத் தேடிக்கொண்டு இருவர் வந்திருக்கிறார்கள். அவர்களை நான் இவ்விடம் அழைத்து வந்திருக்கிறேன்”என்றான்.
“சரி! நீ சென்று சாப்பிடு. நான் இதோ வருகிறேன.” என்று அவனுக்கு பதிலளித்துவிட்டு, உணவை வீணாக்காமல் சாப்பிடும்படி மாணவர்களிடம் அறிவுறுத்திவிட்டு ‘யாராக இருக்கும்?’ என யோசித்தவாறே உணவுக்கூடத்தைவிட்டு வெளியே வந்தார்.
அறிவொளியைப் பார்த்தவுடன் “ஐயா! வணக்கம்!” என்று கைகூப்பினார்கள், வெளியேக் காத்துக்கொண்டிருந்த இருவரும்!
“வாருங்கள்! வணக்கம்! நலமா?” என்று விசாரித்துக்கொண்டே வரவேற்றார் அறிவொளி.
“நலமாக இருக்கிறோம் ஐயா! குமரனுக்குத் திருமணம். தங்களை அழைப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றான் மகேந்திரன்.
“மிக்க மகிழ்ச்சி! பெண் எந்த ஊர்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று வினவினார்.
“மகேந்திரன் தொழிலகத்தில் பணிபுரிகின்றான். நான் பகுதிநேரப் பணியுடன் தமிழில் முனைவர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். திருமணப்பெண் தங்களுக்கு அறிமுகமானவர்தான். நம் பள்ளியில்தான் படித்தார். காவல்துறையில் பணிபுரிகின்றார்.” என்று கூறிக்கொண்டே குமரன் மகேந்திரனைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான். அந்தக் கண்சிமிட்டலுக்கும் சிரிப்பிற்கும் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக உணர்ந்தார் அறிவொளி. ஆனாலும் அதுபற்றி அவர்களிடம் ஏதும் கேட்கவில்லை!.
அவர்களுடைய மற்ற நண்பர்களைப் பற்றி விசாரித்தார். பின்பு தம்முடன் உணவருந்தும்படிக் கூறினார். நாசூக்காக மறுத்துவிட்டு, தட்டில் தாம்பூலம் பூ பழங்களோடு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு அவர்பாதம் பணிந்து ஆசிபெற்றுக்கொண்டு விடைபெற்றார்கள் இருவரும்!
அவர்கள் சென்றவுடன் அவர்களுடைய பழைய வகுப்பறை அனுபவங்கள் நினைவுக்குவர ‘வால் பசங்க’ என்று கூறி தனக்குத்தானே நகைத்துக் கொண்டார்.
அலைபேசி ஒலிக்கவே எடுத்து “ஹலோ” என்றார் அறிவொளி.
“ஐயா! நான் ராஜா பேசுறேன்”
“யாருங்க?”
“ஐயா! நான் வடமங்கலம் ராஜா பேசுறேன்”
“ஆகா! ராஜா எப்படி இருக்க?” என்றார் அறிவொளி.
“நலமா இருக்கேன் ஐயா!”_ராஜா.
“என்ன திடீர்னு போன்? ஏதேனும் விசேஷமா?”_ அறிவொளி
“விசேஷமெல்லாம் ஒன்னுமில்லைங்க ஐயா! குமரனுடையத் திருமணத்திற்கு வருவீர்களா?”- ராஜா
“கட்டாயம் வருவேன் ராஜா” என்றார் அறிவொளி.
“அப்படியாயின் இவ்வளவு தூரம் பேருந்திலோ, இருசக்கர வாகனத்திலோ சிரமப்பட்டு நீங்கப் பயணிக்க வேண்டாம். நாளை மாலை ஆறு மணிக்குத் தயாராக இருங்கள்!. நான் வந்து உங்களை அழைத்துக்கொள்கிறேன்” என்றான் ராஜா.
அவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு “சரி” என்றார் அறிவொளி.
மறுநாள் மாலை சரியாக ஆறு மணிக்கு அழைப்புமணி ஒலிக்க கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி! முதலில் முத்து, அடுத்து ராஜா, பிறகு வெற்றி என்று ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.
“வாங்கப்பா! இந்த மூவர் கூட்டணி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தொடருது போலிருக்கு! நல்லது. என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றார்.
“தண்ணீர் மட்டும்” என்று கூறித் தண்ணீர்ப் பருகிவிட்டு புறப்பட்டனர். அந்த இளமைத் துள்ளும் உற்சாகக் கூட்டணியோடு இவரும் தன்னை இணைத்துக்கொள்ள முயன்றார். வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் ராஜாவும், அருகில் அறிவொளியும் அமர்ந்துகொள்ள பின்னிருக்கையில் முத்துவும், வெற்றிவேலும் அமர்ந்துகொண்டனர். ராஜா வாகனத்தை மிதவேகத்தில் செலுத்தினான். “இங்கிருந்து திருபுவனை வழியாக ஏம்பலம் சென்று ராஜேஷை அழைத்துக்கொண்டு பாகூரில் உள்ள திருமண நிகழ்விடம் செல்கிறோம் ஐயா!” என்றான் ராஜா.
அறிவொளியின் சட்டைப்பையில் இருந்த கைபேசியை பார்த்துவிட்ட முத்து, “டேய், ஐயா இன்னும் அந்தப் பழைய போனை விடலைடா.” என்று கூப்பாடு போட்டதோடு, “ஐயா போன்ல எவ்வளவு மாடல் வந்திருச்சு! இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்க மாட்டீங்களா?” என்றான்.
“இது நல்லாத்தானே இருக்கு! இதுவே எனக்குப் போதுமானதாகவும் இருக்கு! இத ஏண்டா வீணாக்கனும்? அது சரி! நீ எப்படி நல்ல பிள்ளையா இருக்கின்றாயா? இல்லை…..” என்று இழுத்தார்.
“ஆமா! என்னையே…. சந்தேகப்படுங்க! இன்னும் என்னைக் கெட்டவன்னே நினைச்சிகிட்டு இருங்க!” என்று பொரிந்தான்.
இடைப்புகுந்த ராஜா, “அவன் இப்போ ரொம்பப் பொறுப்பா இருக்கின்றான் ஐயா! கம்பெனி விட்டா வீடு குழந்தையின்னு வேலை டைட்டா போய்கிட்டு இருக்கு! தலைவர் அனாவசியமா சுத்தறத்திற்கு நேரமில்லை!” என்றான்.
“ரொம்ப மகிழ்ச்சிடா முத்து” என்றார் அறிவொளி.
“ஆமா! அவன் சொன்னா மட்டும்ம்ம் நம்புங்க! என்னை நம்பாதீங்க! படிக்கிறப்போதான் திட்டிகிட்டே இருந்தீங்க! இப்பவுமா? அப்போதிலிருந்தே என்னைக் கெட்டவன்னே நினைச்சுட்டீங்க! வகுப்பைக் கட் அடிக்க ஐடியா கொடுத்து, எங்களுக்குப் பணமும் செலவு செய்கிற இவனெல்லாம் நல்லவன்” என்று ராஜாவைச் சுட்டிக்காட்டினான்.
“அடப்பாவி! என்னை ஏன்டா மாட்டி விடுற?” என்று பதறினான் ராஜா.
“ஐயா! வகுப்புல என்னென்ன சேட்டைகள் நடந்திருக்கிறது தெரியுமா?” என்ற முத்து தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான். கள்ளங்கபடமில்லாத கலகலவென்ற அவன் பேச்சை ரசித்துக் கேட்கத் தொடங்கினார் அறிவொளி.
“நீங்கள் வருவதற்கு முன் வேறொரு ஆசிரியர் எங்களுக்குப் பாடம் எடுக்க வந்தார். ‘மின் குறியீடுகள்’ மட்டும் தான் நடத்தியிருப்பார். ஒரே வாரத்தில் அவரைப் பள்ளியிலிருந்தே ஓடவெச்சுட்டோம். அதுக்கப்புறம் கிட்டத்தட்ட ஆறுமாதம், அதாவது நீங்கள் எங்கப்பள்ளிக்கு எங்கள் வகுப்பாசிரியரா வருவதற்கு முன்வரை ஜாலியா வருவோம்! வகுப்பறையிலே கும்பலா அரட்டை அடிப்போம்! நினைத்த நேரத்திற்கு கிளம்பிப்போவோம்! பள்ளி முதல்வரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் முதன்மையான மூன்றுப் பாடங்களுக்கு ஆசிரியரே இல்லையென்றால்…? “எங்கேயாவதுப் போங்கடா” என்று துரத்தி விட்டுடுவாரு! நாங்களும் சந்தோஷமாகச் சுத்திகிட்டு இருந்தோம்! நீங்க வந்த உடனே தொடர்ந்து பாடம் நடந்து கொண்டிருந்ததால் நாங்களும் வகுப்பறைக்குள் அடைந்து கிடக்கவேண்டியதாக இருந்தது. அது எங்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருந்தது. அதனால உங்களையும் ஓட்ட நினைத்து நீங்கப் பாடம் நடத்தும்போதும் குறுக்காலக் கேள்விக் கேட்டுக்கொண்டே இருந்தேன். நீங்களும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தீங்க! அப்படித்தான் ஒருமுறை ‘மெயினும் எர்த்தும் ஷார்ட் ஆனா ஏன் பியூஸ் போகுது?’ என்று கேட்டேன்.”
“அதற்குத்தான் பாடம் நடத்தும்பொழுது ஒழுங்கா கவனிக்கணும். புத்திசாலித்தனமா என்னை மடக்கறதா நினைத்து பாடத்தை கவனிக்காமல் பேசிக்கிட்டே இருந்தா இப்படித்தான்! என்று என்னைப்பார்த்துக் கூறிய நீங்கள், ரவீந்திரனைப் பார்த்து ‘இதற்கான பதிலைச் சொல்’ என்றீர்கள். அவனும் ‘குறுக்குச்சுற்று ஏற்படுவதால் மின்தடைக் குறைந்து மின்னோட்டம் அதிகரிப்பதால் மின் உருகு இழை உருகி மின்சுற்றை பாதுகாக்கிறது’ என்ற பதிலைச் சொன்னான். அப்பொழுது ஒருகணம் ஒரே ஒருகணம் என்னை நோக்கிப் பார்த்தீர்களே ஒரு ஏளனப்பார்வை! அதற்கப்புறம் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கிற வரைக்கும் நீங்கள் பாடம் நடத்தும்போது நான் குறுக்கிட்டதே இல்லை.” என்றான் முத்து.
இதுவரை அமைதியாக இருந்த ராஜேஷ் தனது ஆசிரியரின் சந்தேகத்தைப் போக்கும் வண்ணம், “அவன் கூறுவது உண்மைதான் ஐயா! உங்களுக்கு முன்பு வந்த ஆசிரியருக்குப் பாட சம்பந்தமாக நாங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் அளவுக்குத் திறமை இருக்கவில்லை என்பதை நீங்கள் வந்த சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டோம் ஐயா! நீங்கள் பதினோராம் வகுப்பின் துவக்கத்திலேயே வந்திருந்தால் இன்னும் நாங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.” என்றான்.
