Padhagathi
Padhagathi

ஜனநேசன்

தேனி சீருடையான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த படைப்பாளி.கவிதையில் அடியெடுத்து வைத்து சிறுகதையில் காலூன்றி புதினங்களில் விழுதுவிட்டு நிற்பவர்.இப்படியான ஒரு பெருந்தச்சன் ஒரு சிறுதேர் செய்ததுபோல் அமைந் துள்ளன “பாதகத்தி “ என்னும் இத்தொகுப்பில் உள்ள கதைகள். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் முக்கியமானது மனது.!மனது உள்ளவன் மனிதன். மனது உடலில் எங்கே உள்ளது? யாரறிவார்.ஆனாலும் உயிர்ப்பின் முக்கிய உறுப்புகள் உறையும் நெஞ்சகமே மனம் உள்ள இடமாக கருதுகிறோம்!மனம் தனித்து இயங்குமா, அதற்கான ஆற்றலும் தான் அதற்குண்டா?. ஆனால் மனிதனின் வலியும்,மகிழ்வும்,சரிவும், உயர்வும் ஆன புறவுலக அனுபவம் சார்ந்தஅறிவும் உணர்வும் சேர்ந்த கலப்பல்லவாமனம்.! இத்தகு மனமே விலங்குகளிடமிருந்து நம்மை பிரிக்கிறது.இதுவே மனிதனை அறிவும் உணர்வுமாய் இயக்குகிறது;வழிநடத்தவும் செய்கிறது.இப்படியான மனிதர்களின் வாழ்வியலை உளவியலோடு எதார்த்தம் கலந்து சொல்லும் கதைகளே “பாதகத்தி”.

புதுமின்னல்,வெள்ளம் , கடிதங்கள்ஆகிய மூன்றுகதைகளும் நடப்பு வாழ்வில் புது மாற்றங்களை முன் மொழிபவை.அசைவப்பூ கதை இன்றைய கல்விச்சூழல் பிஞ்சுமனதுகளை பாதிப்பதைஉணர்த்துகிறது. அம்மாஆஆஆ கதை தாய்பாசத்தை மட்டுமல்ல, கள்ளமில்லா அன்பை, காதலை உணர்வோட்டத்தோடு சொல்லி வாசக நெஞ்சை நெகிழ்த்தி கண்ணீரை பிரசவிக்கிறது!ஆவிகள் உலவும்காடு-பொருந்தா மணத்தையும்,தீரா காமத்தையும், இதை எல்லாம் செரித்த பண்பட்ட மனத்தையும் எதார்த்தம் பிசகாத துயரோடு சொல்கிறது.பாதகத்தி கதை எளிய மனுசியிடம் வெளிப்படும் மனித வாஞ்சையை, பணத்தாசையும்,அதிகார வெறியும் எப்படி மிதித்து கடக்கிறது என்பதை வலியும், எள்ளலும் கலந்த வார்த்தைகளில் வாழ்க்கைப்படுத்தி உள்ளார் சீருடையான்.கணவன்மனைவி இருவரும் அவரவர் அந்தரங்கத்தில் தலையீடு செய்யாத பட்சத்தில் காதல்தோல்வி ஏற்படுவதே இல்லை என்பதை ஒற்றைப் பேனாவில் இரண்டு வரிகள் என்ற கதையில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.ஆங்கில மருத்துவத்தின் மனிதநேயமற்ற வியாபாரத்தனத்தை வீட்டை நோக்கி நடந்தான் கதை தோலுரிக்கிறது.

இக்கதைகள் நீங்கலாக மற்ற கதைகளில் ஜென்பௌத்த சிந்தனைகள் கவித்துவத் தோடு கதைகளை நகர்த்துகின்றன.இக்கதைகளில் சீருடையானுக்குள் மறைந்திருக்கும் கவிதை ஊற்று வழிகிறது. புத்தர் துறவுக்கு இதுவரை சொல்லப்பட்ட காரணங்களுக்கப்பால் மீள்வாசிப்பு செய்து யசோதையின் மனோரதத்தின் படி உளவியல் ரீதியான காரணத்தை நிறுவுகிறார் சீருடையான். காதலையும், காமத்தையும் முங்கி நீந்தி துய்த்தே கடக்கவேண்டும் என்பதையும் வாழ்ந்தே வாழ்வெனும் வெளியை கடக்கவேண்டும் என்பதையும் தொகுப்பு முழுவதும் பதிவு செய்கிறார். இயற்கையோடு இயன்றளவு வாழ்தலை இத்தொகுப்பெங்கும் முன்மொழிகிறார்.ஒரு வரியில் கதையின் சாரத்தை சொல்வதால் இக்கதையின் சாரம் குறைந்தவை அல்ல.மாறாக அவை ஆழமும் அகலமும் ஆன வாழ்வின் பரப்பை அழகியலோடுஎடுத்துரைப்பவை. வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அக்கதைகளோடு ஒன்றவும்,அக்கதை மாந்தர்களோடு, நிகழ்வுகளோடு வாசகனை அடையாளப்படுத்தவும் செய்வன! வாசிப்பையும் யோசிப்பையும் விரிவுபடுத்துவன. இத்தொகுப்பின் மூலம் சிறுகதையின் அடுத்த சீருடையான் தளத்திற்கு நகர்கிறார். வாங்கி வாசித்து அவரோடு நாமும் நகர்வோம்!

“பாதகத்தி”

ஆசிரியர்: தேனி சீருடையான்

வெளியீடு: அன்னம் வெளியீடு.

பக்.168 விலை:160/-

நூலினைப் பெற – 044 2433 2924

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *