விசுவநாதன் தனது ஊருக்குத் திரும்பி வருகிறான், பல வருடங்கள் கழித்து. யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.இப்போது அவன் ஓவியன்.வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறான். அந்த வீட்டில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன.அவனுடைய அம்மா, அப்பா. அவர்களைக் கொன்ற பயலி என்கிறவனுடன் மோதி, பின்னர் அவனிடம் நட்பாகிறான். அவனை நம்பவைத்து அவனது மகளை சீரழிக்கிறான். அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக வாத்துக் கூட்டத்தை மொத்தமாக உணவில் நஞ்சு வைத்து அழிக்கிறான். பயலியை கூட கொன்று விடுகிறான்.
இதுதான் “இதா இவிடே வரே” என்கிற படத்தின் மேலோட்டமான கதை. பத்மராஜன் எழுதியது. ஒரு சாதாரண பழிக்குப் பழி கதை என்று தோன்றுகிறது அல்லவா? ஆனால் கதை அது அல்ல. திரைக்கதை அது அல்ல. நாம் பத்மராஜன் என்கிற ஒரு சினிமா ஆசாமியைப் பற்றி தொடர் எழுதுகிற அளவிற்கு அவர் செய்தது என்ன என்பதற்கு முதலில் இப்படத்தில் இருந்து நமது பார்வையைத் தொடங்கலாம். அவர் யார், பிறப்பு வளர்ப்பு என்ன, அவர் சினிமாவிற்கு வந்தது எப்படி என்பதையெல்லாம் போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். முதலில் அவரது கலை என்ன என்பதை பார்த்து விட்டால் ஒரு சித்திரம் அவரைப் பற்றி நமக்குள் எழுந்து விடும். அது முக்கியம் என்று நினைக்கிறேன்.
விசு ஊருக்குள் வந்து நமக்கு அவன் பிளாஷ் பேக் தெரிந்த பிறகு நாம் அவன் பக்கம் தான் இருக்கிறோம். இருப்போம் என்பது வழக்கமான சினிமாவின் கணக்கு.
படம் கொஞ்சம் நகர்ந்த பிறகு நம்மால் அப்படியே இருக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி.
விசுவின் அப்பா அந்த ஊரின் மின்சார படகிற்கு டிரைவர். மகன் மீது அவ்வளவு வாஞ்சை. ஆனால் மனைவி இருக்கும்போது அவளது தங்கையையும் சேர்த்துக் கொண்டவர். குடிகாரர். குடிக்க வரும் நண்பர்களில் ஒருவன் தான் பயலி. அவரது இரண்டாம் மனைவிக்கும், பயலிக்கும் உண்டாகிற கள்ளத்தொடர்பின் பொருட்டே மோதல் உருவாகிறது. பயலி அம்மோதலில் விசுவின் அப்பா அம்மாவைக் கொல்லுகிறான். பத்மராஜன் ஒரு குடும்பத்தை நல்லது கெட்டது என்று பிரிக்காமல் அதற்கு இரண்டுக்கும் இடையில் வேறு ஒரு வர்ணத்தைக் கொடுக்கிறார். இதை நாம் ஒரு கட்டத்துக்கு மேலே யோசிக்க வேண்டியிருக்கும்.
விசுவும் பயலியும் சேர்ந்த பிறகு பயலியின் பிளாஷ் பேக் ஒன்று உண்டு.
இருபது வருடம் ஜெயிலில் இருந்து திரும்பிய பிறகு தனது அண்ணனுடன் அவன் மழை செல்லுகிற ஊர்களுக்கு எல்லாம் தொடர்ந்து சென்று வாத்துக்களை வளர்க்கும் தொழில் தான் செய்கிறான். ஏழ்மையால் பலவீனப்பட்டிருக்கிற ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளை கொஞ்சம் வலுக்கட்டாயமாகவே அடைகிறான். ஆனால் அவள் மீது ஒரு கரிசனம் எழுந்தாலும் கர்ப்பிணியாக இருக்கிறவளை கைவிட்டு செல்கிறவன் மூன்று வருடத்துக்கு அப்புறம் தான் திரும்பி வருகிறான். அவள் உயிரோடு இல்லை. அவளது வளர்ப்பு அம்மாவின் சாபத்தைக் கேட்டுக் கொண்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கிற தனது குழந்தையைப் பார்க்கிறான். பின்னொரு நாள் அவனுடைய அண்ணன் அந்தக் குழந்தையைக் கொண்டுவர, அண்ணன் தம்பி இருவருக்கும் அவள் தான் வாழ்க்கை என்று ஆகிறது. எங்களுடைய மொத்த சம்பாத்தியம் என்கிறான் பயலி. எங்கள் சொத்து அவள் !
