இதா இவிடே வரே படத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஜெயபாரதி முதுகு மிக பிரபலமானது. அதை மிக வலுவான ஒரு தாக்குதல் போல மக்கள் உணர்ந்தார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படம் ஓடின தியேட்டரில் என்னை  பார்த்து விட்ட ஒருவர் அதை என் அப்பாவிடம் சொல்லிவிட்டார். நீ செய்த காரியம் எனக்கு தெரியும் என்கிற அந்த செய்தியை வெளிப்படுத்துவதற்காக எனது அப்பா என்னை சீண்டியதில் ஒருவிதமான பயமும் மற்றபடி துவேஷமும் இருந்ததாக கூட நினைவுண்டு. பாலியலை ஒரு மனிதன் தனது அந்தரங்கத்தில் எவ்வளவு ஆர்வம் கொள்கிறானோ அது அரங்கத்தில் வரும்போது அவனை மீறின அச்சம் எழுகிறது.

பரதனுக்கும் பத்மராஜனுக்கும் அதனால் தான் ஒரு சவால் உண்டாகியிருக்க வேண்டும். பேசா பொருளை பேச விரும்புகிற ஆவல். அதில் இன்றுமே கூட பெரிய போதாமைகள் இருக்கின்றன. அசட்டுக் கூச்சங்கள் இருக்கின்றன. அவற்றை விவரிக்கத் தெரியாமல் பல மேதைகளும் பின்னடைந்திருக்கிறார்கள். எது ஒன்றும் விதிவிலக்கில்லை என்பதும் ஆண் பெண் விவகாரத்தை சொல்லுவதில் ஒரு தீரம் உண்டு என்பதாக நம்பியதாலும் அவர்கள் அதில் உற்சாகமாக ஈடுபட்டார்கள் என்று படுகிறது. அப்புறம் சொல்ல சொல்ல சொல்லி முடிக்க முடியாமல் இருப்பதும் அங்கேதான்.

The Best Director Bharathan – Writer Padmarajan Combinations Of Malayalam Cinema

மறுபக்கம் வாய்ப்பு, வணிகம் போன்ற அப்பட்டமான காரணங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளவே வேண்டும். சினிமா என்பதே அந்த நேரத்தின், உணர்வுகளின் கூட்டுக் கலவை என்பதை அனுபவங்களில் அறிவேன். எட்டு எட்டு அறுபத்தி எட்டு குட்டிக்கரணங்கள் போடாமல் எந்த சினிமாவும் இல்லை. அப்படியாக நான் பார்த்த பத்மராஜனின் இரண்டாவது திரைக்கதை ரதி நிர்வேதம்.

சசியைப் போன்றவர் அல்ல பரதன்.

ஒரு பார்வையிலேயே நான் படத்தின் தரத்தை உணர்ந்தேன்.

தன்னைக் காட்டிலும் மூத்த பெண் ஒருத்தியின் மீது மோகம் கொண்டு விடுகிற சிறுவனைப் பற்றியது படம். இம்மாதிரி கதைகளுக்கு தனியாக ஒரு மொழி உண்டு. அது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற புரிதல் சட்டென வந்து விட்டது. ஆனால் அது உண்டாக்கின விறுவிறுப்பில் இருந்து வெளியேற முடியவில்லை. இரண்டு மூன்று நான்கு முறை பார்த்துக் கொண்டே போகும்போது அதில் நான் கண்ட சரி தவறுகள் விலகிப் போனதாகப் பட்டது. கடைசியாக நான் என்னை நெகிழ வைக்கிற காட்சிகளுக்காக நான் அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

உண்மை அதுதான்.

பத்மராஜனின் திரைக்கதை அப்படி.

பிரயாணம் என்கிற படம் அவர் முதலில் எழுதியது. இதா இவிடே வரே க்கு அப்புறம் இரண்டு திரைப்படங்களுக்கு எழுதினார். சேது மாதவன், கே ஜி  ஜார்ஜ் ஆகிய கில்லாடிகளின் படங்கள் அவை. இவைகளையும் பத்மராஜன் என்கிற ஆளுமையை முழுமையாக அறிந்த பின்னர் பார்த்தவை. ரதி நிர்வேதம் முதலில் எனக்கு பரதன் என்கிற பெயரை கவனிக்க வைத்தது. கொஞ்சம் காலத்திற்கு பிறகுதான் பத்மராஜனின் பெயரை நிலை நிறுத்தியது.