“ஐயா! இன்னும் கேளுங்க!” என்ற முத்து தொடர்ந்து, “நீங்க ரெக்கார்டு முடித்துக்கொண்டு வரச்சொல்வீங்க! முடிக்காமல் வந்தால் வகுப்புக்கு வெளியிலேயே நிற்க வைத்துவிடுவீர்கள். நானோ ரெக்கார்டை முடித்திருக்கமாட்டேன். உங்களிடமிருந்துத் தப்பிக்க அன்றைய தினம் சீக்கிரமாகப் பள்ளிக்கு வந்து முதல்வர் அறைக்குச் செல்லும் எலக்ட்ரிக்கல் கனெக்சன் எதையாவதுக் கழட்டி விட்டுட்டு நல்லப் பிள்ளைபோல வகுப்புக்கு வந்திடுவேன். வகுப்புத் துவங்கியச் சில நிமிடங்களிலேயே முதல்வர் முத்துவைக் கூப்பிடுன்னு ஆள் அனுப்பிடுவாரு. நீங்களும் ‘உங்க பிரண்டுகிட்ட இருந்து அழைப்பு வந்திருச்சு, போப்பா போ!’ என்று எரிச்சலாச் சொல்வீங்க. அன்றைக்கு இணைப்பைச் சரிசெய்கிறேன் என்று உங்களோட நாலுப் பீரியடையும் கட் அடிச்சிடுவேன். ரெக்கார்டு ஓர்க் முடிக்கிற வரைக்கும் இப்படித்தான் செய்தேன்.” என்றான் முத்து.
முத்துச் சொல்லச்சொல்ல அறிவொளிக்கு ஆச்சரியமாகவும் சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது. அவரது மனநிலையை உணர்ந்தார்ப் போல, “டேய் போதும்டா! உன்னோடப் பிரதாபங்களை நிறுத்துடா!. ஐயா அதிர்ச்சியடைந்துவிடப் போகிறார்!.” என்று இடைமறித்தான் வெற்றி.
“ டேய், என்னென்ன அநியாயம் செய்திருக்கீங்கடா நீங்க!” என்று சற்றே வருத்தத்துடன் கேட்டார் அறிவொளி.
‘மாணவர்கள் கூடுமானவரைத் தன்னை ஏமாற்ற முடியாது’ என்று நம்பிக்கொண்டிருந்தவருக்கு பாடம் புகட்டுதாய் அமைந்திருந்தது அவரது முன்னாள் மாணவர்களின் உரையாடல்கள்!. ‘இவரதுச் சீடரானால் மட்டும்போதும் எப்படியேனும் தம் வாழ்க்கைக் கரையேற வழிகாட்டிவிடுவார் என்று மாணவ சமுதாயம் நம்பும் மதிப்புமிக்க ஆசிரியர்! இத்தகைய மாணவர்களாலேயே அவர் பணியாற்றும் பள்ளியிலும், ஊரிலும், ஆசிரியர் சமுதாயத்திலும் நன்மதிப்பைப் பெற்றவர்’ என்று நம்பிக்கொண்டிருந்தவருக்கு “மாணவர்களையும் மாணவர்களிடமிருந்தும் கற்கவேண்டியது ஏராளமாக இருக்கிறது” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது அவரது முன்னாள் மாணவர்களின் கூற்றுக்கள்.
வாகனம் திருமண மண்டபத்தை நெருங்கியதுதான் தாமதம் வாகனத்தைச் சூழ்ந்தது ஒரு கூட்டம்! ரவீந்திரன், மகேந்திரன், லிங்கேஸ்வரன், அருள், அரசன், முருகன், மூவரசன், சுந்தரமூர்த்தி…. குறிப்பிட்ட அந்தக் கல்வியாண்டில் அவரிடம் பயின்ற அத்தனை மாணவர்களும் அங்கிருந்தார்கள். மிக உற்சாகமாக ஆரவாரமாக ஆளாளுக்கு அவரை வணங்கி வரவேற்று நலம் விசாரித்தார்கள்.
எதிர்பாராத அந்த நிகழ்வினால் மாணவக் கண்மணிகளின் அன்பில் திளைத்துத் திக்குமுக்காடினார் அறிவொளி. அத்தனை மாணவர்களையும் ஒருசேரக் கண்டதில் ஆனந்தமடைந்தார். அவ்விடத்திலேயே ஒவ்வொருவரையும் அரவணைத்து வாழ்த்தி நலம் விசாரித்தார்.
மண்டபத்தினுள் சென்று இருக்கைகளில் வட்டமடித்து அமர்ந்து ஒவ்வொருவரும் மலரும் நினைவுகளாய், அவர் தமக்கு ஆசானாக வந்த பிறகு தமது நடத்தையில், பண்பில், படிப்பில், முன்னேற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆர்வத்தோடுப் பகிர்ந்து கொண்டனர். அறிவொளிக்குப் பெருமையாக இருந்தது. இவ்வனுபவம் அவருக்கு மறக்க முடியாத அனுபவம் ஆயிற்று.
“ராஜா, வெற்றி, மகேந்திரன், ரவீந்திரன்… நீங்கள் எல்லாம் எப்போது விருந்து வைக்கப்போகிறீர்கள்? வைப்பீர்களா அல்லது முத்துவைப் போல ரகசியமாக முடித்துக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.
“உங்களுக்குச் சொல்லாமலா ஐயா?” என்றார்கள் ஒவ்வொருவரும்.
“ராஜாவுக்குத்தான் மும்முரமாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அடுத்த விருந்து அவனோடது தான்” என்றான் முத்து.
அறிவொளி ராஜாவைப் பார்க்க, “எனது பெற்றோர் என் திருமணத்தை ஆறு மாதத்திற்குள் முடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள் ஐயா” என்றான் ராஜா.
மணமக்களை வாழ்த்த அறிவொளியை முன்னிறுத்தி அவரைப் புடைசூழ்ந்தபடி மணமேடையை அடைந்தனர் அனைவரும்! மணமக்கள் இருவரும் புன்னகையோடு வணங்கியபடியே வரவேற்றார்கள். மணமகளைக் கண்டதும் அதிர்ச்சியில் ஒருகணம் தன்இதயம் நின்றுபோனதை அறிவொளியால் உணரமுடிந்தது. மணமக்கள் அவருக்குப் பொன்னாடை அணிவித்து அவர் பாதம்பணிந்து ஆசி பெற்றனர். தம் மாணவர்கள் வாங்கியிருந்தப் பரிசுப்பொருளுடன் தம்முடைய சிறு அன்புப்பரிசையும் வழங்கி மணமக்களை வாழ்த்தினார். நண்பர்கள் கொண்டுவந்திருந்த திருமணக்கேக்கை நாயகன் குமரன் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தூட்டி என ஓரிரு நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு நிழற்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்பு ஒருவரை ஒருவர் கேலி செய்தவாறே விருந்துண்டு முடித்ததும், நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்ந்து ‘புறப்படலாமா?’ என்பதுபோல் ராஜாவைப் பார்த்தார் அறிவொளி.
மணமக்களிடம் விடைபெற்றுப் புறப்பட ஆயத்தமாக__ அவரது மாணவச் செல்வங்கள் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வழியனுப்பி, வாகனம் தம் பார்வையிலிருந்து விலகும்வரை கையசைத்துத் தம் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
வீடு வந்து சேரும் வரையிலும் முத்து மீண்டும் தனது வகுப்பறைப் பிரதாபங்களைப் பட்டியலிட, கோபப்பட்டு அவனை அடிப்பதுபோல அடிக்கடி பாவனை செய்தாலும் அவனது சேட்டைகளை ரசித்து மகிழ்ந்தார் அறிவொளி.
தன்னை வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்ட பிறகும்கூட ‘தன்னையும் ஏமாற்றிவிட்டு இவர்கள் என்னென்ன சேட்டைகள் புரிந்துள்ளனர்’ என்று எண்ணித் தமக்குள் நகைத்துக்கொண்டதோடு, “தாம் கற்கவேண்டியது இன்னும் ஏராளமாக இருக்கிறது” என்று எண்ணிக்கொண்டார் மீண்டும் ஒருமுறை!.
படுக்கையில் சாய்ந்த அறிவொளியின் இதயத்தை ஒருமுள் ஆழமாய்க் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. ஆம்! வெளியுணர்வு ஆர்ப்பாட்டங்கள் விடைபெற்றுவிட்ட பிறகு அவரின் உள்ளுணர்வு விஸ்வரூபம் எடுத்தது.
‘தன்மேல் விழுந்தப் பனித்துளிகூட விலகாத நிலையில் முழுதாய் பூக்கும் முன்பே உதிர்ந்த மலர்போல உதிர்ந்துவிட்ட தன்மகள் மதிவதனி வந்துபோனாள். தன்னையே உலகம் என்று மூச்சுக்கு முன்னூறுமுறை அப்பா அப்பா அப்பா… என்றுத் தன்னையேச் சுற்றிச்சுற்றி வந்தவள்!. தன் அப்பாவேத் தனது வாழ்வும் வளமும், தன் அப்பாவேத் தனது நலமும் வளமும் என்று நம்பி இருந்தவளை…..’
“அப்பா! அவள் யாருடனோ அடிக்கடி அலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறாள். கேட்டா, கல்லூரியில அவள் டீமுக்கு அவள்தான் பிராஜக்ட் லீடராம். பிராஜக்ட் சம்பந்தமானச் சந்தேகங்களுக்குக் குழு உறுப்பினர்கள் இவளைத் தொடர்பு கொள்கிறார்கள் என்கிறாள். நீங்க என்ன ஏதுன்னு கேட்காம செல்லம் கொடுத்து அவளைக் கெடுக்குறீங்க!” என்று அவள் அண்ணன் வளவன் பலமுறைக் கூறிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்திய நான், அன்றும் அலட்சியப்படுத்தியிருக்கலாம்! அப்படி என்ன கேட்டுவிட்டேன் அவளிடம்! பொருத்தருளாமல் தண்டித்து என்னைத் தவிக்கவிட்டுவிட்டாளே அன்பும் பண்பும் அறிவும் ஆற்றலும் நிறைந்த எனக்குத் தாயான என்சேய்! தண்டித்துவிட்டாளே என்னை! அவளது நம்பிக்கையாய் இருந்த நானே அவளுக்கு எமன் ஆனேனே! ஆண்டுகள் இரண்டு உருண்டோடிவிட்டன. ஆனாலும் இன்னும் நான் உயிர்தாங்கி நிற்கிறேனே……!
இந்த மாலா! இன்று குமரனின் மனைவியாகி இருக்கின்ற இந்த மாலா! இன்று காவல்துறையில் பணியாற்றுகின்ற இந்த மாலாவை எத்தனை முறை நான் கண்டித்திருக்கிறேன்! தன் வகுப்பறைக்கருகில் இவள் குமரனிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோதெல்லாம் எப்படிக் கோபப்பட்டிருக்கிறேன்! அவளைத் திட்டியிருக்கிறேன்!
வகுப்பாசிரியர் என்ற முறையிலும், ஒழுக்கத்தைப் போதிக்கிறேன் என்ற நினைப்பிலும், குமரனை எவ்வாறெல்லாம் கண்டித்திருக்கிறேன்!
பருவ வயதினர், எங்கேத் தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று தாம் அன்று நினைத்து அவர்களைக் கண்டித்தது, அர்த்தமற்றது என்று இன்று அவர்கள் தனக்குப் பாடம் புகட்டியிருக்கிறார்களே!
இன்றைய இளையத் தலைமுறையினர்த் தெளிவாகவே சிந்திக்கிறார்கள்! முடிவெடுக்கிறார்கள்! செயல்படுகிறார்கள்! தாம்தான் அவர்கள் மீது அர்த்தமற்றச் சந்தேகங்களைக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தார்.
கணப்பொழுதில் தோன்றிய சிறியதொரு சந்தேகத்தினால்தானே தன் நினைவிற்கும் மனதிற்கும் உயிருக்கும் தாங்கொணாத் துயரத்தை வேதனையை வலியை தந்துசென்றாள் என் தங்கமகள்!
**********
நன்றிகளுடன்,
ப. சிவகாமி,
புதுச்சேரி.