இந்த பிளாஷ் பேக் முடிந்த உடன், எல்லா முரட்டுத்தனத்துக்கும் அடியில் இருந்து புகை போல எழுகிற பயலியின் நெகிழ்வை பார்வையாளர்கள் அறிகிறார்கள். முன்னம் இருந்தது போல விசு பயலியைக் கொல்ல வேண்டும் என்கிற இச்சை அவர்களுக்கு குறைகிறது. அந்த நேரத்தில் தான் அவன் அவளை வேறு நோக்கத்துடன் அணுகி தனது உடலுறவை முடிக்கிறான். அது ஒரு தீய நோக்கமாகவே யாருக்கும் உறுத்தும். விசு செய்வது நியாயம் என்று நினைக்க வாய்ப்பேயில்லை. அவள் கர்ப்பம் அடையவில்லை என்று அறிந்து மறுபடியும் ஆவலுடன் கூடுகிறான்.அடுத்தது வாத்துக்களின் உணவில் விஷம் கலக்குகிறான். மறுநாள் அவைகள் செத்து மிதக்கையில் யாரும் அதை விரும்பியிருக்கப் போவதில்லை.
கடைசியாக இருவரும் நேருக்கு நேர் சந்திக்கிற நிமிடம் வருகிறது.
நான் இன்னாருடைய மகன் என்று வெடிக்கிறான் விசு. இருவரும் மோதுகிறார்கள். இருவரும் சரிகிறார்கள். மயக்கம் போட்டு கிடக்கிறார்கள். முன்னமே விழிக்கிற விசு காற்று மழை இடி மின்னலில் பயலியை தோணியில் ஏற்றி அவனைக் கடலில் கொண்டு சென்று போடுவதற்கு செல்லும்போது இயற்கை ஒத்துழைக்கவில்லை. சொல்லப்போனால் தோணி அனுபவம் இல்லாத விசுவை பயலி தான் காப்பாற்றுகிறான். அவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
விசு கிளம்புகிறான்.
தம்பியை புதைத்து விட்டு வருகிற அண்ணன் போதுமா உனக்கு என்கிறார். நீ யாரென்று எனக்கு தெரியும் என்கிறார். நான் கொல்லவில்லை என்று விசு சொல்லிப் பார்க்கிறான். பயலியின் மகளிடம் நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டுப் பார்க்கிறான். முதல் முறை உறவு முடிந்து ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்டதற்கே விழுந்து விழுந்து சிரித்தவள் அவள். தோற்கடிக்க முடியாத பெண் அவள் ! ஒருமுறை, இருமுறை படுத்து விட்டதற்காக அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு இவனுக்காக உருகவே மாட்டாள். போடா, நான் பயலியின் மகள் என்று தனது பெரியப்பனுடன் கிளம்பி ஊரை விட்டே செல்கிறாள் அவள். அந்த தோணி கண்ணில் இருந்து மறைந்த பிறகு வெட்டவெளியில் கரையில் நிற்கிறான் விசு.

ஏற்கனவே ஒரு பெண் இருந்தாள். அவளை இவன் திருமணம் செய்து கொண்டு பழி உணர்வுகளை விட்டிருந்தால் இவனும் மற்றவர்களை போல எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். அது தவறிப் போயிற்று. எங்கே போகிறாய்? இதோ இதுவரைக்கும் ! அந்த இடம் எது என்று யாரும் கேட்டதில்லை. இவனும் சொன்னதில்லை. இனிமேலும் யாரும் இவனைக் கேட்க மாட்டார்கள். சொல்லப்போனால் இனிமேல் இவன் செல்லப் போகிற அந்த இடம் இவனுக்கே தெரியாது. எவ்வளவு கனமான தனிமை?