Amazon.com: Rathinirvedam: Jayabharathi, Krishnachandran, Kaviyoor …

கல்லூரிக்கு செல்லும் தருவாயில் இருக்கிற ஒரு பையன்பப்பு. திரைக்கதை முதலில் அவனது பருவத்தைக் குறிக்கிறது. முட்டை விரியும் பருவம் என்பார்கள் இல்லையா, அது. வீட்டில் இருந்து, விளையாட்டில் இருந்து, விளையாட்டுத் தோழர்களிலிருந்து விலகி செல்கிற பருவம். முன்னம் எப்போதும் கவனிக்காத பல வற்றை புதிதாக பார்ப்பது போல கண்டடையும் அந்தக் காலத்தில், சிறுவயதில் இருந்தே கூடவே வளர்ந்த, அக்கா என்று அழைத்தவாறே இருந்த, அவனைக் காட்டிலும் நான்கு வயது கூடுதலான ரதியை அவன் மேலும் பார்க்கிறான். அவளது கண்கள், புன்னகை, வாசம். கவனிக்கத் துவங்கிய பிறகு கண்டு முடிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து நிற்கிற பிரம்மாண்டமான கோபுரம் அவள். அவள t் கட்டுக்குள் கூட நிற்க முடியாமல் ததும்பி வழிகிற மதர்ப்புண்டு அவளிடம். சிறிய ஒரு துண்டு மனசைக் கொண்டிருக்கிற சிறுவன் மூச்சிறைப்பு கொள்ளாமல் என்ன செய்வான்? அவளுடைய அண்மை அவனுக்குள் தீ வளர்த்துகிறது. அவன் இங்கிதம் கெட்டு முன்னேறுகிறான்.

கனவுகளுக்கும் எதார்த்தங்களுக்கும் உள்ள எல்லைக்கோடுகள் அழிகின்றன.

அவன் அவள் மீது கை வைக்கிறான்.

அவள் அதிர்கிறாள். கண்டிக்கிறாள். நடவடிக்கை எடுக்கவில்லை. மன்னிக்கிறாள். ஆனால் அவன் மறுபடியும் அடுத்தமுறை அதையே செய்யும்போது உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை என்று விலக்கி விட்டுவிடுகிறாள். ஒரு பால்மணம் மாறாத சிறுவனுக்கு அவள் அப்படிதான் நல்லது சொல்லிக் கொடுக்க முடியும். ஒரு வளர்ந்த பெண் அந்த சூழலுக்கு எது சரி என்று முடிவெடுப்பாளோ, அதைத்தான் அவள் செய்தாள். அவளுக்கு தான் இவ்விஷயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அதனால் அவன் மனம் வருத்தம் கொண்டாலும் பரவாயில்லை, தனது மனதை இளக்கிக் கொள்ளக் கூடாது என்று தானே இருந்திருக்க வேண்டும், அவளால் முடியவில்லை என்பது கதை. திரைக்கதையுமே கூட.

Pin on Malayalam Movies

உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று அவன் மனம் கசந்து சொல்லி முடிப்பதற்குள் உன்னை என்னால் வெறுக்கவே முடியாது என்பதை சொல்லி அந்தப் பிணக்குக்கு ரதி கண்ணீருடன் முடிவு கட்டி விடுகிறாள்.

அதெல்லாம் ஏன், பெண் பார்க்க யார் வந்தால் என்ன, நான் அவனைக் கட்டிக் கொள்ளவா போகிறேன் என்று கூட அவனிடம் கேட்கிறாள்.

ரதி தனது அன்பில் கனவுகளில் சஞ்சரிக்கிறாள் என்பது மிக தெளிவான நகர்வு.

படம் 78 இல் வந்திருக்கிறது. அதற்கு முன்பு எழுதப்பட்டிருக்கிறது. பத்மராஜனுக்கு இருந்திருக்கக் கூடிய விரிந்த பார்வைக்கு நான் இப்போதும் வியக்கிறேன். ரதியை அவளது அம்மா கண்டுபிடிக்கிறாள். பூசல்கள் நேர்கின்றன. இப்படியெல்லாம் நடக்குமா என்று உறவுகள் வயிற்றில் அடித்துக் கொள்கிற காலம்தானே அது? அல்லது சம்பவம் அப்படிப்பட்டது தானே? சூழ்நிலை கசந்து போகின்றன.அவர்களின் தெய்வங்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவன் ஹாஸ்டல் சேர நாளை கிளம்பியாக வேண்டும். நான் திரும்பி வரும்போது உனது திருமணம் முடிந்து உனது கணவனுடன் சென்று விடுவாய் என்று மருகுகிறான் பப்பு. இரவு சந்திக்க வேண்டும் என்கிறான்.

காவலை மீறி காற்றில் மழையில் இருளில் அவனை தேடி செல்லுகிறாள் அவள்.

மறுத்தபோதும் இறுதியில் தன்னைத் தரவே செய்கிறாள்.

போகட்டுமா என்று விடை பெறுகிறாள்.

மறுநாள் அவன் வெளியூருக்கு தனது ஆட்களுடன் கிளம்பிப் போகும்போது அவள் உயிருடன் இல்லை.

After 32 years, Padmarajan's Rathinirvedam (1978) gets remade ...

ரதி ஒரு பெண். என்ன தான் காதல் இருந்தாலும் ஆணான பப்பு அவளுக்கு ஒரு தீர்வை கொடுக்க சாத்தியம் இல்லை. இருந்தாலும் அதை யாரும் நடத்த விட மாட்டார்கள். மெதுவாக அவனை ஒரு வழிக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைத்தான் சபித்துக் கொண்டிருப்பார்கள். பாம்பு கொத்தி அவளை சாகடித்தும் தான் என்ன பிரயோசனம், அவளைத்தான் அந்த ஊர் கரித்துக் கொட்டியவாறு இருக்கப் போகிறது. வேறு ஒன்றை சொல்ல வேண்டும்- படத்தில் இப்படி ஒரு முடிவு இருக்கவே தான் சென்சாரும் மக்களும் ஏற்றுக் கொண்டு படத்தை விட்டு வைத்திருந்தார்கள்.

சிலுவையை பெண்ணிடம் கொடுத்து வருத்தப்பட்டுக் கொள்ளாமல் பத்மராஜன் அந்தத் திரைக்கதையை முடித்திருக்க மாட்டார்.

ஒரு கதையை பார்க்கும்போது, அந்தப் படம் சுய பிரங்ஞையுடன் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் கண்டிப்பாக படத்தின் இன்னும் பிற கதாபாத்திரங்களை கவனித்தாக வேண்டும். அவர்களை வைத்துக் கொண்டு திரைக்கதையாளன் தனது எண்ணத்தை தெளிவு செய்யக் கூடும். படத்தில் வேறு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்களோடு இருக்கிற உறவு எப்படியிருக்கிறது? வருடத்துக்கு ஒரு முறை சிறிய விடுமுறையில் வந்து விட்டுப் போகிற கணவன், பட்டாளத்தில் இருக்கிற ஆண்கள், பெண்களை அஞ்சுகிற, அல்லது அவர்களை புரிந்து கொண்டதாக சொல்பவர் இவரெல்லாம் என்ன. பப்புவையும் ரதியையும் சேர்த்து வைத்து சுவரில் எழுதுகிற சிலரில் நிகழ்வது என்ன? ஒருமுறை ரதி நீ கடைத்தெருவிற்கு போகும்போது கொஞ்சம் வளையல்கள் வாங்கிக் கொண்டு வா என்கிறாள். நூலகத்துக்கு வருகிறவன் அவளை எதிரே காண நேரும்போது வாங்கிவைத்த அவற்றைக் கொடுக்கிறான். அதைப் பார்த்த ஒருவனின் கேள்வி, நீ என்ன வாங்கிக் கொடுத்தாய்? அவளுக்கு என்ன வாங்கிக் கொடுத்தால் காரியம் சாத்தியமாகும்?