பழிக்குப் பழி மட்டுமே எழுதுவதற்கு பத்மராஜன் தேவையில்லை.
படம் எல்லா மடிப்புகளிலும் மின்னுவதற்கு அவர்தான் காரணம்.
அவருடையதிரைக்கதைதான்காரணம்.
அவர் நல்லது கெட்டதுகளை சொல்லி, நீதி நியாயத்துக்கு சன்னதம் கொண்டு ஆடுகிற பாவனைகளை மேற்கொள்ளவில்லை. உண்மையில் சரி தவறுகளைக் கொண்ட மனிதர்களை நிரூபிக்க விரும்பினார். அவர்களிடம் காழ்ப்பு கொள்ளுகிற சந்துகளை தேடிப் போவதைக் காட்டிலும், அவர்களிடம் பரிவு கொள்ள முடிகிற தருணங்களை இப்படத்தில் தேடி அடைந்து சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கோட்பாடுகள், கணிதம் போன்ற வறண்ட டேட்டா அடுக்கல்கள் இல்லாமல், மனதின் தாளம் கொண்டு மனித உணர்வுகளை பின் தொடருவது இந்தப் படத்தில் மட்டும் அல்ல, எப்போதும் அவரது வழக்கமாக இருந்தது.
படம் 1977 இல் வந்திருக்கிறது. இப்படத்தை ஐ வி சசி இயக்கியிருந்தார்.
நாற்பது வருடங்களுக்கு அப்புறம் இப்போது அந்தப் படத்தைப் பார்க்கும் போது அதில் ஏதேனும் குறைகள் தோன்றினால் அது திரைக்கதையில் இருக்கிறகுறை அல்ல என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். படத்தில் இருந்த பயலியின் மகளை இம்முறை பார்க்கும் போதும் வியந்தேன். படம் வெளிவந்த காலத்தில் அவளை யாருமே ஒரு நடத்தை கெட்ட பெண் என்று தான் முகம் சுழித்து ஒதுக்கியிருப்பார்கள்.
அதைப் போல பயலியின் கதாபாத்திரத்தில் பார்வையாளனாக யோசிக்க பல விஷயங்களும் இருக்கின்றன. விசுவின் அப்பா கட்டுப்பாடு இல்லாத மனம் கொண்டவர். மனைவியை அடக்கி மூலையில் இருத்தி விட்டு வேறு ஒரு பெண்ணை அபகரித்துக் கொண்டவர். உண்மையை சொல்லப் போனால் இளமையோடு இருக்கிற அவளை அடக்கி ஆளுகிற துப்பு அவருக்கு இல்லை. முழுசாகக் குடித்து கூச்சலிட்டு குடும்பத்தை ஒரு பயத்திலேயே வைத்திருக்கிறார். அந்த போலித்தனம் தான் அவரை கோபம் கொள்ள வைத்து பயலியை குத்த கத்தி எடுக்க வைத்தது. பயலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடுகிறான்.
குறுக்கே வந்து விழுந்த விசுவின் அம்மா இறந்து போக, வேறு வழியின்றி தான் பயலி அப்பாவைக் கொல்லுகிறான். போலியான ஒரு ஆளின் இயலாமை, மற்றும் கோபத்தினால் விளைந்த ஒரு பெரிய விபத்து என்று தான் அந்தக் கொலைகளை கொள்ள வேண்டும். மிக சுருக்கமான சித்திரங்களில் பத்மராஜன் படத்தில் இவ்வளவு உள்கதைகளை வைத்திருந்தார். உண்மையில் இவைகள் எல்லாம் என்ன செய்கின்றன என்று யாராவது கேட்கக் கூடும். முக்கியமான கேள்வி தான். படம் அறுபது காட்சிகளை அடுக்கிக் காட்டின ஒரு சினிமாவாக மட்டும் முடியாமல், படம் பார்த்து முடிந்ததும் ஒரு முழு வாழ்வைப் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.
பத்மராஜன் தனது சினிமாவை இயக்குவதற்கு முன்னால் எழுதின கதை திரைக்கதைகளில் ஒன்று, இதா இவிடே வரே. இது போல பல படங்களுக்கு எழுதி இருக்கிறார்.அவர் நாவல்கள், மற்றும் சிறுகதைகளை எழுதியவர்.மிக மிக விரிவான அர்த்தத்தில் சினிமாவைப் புரிந்து கொண்டிருந்த அவரது செயற்பாடுகளில் ஒரு இலக்கியவாதியின் மனம் இருந்துகொண்டே இருந்தது என்பதை யாரும் யூகிக்கலாம்.
பத்மராஜன் கவனிக்கப் படாமல் போகவில்லை என்று செல்ல முடியாது.
மோகன்லால் மற்றும் பத்மராஜன்
அவரது படங்கள் வெற்றியடைந்தவை தாம். கூட, கூட பாராட்டுகள் இருந்து கொண்டுதான் இருந்தன. அவராக படம் இயக்க துவங்கும் வரை பெரிய இயக்குநர்களோடு தான் அவர் பணிபுரிந்தார். எல்லோரும் அவரை புத்திசாலி, கலைஞன் என்று கொண்டாடவே செய்தார்கள்.
எனினும் ஒன்று இருக்கிறது. அவர் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டாரா ? அவரது படங்கள் பற்றி குறிப்பிட்ட சில பேர் விஸ்தாரமாகக் கூட எழுதி இருந்திருக்கலாம். அதை எல்லோரும் படித்திருப்பார்களா? ஹாலிவூட் மற்றும் உலக சினிமாக்களுடன் ஒப்பிட்டால் இந்திய சினிமா மிகவும் பின்னுக்கு இருந்தது. அதில் கொஞ்சம் விவரம் இருக்கிறவர்கள் நல்ல பொழுது போக்கு படங்களை எடுத்தார்கள். அல்லது முற்றிலும் மக்களுக்கு எட்டாமல் அந்நியமாகி நின்ற கலைப்படங்களை எடுத்தார்கள். நிகழ்காலத்தில் இவைகளை எல்லாம் தாண்டின புதுமையும் விநோதமும் வியப்புகளையும் வைத்திருந்த திரைக்கதைகளை உருவாகின ஒருவன் எந்த உலக மேதைகளுக்கும் குறைந்தவன் அல்ல என்கிற கான்ஷியஸ் இருந்ததா? அவருடைய மேதமையை கூடவே தொடர்ந்து படித்தார்களா?
கேரளத்தில் அப்புறம் ஏன் ஒரு பத்மராஜன் இல்லை?
நான் அவரை இன்னமும் மக்கள் விரிவாக அறிய வேண்டும் என்று நினைக்கிறேன்.
மிகவும் சிரமமான பணி. அதற்கான திறன் இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் சினிமாவே டேட்டாக்களினால் சுருங்கும் காலம் வந்து விட்டது. குறுகிய காலத்துக்கு கூட நிற்காத படங்களை எடுத்து விட்டு வழிப்பறி செய்து விட்டுப் போக சூத்திரங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனம் என்கிற காரியம் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது
எப்படியும் பத்மராஜனை மக்கள் அறிய வேண்டும். ஒரு அறிமுகமாவது வேண்டும்.
தொடருகிறேன்.
-மணி எம்.கே மணி
பத்மராஜனை புரிந்து கொள்வதற்கான ராஜ பாட்டை… தொடருங்கள் தங்களின் விரல் நுனி பிடித்து வர காத்திருக்கிறோம்…..
நாங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் பார்த்த படம். விடலைகள் செக்ஸ் படம் என்கிற தரத்தைத்தான் தந்தனர்
மேலும், போஸ்டரைப் போட்டுவிட்டு, படத்திற்கு இடையில் பிட் நுழைத்துவிடுகிற போக்கிரித்தனமும் செய்தார்கள் சினிமாக் கொட்டகைக்காரர்கள். நீங்கள் சொல்கிற இத்தனை சாத்தியங்களையும் உள்ளடக்கிய பார்வை மிகவும் முக்கியமானது. மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. நன்றி.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது தங்களின் எழுத்து.