അവള് അത് കാണുന്നത് വരെ കമാന്ന് ...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் பேச்சைக் கேட்டோம். பத்து பேர், இருபது பேர் நூறு பேராக பெருகி, தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவேறி ஒரு பெண்மணியையும் அவளோடு உறவு வைத்திருந்த இளைஞனையும் நெருப்பு வைத்துக் கொளுத்துகிற, அவர்கள் இறந்து போன பிறகு சாம்பலாகி பொடி பறக்கும் வரை கிளர்ச்சியுடன் பார்த்து நிற்கிற ஒரு காட்சியை யுடியூபில் பதை பதைப்புடன் பார்க்க நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் எங்கோ ஒரு உள் கிராமத்தில் தான் நடக்கிறது என்றோ, காட்டுமிராண்டிகளின் முட்டாள்தனம் என்றோ என்னை விடுவித்துக் கொள்ளாமல் மனிதர்கள் நம்புகிற கருத்துகளை தான் நான் அதில் முழுமையாக பார்த்தேன். ஆண்கள் தாங்கள் கொண்டாடுகிற கவுரவங்களை பெண்கள் பொருட்படுத்தவதில்லை என்கிற உண்மை அவர்களை மதியிழக்க செய்தவாறு இருக்கும் போதுதான் இப்படம் ஒரு பெண்ணுக்கு யாரிடம் காதல் வரும் என்பதை நிலை நிறுத்தி சென்றது என்று நம்புகிறேன். குறைந்தபட்சம், எனது பால்யத்தில் அப்படி தானா என்கிற மலைப்பை துவங்கி வைத்து, உண்மைகளை அறியவைத்த பொறுப்பு இந்த படத்திற்கு இருந்திருக்கிறது

அப்புறம், படத்தில் யாரும் அறிகிற பெண்ணுடல், அதன் கவர்ச்சியைக் காசாக்குதல் பற்றின கட்டுடைப்பை நான் கட்டை உடைக்கமாட்டேன். பரதனைப் போன்றவர்கள் அதற்கு எவ்வளவோ விளக்கம் கொடுத்து விட்டார்கள். அதன் நியாயங்களை உலகம் முழுக்க இருக்கிற எவ்வளவோ படைப்பாளிகள் விவரித்து விட்டார்கள். தேடுகிறவர்களுக்கு கிடைக்கும். எங்கள் உடல்களை நாங்கள் கொண்டாடுகிறோம் என்கிற பெண்கள் பல கோணங்களை சொல்லியிருக்கிறார்கள். நமக்கு இந்தக் கட்டுரையில் தெளிந்து எழ வேண்டியது பத்மராஜனின் திரைக்கதை மட்டும்தான் என்று கவனம் செய்வதுடன், ஒளிப்பதிவு  இசை எடிட்டிங்            லைட்டு சவுண்டு போன்ற காரியங்களை இதில் எழுத வேண்டியதில்லை என்பதையும் சொல்லிக் கொண்டுவிடுகிறேன். இந்தக் கட்டுரை உங்களுக்கு ஆர்வம் உண்டாக்குகிறது எனில் தட்டினால் கிட்டுகிற தகவல்கள் ஏராளம். படமே கூட இருக்கிறது.

ആ രംഗങ്ങള്‍ ചെയ്യാന്‍ എനിക്ക് ...
இயக்குனர் பரதன் மற்றும் நடிகை ஜெயபாரதி

முதலில் எழுதி அவரே இயக்கிய படங்களில் நாம் அவைகளைப் பேச வேண்டிவரும்.

மேலும் ஒன்றை முதலில் சொல்லிவிடலாம் என்று எண்ணுகிறேன். பரதன் மேலும் பல படங்களின் வழியாக ஆண் பெண் பாலியல் வாழ்வை சொல்ல தனது வழியில் சென்றவாறு இருந்தார். அவரைப் பற்றி ஒன்றிரண்டு கோடு போட்டு கிறுக்கி அவருடைய முக சித்திரத்தை முடிக்க முடியாது. தனியாகவே எழுத வேண்டும். ஆனால் பத்மராஜன் வேறு பல வழிகளுக்கும் சென்றார். அவரது ஆயுள் குறுகியதாக இருந்தது. இல்லையெனில் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம்இல்லாத, ஒவ்வொன்றிலும் பல அனுபவங்களை அடைகிற எவ்வளவோ படைப்புகள் நமக்குக் கிடைத்திருக்கும்.

என்றாலும், தனக்குக் கிடைத்த தருணங்களில் தனது சிறப்பை எடுத்து வைத்த படைப்புகளை வரிசையாகவே சொல்ல முடியும்.

நானறிந்து ஜெயபாரதியின் முதுகு கூட திரையில் அவ்வளவு அழகாக வருவதற்கு பத்மராஜன் தான் காரணம் என்றால் அதற்கு அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

Image

-மணி எம்.கே மணி 

2 thoughts on “மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 2”
  1. ரதிநிர்வேதம் நாவலை தமிழில் வாசித்திருக்கிறேன். என்னை மிகவும் ‌வசீகரித்த நாவல் அது. பின்னர்தான் படம் பார்த்தேன். கதையின் முடிவு என்றைக்கும் மறக்கவியலாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *